Saturday, January 25, 2014

பதுங்கு அறையும், பீடிக்கட்டுகளும்!



முதலில் பீடிதான் பழக்கம். தலா எட்டு வீடுகளைக் கொண்ட அடுத்தடுத்து கட்டப் பட்ட அக்காலத்திய இரண்டு அடுக்ககங்கள் அவை. மொத்தம் பதினாறு வீடுகள். இரண்டு அடுக்க்கத்துக்கும் இடையில் ஓர் ஆள் அளவில்தான் இடைவெளி. எளிதாக மாடி விட்டு மாடி தாண்டி விடுவோம். கிட்டதட்ட பத்து பேர் ஒரே வயதை ஒத்தவர்கள். பெரும்பாலும் திருடன் போலீஸ்தான் ஆதர்ச விளையாட்டு.படிக்கட்டுகளை போலீஸ் மட்டும்தான் உபயோகிக்கலாம். திருடர்கள் மழைநீர்க் வடிகுழாய், வெயில் தடுப்பான்கள், தடுப்புச் சுவர்கள் ஆகியவற்றை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும்.தலா மூன்று மாடிகள், இரண்டு அடுக்ககங்கள். சலிக்க சலிக்க ஓடி விளையாடுவோம்.பிறகு, சுற்றுப் புறத்தில் பெருவாரியாக ஆரம்பிக்கப் பட்ட வீடுகளின் அஸ்திவாரக் குழிகள் மற்றும் பிற வீடுகளில் புகுந்து வெளி வரும் ஐஸ்பாய். ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை குடியிருந்த இந்த தெருதான் பதின்மத்தின் சொர்க்கம். வாடகை சைக்கிள், பம்பரம், கில்லி தாண்டு, டயர் எரித்து சுற்றுதல், கிரிக்கெட் டோர்னமெண்ட்கள், கால்பந்து, டெண்ட் அடித்து பொங்கல் வைத்தல், அண்ணன்களுக்கு லவ் லெட்டர் பாஸ் செய்யும் போஸ்ட் மேன் வேலை பார்த்தது என பலவற்றை அனுபவித்தது இங்கேதான். 

மாடியில் சின்ன பதுங்கு அறை ஒன்று இருந்தது. அந்த மறைவிடம் வினோதமான வடிவமைப்பை கொண்டது.மொட்டை மாடிக்குச் சென்று நீளமான வெயில் தடுப்பானில் கால் வைத்து இரண்டடி கீழே இறங்கினால் ஒரு பெரிய சதுர வடிவ பதுங்கு அறை ஒன்றிருக்கும்.உயரம் வெறும் இரண்டடிதான். பத்துக்கு பத்து நீள அகலம். தவழ்ந்து உள் நுழைந்து, சம்மணமிட்டு அமரலாம். நிற்க முடியாது. மாடியிலோ அல்லது கீழே தரைத்தளத்திலோ இருந்து பார்த்தால் சதுர அறை என்ற ஒன்று இருப்பது தெரியுமே ஒழிய, உள்ளே இருப்பவை தெரியாது.பெரியவர்கள் மாடியிலிருந்து இரண்டடி கீழே இறங்கி சன்ஷேடில் கால் வைத்து பார்க்க மாட்டார்கள். பயம்!. கீழே இறங்கும் போது கொஞ்சம் தப்பினாலும், அதல பாதாளத்தில் இரண்டு மாடி உயரத்துக்கு வானில் மிதந்து தரையில் விழுந்து சிதறி விடுவோம். பொடுசுகள் எங்களுக்கு மிக வசதியான மறைவிடமாகி போனது அந்த அறை. பதின்மத்தின் ஆதாரக் கேள்விகளுக்கு விடையளித்தது அந்த அறைதான்.பல சூட்சுமங்கள், ரகசியங்கள் மெல்ல மெல்ல புரிந்தது அல்லது குழப்பம் அதிகமானது அங்கேதான். மருதம், சரோஜோ தேவி புத்தகங்களும், பீடிக்கட்டுகளும் அங்கே வாங்கி அடுக்கப் படும். எல்லாச் செலவும் பொதுக்கணக்கு.நான் படித்தது சாமியார் பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் நகருக்கு வெளியே இருந்த மடத்தினால் நிர்வகிக்கப் பட்ட பள்ளி. அரசினர் பள்ளிக்கு நகருக்குள் சென்று வரும் நண்பர்கள், மேற்படிச் சமாச்சாரங்களை வாங்கி வந்து ரகசியமாக அடுக்கி வைப்பர்.புதிய சரக்குகள் வந்து இறங்கிய விஷயம் ரகசியமாக அனைவருக்கும் பகிரப்பட்டு ஒவ்வொருவராக பதுங்கு அறைக்குள் இறங்குவோம். படங்கள் ரசிக்கப் படும். புத்தகங்கள் படிக்கப் பட்டு விவாதங்களின் மூலம் சந்தேகங்கள் நிவர்த்திக்கப் படும்.பீடிகள் வலிக்கப் படும். ஏழாவது படிக்கும் போது முதன் முதலாக பீடி பற்ற வைத்தேன். மாதத்திற்க்கு ஒன்றோ, இரண்டோ என்று கணக்கு. பண்டிகைக் காலம் அல்லது உறவினர் வந்து சென்ற நாட்களில், கையில் காசு நிறைய இருந்தால், சிசர்ஸ் பாக்கெட் வாங்கி அடுக்கப் படும். ஆனால், சிசர்ஸ் உபயோகத்தின் போது மிக மிகக் கடுமையான விநியோகம் இருக்கும். ஒன்று அடித்தவன் கொஞ்ச நாட்களுக்கு மீண்டும் கேட்கக் கூடாது. 

இப்படியாக போய்க் கொண்டிருந்த நாட்களில், இருப்பு வைக்க சிசர்ஸ் பாக்கெட் ஒன்றினை அண்ணாச்சிக் கடையில் எங்களில் ஒரு பக்கி வாங்கிக் கொண்டிருந்த பொழுதொன்றில், சக குடியிருப்பு வாசியான நிவேதா என்றொரு நல்ல பிள்ளையொருத்தியின் கண்ணில் பட்டுத் தொலைக்க, மொத்த வீடுகளுக்கும் ஒரே ட்யூசன் டீச்சராய் இருந்த புவனா மிஸ்ஸிடம் கோள் மூட்டப்பட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் பெற்றோருடன் அவரது இல்லத்தில் ஆஜராகும்படி வாய் வழி நோட்டீஸ் அனைவருக்கும் சடுதியில் சொல்லப் பட்டது. நல்லவள் பார்த்ததோ அல்லது கோள் மூட்டியதோ தெரியாத மூடர் கூட்டம், என்ன ஏதென்று தெரியாத அற்பத்தனமான எதிர்பார்ப்புடன் புவனா மிஸ் வீட்டில் குழுமினோம். பெரும்பாலும் அம்மாக்களே துணை வந்திருந்தனர். கிட்டதட்ட, பத்துக்கும் மேற்பட்ட சக தோழர்கள் குழுமியிருக்க, புவனா மிஸ் எடுத்த எடுப்பிலேயே இங்க நிக்கறது எல்லாம் பீடி, சிகரெட் வாங்கி வைச்சு குடிக்குதுக என்ற பவுன்சரைப் போட, கலவர பூமியானது அந்த வீட்டின் வரவேற்பறை. பெரும்பான்மையான அம்மாக்களுக்கு என்ன மாதிரியான எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தோன்றாத பொழுதில், என் அன்னையார் கண நேரமும் தாமதியாமல், சிண்டை பிடித்து நங்கென்று சுவற்றில் மோதி அனைவருக்கும் அந்த அசந்தர்ப்ப சூழலில், முன் மாதிரியானார். அந்த சின்ன அறையில் பிழிந்தெடுக்கப் பட்ட சகாக்கள் மேலும் தோலுரிக்கப் பட தரதரவென வீட்டுக்கு இழுத்துச் செல்லப் பட்டோம். அப்பா வீட்டில் இல்லை. அம்மா, வீட்டுக்கு உள்ளே துரத்தி, கதவைத் தாழிட்டு தென்னை விளக்கமாற்றால் அடித்த அடி ஒவ்வொன்றும் வீறல் வீறலாய் உடலெங்கும் ரொம்ப நாட்களுக்கு காணும் போதெல்லாம் வேதனையை அளித்துக் கொண்டேயிருந்தது. ஒவ்வொரு அடி இறங்கும் போதும் அம்மாவிடம் இரைந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.அப்பாகிட்ட சொல்லிடாதாம்மா. அப்பாகிட்ட சொல்லிடாதாம்மாஎன்ற கதறலினூடான கெஞ்சல்தான் அது. ஏனெனில், இரும்பேறிய கைகளில் இருந்து விசிறப் படும் பிளாஸ்டிக் வயரின் வீறல், விளக்கமாற்று வீறலை விட மிக மிகக் கொடுமையானதும், கடும் வலியையும் தர வல்லது.

இரவு, அப்பா பட்டறையில் இருந்து வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நொடியும் நரகமாகப் போனது.அம்மா சொல்லியிருப்பாளோ, எப்போது வேண்டுமானாலும் எழுந்து அடிப்பாரோ எனப் படபடப்பாக கடந்தன அந்த நிமிடங்கள். ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இரவு இனிதே கழிந்த மகிழ்ச்சியில் தூங்கிப் போனேன்.

காலையில் நேரமாக எழுந்து திருச்சியில் இருக்கும் அத்தை வீட்டுக்கு அனைவரும் பயணம். கோர்ட் நிறுத்தத்தில் இறங்கி, பாலக்கரை பீமநகர் வரை நடக்க வேண்டும். அந்த முன் மதிய வேளையில், பாலாஜி தியேட்டர் அருகே இருந்த ஒரு கடையில் நின்றோம். அம்மா “என்னடா வேணும் டீயா? சர்பத்தா? என்றாள். ஜன்னலோர இருக்கை கிடைக்காத கடுப்பில் இருந்த நான், ஒரு மண்ணும் வேண்டாம் என்றேன். கிட்டதட்ட முந்தைய நாளின் கொடுஞ்சம்பவத்தை மறந்து இருந்தேன். அப்பா அமைதியாக கேட்டார் “சிசர்ஸ் வேணுமா?. சப்த நாடியும் ஒடுங்கிப் போனேன். நடுக்கத்தோடு சர்பத்தை குடித்து விட்டு நடக்க ஆரம்பித்தேன்.

வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. முன்னே ஒரு பாரமேற்றாத மாட்டு வண்டி சென்று கொண்டிருந்தது. அப்பா, தூக்கி அதில் பின்பக்கம் காலை தொங்கப் போட்டு உட்கார வைத்து, பின்னால் நடந்து வந்தார். சில நிமிடங்கள் என்னையே பார்த்துக் கொண்டு வந்தவர், இரைந்த குரலில், மெதுவாகச் சொன்னார் “இதெல்லாம் நமக்கு வேணாம் நைனா!“. அவ்வளவுதான், தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன்.வேறெதுவும் சொல்லவோ, அழுகையை நிறுத்தவோ அவர் முயற்சிக்கவே இல்லை. 

ஆயிற்று கிட்டதட்ட இருபது வருடங்கள். ஒழுக்கம் சார்ந்து அவர் என்னிடம் பேசியது முதலும் ,கடைசியும் அதுவே.

Thursday, January 23, 2014

கிணற்று ஒயர்!


அன்னிக்கு வெள்ளிக்கிழமை. ஸ்கூல் முடிஞ்சு சாயங்காலம், கிரவுண்டில் கிரிக்கெட் விளையாண்டுட்டு இருந்தப்ப, டென்த் பி பாலன் வந்து “டேய்! ஞாயித்துக் கிழமை பதினோரு மணிக்கு கே.பி.எம் கெணத்துக்குப் போறோம். கொளந்தானூர் பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணுன்னு சொல்லிட்டு போனான்.பாலனை பிடிக்கும்.ஆனால்,சில நேரங்களில் பிடிக்காது. வாய்க்கு வந்த படி கெட்ட வார்த்தை பேசுவான்.புள்ளைங்க பின்னாடி அலைவான். நல்லா பேட்டிங் பண்ணுவான். சில சமயம் பெரிய பசங்க மாதிரி நடந்துக்கறப்ப எரிச்சலா இருக்கும்.ஆனா, அவன் கூப்பிடறப்ப வரலைன்னு சொல்ல முடியலை.

ஞாயித்துக் கிழமை போனா, எல்லாப் பயலும் எனக்காக நின்னுகிட்டு இருந்தானுங்க.நாலு சைக்கிள்ல டபுள்ஸ்ம்,ட்ரிபுள்சுமா ஒரு பத்து பேரு கிளம்பிப் போனோம்.வழியிலே நிறுத்தி, கடையில சிசர்ஸ் வாங்கினானுங்க.டேய்! எனக்கெல்லாம் வேண்டாம்டான்னேன்.மூடிட்டு வான்னு பாலன் சைக்கிள் எடுத்தான்.கிணத்தை தாண்டி சைக்கிளை விட்டானுங்க.எங்கேடா போறீங்கன்னா, “வா மாப்ள, தம் அடிச்சுட்டு வரலாம்.இங்கே எல்லாம் ஆள் நடமாட்டம் இருக்கும்ன்னு சொல்லி, கெணத்த தாண்டி இருந்த அந்த சின்ன ரயில்வே ஸ்டேசன் போனோம்.ரொம்பவே சின்ன ஸ்டேசன் அது..ஆள் அரவமே இல்லை. டிக்கெட் கவுண்டர் முன்னாடி ஆட்டு புளுக்கையா கிடந்தது. நாளொன்னுக்கு நாலே ட்ரெயின் போற ரூட் அது. இந்த ஸ்டேசன்ல எந்த ட்ரெயினும் நிக்காது.உள்ளே போய் பென்ச்சுல உட்கார்ந்து ஆளுக்கு ஒரு தம் பத்த வைச்சோம். சுத்தி அஞ்சு கிலோ மீட்டருக்கு அடிச்சுப் போட்டாக் கூட ஏன்னு கேட்க ஆள் கிடையாது. எங்களோட கூச்சல் மட்டும்தான் கேட்டுச்சு. தம் அடிச்சுட்டு, கொஞ்ச நேரம் ஒன் பிட்ச் கேட்ச் கிரிக்கெட் விளையாடிட்டு ரீசஸ் போலாம்ன்னு டாய்லெட் பக்கம் போனேன். எழவெடுத்தவனுங்க என்னமோ பண்ணிட்டு வந்துக்கானுங்க. உள்ளே எல்லாம் வழவழப்பா இருந்தது. குமட்டிகிட்டு வர ஓடி வந்துட்டேன்.எல்லா நாயும் சிரிச்சுது.கண்ல தண்ணி முட்டிட்டு, நான் வீட்டுக்கு போறேன்னேன். நீ ரொம்ப ஒழுங்கா?.பேசாம கூட வாடான்னு பாலன் சிரிச்சான்.மயிரான் என்ன பத்தி உனக்கு என்னடா தெரியும்? நான் எங்கயும் வரலைன்னு ஓரியாட்டம் பண்ணேன். சரிடா, இனிமேல் உன்னை எங்கயும் கூப்பிடலை.பிடிக்கலைன்னா,எங்க கூட வராத.இந்த ஒரு தடவ கெணத்துக்கு போய்ட்டு போயிடு.இவ்ளோ தூரம் வந்தாச்சுன்னு சொல்லவும், அரை மனசா கிளம்புனேன். 

கெணத்துல போய் தண்ணியை பார்த்ததும் கொஞ்சம் ஜாலியா இருந்தது.ரொம்ப நேரம் குளிச்சோம். நடுவில பாலன் மட்டும் வந்து, காதை கடிச்சான். செம மேட்டர் மாப்ள. சத்தம் போடாம வான்னு. மோட்டார் ரூம்ல வைச்சிருந்த மோட்டாரை காமிச்சான்.மாப்ள, இதை எப்படியாவது கழட்டிகிட்டு போய் வித்தா, ஆறு மாசத்துக்கு செலவுக்கு பஞ்சமில்லை.என்ன சொல்றேன்னான்.போடா மயிரு. நான் இந்த வேலைக்கெல்லாம் வர மாட்டேன் .மாட்டிகிட்டா அவ்வளவுதான்.என்னால முடியாதுன்னு கிளம்பினேன்.சரிடா மோட்டார் வேணாம், ஒயராவது கட் பண்ணி கொண்டு போலாம். விக்கறது ஈஸி.எப்படியும் ஐந்நூறு தேறும். விக்கறது ஈஸி. எம்பொறுப்புன்னான். வாரக்கடைசியில் ரெண்டு ரூபா மிச்சம் பண்ணி, சக்தி தியேட்டர்ல பென்ச்ல உட்கார்ந்து பார்க்கிறதுதான் பெரிய சந்தோஷம்.அதனால, அரை மனசா ஒத்துகிட்டேன்.

ரூமுக்குள்ள தேடினோம். ஆக்சா பிளேடு ஒண்ணு துருப்பிடிச்சு கிடந்தது.அதை அங்கேருந்த கருங்கல்லில் நல்லா ராவு ராவுன்னு கைல சூடு உணரும் வரை ராவுனேன். ஒயர் பிவிசி பைப் வழியா செவத்தோரமா போய், ஒரு ஓட்டை வழியா ரூமுக்கு வெளியே போச்சு. மொதல்ல பைப்பை அறுக்க ஆரம்பிச்சோம். அப்புறமா கறுப்புகலர்ல மொத்தமா ஒயர் இருந்துச்சு. ரொம்ப நேரம் அறுத்தும் பாதிதான் அறுக்க முடிஞ்சது. வேர்த்து வழிய, கை கால் வலிக்க அரை மணி நேரம் ஆகிடுச்சு அதுக்குள்ள.குளிச்சுட்டு கெணத்துக்கு வெளியே வந்தப்ப உடம்புல இருந்த தண்ணிய விட, வேர்வை அதிகமா ஓடிட்டு இருந்துச்சு. விட்டுடலாம்டா.பாவம்டானேன்.ஆனது ஆச்சு பொறுடான்னு பாலன் சொல்ல, ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அறுக்க, ஒரு முனை அத்துகிட்டு கைல வந்துச்சு..அப்படியே,ரூமோட இன்னொரு மூலைக்கு போய், பைப் ஓட்டை வழியா வெளியே போற இடத்துல உக்காந்து, அந்த முனையில அறுக்க ஆரம்பிச்சோம். அதுக்குள்ள எல்லா பயலும் வந்து எட்டி பாத்தானுங்க..பாலன் வசமா வார்த்தை பேசி துரத்தி விட்டுட்டான்.இதுல எந்த நாயையும் கூட்டு சேர்க்க மாட்டேன்ன்னு சொன்னான். மறுபடியும் அரை மணி நேரம் அறுத்ததுல, கிட்டதட்ட பத்தடிக்கும் நீளமா, ரொம்ப மொத்தமா காய்ல் ஒயர் கைல.என்னால அதுக்கு மேலே அங்கே நிக்க முடியலை.ரூமை விட்டு வெளியே வந்து மூச்சு வாங்குனேன். மறுபடியும் போய் தண்ணில இறங்கிட்டேன்.பாலன் அவனோட கைலில ஒயரை போட்டு சுத்தி எடுத்துட்டு கிளம்பி போய்ட்டான்.

அடுத்த நாள் காலைல, ப்ரேயர் முடிச்சுட்டு மாடிப்படில ஏறி கிளாஸ்க்கு போய்ட்டு இருந்தப்ப, பாலன் பக்கத்துல வந்து சிரிச்சுகிட்டே ஜோப்புல எதையோ சொருகிட்டு ஓடிட்டான். கிளாஸ் மூலைல போய், யாருக்கும் தெரியாம எடுத்துப் பார்த்தா நூறு ரூவாத் தாளும், அம்பது ரூவாத் தாள் ஒண்ணும் இருந்துச்சு. யாருக்கும் தெரியாம, பக்கத்துல இருந்த ஜன்னல் வழியா நூறு ரூவாயை வெளியே பறக்க விட்டுட்டு, அம்பது ரூவாயை ஜோப்புல போட்டுகிட்டு என் இடத்துல வந்து உக்கார்ந்துட்டேன். 

# இருபது வருடங்கள் கழித்து அவ்வழியே போன வாரம் சென்றேன். கே.பி.எம் கிணற்றின் பக்கமாக, அடுக்ககம் ஒன்று முளைத்து, அங்கிருக்கும் சிறுவர் சிலர் கிணறுக்கு மேல் மண் கொட்டப் பட்டு சமதளமாகி விட்ட பார்க்கிங் ஸ்லாட்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

Friday, January 03, 2014

சுந்தரம் தாத்தாவும், திலீப்குமாரின் “கடிதம்” சிறுகதையும்!

 
சுந்தரம் தாத்தா, ஆறடி இரண்டு அங்குலம் இருப்பார். அகன்ற தோள்கள், எம்.ஜி.ஆர். நிறம். கஞ்சியில் தோய்த்த கதர் வேட்டியும், ஜிப்பாவுமாக வலம் வருவார். நிறைய பழங்கதைகள் சொல்வார். சென்னை நெடுஞ்சாலையில், விழுப்புரம், உளுந்தூர்பேட்டைக்கு இடையில் மடப்பட்டு என்றொரு ஊர் இருக்கிறது. வலது புறம் திரும்பினால் திருவண்ணாமலை, இடம் திரும்பினால் கடலூர். அந்த நால்முனை சந்திப்புக்கு சுமார் ஒரு கி.மீ முன்னால் நெடுஞ்சாலையின் ஓரம் அய்யனார் கோவில் ஒன்றுண்டு. அய்யனார் குதிரையின் காலடியில், அரச மரத்தடியில் கட்டில் போட்டு உட்கார்ந்து, தாத்தா விவசாயத்தை மேற்பார்வை செய்வார்.எத்தனையோ நாள் அவருடன் அங்கே உட்கார்ந்து கம்மங்கூழும், கேழ்வரகு அடையும் சாப்பிட்டு இருக்கிறேன்.

எவ்வளவு நிலம் எனத் தெரியாது. எப்படியும் இரண்டு, மூன்று ஏக்கராவது இருக்கும்.மேலும், ஊருக்குள் வீட்டின் பின்புறக் கொல்லையிலும் நெல் விளையும் நிலம் இருந்தது. கிராமத்தில் தாத்தா வீடு சின்ன கம்பம் (சவுத் ஆர்க்காட்டில் பண்ணை வீட்டை கம்பம் என்பார்கள்). அந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள தன் சமுதாயத்தை சேர்ந்த ஓரளவு அனைத்து குடும்பங்களை பற்றியும் விவரம் தெரிந்து வைத்திருப்பார். அனைத்து நல்லது, கெட்டதுக்கும், எல்லா குடும்பத்தில் இருந்தும் தகவல் வந்து விடும். தவறாமல் சென்று வந்து விடுவார். இவ்வளவு செல்வாக்குடன் இருந்த, தாத்தாவின் நிலம் அனைத்தும், சிறிது சிறிதாய் விலை போனது. மூன்று ஆண்கள், ஐந்து பெண்களை வாரிசாக பெற்ற தாத்தா அவர்களின் வாழ்வு சிறக்க நிலங்களை கூறு போட ஆரம்பித்தார். விவசாயத்தை கட்டி ஆளும் அளவுக்கு யாருக்கும் திராணி இல்லை. நான் பத்தாம் வகுப்பில் இருக்கும் போது பாட்டி இறந்து விட, தனியனாய் இருக்க முடியாத சூழ்நிலையில் வீட்டையும், அதன் முற்றத்தையும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்று, ஊரை விட்டு வெளியேறி, மூத்த மகன் வீட்டில் தனியறையில் ஒதுங்கினார்.

கொஞ்ச காலம், எங்கள் வீட்டில் வந்து இருந்தார். எனக்கு அப்பொழுது திருமணமாகியிருக்க வில்லை. அடிக்கடி போய் அமர்ந்திருப்பேன். வாழ்ந்து ஓய்ந்த அல்லது ஓய்வெடுக்க வைக்கப் பட்ட அந்த மனிதர், அங்கலாய்ப்புகளை கேட்பதற்க்காவது ஒருவன் இருக்கிறானே என எண்பதாண்டு கதைகளை சொல்லிக் கொண்டே போவார். பெரும்பாலும் அவற்றின் சாரம் புறக்கணிப்பின் வலி அல்லது யாருக்கும், எதற்க்கும் தேவைப்படாத நிலையை நொந்த புலம்பல் தொனியிலேயே இருக்கும். அவரது அறையை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் என்னை சோகம் சூழ்ந்து கொள்ளும்.

“ஒன்பது ரூபாய் நோட்டு”  படித்திருந்த சமயம் அது. மாதவ படையாச்சியின் சித்திரம் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. தாத்தாவின் நிலம் இருந்த மடப்பட்டுவில் இருந்து சுமார் 20-30 கி,மீ தான் இருக்கும், ”ஒன்பது ரூபாய் நோட்டு” மாதவ படையாச்சியின் நிலப்பரப்பும். அக்கதையின் ஒவ்வொரு வரியையும் என்னால் உணர்ந்து உள்வாங்க முடிந்தது. மாதவ படையாச்சிக்கும், எனது சுந்தரம் தாத்தாவுக்கும் வாழ்க்கை பயணத்தில் பெரிதும் வித்தியாசமில்லை. என்ன, சுந்தரம் தாத்தா அந்தளவு பொருளாதார பிரச்னையில் சிக்க வில்லை. நாவல் படித்து முடித்த சில நாட்களுக்கு பின்னான ஒரு மாலைப் பொழுதில்,  எப்பொழுதும் போல் தாத்தா, தனது 14 வது வயதில் களத்தில் இறங்கி சேற்றில் கால் வைத்த கதையில் ஆரம்பித்து, பலதும் சொல்லிக் கொண்டே போய், 1970களில் ஊரில் ஏற்பட்ட ஒரு பிரச்னை, அது எப்படி பல குடும்பங்களை பாதித்தது, அந்நேரத்தில் அவர் எடுத்த சில முடிவுகள், அதை பலரையும் ஒத்துக் கொள்ள வைக்க பட்ட பாடு, அதன் பிறகு எல்லோருக்குமான சுப முடிவு என்று பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, நான் உடைந்து கதற ஆரம்பித்திருந்தேன். தாத்தா அவரது ஏற்றத்தையும், இறக்கத்தையும் மாறி மாறி சொல்லிக் கொண்டே போகையில், எங்கேயோ ஒரு புள்ளியில், மாதவ படையாச்சியையும், தாத்தாவையும் நான் இணைத்துக் கண்ட சித்திரம், வெடித்து அழுகையாக பீறிட்டது.

எப்பொழுது லுங்கி கட்ட ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்தே ஒரு வைராக்கியம் கண்ணில் கண்ணீர் வரக்கூடாதென்பது. விவரம் தெரியாத பருவத்தில் உண்டாகிய இந்த வைராக்கியம் இன்று வரை தொடர்கிறது. எனக்கு விவரம் தெரிந்து நான் வாய் விட்டு கதறி அழுதது இந்த ஒரு சமயத்தில்தான். கிட்டதட்ட அரைமணி நேரமானது அழுகை, தேம்பலாகி பின் சமநிலைக்கு வர. 98 வயதில் தாத்தா இறந்த போது ரொம்பவே நிம்மதியாக இருந்தது. மடப்பட்டில் இப்போது ஃப்ளை ஓவர் வந்து விட்டது. பாண்டி சென்று வரும் போதெல்லாம், என்னையறியாமல் கால்கள் ஆக்ஸிலேட்டரில் அதிக அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கும். கண்கள் எப்பக்கமும் திரும்பாமல் சாலையை வெறிக்கும். எதற்கு இந்த பின்னோக்கிய புராணம்?

திலீப்குமார் அவர்களின் சிறுகதை “கடிதம்”.

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறந்த நூறு சிறுகதைகள் தேர்வில் ஒன்று இக்கதை. புண்ணாகி சீழ் கட்டிய பாதங்களில், பாலீத்தின் பைகள் சுற்றி, நடக்கவே சிரமப்பட்டு நாட்களை நடத்தும் வயசாளி, அவருக்கு உதவக் கூடிய நிலையில் இருக்கும் சக உறவினரிடம், கசப்பு மிகுந்த வாழ்க்கைச் சூழலை, கடிதம் வாயிலாக பகிரும் கதை. முதல் முறை படித்து முடித்தவுடன், என்ன காரணத்தினால் இக்கதை சிறந்த 100 பட்டியலில் சேர்கிறது என்ற ஆச்சர்யம் வரலாம். வழக்கமாய் வயசாளிகளிடம் கேட்ட, பார்த்த, வாசித்த அங்கலாய்ப்புதானே என்று தோன்றலாம்.

கொஞ்சம் உற்று நோக்கினால், அந்த கையாலாகாத வயசாளியின், மாறி வரும் சூழல் மீதான எரிச்சல், அசூயை மற்றும் தன்னிரக்கம் போன்றவற்றை புரிந்து கொள்ள முடியும். முக்கியமாக, மாறிவரும் சூழல் அவரை பாடாய் படுத்துகிறது. சூழல் போயின் வாழ்வில்லை என்று நம்புகிறார். எவ்வளவு சத்தியமான வார்த்தை இது. தினம் ஓரிடம் பறந்து, சாப்பிட்டு, உறங்கி எழும் புதிய தலைமுறைக்கு இது எள்ளி நகையாடும் விஷயமாக இருக்கலாம். ஆனால், நம்மில் பலர் பல இடங்களில் உழன்றாலும், ஏங்குவதே இந்த பாழாய்ப் போன மனம் விரும்பும் சூழலில் கொஞ்சம் கடைசியில் இளைப்பாறத்தானே?.

மிட்டு மாமாவின் இன்னலை சோக ரசம் பிழியாமல், சற்றே அமிழ்ந்த அங்கத நடையில் அழகாக வெளிப்படுத்துகிறார் திலிப்குமார் அவர்கள். இதுவே, இதை ஒரு ஆகச் சிறந்த கதையாக்குகிறது.

போன தலைமுறை தாத்தன்களுக்காவது, இந்தளவு அங்கலாய்க்க ஒரு வாழ்க்கை கிட்டியிருக்கிறது. நாமெல்லாம் நம் பேரன்,பேத்திகளிடம் கசிந்துருக, ஒரு நல் வாழ்க்கை வாழ்கிறோமா என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

சிறுகதைகள்!

எவ்வளவு பேர் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார்கள் எனத் தெரியாது. சிறுகதையொன்றை அதன் உயிரோடு உள்வாங்குவது என்பது பெரிய கலை. வரிகளுக்கிடையே படித்தல், வெளிப்படையாக சொல்லப் படாத கதையின் வீரியமிக்க பகுதிகளை விவரணைகளின் வழியே உணர்தல், சூழல் மற்றும் சில உரையாடல்களின் வழி கதை நகர்த்தப் படும் பாங்கு எனப் பல விதங்களில் கதையானது உள்வாங்கப் பட்டால் மட்டுமே அது ஒரு முறையான வாசிப்பாக முடியும். இல்லையென்றால் பத்தோடு பதினொன்றாக உள்ளே தங்காது வெளியேறி விடும்.

படித்த உடனேயே என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டதோ அதே அதிர்வை உண்டாக்கிய கதைகள் என யோசிக்கும் போது சட்டென நினைவில் வருவது வாத்தியாரின் ”நகரம்” மற்றும் வண்ண நிலவன் அவர்களின் “மிருகம்”. இன்னும் நிறைய சிறுகதைகள் இருந்தாலும், உடனே நினைவுக்கு வருபவை இவை. மற்றபடி, பெரும்பாலான சிறுகதைகள் மீண்டும் மீண்டும் படித்த பிறகே உள்ளே இறங்கி ஆசுவாசப் படுத்தி இருக்கிறது..நிறைய சிறுகதைகள் இன்னமும் அரைகுறை புரிதலையே தருகின்றன. “சிறுமி கொண்டு வந்த மலர்”  போன்ற கதைகள் படித்த உடனே உள்வாங்க முடியவில்லை.இணையத்தில் துழாவிய பின்தான் அது ஒரு மாய யதார்த்த வகைக் கதை என்று உணர முடிந்தது. அது தெரிந்த பின், மீண்டும் வாசித்த போது அக்கதை தந்த அனுபவம் அலாதியானது. இது போல நிறைய கதைகள், இன்னும் ஆழத்தில் இறங்காமல் மூளையிலேயே தங்கி உள்ளது.

நாஞ்சில் நாடன் அவர்களின் பெரும்பான்மையான கதைகள் கதாபாத்திரங்களையோ, சம்பவங்களையோ, ஏதேனும் ஒரு தொழில் சூழலையோ விவரித்துக்கொண்டே செல்லும். வெறும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் என்று தாண்டிக் கொண்டே சென்றால் பெரும் இழப்புதான். தலைப்பு உடனே நினைவில் வரவில்லை. தம்பதியர் ஒரு குக்கிராமத்தின் பாலத்தில், அகாலத்தில் ஏகாந்தத்தை அனுபவிக்க உட்காரும் போது உண்டாகும் உள்ளூர்க் காரர்களுடனான சல சலப்பை, இதமான போதையில் நடந்து வரும் பாட்டையா அடக்கி விட்டு, அவர்களுடன் சேர்ந்து அமர்வதாக முடியும். பாட்டையாவை பற்றிய விவரிப்பில் விரியும் கதை அச்சம்பவத்தில் வந்து முடியும் போது அந்த ஏகாந்தத்தை உணர்ந்தால்தான் அது முறையான வாசிப்பாகிறது. இல்லா விட்டால், அது ஒரு குடிகாரக் கிழவனின் மற்றுமொரு இரவு என்ற வடிவில் தேங்கி விடும்.

சாருவின் “டீ” யும் அவ்வாறே. மேலாக பார்க்கும் போது மிகச் சாதரண சம்பவம். ஆனால், அந்த தேநீருக்காக அலைபாயும் அந்த மனதின் அலைவரிசையில் நாமும் சேர்ந்து அமர்ந்து விட்டால், அட்டகாசமான வாசிப்பனுபவம் அது. ”நாளை மற்றுமொரு நாளே” வில், கந்தன் கடைசியில் தெருவின் விளக்குகள் ஒன்றொன்றாக எரிய நடந்து செல்லும் அந்தக் காட்சியின் வலிமையும், தரிசனமும் கூட வேறு எங்கோ படித்த பிறகுதான் உறைத்தது.  நிற்க.

இன்னமும் நிறைய கதைகள் இது போல், ஊரே படித்துக் கொண்டாடிய பின்னும், என்னளவில் அனுபவிக்க முடியாமல் கிடக்கிறது. அனைவருக்கும் இப்படி ஒரு பட்டியல் கண்டிப்பாக இருக்கும். நான் என்னளவில் ஒரு பட்டியல் தயாரித்து இங்கே பகிர்ந்து, ஏன் அந்தக் கதை சிலாகிக்கப் படுகிறது என கேட்கப் போகிறேன். விருப்பமிருப்பவர்கள், அவரவர் புரிதலை சொல்ல விழைந்தால், அரை குறைகள் பிழைத்துக் கிடப்போம் :)

மின்னரட்டையும், நினைவெரித்தலும்!

யாஹீ சேட் மூலம் குறுகிய காலம் பித்த நிலைக்கு தள்ளப் பட்ட பலரில் நானும் ஒருவன். 18 வயதிலேயே வேலைக்கு போக ஆரம்பித்தாயிற்று..நண்பர் குழாம் ஏதும் கிடையாது..பெரிதாக வாசிப்பிலும் அப்போது ஆர்வமில்லை. மணிக்கு, 15 ரூபாய் என நினைவு..முதலில், ஒன்று அல்லது இரண்டு மணிநேரம்தான் பிரவுசிங் சென்டரில் இருப்பேன்.. என்ன,ஏதென்று தெரியாமல், கண்ட கருமாந்திரத்தையும் பார்த்து விட்டு வெளிவரும் போது பெரும் ஆயாசமாக இருக்கும்..

அப்போதுதான் இந்த யாஹீ  அரட்டையில் சிக்கினேன்.. முதலில், ரூம் ரூமாக எட்டிப் பார்த்து கொண்டிருந்தவன், நமக்கு எதுவும் செட்டாகாது எனத் தோன்றிய பின், நாடு விட்டு நாடு பறந்த பொழுதுதான் அவள் அறிமுகமானாள்..சக்காரிகா. பங்களாதேஷை சேர்ந்தவள். எனக்கும், அவளுக்கும் ஒரே வயது. இருபதில் இருந்தோம். முதலில், விளையாட்டாக ஆரம்பித்த அரட்டை, பின் பித்தம் கொள்ள வைத்தது. ஞாயிறு காலை ஆனவுடன், பிரவுசிங் செண்டரில் நுழைந்தால் மாலைதான் வெளியேறுவது..சில நாட்களில், கிட்டதட்ட ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை சலிக்காமல் அரட்டை அடித்திருக்கிறோம்..இன்னதுதான் என்றில்லை..அந்த வயதுக்கே உரிய அனைத்தும் அரட்டையில் அரங்கேறும்..

அப்பொழுது, செல்ஃபோன் வாங்கியிருந்த புதிது..எண்கள் பரிமாறிக்கொண்டோம். அவளுக்கு ஆங்கிலம் சரியாக வராது. எனக்கு இந்தி தெரியாது..உடைந்த ஆங்கிலத்தில் மணிக்கணக்காக பேசுவோம்.வாரம் இரண்டு கடிதம், நிறைய புகைப்படங்கள் என பரிமாறப் பட்டது. நான் நினைத்த டிப்பிக்கல் இந்தியப் பையன் போலவே இருக்கிறாய்..மீசை மட்டும் பிடிக்க வில்லை..அதை எடுத்து விட்டு ஒரு புகைப்படம் அனுப்பு என்றாள்..முடியாதென்று விட்டேன். :)

கேரியரின் ஆரம்பக் காலம். சொல்லிக் கொள்ளும் படியான, சம்பளம் கிடையாது..ஆனால், ISD கால், இண்டர்நேசனல் கொரியர் என ஆட்டம் போட்டேன்:)..கிட்டதட்ட ஆறு மாதம் இப்படியே போனது..மேற்படிப்பு படிக்க வேறு ஊர் போகிறேன் எனச் சொன்னாள்..படிப்படியாக தொடர்பற்று போனது. அப்படியே, யாஹீவிலிருந்தும் வெளியேறி விட்டேன்.

திடீரென, ஆறேழு  வருடம் கழித்து ஒரு நாள் இரவு அழைத்தாள்..வெகுநேரம் பேசாமலிருப்பாள். பின் அழுவாள்..இப்படியே, மணித்துளிகள் ஓடியது..சமாதானம் செய்யவெல்லாம் தோன்ற வில்லை.. சீக்கிரம் யாரையாவது கல்யாணம் செஞ்சுக்கோ என்றேன்..படீரென பை எனச் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டாள்.சக்காரிகாவின் கதை அவ்வளவுதான்!

திருமணமான புதிதில், மனைவியிடம் சக்காரிகாவின் கதையைச் சொல்லி, புகைப்படம் மற்றும் கடிதங்களை கொடுத்தேன். எதையும் பார்க்காமல், அமைதியாக சொன்னாள். படிக்க விருப்பமில்லை..ஆனால், உடனே, எரித்து விடு என. பைக்கிலிருந்து பெட்ரோல் பிடித்து, அவள் முன்னேயே எரித்து விட்டேன் :)

கல்லூரி நாளொன்றின் டைரிக்குறிப்பு!

1995-ம் வருட கோடைக்கால கல்லூரி நாளொன்றின் டைரிக்குறிப்பு :)

இன்னைக்கு PFM  டெஸ்ட்.ஒரு பக்கம் கூட படிக்கலை. நேத்து அந்த நாயோட போயிருக்க கூடாது. YFM டெஸ்ட் முடிச்சுட்டு மத்தியானம் 1.00 மணிக்கு பஸ்ஸ்டாப் வந்தா சிவில் டிபார்ட்மெண்ட் லஷ்மியும், திவ்யாவும் கேப்ரியேல் க்ரூப்போட கடலை போட்டுட்டு இருந்தாங்க..எக்ஸாம் வேற நல்லா எழுதாத கடுப்புல, இதைப்பார்த்த உடனே சுர்ருன்னு கடுப்பாகிடுச்சு..வழக்கமா அந்த நேரத்துக்கு தம் போட மாட்டேன்..இதை பார்த்த உடனே அக்கா கடைக்கு போய் ஒரு கிங்ஸ் இழுத்துட்டு வந்து நின்னா, தலைவலி ஆரம்பிச்சுடுச்சு.எப்படித்தான், வெயில் பொளக்கற இந்நேரத்துக்கு கூட தக்காளி காரியத்துல கண்ணா இருக்கானுங்களோ..நம்ம கிளாஸ்லயும்தான் இருக்கே ரெண்டு..ஒண்ணை பார்த்தா நாம ஓடணும்..இன்னொருத்தி நம்மளை பார்த்தா ஓடறா..

சதாஸ் பஸ் பிடிச்சு பஸ்ஸ்டாண்ட் வந்து இறங்கறப்ப தலைவலி அதிகமாகி ஒரு அனாசின்-500 வாங்கிப் போட்டப்பத்தான் சாரதி வந்தான். டேய்! பங்காளி வாடா பீர் சாப்பிட போலாம்னான்..நான் வரலை பங்கு, பயங்கர தலைவலின்னேன்..ஏய் அதான் மாத்திரை போட்டீல்ல, சரியாய்டும்..சீனைப் போடாம வாடான்னு இழுத்துட்டு போயிட்டான்..எக்சாமும் சரியா பண்ணலை நாளைக்கு எக்சாமுக்கும் இன்னும் படிக்கலை, மதியம் பீர் கேக்குதான்னு மனசு உறுத்துச்சு..அப்புறம் டக்குன்னு மயிரே போச்சுன்னு தோணி அவன் கூட போய், மனோகரால ஒரு புஃல் பீர் அப்புறம் ஒரு ஆஃப் பீர்ன்னு அடிச்சு முடிக்கறப்ப நல்லாவே தெரிஞ்சது, எனக்கு ஏறிடுச்சுன்னு. மத்தியானத்துல எல்லாம் சரக்கு சாப்பிட்டதே இல்லை. அந்த இட்த்தோட நாத்தமே பொரட்டுச்சு..ஆனாலும், ரெண்டு புரோட்டா பிசைஞ்சு அடிச்சுருந்தேன். பில் செட்டில் பண்றப்ப, சர்வர்கிட்ட சாரதி வம்பிழுத்துட்டிருந்தான்..

நான் சொல்லாம, கொள்ளாம வெளியே வந்து நின்னு, 2ம் நம்பர் பஸ் வருதான்னு பார்த்தேன்..அப்பத்தான், 1st year சுப்பிரமணி சைக்கிள் ஸ்டேண்ட்ல இருந்து வெளியே சைக்கிள் எடுத்துட்டு வந்தான்..டேய் தம்பி நானும் வரேன்டா இருன்னேன்..அண்ணே! வெயில்ல டபுள்ஸ் எப்படி இவ்வளவு தூரம்னான்..மூடிட்டு ஓட்டு..கொஞ்ச தூரம் கழிச்சு நான் ஓட்டறேன்னு சொல்லிட்டு பின்னாடி  ரெண்டு பக்கம் கால் போட்டு, நானும் பெடல் போட்டேன். மிதிச்சேனா இல்லையா, எப்ப வீட்டுக்கு வந்தேன்னே தெரியலை..

பின்னாடி தோட்டத்துல போய், வாந்தி மேல வாந்தி..தலை செம பாரம்..அப்படியே வாஷ் பண்ணிட்டு வீட்டுக்குள்ள வந்தா யாரையும் காணோம்..நேரா போய் பெட்ல விழுந்து தூங்கிட்டேன்.