அன்னிக்கு வெள்ளிக்கிழமை. ஸ்கூல் முடிஞ்சு சாயங்காலம், கிரவுண்டில் கிரிக்கெட் விளையாண்டுட்டு இருந்தப்ப, டென்த் ’பி’ பாலன் வந்து “டேய்! ஞாயித்துக் கிழமை பதினோரு மணிக்கு கே.பி.எம் கெணத்துக்குப் போறோம். கொளந்தானூர் பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணு” ன்னு சொல்லிட்டு போனான்.பாலனை பிடிக்கும்.ஆனால்,சில நேரங்களில் பிடிக்காது. வாய்க்கு வந்த படி கெட்ட வார்த்தை பேசுவான்.புள்ளைங்க பின்னாடி அலைவான். நல்லா பேட்டிங் பண்ணுவான். சில சமயம் பெரிய பசங்க மாதிரி நடந்துக்கறப்ப எரிச்சலா இருக்கும்.ஆனா, அவன் கூப்பிடறப்ப வரலைன்னு சொல்ல முடியலை.
ஞாயித்துக்
கிழமை போனா, எல்லாப் பயலும் எனக்காக நின்னுகிட்டு இருந்தானுங்க.நாலு சைக்கிள்ல
டபுள்ஸ்ம்,ட்ரிபுள்சுமா ஒரு பத்து பேரு கிளம்பிப் போனோம்.வழியிலே நிறுத்தி, கடையில
சிசர்ஸ் வாங்கினானுங்க.”டேய்! எனக்கெல்லாம் வேண்டாம்டா” ன்னேன்.”மூடிட்டு வா”ன்னு பாலன் சைக்கிள் எடுத்தான்.கிணத்தை தாண்டி
சைக்கிளை விட்டானுங்க.”எங்கேடா போறீங்க” ன்னா, “வா மாப்ள, தம் அடிச்சுட்டு வரலாம்.இங்கே எல்லாம் ஆள் நடமாட்டம்
இருக்கும்” ன்னு சொல்லி, கெணத்த
தாண்டி இருந்த அந்த சின்ன ரயில்வே ஸ்டேசன் போனோம்.ரொம்பவே சின்ன ஸ்டேசன் அது..ஆள்
அரவமே இல்லை. டிக்கெட் கவுண்டர் முன்னாடி ஆட்டு புளுக்கையா கிடந்தது. நாளொன்னுக்கு
நாலே ட்ரெயின் போற ரூட் அது. இந்த ஸ்டேசன்ல எந்த ட்ரெயினும் நிக்காது.உள்ளே போய்
பென்ச்சுல உட்கார்ந்து ஆளுக்கு ஒரு தம் பத்த வைச்சோம். சுத்தி அஞ்சு கிலோ
மீட்டருக்கு அடிச்சுப் போட்டாக் கூட ஏன்னு கேட்க ஆள் கிடையாது. எங்களோட கூச்சல்
மட்டும்தான் கேட்டுச்சு. தம் அடிச்சுட்டு, கொஞ்ச நேரம் ஒன் பிட்ச் கேட்ச் கிரிக்கெட்
விளையாடிட்டு ரீசஸ் போலாம்ன்னு டாய்லெட் பக்கம் போனேன். எழவெடுத்தவனுங்க என்னமோ
பண்ணிட்டு வந்துக்கானுங்க. உள்ளே எல்லாம் வழவழப்பா இருந்தது. குமட்டிகிட்டு வர ஓடி வந்துட்டேன்.எல்லா
நாயும் சிரிச்சுது.கண்ல தண்ணி முட்டிட்டு, ”நான் வீட்டுக்கு போறேன்” னேன். ”நீ ரொம்ப ஒழுங்கா?.பேசாம
கூட வாடா” ன்னு பாலன் சிரிச்சான்.”மயிரான் என்ன பத்தி உனக்கு என்னடா தெரியும்? நான்
எங்கயும் வரலை”ன்னு ஓரியாட்டம்
பண்ணேன். ”சரிடா, இனிமேல் உன்னை எங்கயும்
கூப்பிடலை.பிடிக்கலைன்னா,எங்க கூட வராத.இந்த ஒரு தடவ கெணத்துக்கு போய்ட்டு போயிடு.இவ்ளோ
தூரம் வந்தாச்சு” ன்னு சொல்லவும், அரை மனசா
கிளம்புனேன்.
கெணத்துல போய் தண்ணியை பார்த்ததும் கொஞ்சம் ஜாலியா இருந்தது.ரொம்ப
நேரம் குளிச்சோம். நடுவில பாலன் மட்டும் வந்து, காதை கடிச்சான். ”செம மேட்டர் மாப்ள. சத்தம் போடாம வா” ன்னு. மோட்டார் ரூம்ல வைச்சிருந்த மோட்டாரை
காமிச்சான்.”மாப்ள, இதை எப்படியாவது
கழட்டிகிட்டு போய் வித்தா, ஆறு மாசத்துக்கு செலவுக்கு பஞ்சமில்லை.என்ன சொல்றே” ன்னான். ”போடா மயிரு. நான் இந்த வேலைக்கெல்லாம் வர மாட்டேன் .மாட்டிகிட்டா அவ்வளவுதான்.என்னால
முடியாது” ன்னு கிளம்பினேன்.”சரிடா மோட்டார் வேணாம், ஒயராவது கட் பண்ணி கொண்டு
போலாம். விக்கறது ஈஸி.எப்படியும் ஐந்நூறு தேறும். விக்கறது ஈஸி. எம்பொறுப்பு” ன்னான். வாரக்கடைசியில் ரெண்டு ரூபா மிச்சம் பண்ணி,
சக்தி தியேட்டர்ல பென்ச்ல உட்கார்ந்து பார்க்கிறதுதான் பெரிய சந்தோஷம்.அதனால, அரை
மனசா ஒத்துகிட்டேன்.
ரூமுக்குள்ள தேடினோம். ஆக்சா பிளேடு ஒண்ணு துருப்பிடிச்சு
கிடந்தது.அதை அங்கேருந்த கருங்கல்லில் நல்லா ராவு ராவுன்னு கைல சூடு உணரும் வரை ராவுனேன்.
ஒயர் பிவிசி பைப் வழியா செவத்தோரமா போய், ஒரு ஓட்டை வழியா ரூமுக்கு வெளியே போச்சு.
மொதல்ல பைப்பை அறுக்க ஆரம்பிச்சோம். அப்புறமா கறுப்புகலர்ல மொத்தமா ஒயர்
இருந்துச்சு. ரொம்ப நேரம் அறுத்தும் பாதிதான் அறுக்க முடிஞ்சது. வேர்த்து வழிய, கை
கால் வலிக்க அரை மணி நேரம் ஆகிடுச்சு அதுக்குள்ள.குளிச்சுட்டு கெணத்துக்கு வெளியே
வந்தப்ப உடம்புல இருந்த தண்ணிய விட, வேர்வை அதிகமா ஓடிட்டு இருந்துச்சு. ”விட்டுடலாம்டா.பாவம்டா” னேன்.”ஆனது ஆச்சு பொறுடா” ன்னு பாலன் சொல்ல, ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அறுக்க, ஒரு முனை அத்துகிட்டு
கைல வந்துச்சு..அப்படியே,ரூமோட இன்னொரு மூலைக்கு போய், பைப் ஓட்டை வழியா வெளியே
போற இடத்துல உக்காந்து, அந்த முனையில அறுக்க ஆரம்பிச்சோம். அதுக்குள்ள எல்லா
பயலும் வந்து எட்டி பாத்தானுங்க..பாலன் வசமா வார்த்தை பேசி துரத்தி விட்டுட்டான்.”இதுல எந்த நாயையும் கூட்டு சேர்க்க மாட்டேன்”ன்னு சொன்னான். மறுபடியும் அரை மணி நேரம் அறுத்ததுல,
கிட்டதட்ட பத்தடிக்கும் நீளமா, ரொம்ப மொத்தமா காய்ல் ஒயர் கைல.என்னால அதுக்கு மேலே
அங்கே நிக்க முடியலை.ரூமை விட்டு வெளியே வந்து மூச்சு வாங்குனேன். மறுபடியும் போய்
தண்ணில இறங்கிட்டேன்.பாலன் அவனோட கைலில ஒயரை போட்டு சுத்தி எடுத்துட்டு கிளம்பி
போய்ட்டான்.
அடுத்த நாள் காலைல, ப்ரேயர் முடிச்சுட்டு மாடிப்படில ஏறி கிளாஸ்க்கு
போய்ட்டு இருந்தப்ப, பாலன் பக்கத்துல வந்து சிரிச்சுகிட்டே ஜோப்புல எதையோ சொருகிட்டு
ஓடிட்டான். கிளாஸ் மூலைல போய், யாருக்கும் தெரியாம எடுத்துப் பார்த்தா நூறு ரூவாத்
தாளும், அம்பது ரூவாத் தாள் ஒண்ணும் இருந்துச்சு. யாருக்கும் தெரியாம, பக்கத்துல
இருந்த ஜன்னல் வழியா நூறு ரூவாயை வெளியே பறக்க விட்டுட்டு, அம்பது ரூவாயை ஜோப்புல போட்டுகிட்டு
என் இடத்துல வந்து உக்கார்ந்துட்டேன்.
# இருபது வருடங்கள் கழித்து அவ்வழியே போன
வாரம் சென்றேன். கே.பி.எம் கிணற்றின் பக்கமாக, அடுக்ககம் ஒன்று முளைத்து,
அங்கிருக்கும் சிறுவர் சிலர் கிணறுக்கு மேல் மண் கொட்டப் பட்டு சமதளமாகி விட்ட
பார்க்கிங் ஸ்லாட்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
No comments:
Post a Comment