Monday, August 26, 2013

முதல் குடி!

 
டிப்ளமோ இரண்டாவது வருடம். நட்பினால் சூழப்பட்ட பதின்ம வயது.சந்தோஷத்தின் உச்சியில் ஆட்டமும் பாட்டமுமாக கழிந்த நாட்கள்..அப்போதைய நெருங்கிய நண்பன் ஈரோடு பக்கமுள்ள கிராமத்தில் இருந்து வருவான்.அவனது கிராமத்தில் மஞ்சள் தண்ணீர் ஊற்றும்  விழா..எல்லோரும் கண்டிப்பா வரணும் மாப்ளே என்று கூட்டிக் கொண்டு சென்று விட்டான்..அவனது உள்ளூர் நண்பர்கள் தயராக வந்து பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்கள்.  மஞ்சள் வயல்களின் ஊடே ரயில்வே கிராஸிங் தாண்டி அவனது கிராமம் சென்றோம்..வீட்டில் அவனது அப்பா,அம்மா மற்றும் தங்கை எல்லோருமே எனக்காக ஆர்வமாக காத்திருந்தார்கள்..பய புள்ள எந்நேரமும் நம்ம புராணத்தையே வீட்டுல ரெண்டு வருசமா சொல்லிட்டு இருந்து இருக்கான்..பெரும்பாலும் என் சாப்பாட்டைதான் சாப்பிடுவான்..அவனுடைய சாப்பாட்டை யாருக்காவது கொடுத்து விடுவான்..இந்த மாதிரி நிறைய.

ரொம்ப கவனிப்பு வீட்டுல.அவங்கப்பா வாத்தியார். ரொம்பவே சோஷியல்.  நாத்திகவாதி..வில்ஸ் சிகரெட் புகைப்பார்..”கண்ணு தம்மு ஏதாவது வேணுமா?”ன்னு முதல் சந்திப்புலயே அதிரடிச்சார்..எனக்கு அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்ச பத்தாவது நிமிசத்துலயே, என் வீட்டை விட ரொம்ப பிடிச்சு போச்சு..பேசிக்கிட்டு இருக்கப்பயே அவனோட நண்பர்கள் கோழியை உறிச்சு கொண்டு வந்து வீட்டுல கொடுத்துட்டு, சிக்னல் கொடுத்தானுங்க..அப்படியே என்னை நகர்த்தி வண்டில உட்கார வைச்சு ஊர்வலம் கூப்பிட்டு போய், வரப்போரமா நடக்க வைச்சு, ஒரு பம்ப்செட் ரூம்ல உட்கார வைச்சானுங்க..அங்கே ஏற்பாடெல்லாம் பலமா இருந்தது..

நான் அதுவரைக்கும் ரெண்டு மூணு தடவை பீர் சாப்பிட்டு இருக்கேன் மத்தபடி அந்த வாடையே ஆகாது. ”வேண்டாம்பா! ஹாட் பழக்கமில்லை”ன்னேன்..”அய்யோ! சரக்கு பண்டிகைக்காக பாண்டில இருந்து புடிச்சுட்டு வந்தது..சும்மா மைல்டாதான் இருக்கும் சாப்பிடுங்க பிரதர்”னு ஒரே அழிச்சாட்டியம்..சரக்கு விண்டேஜ்..சரி,ஒரு ரவுண்ட் சாப்பிட்டு பார்ப்போம்னு எடுத்து ஒரே கல்ஃப்..ஆஹா! என்னடா இது பீர் அளவுக்கு கசக்கலையே அப்படின்னு நினைச்சுகிட்டே இன்னொரு கஃல்ப். அந்த எழவு சாப்பிட்ட உடனே ஏறாது ஒரு பத்து இருபது நிமிசம் ஆகும்னு ஒருத்தன் சொல்றதுக்குள்ளேயே நாலு லார்ஜ் அடிச்சுட்டேன்..கூட இருந்த பக்கிஸ்ல ஒருத்தன் கூட வேணாம் பாஸ்னு சொல்லவே இல்லை..அவனவன் எவ்வளவு அதிக ஷேர் அந்த சரக்குல முடிக்க முடியுமோ அந்த அளவு லாபம்னே குறியா இருந்தானுங்க..ஒரு அரைமணி நேரம்தான் சுய நினைவோட இருந்தேன்..அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு..

அதுக்கப்புறம் எல்லாமே ஃபேடவுட் காட்சிகள்தான்..வண்டில உட்கார்ந்தேன்னு தெரியும்..அப்புறம் பார்த்தா,சுடுகாட்டுக்கு பக்கத்துல நின்னு தம் அணைச்சது தெரியும்.அப்புறம் பார்த்தா, மேலே எல்லாம் மஞ்ச தண்ணியா இருக்கும்..சட்டையை கழட்டுறது ஞாபகம் இருக்கும். அப்புறம், பறை சத்தத்துக்கு நடுவுல செம குத்து குத்திட்டு இருப்பேன்..தெரு தெருவா கூட்டிப் போனானுங்க..எல்லா இடத்துலயும் குத்துன்னா குத்து செம குத்து..ஓட்டம்னா ஓட்டம் அப்படியொரு ஓட்டம்..அடிச்ச நாலு லார்ஜ்ம், போட்ட ஆட்டத்துல சும்மா ஆளை ஜிவ்வுன்னு தூக்கிருச்சு..

கடைசி ஃபேடவுட் சீன் எங்கேண்ணா, நண்பனோட வீட்டு திண்ணைல வாந்தி மேலே வாந்தி எடுத்துட்டு உட்கார்ந்து இருக்கேன்..அவனோட அப்பா, தலையை அழுத்தி பிடிச்சுருக்கார்..அம்மா “கருமம் புடிச்சவங்களா! புள்ளையை எங்கேயோ கூட்டிப் போய் என்னடா ஊத்தி கொடுத்தீங்க”ன்னு திட்டிகிட்டே கைல சொம்பு நிறைய மோர் வைச்சுகிட்டு டம்ளர்ல ஊத்தி கொடுத்துகிட்டு இருக்காங்க..தங்கை, கதவோரமா நின்னு சிரிச்சுகிட்டே எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கா.அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலை..

ரொம்ப நேரம் கழிச்சு கண் திறந்து பார்த்தா கும்மிருட்டுல,ஏதோ ஒரு கொட்டகையில கயித்து கட்டில்ல கிடந்தேன்.அப்புறம் தூங்க்கிட்டேன்..காலைல சூரியன் சுள்ளுன்னு முகத்திலடிக்க எழுந்து பார்த்தா, எல்லா பசங்களும் சுத்தி உட்கார்ந்து இருந்தானுங்க.அகோர பசி, செமையான உடம்புவலி. “பிரதர்,நேத்து சாயந்தரம் நம்ம பண்டிகைல கதாநாயகனே நீங்கதான்.என்ன குத்து! என்ன டான்ஸ்”ன்னு ஒரே கிண்டல்..”பேரை கெடுத்துட்டீங்களேப்பா”ன்னு  சம்பந்தமில்லாம அவனுங்களை திட்டிட்டு, ”நான் வீட்டுக்கு வரலை, என்னை இப்படியே பஸ் ஏத்துன்னு சொல்லி” நண்பன் எவ்வளோவோ வற்புறுத்தியும்,அவன் வீட்டுக்கு போகலை..

ரெண்டு நாளா மனசெல்லாம் ஒரே பாரம்..அவங்கப்பாவுக்கு பெருசா ஒரு கடிதம் எழுதினேன்..என் வளர்ப்பு,குணாதிசயம்,எனக்கு மிகவும் பிடித்த அந்த வீடு, அந்த ஊர், அன்றைய செயலுக்கான காரணம், எனது முட்டாள்தனத்துக்கான வருத்தம்,இனி வாழ்நாளில் மது தொடமாட்டேன் என்ற உறுதியுடன் கடிதத்தை முடித்து ஒரு உறையில் போட்டு ”படிக்காம அப்பாகிட்ட கொடுத்துடுடா” எனக் கொடுத்து விட்டேன்..அடுத்த நாளே ஒரு சின்ன பதில் மடல்  அனுப்பினார்..”செய்த தவறை உணரும் பக்குவம் உனக்கு இந்த வயதில் இருப்பதே எனக்கு மிக மகிழ்ச்சி..நீ உயரங்கள் தொடுவாய்..மற்றபடி நீ எங்கள் குடும்பத்துக்கு இன்னொரு மகன்தான்.அன்றைய நிகழ்ச்சியினால் எதுவும் எள்ளளவும் மாறவேயில்லை. மீண்டும் சந்திக்க அவா” என எழுதியிருந்தார்.அக்கடிதம் படித்த உடன் கிடைத்த ரிலீஃப் மிகப் பெரியது..

இச்சம்பவம் நடந்து கிட்டதட்ட மூன்று-நான்கு வருடங்கள் மதுவை தொடவில்லை..அதன் பின் ஹாட் பக்கமே போகவில்லை..பீர் மட்டும் கொஞ்ச காலம் உண்டு..இப்போதெல்லாம், விண்டேஜ் மட்டும் சாப்பிடுவதில்லை..ஏதோ அந்த வரையிலாவது அந்த பெரியவருக்கு ஒரு மரியாதை இன்றும் :)

பின் நகர்ந்த காலம் - வண்ண நிலவன்

1949ல் பிறந்த வண்ணநிலவன் தனது முதல் சிறுகதையை 19வது வயதில் எழுதுகிறார்.அதற்கு பிறகான இரண்டு,மூன்று வருடங்களில், வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, விக்ரமாதித்யன்,கி.ரா, பா.செயப்பிரகாசம்,தஞ்சை பிரகாஷ் என பல இலக்கிய ஆளுமைகளிடம் பரிச்சயமும்,நட்பும் கொள்கிறார்.

கோர்ட்டில் குமாஸ்தாவாக பணியாற்றிக் கொண்டே இலக்கிய தாகத்துக்கும் தீனி போடுகிறார்.கடும் வறுமையினால் சூழ்ந்த லெளகீக வாழ்வு அலைக்கழித்தாலும்,இலக்கியம் அவரை உத்வேகத்துடன் செலுத்திக் கொண்டிருக்கிறது.. வண்ணதாசனும், வல்லிக்கண்ணனும்,விக்ரமாதித்யனும் பெரும் ஆறுதலாய் இருக்கிறார்கள் (வண்ணதாசனிடம் இருந்து மட்டும் கிட்டதட்ட அறுநூறு கடிதங்கள் வாழ்நாளில் பெற்றிருக்கிறார்).  கிட்டதட்ட மூன்று வருடங்களில்,மேலே சொன்ன ஆளுமைகளிடம் இருந்த முக்கியமான அனைத்து புத்தகங்களையும் படித்து முடிக்குமளவு இலக்கியம் அவரை ஆட்கொண்டிருக்கிறது..

தனது 24வது வயதில், 1973ல் ஒரு கைப்பையில் வண்ணதாசன் கொடுத்த இரண்டு சட்டை மற்றும் இவரிடமுள்ள இரண்டு வேஷ்டிகளை மட்டும் திணித்துக் கொண்டு, சட்டைப் பையில் வெறும் 31 ரூபாயுடன் சென்னைக்கு ரயிலேறுகிறார்..சென்னைக்கு ரயில் கட்டணம் அப்போது 16.. கடல்புரத்தில் எழுத்து பிரதியாக அவர் கையில் இருக்கிறது..பதிப்புக்கு போகவில்லை..

இதுவரை படித்துள்ள “பின் நகர்ந்த காலம்” புத்தகத்திலிருந்து.

சினிமாவாக இருந்தால், இதற்கப்புறம் வசந்தம் வீசி, வாழ்வில் பெரும் வெற்றி பெற்றிருப்பான் ஒரு கலைஞன்..ஆனால், யதார்த்தம் வேறல்லவா..

இலக்கியம் படைப்பாளியை அவனது கடைசி காலம் வரை வறுமையிலேயேதான் உழல வைக்குமென்றால் அந்த எழவு இலக்கியமே தேவையில்லை என நினைக்கிறேன்..ஒரே அமர்வில் படிக்கக் கூடிய அளவில், எழுத்து நடையில் உள்ள புத்தகம்தான் என்றாலும், என்னால் ஒவ்வொரு அத்தியாத்தையும் அவ்வளவு எளிதாக கடனேவென்று படித்து விட்டு தாண்ட முடியவில்லை :(

Wednesday, July 03, 2013

சார்!



தொடர்ச்சியான மூன்றாவது சிகரெட்டை இழுத்துக் கொண்டிருந்தேன்.நெஞ்செல்லாம் காந்தினாலும் ஏதோ ஒரு வீம்போடு புகைத்துக் கொண்டிருந்தேன்.மாலை நான்கு மணி இருக்கும்,அது நடந்த போது.நினைத்தால்,குபுக்கென்று கண்ணோரம் துளிர்க்கிறது.நைனா கூட நினைவு தெரிந்து மேலே கை வைத்ததில்லை. பத்திருபது ஆண்,பெண் செக்கர்ஸ் சூழ்ந்திருக்க, சாரிடம் அடிவாங்கி அந்த பெரிய கடையின் மத்தியில் நிலைகுலைந்து கிடந்தச் சித்திரம், அழிக்க அழிக்க மனதில் விஸ்வரூபமெடுத்துக் கொண்டே இருந்தது.தன்னிரக்கமும்,கையாலகத்தனமும் மனதை பிசைந்து கொண்டிருந்தது. டீக்கடை அக்கா, உறைந்து போய் உட்கார்ந்திருந்த என்னையே அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சக சூபர்வைஸர் ராம் அருகில் அமர்ந்து புலம்பிக் கொண்டேயிருந்தான்.“மாப்ள! உன்னை அப்படியே கொத்தா தூக்கி சார் தள்ளி விட்டவுடனே எனக்கெல்லாம் குலையே நடுங்கிடுச்சு. பசங்க எல்லாம் தெறிச்சுட்டானுங்க.

யாராவது என்னை திட்டினாலோ அல்லது கிண்டல் செய்தாலோ, அவர்களின் வார்த்தைகளை,முகபாவங்களை, உடல்மொழியை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால், அந்த ஏச்சில், கிண்டலில் உள்ள உள்ளடக்கத்தை மட்டும் பிடித்துக் கொண்டு அதையே திரும்ப திரும்ப அசைபோட்டு திரும்ப என்னிடம் அந்த குறைபாடோ அல்லது அந்த மாதிரியான சூழ்நிலையில் நான் மீண்டும் சிக்காமலிருக்கவோ முடிந்தவரை முயல்வேன்.இந்த முறை அப்படியிருக்க முடியவில்லை.நாலு சுவருக்குள் நடந்திருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காது. நாள் முழுவதும் உட்கார்ந்து முதலாளி முதல் வேலையாட்கள் வரை காட்டு கத்தல் கத்தி வேலை வாங்கிய நான், அதே சப்ளையரின் கடையில், அனைவரின் முன்னாலும் நிலைகுலைந்து தரையில் வீழ்ந்த அவமானம் நடுக்கத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.சிகரெட்டை ஆழ இழுத்து பதற்றத்தை வெல்ல முயன்று கொண்டிருந்தேன்.

பத்தாவது முடித்து விட்டு பாலிடெக்னிக்கில் சேர்ந்து விட்டேன்.மெக்கானிக்கல் எடுக்கப் போய், அதை விட டெக்ஸ்டைல்ஸ் பிரிவுக்கு கொஞ்சம் டொனேஷன் குறைவு எனக் கடைசி நிமிடத்தில் அப்பா பிரின்ஸ்பாலுக்கு எதிரே உட்கார்ந்து எடுத்த முடிவின் காரணமாக, டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் சேர்ந்தவன் நான். கொஞ்சம் கூட என்ன படிக்கிறோம், எதற்கு படிக்கிறோம் என உணராமலேயே, இயந்திரங்களின் படங்களை கூட மனனம் செய்து ஆனால் நல்ல மதிப்பெண்களோடு பதினெட்டு வயதில் டிப்ளமோ முடித்த இரண்டாவது மாதத்திலேயே இங்கே வேலைக்கு சேர்ந்து விட்டேன். மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் உற்பத்தி தளம் இந்த சின்ன நகரத்தில். நண்பனொருவன் மூலம் கேள்விப் பட்டு, நேரடியாக வேலைக்கான விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு போன போது, சாரைத்தான் முதலில் சந்தித்தேன்.சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். துணியின் எடை சம்பந்தமாக சின்னதாக ஒரு கணக்கை மட்டும் போட்டுக் காட்டச் சொல்லி விட்டு அரட்டை பேச்சுக்கு திரும்பினார். ஜிம் கேரி, அல்பசினோ, கிரிக்கெட், ஃபுட்பால், பாலகுமாரன் என எனக்கு தெரிந்த அரைகுறைகளை வைத்து ஒரு வழியாக சமாளித்துக் கொண்டிருந்தேன். வாழ்வில் முதன்முறை ஆங்கிலம் திக்கலும் திணறலுமாக பேசியது அப்பொழுதுதான். தமிழில்தான் பேச ஆரம்பித்தேன்.எவ்வளவு தப்பா இருந்தாலும் பரவாயில்லை ஆங்கிலத்திலேயே பேசு என்றார். ரொம்பவே பரபரப்பாக இரவு ஏழு மணிக்கு இயங்கி கொண்டிருந்த்து அந்த அலுவலகம். அந்த சின்ன ஊரில்,டை கட்டிக் கொண்டு அவ்வளவு பேர் உள்ளே நடமாடியதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கையில் ஒருமுறை கூட சட்டையை டக் இன் செய்யாத எனக்கு அச்சூழல் ரொம்பவே பிடித்துப் போனது.ஒரு மணி நேரம் பேசி முடித்த பின், கொஞ்சம் குசும்பனாத்தான் இருக்க பட் பராவாயில்லை வழிக்கு கொண்டு வந்துடுவேன். நாளைக்கு காலையில் இருந்து வேலைக்கு வரலாம்எனச் சொல்லி கை குலுக்கினார்.

டிப்ளமோ தேர்வெழுதிய இரண்டாவது மாதத்திலேயே, சொந்த ஊரில் அதுவும் ரூ.1500 சம்பளத்தில் (ஃபிரஷர்ஸ்க்கான சம்பளம் ரூ.750-900ம் தான் அப்போழுது நகரின் பல டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் இருந்தது) அதுவும் முதல் நேர்முகத் தேர்விலேயே வேலை கிடைத்த மனம்கொள்ளாத சந்தோஷத்துடன் வெளியே வந்தேன்.

வேலை ரொம்பவே சுவராஸ்யமாக இருந்தது.முதல் இரண்டு மாதங்கள் ஃபேக்டரியில் வேலை.அங்கேதான் நாங்கள் உற்பத்தி செய்யும் எல்லா துணிகளையும் செக் செய்து, பேக் செய்வோம்.நான் புதியவன் என்பதால் பெரிய வேலை எதுவும் இருக்காது.ஸ்கேல்,பேனா வைத்துக் கோடு போட்டு லெட்ஜர் ஓப்பன் செய்து உள்ளே வரும், வெளியே போகும் சரக்குகளை வரவு வைத்துக் கொண்டிருப்பேன்.திடீரென ஒரு நாள் சார் கூப்பிட்டு, நாம பெங்களூர் ஆபிஸ்க்கு அனுப்பிய சரக்கு இன்ஸ்பெக்சனில் ரிஜக்ட் ஆயிடுச்சு.ஒரு பத்து ஒர்க்கர்ஸ் கூட அனுப்பினா, ரீ செக் பண்ணி கொடுத்துட்டு வருவியா? என்றார்.உற்சாகமாக தலையசைத்தேன். அடுத்த நாளே, ஒரு பதினைந்து வானரங்களை கூட்டிக் கொண்டு, பெங்களூர் சென்று பதினெட்டு நாட்கள் தங்கி அந்த ஆர்டரை இரவு,பகலாக ரீசெக் செய்து பேக் பண்ணி, டெல்லியிலிருந்து வந்த தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் ok to ship ரிப்போர்ட் வாங்கி, லாரியை லோட் பண்ணி, சென்னைக்கு அனுப்பி விட்டு, இரவு ஒன்பது மணிக்கு சாருக்கு தகவல் சொன்னேன்.அன்றிரவே பஸ் ஏறி,அதிகாலை வீடு வந்து, குளித்து உடைமாற்றி, காலை ஒன்பதரைக்கு அலுவலகம் போய் சார் முன்னால் நின்றேன். “டேய்! நீ எங்கடா இங்கே?என்றார். “நைட் பெட்டி அனுப்பிச்சுட்டு காலைல கிளம்பி வந்துட்டேன் சார் என்றேன். “சரிடா! ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வரலாமில்ல! என்றார். “அதெல்லாம் வேண்டாம் சார் என்றவனிடம் புன்னகைத்தவர், சரி இன்னைலருந்து ஆபிஸ்ல போடறேன் சமாளிச்சுடுவியா என்றார். “சரி சார் என்றவன் அன்று முதல் சூபர்வைசர் ஆனேன்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஆர்டர்கள் மும்பையில் தலைமை அலுவலகத்திலிருந்து எங்களுக்கு அனுப்பப் படும். அறுபது முதல் எழுபது நாட்களில், அதை சப்ளையர்களிடம் கொடுத்து உற்பத்தி செய்து, எங்களிடம் உள்ள 150 செக்கர்ஸ் மற்றும் பேக்கர்ஸ்  கொண்டு செக்கிங் மற்றும் பேக்கிங் செய்து ஏற்றுமதி செய்யவேண்டும்.சூபர்வைசரான எனது பணி, அந்த அறுபது நாட்களும் சப்ளையர் மற்றும் அவர்களின் அனைத்து உற்பத்தி தளங்களுக்கும் சென்று, தரத்தினை உறுதி செய்து,குறிப்பிட்ட நாட்களுக்குள் அனைத்து சரக்கினையும் உள்ளே கொண்டு வந்து சேர்த்து ஃபேக்டரியுடன் ஒருங்கிணைந்து சரக்குகளை குறிப்பிட்ட தினத்துக்குள் ஏற்றுமதி செய்ய வேண்டும்.கிட்ட தட்ட 10 சூபர்வைசர்கள் இருந்தோம்.ஒவ்வொருவரும் நான்கு அல்லது ஐந்து சப்ளையர்களுக்கு பொறுப்பு.நான் பொறுப்பேற்ற சிறிது காலத்தில் எல்லாம் முக்கியமான சப்ளையர்களுக்கு சூபர்வைசராக ஆனேன். ஒரு ஆறு மாதம் பெரிய பிரச்னை ஏதும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த போது, ஒரு பின் மதியவேளையில் அந்தச் சம்பவம் நடந்தது.

சார் ரொம்பவே கோபக்காரர்.மும்பை அலுவலகத்துக்கு ஒரு கமிட்மெண்ட் கொடுத்து விட்டால், அதை தலைகீழாக நின்றாவது முடிக்க வேண்டும் என நினைப்பவர். பெருங்குரலெடுத்து கத்தினால், அடிவயிறு கலங்கும். ஆர்டர் ஸ்டேட்டஸ் டிஸ்கஸ் செய்யும் போது, அவர் கேட்கும் குறுக்கு கேள்விகள், எவ்வளவு முட்டாளாக வேலை செய்து கொண்டிருக்கிறோம் என நினைக்க வைக்கும். ஆர்டர்களில் பிரச்னை ஏற்படும் போது, சிகரெட் புகை சுழலும் அந்த அறைக்குள் நுழைந்து, அவரது அடிக்கண் பார்வை முறைப்பை எதிர்நோக்கும் போதே கிலி பிடிக்கும்.

ஒரு செவ்வாய் கிழமை இரவு ஒன்பது மணி போல் எல்லோரும் வீட்டிற்க்கு கிளம்ப ஆய்த்தமாகி கொண்டிருந்த போது, அந்த ஃபேக்ஸ் வந்த்து.ஆர்டர் # 1027 சனிக்கிழமை காலை சென்னை துறைமுகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் சரக்குகள் ஏர் ஃப்ரைட் ஆகும். ஃபேக்ஸ் வந்த உடனே, சார் பரபரப்பாகிவிட்டார். “யாரெல்லாம்பா 1027 ஆர்டர் பாக்கிறது.ஸ்டேட்டஸ் எடுத்துகிட்டு வாங்க என சவுண்ட் விட்டார். மொத்தம் பத்து சப்ளையர்களிடம் அந்த ஆர்டர் உற்பத்தியில் இருந்தது.அதில் என்னுடைய சப்ளையர் ஆறு பேர். பலிகடாக்கள் போல் இரண்டு, மூன்று சூபர்வைசர்கள் அவரது அறைக்குள் சென்றோம். “ம்!.சொல்லுங்கப்பா.டெலிவரி டேட் முடிஞ்சு ரெண்டு நாள் ஆச்சு.எல்லா சரக்கும் சப்ளையர்கிட்ட ரெடிதானே! என்றார். மற்ற சூபர்வைசர்கள் எல்லாம், ரெடியா இருக்கு சார், காலையில உள்ளே எடுத்துடலாம் என்றனர்.நான் மேற்பார்வை செய்து கொண்டிருந்த ஒரு சப்ளையர் வசம் ஆர்டர் நிரம்பவே ஊத்தலில் இருந்தது. என்னடா பம்முற?! என்றார். இல்லை சார், அஞ்சு சப்ளையர்ர்கிட்ட சரக்கு ரெடியா இருக்கு.வீணா எக்ஸ்போர்ட்ஸ் மட்டும் ரெடியாக ஒரு நாலு நாளாகும்னேன்.எடுத்தார் ருத்ரதாண்டவம்.ஏண்டா, இதை இவ்வளவு நாளா சொல்லலை.எவ கூட படுத்து எந்திரிச்சு ஊர் பொறுக்கிட்டு இருந்த ன்னு ஆரம்பிச்சு சுமார் ஒரு மணி நேரம் செறிவான அர்ச்சனை கிடைத்தது.எல்லாரையும் உட்கார வைத்து, யார் யார் அடுத்த மூணு நாலு நாளுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு ஆக்சன் பிளான் உடனே தயரானது. என்னிடம் முறைப்போடு “காலைல வீணா போய் உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணி வெள்ளிக்கிழமைக்குள்ளே என்னென்ன ரெடியாகும், என்ன ரெடியாகாதுன்னு லிஸ்ட் ரெடி பண்ணி கொண்டு வாஎன்று  சொன்னார். இரவோடு இரவாக வீணா எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளரை வீட்டில் போய் தூக்கி வந்து விடிய விடிய உட்கார்ந்து லிஸ்ட் எடுத்து காலைல கொண்டு போய் சாரிடம் கொடுத்தேன். அவரும் பாம்பேவுக்கு போன் மேல போன் போட்டு டிலே ஆகிற ஒரு குறிப்பிட்ட சரக்குக்கு மட்டும் ஏர் ஃபிரைட் அனுப்ப ஒரு வழியாக சம்மதம் வாங்கினார். எந்த சரக்கு ரெடியாகுமோ, அதுக்கு மட்டும் பேக்கிங் லிஸ்ட் டைப் பண்ணி பாம்பேவுக்கு ஃபேக்ஸ் அனுப்பியானது எக்ஸ்போர்ட்ஸ் டாகுமெண்ட்ஸ் ரெடி பண்ண. எனக்கு ஒருவனுக்குதான் தெரியும், நான் அவரிடம் கொடுத்த லிஸ்ட் எலுமிச்சைப் பழம் மட்டுமே. பலா அளவுக்கான சரக்குகளை வெள்ளிக்கிழமைக்குள் தயார் செய்ய வேண்டுமென்றால் ராட்சஸ உழைப்பு தேவை. கொஞ்சம் சரக்கு நெசவே செய்யப்படாமல் தறியில் கவுந்தபாடியிலும், வெள்ளக்கோவிலிலும் கிடந்த்தது.அனைத்தையும் லிஸ்ட்ல் சேர்த்தால்,ஏர் ஃப்ரைட் செலவு ஏகத்துக்கும் எகிறும்.எனவே, கண்டிப்பாக தயார் செய்ய முடியாதவற்றுக்கு மட்டும் லிஸ்ட் கொடுத்து விட்டு,மற்றதை ஏதேனும் செய்து சமாளித்து விடலாம் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கையில் லிஸ்ட் கொடுத்துவிட்டேன்.

வெள்ளிக்கிழமை வரை மூணு நாள் தூக்கம், தண்ணி கிடையாது.பெரிய ஆர்டர் என்பதால்,எங்களிடம் இருந்த 150 பேரை மட்டும் வைத்து மூன்று நாளில் பேக்கிங் செய்ய முடியாது. பாதி சரக்கினை எங்களது ஃபேக்டரியிலும், மீதியை சப்ளையர் கடைகளில் வைத்தும் பேக் செய்ய ஆரம்பித்தோம்.ஒவ்வொரு சப்ளையர் கடையிலும் 30-50 பேர் இரவு பகலாக வேலையில் இருந்தார்கள்.பெரும்பாலான ஆர்டர் சம்பந்தப்பட்ட தகவல்கள் எனக்கு மட்டுமே முழுவதும் தெரியும் என்பதால், டிவிஎஸ் 50 எடுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பேன். சூபர்வைசர் எல்லாம் அவனவன் ஆர்டர் முடிஞ்சு அடுத்தவனுக்காக பொதுச்சேவை செய்யும் எண்ணத்தில் குஷி மூடில் இருந்த்தார்கள்.நானொருவன் மட்டும் உள்ளும் வெளியும் எரிய சுழன்று கொண்டிருந்தேன்.ஃபேக்டரிகுள் சென்று வரும் ஒவ்வொரு முறையும் அவர் என்னை முறைக்க, நான் அவரை தவிர்க்கன்னு கண்ணாமூச்சி ஆடுவோம்.

வெள்ளிக்கிழமை காலையில்தான் அந்த குண்டை வீணா எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் வீசினார். தம்பி, அன்னிக்கு கொடுத்த கணக்குல ஒரு தப்பு இருக்கப்பா.கவுந்தபாடில இருந்து கருப்பு கலர் மேட் வரும்னு நினைச்சேன், அந்த கடங்காரன் கருப்பு டிசைனுக்கு பதிலா பச்சைக் கலரை நெசவு செஞ்சு அனுப்பி இருக்கான்.இப்ப கருப்பு டிசைன்ல சரக்கு குறையுதுப்பாஎன்றார். எவ்வளவு  அவரிடம் கத்த முடியுமோ கத்தி விட்டு,  அலுவலகம் சென்று, மென்று விழுங்கி சாரிடம் விசயத்தை  சொன்னேன். அவ்வளவுதான் ,சாமி மலையேறினார். கிட்டதட்ட, இருபது பக்க பேக்கிங் லிஸ்ட்.  இப்பொழுது அதில் மாற்றம் செய்தால், ஏற்கனவே பேக் செய்து அடுக்கப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான பெட்டிகளின் பெட்டி எண் மாற்றப்பட வேண்டும்.மேலும், ரிவைஸ்டு பேக்கிங் லிஸ்ட் பற்றி பாம்பே அலுவலகத்தில் பேச முடியாது.குதறி எடுத்து விடுவார்கள்.ஏனெனில், அவர்கள் அனைத்து எக்ஸ்போர்ட் டாகுமெண்ட்ஸ்ம் மீண்டும் தயார் செய்து சென்னைக்கு அனுப்ப வேண்டும்.அன்றைய இரவுக்குள் இவை அனைத்தும் நடந்தாக வேண்டும். இவையனைத்தும் சேர்ந்து அவரை தகிப்பின் உச்சத்தில் வைத்து இருந்தது.வாடா எங்கூடஎன்று சொல்லி அவரது வண்டி பில்லியனில் உட்கார வைத்து நேராக வீணா கடைக்குச் சென்றார்.ஏன் சார், ஒரு லிஸ்ட் கொடுக்கிறப்ப அறிவு வேண்டாமா.சரக்குதான் டைம்க்கு ரெடி பண்ணலை, எவ்வளவு ரெடியாகும்னு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிற நீரெல்லாம் என்ன மசுருக்கு தொழில் பண்றீருன்னு விட்டு எகிற, ஆடிப்போன வீணா எக்ஸ்போர்ட் ஓனர், சார்! நான் கணக்கெல்லாம் கரெக்டாதான் சொன்னேன்.தம்பிதான் டென்சன்ல டிசைன் கலர் மாத்தி நோட் பண்ணிட்டாருன்னு ஒரே போடா போட்டாரு.

அப்பத்தான் அது நடந்தது. கோபத்தின் உச்சியில்,உன்னையெல்லாம் வைச்சுகிட்டு நான் எப்படிறா கம்பெனி நடத்தறது.உங்கப்பனா இப்ப பாம்பேல பேசறதுன்னு  சொல்லிட்டு கொத்தா சட்டைய பிடிச்சு தூக்கி வேகமாக என்னை சார் தள்ளி விட, வீணா எக்ஸ்போட்ஸ் கடையின் நடுவில் நிலைகுலைந்து விழுந்தேன்.

தம்மடித்து விட்டு நிரம்ப நேரம் உறைந்து போய் உட்கார்ந்து இருந்தவனுக்கு, அன்று ஷிப்மெண்ட் வெளியே போகணும்னு உறைக்க, எல்லாவற்றையும் மறந்து விட்டு மறுபடியும் வேலையில் முழுகினேன்.கிட்டதட்ட 150 ரகம் அந்த ஆர்டரில். எல்லோருக்குமே டவுட்.இன்னிக்கு இந்த ஆர்டர் முடிஞ்சு வெளியே போகுமா என்று.கடைசி நேரம் நெருங்க நெருங்க ஏகப்பட்ட பிரசர். இதைக் காணோம், அதைக்காணோம், இது ரிஜக்ட், அது ரிஜக்ட்னு. ஒவ்வொரு முறை ஃபேக்டரிக்குள்ளே ஓடிட்டு வெளியே வரும் போதும், ஒரு லாரி லோடாகிட்டு இருக்கும்.ரொம்ப தாமதமாத்தான் உறைத்த்து.எல்லோருக்கும் ஆர்டர் போகுமான்னு டவுட் இருந்தாலும், சார் மட்டும் என்கிட்ட எதுவும் மதியத்துக்கப்புறம் கேட்க வில்லையென்று.கிட்டதட்ட பத்து லாரி லோடு.கடைசி லோடு முடியும் போது விடிகாலை மூன்று மணி. லாரி ஓட்டுனரிடம், “அண்ணா! எப்படியாவது நாளைக்கு மதியம் பனிரெண்டு மணிக்குள்ள் கொண்டு போய் சென்னைல சேர்த்துருன்னு சொல்லி வண்டியை அனுப்பி விட்டு, தம்மடித்து விட்டு திரும்பினால், சார் பின்புறம் நின்று கொண்டிருந்தார். சாரிடாஎன்றார். நான் பதிலேதும் கூறாமல் விறைப்பாக நின்றேன்.Don’t feel bad da! Miles to go! But am extremely sorry!” என்று சொல்லி விட்டு தோளை பிடித்து, பக்கவாட்டில் இழுத்து சின்னதாக ஒரு ஹக் பண்ணி விட்டு டக்குன்னு திரும்பி பார்க்காம சென்று விட்டார். பத்தாவது லாரியை அனுப்பி விட்டு, அந்த ஹக் வாங்கிட்டு, நான் அன்று அந்த டிவிஎஸ் 50 ஓட்டிக் கொண்டு, ஆளரவற்ற நகரத்தின் தார்ச்சாலையில் வந்த போது கிடைத்த பரவசமும், ஆசுவாசமும் என் வாழ்வின் ஆகச்சிறந்த கணங்களில் முதன்மையானது.

இந்த ஆர்டர் நம்பர் 1027 சம்பவம் நடந்தது 1997ல். இப்பொழுது இதை டைப் செய்து கொண்டிருக்கும் போது, ஆர்டர் நம்பர் 7900 லோடாகி கொண்டு இருக்கிறது.ஏகப்பட்ட சம்பவங்கள் அதன் பிறகு நடந்து விட்டது. சூபர்வைசராக இருந்த நான், சீனியர் சூபர்வைசர்,புரடக்சன் கண்ட்ரோலர், அஸிஸ்டெண்ட் பிராஞ்ச் மேனேஜராகி இப்பொழுது பிராஞ்ச் மேனேஜர். சார் இப்ப ரீஜனல் மேனேஜர்.இப்பொழுதும்  இரண்டு பேரும் சண்டை போடுவோம்.இரண்டு மூன்று நாள் முறைத்துக் கொண்டு  இருப்போம். பிறகு சென்று பாரில் அமர்ந்து விடுவோம். :)

நாஞ்சில் நாடனின் அவர்களின் வைக்கோல்கதை படிக்கும் போதெல்லாம் மேற்சொன்ன சம்பவம் மனதில் வந்து கொஞ்சம் நேரம் நாஸ்டால்ஜியாவை அசை போடச் சொல்லும்.இன்று இறக்கிவைத்து விட்டேன். :)

Tuesday, April 23, 2013

புத்தகங்களினால் அமைந்த வாழ்வு!



எங்கிருந்து புத்தகம் படிக்கும் வழக்கம் வந்தது எனத் தெரியவில்லை.அனேகமாக அம்மாவிடமிருந்து இருக்கலாம். ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போதே வாசிக்கும் பழக்கம் வந்து விட்டது. பக்கத்து வீட்டுக்கு ஒரு தாத்தா சைக்கிளில் கொண்டு வந்து வாராவாரம் புத்தகம் கொடுத்து விட்டு போவார்.சைக்கிள் மூலம் வரும் லெண்டிங் லைப்ரரி அது.விகடன், குமுதம், ராணி, ராணிமுத்து ஆகியவை பெரும்பாலும் வரும். எப்போதாவது அம்மா ராணி புத்தகம் எடுத்து வந்து இரண்டு, மூன்று நாட்கள் வைத்து படிப்பார்.முதலில் வாசிக்க ஆரம்பித்தது அதுதான். குரும்பூர் குப்புசாமிதான் நான் தொடர்ந்த முதல் ரெகுலர் எழுத்தாளர்.ராணி எடுத்தால்,முதலில் அந்த பத்திதான் படிப்பேன்.வெளிநாட்டு பயணக் கட்டுரைகள்.அப்படியே, தினசரிகளின் பக்கம் கவனம் திரும்பியது.

கிட்டதட்ட, ஆறாம் வகுப்பில் செய்திதாள் படிக்க ஆரம்பித்தேன்.அப்பாவிடம் சொல்லி தினமும் வீட்டுக்கு தினமலர் வரவைத்தேன். சிறுவர் மலர்தான் அப்போதைய ஒரே குதூகலம். பலமுக மன்னன் “ஜோ”வை படிக்காமல் வெள்ளிக்கிழமை குளிக்கக் கூட போக மாட்டேன்.கிட்டதட்ட, புதன்கிழமையிலிருந்தே சிறுவர்மலர்க்காக மனம் துள்ளும். கோடை விடுமுறையில் பெரியப்பா வீட்டுக்கு நரசிங்கன் பேட்டை சென்ற போதுதான்  பெரும் புதையலை கண்டேன்.வீட்டை ஒட்டியே இருந்த சின்ன நூலகத்தில் கிடைத்த பூந்தளிர் கபீஷ்ம், அம்புலிமாமாவின் வேதாளமும், கோகுலமும் விடுமுறைகளை கோலகலமாக்கின. தினமும் இரவு படுக்கப் போகும் போதெல்லாம், புத்தகங்களால் வழியும் அந்த நூலகம் முழுவதும் எனக்குதான் என்ற எண்ணம் பெரும் உவகையை அளிக்கும்.ரசித்து, ரசித்து ஒவ்வொரு புத்தகமாக படித்தேன்.ஒரு நாள் பைண்ட் செய்யப்பட்ட சங்கர்லால் துப்பறிகிறார் கிடைத்தது.அந்த விடுமுறை முழுவதும் வைத்து படித்தேன்.

இதற்குள், ஒரு மிக நல்லப் பழக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.சாப்பிடும் போதும், ஏதாவது படிப்பது.கிட்டதட்ட ஏழாம் வகுப்பிலிருந்து, திருமணம் ஆகும் வரை இந்தப் பழக்கம் இருந்தது.வீட்டில் சாப்பிடும் போதெல்லாம் ஏதாவது கையில் புத்தகம் இருக்க வேண்டும்.உறவினர் வீட்டில் கூட ஏதாவது புத்தகம் தேடி எடுத்துக் கொண்டே சாப்பிட உட்காருவேன்.எல்லோரும் திட்டி, திட்டி ஒரு கட்டத்தில் விட்டு விட்டார்கள்:). ஏழாவதில் வீடு மாற்றி வேறு ஏரியாவுக்கு போன போது கிடைத்த நண்பர்கள் குழாம், காமிக்ஸ் வெறியர்களாக இருந்தார்கள்.மாதம் ஒரு முறை வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு, நகரின் முக்கிய கடைகளில் காமிக்ஸ் வேட்டை நடத்துவோம்.இரும்புக்கை மாயாவி, லக்கி லூக்,ஜேம்ஸ் பாண்ட் என ஆளுக்கு ஒரு புத்தகம் வாங்கி படித்து முடித்து பரிமாறிக் கொள்வோம்.தீபாவளி வந்தால் கொண்டாட்டம்தான்.தடித் தடியாக புத்தம் புது காமிக்ஸ் புத்தகங்கள் கடைகளில் தொங்கும் காட்சியே அலாதியாக இருக்கும். விகடன்,குமுதம்,கல்கண்டு என படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் புத்தகங்களின் தொடர்ச்சியாக.

எங்களுக்கு எல்லா உறவினருமே குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணி நேர பயண தூரத்தில்தான் இருந்தனர்.எனவே, பேருந்து பயணங்கள் புத்தகம் வாங்க பெரிதும் உதவின.ராஜேஷ் குமாரும், சுபாவும், பிகேபியும் இந்த பேருந்து நிலையக் கடைகளில் இருந்துதான் மனதுக்குள் இறங்கி  சிம்மாசனமிட்டனர்.கரூரில் ஏறி, திருச்சியில் சாப்பிட இறங்கி மீண்டும் கும்பகோணம் பேருந்தில் அம்மாவுடன் ஏறும் போது கையில் கிரைம் நாவல் இருக்கும். கும்பகோணம் போய்ச் சேரும் போது முடித்து விடுவேன். ஊர் போய் இறங்கியவுடனேயே அண்ணன் என்ன புக்டா வழியில் வாங்கின? என பைகளில் துழாவுவார்,அவர் படிக்க.ஜெமினி சினிமா வாங்கும் வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கும்.அம்மாவும் சரி, அப்பாவும் சரி சம்மதிக்க மாட்டார்கள்.மீறி சம்மதம் வாங்கி, ஜெமினி சினிமாவோடு போனால் பெரியப்பா சத்தம் போடுவார். ஒம்பதாவது படிக்கிற பையன் வைச்சிருக்கிற புக்கை பாருன்னு.

இப்படி, பாக்கெட்,கிரைம் நாவல்களோடு ஓடிக்கொண்டிருந்தவன், பத்தாவதில் நண்பனொருவன் கையில் வைத்திருந்த மெர்க்குரிப் பூக்கள் மூலம் வேறு உலகினுள் நுழைந்தேன்.அது வரை வாசிப்பில் பார்த்து வந்த உலகிலிருந்து இது வேறு வகையாக இருந்தது. அந்த நண்பன் மூலமாகவே, புத்தகம் படிக்கும் ஒரு நண்பர்கள் வட்டம் பழக்கமாகி பாலகுமாரனின் கிட்டதட்ட அனைத்து நாவல்களும் வாசித்து முடித்தேன். அந்த வாசிப்பில், ஒரு வகையான சுரப்பி உச்சத்தில் சுரந்த காலமது. வந்தார்கள் வென்றார்கள், ஏன்,எதற்கு, எப்படி? என பத்தாம் வகுப்பு கழிந்தது. பத்தாவது முடித்து டிப்ளமோவின் ஆரம்ப காலத்தின் ஒரு ரயில் பயணத்தில், இரவல் கிடைத்த சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்பில் ”அன்பைத் தேடி” என்னை சிறுகதைப் பக்கம் உந்தியது.அந்த ஒரு கதையை படித்து முடித்தவுடன் இரவல் கொடுத்தவர் புத்தகத்தை திரும்ப வாங்கிவிட்டார்.ஊர் போய்ச் சேர்ந்தவுடன், அண்ணனின் புத்தக அலமாரியில் சுஜாதா எனக் கண்ணில் பட்ட புத்தகத்தையெல்லாம் தேடி எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அந்த விடுமுறையின் பொக்கிஷம் “ஆதலினால் காதல் செய்வீர்” மற்றும் “கனவுத் தொழிற்சாலை”. கல்லூரிக் காலம் முழுதும் பாலகுமாரனும், ராஜேஷ்குமாரும், சுஜாதா ஓரளவும் என ஓடிக் கொண்டிருந்தது என் வாசிப்பு. அடிக்கடி நாஞ்சில் நாடன், ஜீரோ டிகிரி, சுந்தர ராமசாமி என வெகுஜனப் பத்திரிக்கைகளில் பெயர்கள் அடிபடும்.

வேலையில் சேர்ந்த நாட்களில் தேடலும்,தவிப்பும் வேறு பக்கம் பாய்ந்ததால் வாசிப்பில் ஒரு பெரும் தொய்வு ஏற்பட்டது. அப்பாவை ஒரு சமயம் ஒரு விபத்துக்காக மருத்துவமனையில் சேர்த்து அறுவைச் சிகிச்சை முடித்து, அப்பொழுதுதான் டிஸ்சார்ஜ் செய்து இருந்தோம். கூட இருந்து கவனித்த பிறகான சோர்வும், ஒரு பெரிய ஆர்டருக்காக இரண்டு மூன்று நாள் இரவு மூன்று, நான்கு மணி வரை வேலை பார்த்து, அந்த ஆர்டர் ஷிப்மெண்ட் ஆன பிறகான ஆசுவாசமும் கலந்த ஒரு இரவில், வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, நகரின் ஒரு ஓரத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் புத்தகக் கடை வேன் நின்று கொண்டிருந்தது.ரொம்ப நாள் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த புத்தக ஆர்வம் உந்த, உள்ளே நுழைந்தேன்.வாசிக்க விரும்பியிருந்த நிறைய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நிறைய இருந்தன.கிட்டதட்ட பத்து புத்தகம் வரை எடுத்து விட்டு, கடைசியாக எடுத்த புத்தகம் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதை தொகுப்பு.மொத்தமாக பைண்ட் செய்யப் பட்ட ரூ.300 அளவிலான புத்தகம்.அதுவரையில் அவ்வளவு விலை கொடுத்து, அதுவும் அவ்வளவு பெரிய புத்தகம் எதுவும் வாங்கியதில்லை. எடுத்த எல்லா புத்தகத்தையும் வைத்து விட்டு அந்த ஒரு தொகுப்பை மட்டும் எடுத்து வந்தேன். வாசிப்பில் ஒரு பரவசத்தை,ஒரு புதிய பாய்ச்சலை எனக்குள் நிகழ்த்தியவை நாஞ்சிலின் இந்த சிறுகதைகள்.அதுவும் “வந்தான்,வருவான், வாராநின்றான் ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் எனக்குள் அப்படியே இருக்கிறது.நான் அடிக்கடி எடுத்து வாசிக்கும் கதைகளில் இதுவும் ஒன்று.இந்த தொகுப்பே, எனக்கு பைபிள் மாதிரி ரொம்ப காலம் இருந்தது. இன்னும் இருக்கிறது. அடிக்கடி இத்தொகுப்பை எடுத்து, ஏதேனும் ஒரு கதை படிக்கும் போதெல்லாம், வாசிப்பின் வழி நான் நல்ல வழியைத்தான் வந்தடைந்திருக்கிறேன் என்று மகிழ்வேன். நாஞ்சில் நாடனின் அனைத்து நாவல்களும் வாங்கி படித்த அடுத்த 3-4 மாத காலம், கிட்டதட்ட ஒரு காதலியுடன் பழக ஆரம்பித்த பொழுது கிடைத்த கிளர்ச்சிக்கு இணையானது. இதற்கு பின், மாதா மாதம் ஒரு தொகை ஒதுக்கி ஒவ்வொரு எழுத்தாளரையும் வாசிக்க ஆரம்பித்தேன். வாழ்வில் மனதளவிலும், லெளகீகமாகவும் பல நிலைகளை தாண்டி வந்தாலும், அன்று முதல் இன்று வரை வாசிப்பிற்க்கிணையான அனுபவத்திற்க்கு மாற்றே கிடையாது. அதுவும், கையில் கிளாசும், அம்மணி முறைப்பினூடே வறுத்து கொடுத்த முந்திரியும் துணையிருக்க, நாஞ்சிலோ, அசோகமித்திரனோ, பிரபஞ்சனோ, வண்ணதாசனோ படிப்பதென்பதுதான் இந்த பூவுலகில் கிட்டக் கூடிய ஆகப் பெரிய சந்தோஷமாய் இருக்க முடியும்.

உலகப் புத்தக தினமான இன்று அனைத்து எழுத்தாளர்களுக்கும்,பதிப்பாளர்களுக்கும் மனப் பூர்வமான நன்றி!. ஏதோ ஒரு எழுத்தாளரின் ஏதோ ஒரு சொல், ஒரு பத்தி, ஒரு கதை எல்லா நேரத்திலும் துணையிருந்து வாழ்வின் அர்த்தத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

Thursday, April 18, 2013

நரசிங்கன்பேட்டை

நான் பள்ளியில் படிக்கும்போது ஒவ்வொரு வருடமும் ஜனவரி வந்து விட்டாலே மனம் கோடை விடுமுறைக்கென தவம் கிடக்கும். ஏனெனில், சொந்த ஊரான நரசிங்கன்பேட்டை. விடுமுறையின் பெரும்பான்மை தினங்கள் அங்கேதான் இருப்போம். கும்பகோணம் டு மயிலாடுதுறை ரூட்டில் 17வது கிலோமீட்டரில் அமைந்திருக்கும் காவிரியோடும் சின்ன கிராமம். அதுதான் அப்பாவின் பூர்விகம்.பெரியப்பா குடும்பம் அங்கேதான் இன்னும் இருக்கிறார்கள்.கிட்டதட்ட பதினாறு பேர் கொண்ட பெரும் கூட்டுக் குடும்பம்.ஐந்து பெரியப்பாக்கள். பெரியவர் ஊர் பிரசிடெண்ட். இருவர் ஆசிரியர்கள்,சொந்த ஊரிலேயே.ஒருவர் குடும்பத்துக்கான விவசாயத்தை பார்த்துக் கொண்டார்.ஒருவர் இந்திய விமானப் படையில் அதிகாரி. விமானப் படையில் இருந்த பெரியப்பா குடும்பம் தவிர அனைவரும் ஒரே வீட்டில் இருந்தனர். பதினெட்டு படிக்கட்டுகளுடன், நாற்பதடி அகலத் திண்ணை கொண்ட பிரமாண்ட வீடு. இரண்டு பெரிய முற்றங்களும் (சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் அளவு) இரண்டு மிகப்பெரிய தாழ்வாரங்களும்(குறைந்தது ஐம்பது பேர்க்கு ஒவ்வொரு தாழ்வாரத்திலும் பந்தி போடலாம்), ஊஞ்சல் கட்டிய மிகப் பெரிய ஹாலும், பத்துக்கும் மேற்பட்ட அறைகளும், இரண்டு மாமரங்களும், எண்ணற்ற தென்னையும் வாழையும் கொண்ட தோட்டமும், பத்து பதினைந்து மாடுகள் கட்டிய கொட்டிலும் கொண்ட அழகான வீடு.

ஐந்து மணிக்கு விழித்து இரவு ஒன்பது மணிக்கு உறங்கச் செல்லும் வீடு. நாங்கள் ஏழு மணிக்கு படுக்கையிலிருந்து எழும் போது பெரியம்மாக்களின், அண்ணன், அக்காக்களின் சிரிப்பொலிகள் சமையலறையிலிருந்து கிளம்பி வீடு முழுதும் நிறைந்திருக்கும். பல் துலக்கக் கூட தோன்றாமல் அங்கே போய் உட்கார்ந்து வாய்பிளந்து கதை கேட்போம்.அந்த வீட்டின் உயிரோட்டமே நக்கலும், நையாண்டியும்தான்.வீட்டில் மட்டுமல்ல,எதிர் மற்றும்ம் பக்கத்து வீடுகளில் மற்றும் தெரு முழுதும் இருந்த பங்காளி இன்னபிற வீடுகளில் உள்ள அனைவருக்குமே நக்கல், எதிர் நக்கல் பேச்சுக்கள் ரத்தத்தில் ஊறியவை.கல்யாண வீடோ, துக்க வீடோ, எப்பொழுதும் யாரையாவது காலை வாரிவிட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த காலை வேளையிலேயே காபி குடித்து அரட்டை அடிக்க அக்கம் பக்க வீடுகளிலிருந்து சில அண்ணன்,அக்காக்கள் இங்கே வந்து விடுவர்.காலை ஏழு மணிக்கு சமையலறை இப்படி களை கட்டி கிடப்பது கும்மாளமாக இருக்கும்.எட்டு மணி வரை இருந்து இரண்டு காப்பி குடித்து அரட்டையெல்லாம் முடிந்துதான் சபை கலையும். இது சமையலறை நிலவரம்.

அப்படியே வாசல் பக்கம் திண்ணைக்குப் போனால், அப்பாவும், பெரியப்பா மார்களும், அண்ணன்களும், தெருவிலிலுள்ள மற்ற ஒன்று விட்ட பெரியப்பா, சித்தப்பா மார்களும் என ஜமா முழு வீச்சில் இருக்கும்.முழுக்க முழுக்க ஊர் நிலவரமும்,அரசியல் நிலவரமும் என வாக்குவாதங்கள் பட்டையை கிளப்பும்.வெற்றிலை சீவலும், புகையிலையும், சுண்ணாம்பும் கைகளில் மாறிக் கொண்டேயிருக்கும்.அந்த மாதிரியான ஸ்திரமான அரசியல் விவாதங்களை, பார்வைகளை, அரசியல் சார்புகளை, அந்த மண்ணுக்கே உரிய கெட்ட வார்த்தை அர்ச்சனைகளை, எரிச்சல் படாத அதே சமயம் அழுத்தமான கருத்துப் பரிமாறல்களை எல்லாவற்றுக்கும் மேலாக திராவிட வரலாற்றை, அரசியல் கிசு கிசுக்களை நான் வேறெங்கும் இது வரை கேட்டதில்லை.பாதிக் கும்பல் ஆசிரியர்கள் என்பதால், பெரும்பாலும் தி.மு.க சார்புதான் விவாதங்களில் மேலோங்கி இருக்கும்.தினமணி, தினகரன் தலையங்கங்கள், துக்ளக், ஜீனியர் விகடன் கட்டுரைகள் என அனைத்தும் விவாதிக்கப் படும். ஒவ்வொரு மாவட்டத்தின் அரசியல் பலம் மற்றும் பலவீனங்கள் தேர்தல் சமயங்களில் அலசப்படும். அந்த வயதில் கிடைத்த அந்த அரட்டை கேட்கும் அனுபவம் அலாதியானது. பத்தாவதுக்குள் படிக்கும் அண்ணன்மார்கள் சமையலறை சபையில் இருந்தால், பத்தாவதுக்கு மேல் படிக்கும் அதாவது கைலி கட்ட ஆரம்பித்த அண்ணன்மார்கள் திண்ணையில் இருப்பார்கள்.என் பாடுதான் திண்டாட்டம்.எனக்கு பெரியம்மாக்கள், அக்காக்களின் குதூகலமும் பார்க்க ஆசையாயிருக்கும், திண்ணை அரட்டையின் பார்வையாளனாக இருக்கவும் மனம் அலைபாயும்.இரண்டுக்கும் இடையில் அல்லாடுவேன்.

அப்படியே எட்டு, ஒன்பது மணிவாக்கில் இரண்டு இடத்திலும் சபை கலைந்தவுடன், வாண்டுகள் அனைவரும் சேர்ந்து வீட்டுக்கு எதிரேயுள்ள வாழையும்,தென்னை ம்ரங்களும் உள்ள கொல்லைக்கு போய் பம்ப்செட் போட்டு விட்டு ஒரு மணி நேரம் அந்த பெரிய தொட்டியில் குளிப்போம்.பிறகு, காலைச் சிற்றுண்டி.விறகு அடுப்பின் தணலில் வார்க்கப் பட்ட மொறு மொறு தோசை, அல்லது மிளகாய் சட்னியுடனான இட்லி அல்லது ஸ்டப்டு சப்பாத்தியும் அதன் மேல் கொட்டப்பட்ட வீட்டிலேயே எடுக்கப் பட்ட வெண்ணெய் கட்டி என சமையலறைக்குள் நுழைந்தவுடனேயெ மெனு வயிற்றில் சுரப்பிகளை வடியச் செய்யும்..சாப்பிட்ட பின் பேட்டும், பாலும் எடுத்துக் கொண்டு தென்னந்தோப்புக்குள் போய் மதியம் வரை கிரிக்கெட்.நடுவில் இளநீர் வந்து விடும் அல்லது பக்கத்து தெருவில் உள்ள இரண்டு வீடுகளில் ஒரு ரூபாய்க்கு கலர் பாட்டில் கிடைக்கும்..சோடா மேக்கர் வைத்து வீட்டிலேயே தயாரிக்கப் படும் அந்த கலர் பாட்டிலின் சுவையை அதற்கப்புறம் எந்தவொரு பெப்ஸியோ அல்லது கோக்கோ கொடுத்ததில்லை. காவிரி தண்ணீர் கொடுத்த சுவை அது.

மதியம் நெய் போட்டு சாம்பாரும், தணலில் வறு பட்ட வாழைக்காயும் என திவ்யமாய் சாப்பாடு..அதன் பின் கேரம்,ரம்மி,செஸ், தாயம் அல்லது ஆடு புலி ஆட்டம் என குழு பிரியும்.சாப்பிட்டு வரும் பெரியம்மாக்கள், அனைவரையும் அதட்டி கிளப்பி ஷாமியானா சைஸ் ஜமுக்காளம் போட்டு பெரியப்பாக்களுக்கு நடுவே படுக்க விடுவார்கள்.பெரியப்பாக்களுக்கு கை,கால் பிடித்து,முதுகு சொறிந்து அதன்பின் அவர்களின் டர் புர் காற்று வெளியேற்றும் சத்தங்களுக்கிடையே குட்டித் தூக்கம். மாலையில் எழுந்து டீ, நொறுக்குத் தீனிகள் முடித்து வீட்டின் பக்கத்தில் இருக்கும், பெரியப்பா நிர்வகித்து வந்த பஜனை மடம் சென்று பாட்டுப் பாடி, அவல் மற்றும் வெல்லம் போட்ட பொரியை அனைவருக்கும் வினியோகித்து பின் நாங்களும் உண்டு வீடு வந்தடைவோம்.

வழியில் உள்ள நூலகத்தில் ஒரு சின்ன இளைப்பாறல். ஓய்வு பெற்ற ஆசிரியரான ஒன்று விட்ட பெரியப்பா ஒருவர் தன்னார்வத்தில் நடத்தி வந்த அழகான சின்ன நூலகம் அது.எனது வாசிப்பு ஆரம்பமானது அங்கேதான்.அதற்கு முன்னமே ராணியும், குமுதமும் அவ்வப் பொழுது அம்மாவிடம் வாங்கி புரட்டினாலும், சிரத்தையான வாசிப்பு அங்கேதான் அமைந்தது.ஆறாவதோ, ஏழாவதோ படிக்கும் போது நான் அங்கே படிக்க ஆரம்பித்த முதல் நூல் சங்கர்லால் துப்பறிகிறார்.ஒரு விடுமுறை முழுவதும் பெரிதாக பைண்ட் செய்யப் பட்ட அந்த புத்தகத்துடனே அலைந்தேன்.பூந்தளிர், கோகுலம், கடல் புறா, மெர்க்குரி பூக்கள், பொன்னியின் செல்வன் எல்லாம் அங்கேதான் அறிமுகமானது.பெரிய அண்ணன் நிறையப் படிப்பார்.வீட்டில் இரண்டு பீரோக்கள் முழுவதும் புத்தகமாக அடுக்கி வைத்திருப்பார்.இன்றும் அந்த புத்தகங்கள் அப்படியே உள்ளன, அண்ணன் அங்கு இல்லையென்றாலும்.அவரிடமிருந்து எடுத்து வந்த வண்ணதாசன் கதைகள் பெரிய தொகுப்பு இன்னும் அந்த ஊரின் வாசனையோடு என்னிடம்தான் உள்ளது. நூலகத்தில் படித்து விட்டு, வீடு வந்து அரட்டையுடன் இரவு உணவு முடித்து ஒன்பது மணிக்கெல்லாம் மீண்டும் படுக்கை.

சில நாட்களின் மாலை வேலைகளில் பெரியம்மா, அண்ணன், அக்காக்கள் சூழ ஊரின் பின்புறம் உள்ள ஐந்நூறாண்டு பழமியான மிகப் பிரமாண்ட சிவன் கோவிலில் வழிபாடு முடித்து ஊருக்கு பின் உள்ள சாத்தனூர் அணைக்குச் செல்வோம்.சிறிய அணையான அதன் வேகமான நீரோட்டத்தை குறைக்க மதகுகளை அண்ணன்மார்கள் ஆட்களிடம் சொல்லி மூடி விடுவர். திகட்ட திகட்ட குளியல், மணலில் பெரியம்மாக்களுடன் ஓட்டப் பந்தயம் முடித்து ஈரம் சொட்ட சொட்ட வீடு வருவோம். சில நாட்களில் அண்ணன்களுடன் ஊரிலுள்ள டெண்ட் கொட்டகையில் திரைப்படம். மொத்தமே இருபது முப்பது பேர் மட்டுமுள்ள் திரையரங்கில் பால்கனியில் நாங்கள் மட்டும் முன்சீட்டில் கால் போட்டு படம் பார்ப்போம்.சில நாட்களில் ஊரின் மிகப் பெரிய ஆலமரங்கள் சூழ்ந்த நீண்ட ரயில்வே பிளாட்பார்மில் உட்கார்ந்து சென்னை எக்ஸ்பிரஸ்சை வேடிக்கை பார்த்து வழியனுப்பி விட்டு, எட்டு மணி வரை அரட்டை அடித்து விட்டு வீடு திரும்புவோம்.

மாதத்தின் ஏதோ ஒரு நாளில் குடும்பமே கிளம்பிச் சென்று கும்பகோணம் சீமாட்டியிலோ அல்லது மாயவரம் மகாராஜாவிலோ ஊரிலிருந்து வந்துள்ள் அனைத்து வாண்டுகளுக்கும் புத்தாடைகள் வாங்கி ஹோட்டலில் சாப்பிட்டு ஏதோ ஒரு திரைப்படம் பார்த்து விட்டு வீடு திரும்புவோம். தேர்தல் சீசன் என்றால் இன்னும் குதூகலம்தான்.பிரசிடெண்ட் பெரியப்பா, கோ.சி.மணி அவர்களின் செல்லப் பிள்ளை.வீட்டுக்கு வருவார்.எம்.எல்.ஏக்களும்,எம்.பிக்களும் சர்வசாதரணமாக வந்து செல்வர்.ரஸ்னா போன்ற சமாச்சாரங்கள் வீடு முழுவதும் அந்த சமயங்களில் வழிந்தோடும்.கணக்கு வழக்கில்லாமல் குடிப்போம். நான் வெஜ் விருந்துகள் களை கட்டும். அண்ணன்கள் கூட விடிய விடிய பூத் சிலிப் எழுதுவோம்.பிராச்சர ஸ்லோகன்களுக்கு ஐடியா கொடுப்போம்.

இரண்டு பெரிய கோவில்கள் ஊரில்.ஒன்று மாரியம்மன் கோவில் அதில் தலைமை ஆசிரியரான பெரியப்பா ஆலோசனைக் குழு தலைவர்..இன்னொன்று, எங்கள் குடும்பத்தாலும் மற்ற உறவினர்களாலும் கட்டப் பட்ட திரவுபதி அம்மன் கோவில்.விழாக்காலங்களில் பூ மிதித்தல், அலகு குத்தல் ஊர்வலம் என அனைத்தும் கூட இருந்து வேடிக்கை பார்ப்போம். மாவிலக்குச் சீட்டு கொடுத்தல், கோவில் பிரகாரங்களில் ஊர்க்காரர்களுக்கு ஒத்தாசை, இரவுகளில் அரவான் மற்றும் இன்னபிற நாடகம், சாமி ஊர்வலத்தில் உடன் செல்தல் என அண்ணன்கள் பின்னேயே அலைவோம்.

ஒன்றல்ல இரண்டல்ல, பல ஆண்டுகள் மேற்சொன்ன அனைத்தையும் அந்த வீட்டில், ஊரில் அனுபவித்தோம்..

நாட்கள் ஓடின..பொருள் தேடும் வாழ்வின் சுழற்சியில் ஊருக்குப் போவது கொஞ்சம் குறைந்தது.அண்ணன் மார்கள் திருமணத்துக்கப்புறம் இடம் பெயர ஆரம்பித்தார்கள்.முதுமையில் பெரியப்பா, பெரியம்மாக்கள் மூப்பெய்தினார்கள்.வாழ்வின் ஆகப் பெரிய சந்தோசங்களை அனைவருக்கும் அளித்த அந்த வீடு கொஞ்சம் ஆசுவாசமாகி அமைதி கொண்டது.வீட்டில் இப்போது இருப்பது இரண்டே இரண்டு ஜீவன்கள்தான். இப்பொழுதும், வருடத்துக்கு ஒருமுறையேனும் அனைவரும் ஊருக்கு போகிறோம். வாழ்வின் அர்த்தங்கள் புரிவது ஊருக்குப் போகும் அந்த ஓரிரு நாட்களில்தான்.ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போதும் மனைவிக்கும், இரண்டாம் வகுப்பில் படிக்கும் மகளுக்கும் நான் அந்த வீட்டில் அடைந்த சந்தோஷத்தை விளக்கிச் சொல்ல முயற்சித்துக் கொண்டேயிருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் தோற்றுத்தான் போகிறேன்,மனதிலிருப்பதை அப்படியே வார்த்தைகளில் கடத்துவதற்க்கு.