Saturday, January 25, 2014

பதுங்கு அறையும், பீடிக்கட்டுகளும்!



முதலில் பீடிதான் பழக்கம். தலா எட்டு வீடுகளைக் கொண்ட அடுத்தடுத்து கட்டப் பட்ட அக்காலத்திய இரண்டு அடுக்ககங்கள் அவை. மொத்தம் பதினாறு வீடுகள். இரண்டு அடுக்க்கத்துக்கும் இடையில் ஓர் ஆள் அளவில்தான் இடைவெளி. எளிதாக மாடி விட்டு மாடி தாண்டி விடுவோம். கிட்டதட்ட பத்து பேர் ஒரே வயதை ஒத்தவர்கள். பெரும்பாலும் திருடன் போலீஸ்தான் ஆதர்ச விளையாட்டு.படிக்கட்டுகளை போலீஸ் மட்டும்தான் உபயோகிக்கலாம். திருடர்கள் மழைநீர்க் வடிகுழாய், வெயில் தடுப்பான்கள், தடுப்புச் சுவர்கள் ஆகியவற்றை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும்.தலா மூன்று மாடிகள், இரண்டு அடுக்ககங்கள். சலிக்க சலிக்க ஓடி விளையாடுவோம்.பிறகு, சுற்றுப் புறத்தில் பெருவாரியாக ஆரம்பிக்கப் பட்ட வீடுகளின் அஸ்திவாரக் குழிகள் மற்றும் பிற வீடுகளில் புகுந்து வெளி வரும் ஐஸ்பாய். ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை குடியிருந்த இந்த தெருதான் பதின்மத்தின் சொர்க்கம். வாடகை சைக்கிள், பம்பரம், கில்லி தாண்டு, டயர் எரித்து சுற்றுதல், கிரிக்கெட் டோர்னமெண்ட்கள், கால்பந்து, டெண்ட் அடித்து பொங்கல் வைத்தல், அண்ணன்களுக்கு லவ் லெட்டர் பாஸ் செய்யும் போஸ்ட் மேன் வேலை பார்த்தது என பலவற்றை அனுபவித்தது இங்கேதான். 

மாடியில் சின்ன பதுங்கு அறை ஒன்று இருந்தது. அந்த மறைவிடம் வினோதமான வடிவமைப்பை கொண்டது.மொட்டை மாடிக்குச் சென்று நீளமான வெயில் தடுப்பானில் கால் வைத்து இரண்டடி கீழே இறங்கினால் ஒரு பெரிய சதுர வடிவ பதுங்கு அறை ஒன்றிருக்கும்.உயரம் வெறும் இரண்டடிதான். பத்துக்கு பத்து நீள அகலம். தவழ்ந்து உள் நுழைந்து, சம்மணமிட்டு அமரலாம். நிற்க முடியாது. மாடியிலோ அல்லது கீழே தரைத்தளத்திலோ இருந்து பார்த்தால் சதுர அறை என்ற ஒன்று இருப்பது தெரியுமே ஒழிய, உள்ளே இருப்பவை தெரியாது.பெரியவர்கள் மாடியிலிருந்து இரண்டடி கீழே இறங்கி சன்ஷேடில் கால் வைத்து பார்க்க மாட்டார்கள். பயம்!. கீழே இறங்கும் போது கொஞ்சம் தப்பினாலும், அதல பாதாளத்தில் இரண்டு மாடி உயரத்துக்கு வானில் மிதந்து தரையில் விழுந்து சிதறி விடுவோம். பொடுசுகள் எங்களுக்கு மிக வசதியான மறைவிடமாகி போனது அந்த அறை. பதின்மத்தின் ஆதாரக் கேள்விகளுக்கு விடையளித்தது அந்த அறைதான்.பல சூட்சுமங்கள், ரகசியங்கள் மெல்ல மெல்ல புரிந்தது அல்லது குழப்பம் அதிகமானது அங்கேதான். மருதம், சரோஜோ தேவி புத்தகங்களும், பீடிக்கட்டுகளும் அங்கே வாங்கி அடுக்கப் படும். எல்லாச் செலவும் பொதுக்கணக்கு.நான் படித்தது சாமியார் பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் நகருக்கு வெளியே இருந்த மடத்தினால் நிர்வகிக்கப் பட்ட பள்ளி. அரசினர் பள்ளிக்கு நகருக்குள் சென்று வரும் நண்பர்கள், மேற்படிச் சமாச்சாரங்களை வாங்கி வந்து ரகசியமாக அடுக்கி வைப்பர்.புதிய சரக்குகள் வந்து இறங்கிய விஷயம் ரகசியமாக அனைவருக்கும் பகிரப்பட்டு ஒவ்வொருவராக பதுங்கு அறைக்குள் இறங்குவோம். படங்கள் ரசிக்கப் படும். புத்தகங்கள் படிக்கப் பட்டு விவாதங்களின் மூலம் சந்தேகங்கள் நிவர்த்திக்கப் படும்.பீடிகள் வலிக்கப் படும். ஏழாவது படிக்கும் போது முதன் முதலாக பீடி பற்ற வைத்தேன். மாதத்திற்க்கு ஒன்றோ, இரண்டோ என்று கணக்கு. பண்டிகைக் காலம் அல்லது உறவினர் வந்து சென்ற நாட்களில், கையில் காசு நிறைய இருந்தால், சிசர்ஸ் பாக்கெட் வாங்கி அடுக்கப் படும். ஆனால், சிசர்ஸ் உபயோகத்தின் போது மிக மிகக் கடுமையான விநியோகம் இருக்கும். ஒன்று அடித்தவன் கொஞ்ச நாட்களுக்கு மீண்டும் கேட்கக் கூடாது. 

இப்படியாக போய்க் கொண்டிருந்த நாட்களில், இருப்பு வைக்க சிசர்ஸ் பாக்கெட் ஒன்றினை அண்ணாச்சிக் கடையில் எங்களில் ஒரு பக்கி வாங்கிக் கொண்டிருந்த பொழுதொன்றில், சக குடியிருப்பு வாசியான நிவேதா என்றொரு நல்ல பிள்ளையொருத்தியின் கண்ணில் பட்டுத் தொலைக்க, மொத்த வீடுகளுக்கும் ஒரே ட்யூசன் டீச்சராய் இருந்த புவனா மிஸ்ஸிடம் கோள் மூட்டப்பட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் பெற்றோருடன் அவரது இல்லத்தில் ஆஜராகும்படி வாய் வழி நோட்டீஸ் அனைவருக்கும் சடுதியில் சொல்லப் பட்டது. நல்லவள் பார்த்ததோ அல்லது கோள் மூட்டியதோ தெரியாத மூடர் கூட்டம், என்ன ஏதென்று தெரியாத அற்பத்தனமான எதிர்பார்ப்புடன் புவனா மிஸ் வீட்டில் குழுமினோம். பெரும்பாலும் அம்மாக்களே துணை வந்திருந்தனர். கிட்டதட்ட, பத்துக்கும் மேற்பட்ட சக தோழர்கள் குழுமியிருக்க, புவனா மிஸ் எடுத்த எடுப்பிலேயே இங்க நிக்கறது எல்லாம் பீடி, சிகரெட் வாங்கி வைச்சு குடிக்குதுக என்ற பவுன்சரைப் போட, கலவர பூமியானது அந்த வீட்டின் வரவேற்பறை. பெரும்பான்மையான அம்மாக்களுக்கு என்ன மாதிரியான எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தோன்றாத பொழுதில், என் அன்னையார் கண நேரமும் தாமதியாமல், சிண்டை பிடித்து நங்கென்று சுவற்றில் மோதி அனைவருக்கும் அந்த அசந்தர்ப்ப சூழலில், முன் மாதிரியானார். அந்த சின்ன அறையில் பிழிந்தெடுக்கப் பட்ட சகாக்கள் மேலும் தோலுரிக்கப் பட தரதரவென வீட்டுக்கு இழுத்துச் செல்லப் பட்டோம். அப்பா வீட்டில் இல்லை. அம்மா, வீட்டுக்கு உள்ளே துரத்தி, கதவைத் தாழிட்டு தென்னை விளக்கமாற்றால் அடித்த அடி ஒவ்வொன்றும் வீறல் வீறலாய் உடலெங்கும் ரொம்ப நாட்களுக்கு காணும் போதெல்லாம் வேதனையை அளித்துக் கொண்டேயிருந்தது. ஒவ்வொரு அடி இறங்கும் போதும் அம்மாவிடம் இரைந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.அப்பாகிட்ட சொல்லிடாதாம்மா. அப்பாகிட்ட சொல்லிடாதாம்மாஎன்ற கதறலினூடான கெஞ்சல்தான் அது. ஏனெனில், இரும்பேறிய கைகளில் இருந்து விசிறப் படும் பிளாஸ்டிக் வயரின் வீறல், விளக்கமாற்று வீறலை விட மிக மிகக் கொடுமையானதும், கடும் வலியையும் தர வல்லது.

இரவு, அப்பா பட்டறையில் இருந்து வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நொடியும் நரகமாகப் போனது.அம்மா சொல்லியிருப்பாளோ, எப்போது வேண்டுமானாலும் எழுந்து அடிப்பாரோ எனப் படபடப்பாக கடந்தன அந்த நிமிடங்கள். ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இரவு இனிதே கழிந்த மகிழ்ச்சியில் தூங்கிப் போனேன்.

காலையில் நேரமாக எழுந்து திருச்சியில் இருக்கும் அத்தை வீட்டுக்கு அனைவரும் பயணம். கோர்ட் நிறுத்தத்தில் இறங்கி, பாலக்கரை பீமநகர் வரை நடக்க வேண்டும். அந்த முன் மதிய வேளையில், பாலாஜி தியேட்டர் அருகே இருந்த ஒரு கடையில் நின்றோம். அம்மா “என்னடா வேணும் டீயா? சர்பத்தா? என்றாள். ஜன்னலோர இருக்கை கிடைக்காத கடுப்பில் இருந்த நான், ஒரு மண்ணும் வேண்டாம் என்றேன். கிட்டதட்ட முந்தைய நாளின் கொடுஞ்சம்பவத்தை மறந்து இருந்தேன். அப்பா அமைதியாக கேட்டார் “சிசர்ஸ் வேணுமா?. சப்த நாடியும் ஒடுங்கிப் போனேன். நடுக்கத்தோடு சர்பத்தை குடித்து விட்டு நடக்க ஆரம்பித்தேன்.

வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. முன்னே ஒரு பாரமேற்றாத மாட்டு வண்டி சென்று கொண்டிருந்தது. அப்பா, தூக்கி அதில் பின்பக்கம் காலை தொங்கப் போட்டு உட்கார வைத்து, பின்னால் நடந்து வந்தார். சில நிமிடங்கள் என்னையே பார்த்துக் கொண்டு வந்தவர், இரைந்த குரலில், மெதுவாகச் சொன்னார் “இதெல்லாம் நமக்கு வேணாம் நைனா!“. அவ்வளவுதான், தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன்.வேறெதுவும் சொல்லவோ, அழுகையை நிறுத்தவோ அவர் முயற்சிக்கவே இல்லை. 

ஆயிற்று கிட்டதட்ட இருபது வருடங்கள். ஒழுக்கம் சார்ந்து அவர் என்னிடம் பேசியது முதலும் ,கடைசியும் அதுவே.

No comments:

Post a Comment