Friday, October 10, 2008

ஒரு தலைமுறையின் முதல்நாள்.

நேற்றிலிருந்தே என்று சொல்லலாம். வயிற்றுக்குள் ஏதோ பிசைந்து கொண்டிருப்பது போன்ற அவஸ்தை! காலையில் பிசைவு அதிகமாகி கொண்டே வந்தது..என் இரண்டரை வயது செல்ல மகள் இன்று முதன் முதலாக பள்ளி செல்கிறாள்.


மிகுந்த பிடிவாத குணம் உடையவள். ஒரு முறை, சுமார் ஆறுமணி நேரம் வேண்டியது கிடைக்கவில்லை என அழுதிருக்கிறாள்.அவளது பிடிவாதத்துக்கான காரணங்கள் விசித்திரமாய் இருக்கும். மின்விசிறியை அவள் போடும் முன் நான் போட்டது, அவள் படுத்திருக்கும் தலையணையில் நான் கை வைத்தது, அவளை கேட்காமல் நான் ஷர்ட்டில் இருந்து டிஷர்ட்டிற்க்கு மாறியது என இது போன்ற எண்ணற்ற காரணங்களுக்கெல்லாம் பிடிவாதம் பிடித்து அழுவாள். பிறந்ததிலிருந்து இதுவரை என் அல்லது மனைவியின் அருகாமை இல்லாமல் அவள் இருந்ததில்லை.அவள், புத்திசாலி. ஒரு விசயத்தை பொறுமையாக சொன்னால், கச்சிதமாக பிடித்து கொள்வாள். பார்க்கும்/கேட்கும் எந்த விசயத்தையும் அப்படியே மனதில் இருத்தி கொள்வாள்.


பள்ளி செல்ல அவள் முரண் பிடிக்க கூடாதென சுமார் ஆறுமாத காலமாக பள்ளிச் சூழல் பற்றி நல்ல விதமாக அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி, அவளும் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமை பள்ளிக்கு முதல் நாள் அவளுடன் சென்று புத்தாடைகள் எடுத்து கொடுத்ததை மிகவும் ரசித்தாள். "அப்பா, டோரா பேக் வாங்கி கொடுப்பா", " ஷீ வாங்கி கொடுப்பா" என ஆனந்த கூத்தாடினாள்..


தினமும் 8 மணிக்கு தூங்கி எழும் பழக்கமுள்ளவள், பள்ளி செல்லும் நாள் அதிசயமாக ஏழு மணிக்கே எழுந்து விட்டாள். அவளுடன் போராடி குளிக்க வைத்து, புத்தாடை அணிய செய்து, சாப்பிட வைக்க தயார் செய்யும் போது பள்ளி வாகனம் வந்து விட்டது. வாகனத்தை பார்த்தவுடன் குஷியாகி செருப்பணிந்து அதில் ஏற ஓடி விட்டாள். முதல் நாள் என்பதால் நாங்கள் கொண்டு வந்து பள்ளியில் விடுகிறோம் என சொல்லி விட்டு அவளை சாப்பிட வைக்க முயற்சி செய்தோம். அவள் சாப்பிடாமல் அடம் பிடிக்க, பால் மட்டும் குடிக்க செய்து விட்டு, நானும் மனைவியும் மகளுடன் பள்ளிக்கு கிளம்பினோம்.


என் மகள், புதிதாக யாரும் அவளை தொடக்கூட அனுமதிக்க மாட்டாள்.கத்துவாள். வழியெல்லாம், நான் அவளுக்கு எப்படி "மிஸ்ஸிடம்" தண்ணீர் வேண்டும் என கேட்க வேண்டும், எப்படி அவசர உபாதைகளுக்கு "மிஸ்ஸின்" உதவியை நாட வேண்டும், எப்படி மற்ற குழந்தைகளுடன் ஒத்து உறவாட வேண்டும் என விளக்கமாக சொல்லி கொண்டே வந்தேன். எல்லாவற்றுக்கும் " ஓகேப்பா" "ஓகேப்பா" என சொல்லி கொண்டே வந்தாள்.


பள்ளியை நெருங்க நெருங்க என் இதய துடிப்பு அதிகரிப்பதை உணந்தேன். ஏற்கனவே ஒருமுறை என் மகளை பள்ளிக்கு அழைத்து சென்றிருப்பதால், பள்ளியை பார்த்த உடனேயே "அப்பா ! எங்க "ஸ்கூல்" என சந்தோஷ கூச்சலிட ஆரம்பித்து விட்டாள். உள்ளே நுழைந்தவுடன், அங்கே இருந்த கத்தரிப்பூ செடியை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டாள். அவளை அழைத்து கொண்டு உள்ளே நுழைந்தோம். அவளது வகுப்பில் மொத்தம் 20 பேர். உள்ளே நுழைத்தவுடன், அவளுக்கென்று ஒரு சிறிய நாற்காலி தந்தார்கள்.அழகாக அதில் உட்கார்ந்து விட்டாள். நானும்,மனைவியும் "ஒகே டா செல்லம் bye" என்றோம். "எங்கம்மா போறீங்க?" என்றாள். " பாப்பா இங்க பிரண்ட்ஸ் கூட இருப்பாளாம். அம்மா ஏற்கனவே சொன்ன மாதிரி அப்புறமா வந்து கூப்பிட்டுட்டு போவேனாம்!!" என்றவுடன், "ஒகேம்மா.bye" என்றாள்.


நாங்கள் வீடு திரும்பும் போது, மனைவி ஏதேதோ பேசி கொண்டு வந்தார்கள். என் காதில் எதுவுமே விழவில்லை. மனமெல்லாம், என் மகளிடமே இருந்தது. மனைவியை வீட்டில் விட்டு விட்டு அலுவலகம் வந்து சேரும் வரை மனம் முழுவதும் மகளே ஆக்கிரமித்திருந்தாள்.


அலுவலக வேலைகளில் நான் கரைந்து, பின் சிறிது ஆசுவாசபடுத்த நேரம் கிடைத்த போது மணி 11.00 ஆகி விட்டிருந்தது..மீண்டும் மகளின் முதல் பள்ளி நாள் ஞாபகத்துக்கு வர, ஏனோ நீண்ட நாட்களுக்கு பிறகு என்னையும் அறியாமல்..என் கண்களின் ஓரங்களில்..சிறுதுளிகள்..