Saturday, November 27, 2010

நந்தலாலா - ஒரு மழைநாளின் இரவில் !

அசோகமித்திரன்,வண்ணதாசன் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகளில் கிடைக்கும் வாசிப்பனுபவமும்,தர்க்க சிந்தனையயும், திரையில் கொடுக்க முடியாதா என்ற எனது நீண்ட நாள் கேள்விக்கு எனக்கு கிடைத்துள்ள பதில்தான் “நந்தலாலா”..

வார்த்தைகளால் அல்லாமல் காட்சிகளால் ரசிகனுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை மிஷ்கினும், மகேஷ் முத்துசாமியும் அளித்துள்ளனர்..

மிஷ்கின் பட டைட்டில் கார்டு எப்போதும் தனித்து இருக்கும்.. நந்தலாலாவிலும் அப்படியே.. தண்ணீருடன் ஊடாடும் அந்த செடிகள் தரும் புத்துணர்ச்சிக்காகவே கண்டிப்பாக இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும்..

மகேஷ் முத்துசாமி அஞ்சாதேவில் முதற் காட்சி வானத்தை நோக்கி கேமராவை வைத்து இருப்பார்..அங்கே நிமிர்ந்து உட்காரும் நாம் கடைசி காட்சி வரை படத்துடன் ஒன்றி இருப்போம்.. நந்தலாலாவிலும், டைட்டில் கார்டும் அதனை தொடர்ந்த சிறுவன் அகியின் கவிழ்ந்த முகத்தில் ஆரம்பமாகும் நீளமான அந்த முதல் ஷாட்டும் நம்மை ஒரு புதிய அனுபவத்திற்கு தயார் செய்கின்றன( மிஷ்கினின் எல்லா கதாபாத்திரங்களும் பெரும்பாலான காட்சிகளில் தலை குனிந்தே பேசுகின்றனர் ..சித்திரம் பேசுதடி,அஞ்சாதேவில், நரேன்..இப்பொழுது நந்தலாலாவில் அகியும்,மிஷ்கினும்..இதன் பின் உள்ள குறிப்பென்ன? )

சிறுவன் அகியும், மனநலம் பாதிக்கப்பட்ட மிஷ்கினும் ஒரு தருணத்தில் இணைந்து அவரவர் தாயைத் தேடி செல்லும் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் நபர்கள் மற்றும் அனுபவங்களே நந்தலாலா.. ஒரு ரசிகனுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் நந்தலாலா படைக்கப்பட்டிருக்கிறது..

எனக்கு தெரிந்து காட்சியமைப்புகளுக்காக ஒரு இயக்குனர் தொடந்து கைதட்டல் வாங்கியதை அஞ்சாதேவில் முதன்முதலில் பல காட்சிகளில் பார்த்தேன்..நந்தலாலாவிலும் இது தொடர்கிறது...அதே போல் படம் முடிந்தபின் அனைத்து வகுப்பு ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி விட்டு வெளிவருவதை நான் பார்த்ததும் நந்தலாலாவில்தான்..

மிகவும் ரசித்த விசயங்கள் :

- காட்சியமைப்புகள் மற்றும் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹைக்கூ போல எழுதப்பட்ட திரைக்கதை. கதாபாத்திரத்தின் முகத்தில் ஷாட் ஓப்பன் செய்து அந்த முகத்தின் அதிர்ச்சியினை ரசிகனுக்கு கடத்தி விட்டு அதன்பின் அந்த காட்சியை விளக்குதல்..ஒரு கட்டத்தில் இந்த உத்தியே திரும்ப திரும்ப வந்தாலும் அலுப்பை தரவில்லை.

-லொகேஷன் தேர்வுகளும், மகேஷ் முத்துசாமியின் மனதை அள்ளும்/பாதிக்கும் கேமிரா கோணங்களும்.... இது போன்ற திரைக்கதைக்கு கேமிரா கோணங்கள் படத்தை தாங்கி செல்ல உதவுகிறது..

- இளையராஜாவின் ஆளுமை..வழக்கம் போல தேவையற்ற இடங்களில் இசையின்றி செய்து, தேவையான இடங்களில் வருடி கொடுக்கிறார்.. அந்த டிராக்டர் பயணம் ஆரம்பமானதும் ஒலிக்கும் இளையராஜா குரலுக்கு ஏக கரகோஷம்.

இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தாலும், பட்டென மனதில் தோன்றுபவை மேற்சொன்னவை..

தவிர்த்திருக்க வேண்டியவை :

- மிஷ்கின் அம்மாவை பார்த்தவுடன் காட்டும் எதிர்வினை அவரது கதாபாத்திரத்திலிருந்து முரண்படுவதாக எனக்கு தோன்றுகிறது..

- ஸ்நிக்தா பாலத்திற்கு அடியில் உட்கார்ந்து பேசும் கிளிஷே வசனம் ( ஆனால் அந்த வசனம் முடிந்தவுடன் காட்டப்படும் இரண்டு குண்டர்கள்,மிஷ்கின் மற்றும் சிறுவன் உட்கார்ந்திருக்கும் ஷாட் நிச்சயம் உலகத்தரமான ஒன்று)

- கடைசி காட்சியில் மிஷ்கினை(பலூனுடன்)முதிர்ச்சியாக காட்டுவது..

மற்றபடி ஏதும் குறையில்லை..

ஒரு மழைநாளின் சில்லிட்ட இரவில் எனக்கு நந்தலாலா தந்த இந்த அனுபவமும்,மனநிறைவும் நீண்ட நாட்கள் என் மனதில் இருக்கும்.