Wednesday, July 03, 2013

சார்!தொடர்ச்சியான மூன்றாவது சிகரெட்டை இழுத்துக் கொண்டிருந்தேன்.நெஞ்செல்லாம் காந்தினாலும் ஏதோ ஒரு வீம்போடு புகைத்துக் கொண்டிருந்தேன்.மாலை நான்கு மணி இருக்கும்,அது நடந்த போது.நினைத்தால்,குபுக்கென்று கண்ணோரம் துளிர்க்கிறது.நைனா கூட நினைவு தெரிந்து மேலே கை வைத்ததில்லை. பத்திருபது ஆண்,பெண் செக்கர்ஸ் சூழ்ந்திருக்க, சாரிடம் அடிவாங்கி அந்த பெரிய கடையின் மத்தியில் நிலைகுலைந்து கிடந்தச் சித்திரம், அழிக்க அழிக்க மனதில் விஸ்வரூபமெடுத்துக் கொண்டே இருந்தது.தன்னிரக்கமும்,கையாலகத்தனமும் மனதை பிசைந்து கொண்டிருந்தது. டீக்கடை அக்கா, உறைந்து போய் உட்கார்ந்திருந்த என்னையே அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சக சூபர்வைஸர் ராம் அருகில் அமர்ந்து புலம்பிக் கொண்டேயிருந்தான்.“மாப்ள! உன்னை அப்படியே கொத்தா தூக்கி சார் தள்ளி விட்டவுடனே எனக்கெல்லாம் குலையே நடுங்கிடுச்சு. பசங்க எல்லாம் தெறிச்சுட்டானுங்க.

யாராவது என்னை திட்டினாலோ அல்லது கிண்டல் செய்தாலோ, அவர்களின் வார்த்தைகளை,முகபாவங்களை, உடல்மொழியை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால், அந்த ஏச்சில், கிண்டலில் உள்ள உள்ளடக்கத்தை மட்டும் பிடித்துக் கொண்டு அதையே திரும்ப திரும்ப அசைபோட்டு திரும்ப என்னிடம் அந்த குறைபாடோ அல்லது அந்த மாதிரியான சூழ்நிலையில் நான் மீண்டும் சிக்காமலிருக்கவோ முடிந்தவரை முயல்வேன்.இந்த முறை அப்படியிருக்க முடியவில்லை.நாலு சுவருக்குள் நடந்திருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காது. நாள் முழுவதும் உட்கார்ந்து முதலாளி முதல் வேலையாட்கள் வரை காட்டு கத்தல் கத்தி வேலை வாங்கிய நான், அதே சப்ளையரின் கடையில், அனைவரின் முன்னாலும் நிலைகுலைந்து தரையில் வீழ்ந்த அவமானம் நடுக்கத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.சிகரெட்டை ஆழ இழுத்து பதற்றத்தை வெல்ல முயன்று கொண்டிருந்தேன்.

பத்தாவது முடித்து விட்டு பாலிடெக்னிக்கில் சேர்ந்து விட்டேன்.மெக்கானிக்கல் எடுக்கப் போய், அதை விட டெக்ஸ்டைல்ஸ் பிரிவுக்கு கொஞ்சம் டொனேஷன் குறைவு எனக் கடைசி நிமிடத்தில் அப்பா பிரின்ஸ்பாலுக்கு எதிரே உட்கார்ந்து எடுத்த முடிவின் காரணமாக, டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் சேர்ந்தவன் நான். கொஞ்சம் கூட என்ன படிக்கிறோம், எதற்கு படிக்கிறோம் என உணராமலேயே, இயந்திரங்களின் படங்களை கூட மனனம் செய்து ஆனால் நல்ல மதிப்பெண்களோடு பதினெட்டு வயதில் டிப்ளமோ முடித்த இரண்டாவது மாதத்திலேயே இங்கே வேலைக்கு சேர்ந்து விட்டேன். மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் உற்பத்தி தளம் இந்த சின்ன நகரத்தில். நண்பனொருவன் மூலம் கேள்விப் பட்டு, நேரடியாக வேலைக்கான விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு போன போது, சாரைத்தான் முதலில் சந்தித்தேன்.சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். துணியின் எடை சம்பந்தமாக சின்னதாக ஒரு கணக்கை மட்டும் போட்டுக் காட்டச் சொல்லி விட்டு அரட்டை பேச்சுக்கு திரும்பினார். ஜிம் கேரி, அல்பசினோ, கிரிக்கெட், ஃபுட்பால், பாலகுமாரன் என எனக்கு தெரிந்த அரைகுறைகளை வைத்து ஒரு வழியாக சமாளித்துக் கொண்டிருந்தேன். வாழ்வில் முதன்முறை ஆங்கிலம் திக்கலும் திணறலுமாக பேசியது அப்பொழுதுதான். தமிழில்தான் பேச ஆரம்பித்தேன்.எவ்வளவு தப்பா இருந்தாலும் பரவாயில்லை ஆங்கிலத்திலேயே பேசு என்றார். ரொம்பவே பரபரப்பாக இரவு ஏழு மணிக்கு இயங்கி கொண்டிருந்த்து அந்த அலுவலகம். அந்த சின்ன ஊரில்,டை கட்டிக் கொண்டு அவ்வளவு பேர் உள்ளே நடமாடியதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கையில் ஒருமுறை கூட சட்டையை டக் இன் செய்யாத எனக்கு அச்சூழல் ரொம்பவே பிடித்துப் போனது.ஒரு மணி நேரம் பேசி முடித்த பின், கொஞ்சம் குசும்பனாத்தான் இருக்க பட் பராவாயில்லை வழிக்கு கொண்டு வந்துடுவேன். நாளைக்கு காலையில் இருந்து வேலைக்கு வரலாம்எனச் சொல்லி கை குலுக்கினார்.

டிப்ளமோ தேர்வெழுதிய இரண்டாவது மாதத்திலேயே, சொந்த ஊரில் அதுவும் ரூ.1500 சம்பளத்தில் (ஃபிரஷர்ஸ்க்கான சம்பளம் ரூ.750-900ம் தான் அப்போழுது நகரின் பல டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் இருந்தது) அதுவும் முதல் நேர்முகத் தேர்விலேயே வேலை கிடைத்த மனம்கொள்ளாத சந்தோஷத்துடன் வெளியே வந்தேன்.

வேலை ரொம்பவே சுவராஸ்யமாக இருந்தது.முதல் இரண்டு மாதங்கள் ஃபேக்டரியில் வேலை.அங்கேதான் நாங்கள் உற்பத்தி செய்யும் எல்லா துணிகளையும் செக் செய்து, பேக் செய்வோம்.நான் புதியவன் என்பதால் பெரிய வேலை எதுவும் இருக்காது.ஸ்கேல்,பேனா வைத்துக் கோடு போட்டு லெட்ஜர் ஓப்பன் செய்து உள்ளே வரும், வெளியே போகும் சரக்குகளை வரவு வைத்துக் கொண்டிருப்பேன்.திடீரென ஒரு நாள் சார் கூப்பிட்டு, நாம பெங்களூர் ஆபிஸ்க்கு அனுப்பிய சரக்கு இன்ஸ்பெக்சனில் ரிஜக்ட் ஆயிடுச்சு.ஒரு பத்து ஒர்க்கர்ஸ் கூட அனுப்பினா, ரீ செக் பண்ணி கொடுத்துட்டு வருவியா? என்றார்.உற்சாகமாக தலையசைத்தேன். அடுத்த நாளே, ஒரு பதினைந்து வானரங்களை கூட்டிக் கொண்டு, பெங்களூர் சென்று பதினெட்டு நாட்கள் தங்கி அந்த ஆர்டரை இரவு,பகலாக ரீசெக் செய்து பேக் பண்ணி, டெல்லியிலிருந்து வந்த தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் ok to ship ரிப்போர்ட் வாங்கி, லாரியை லோட் பண்ணி, சென்னைக்கு அனுப்பி விட்டு, இரவு ஒன்பது மணிக்கு சாருக்கு தகவல் சொன்னேன்.அன்றிரவே பஸ் ஏறி,அதிகாலை வீடு வந்து, குளித்து உடைமாற்றி, காலை ஒன்பதரைக்கு அலுவலகம் போய் சார் முன்னால் நின்றேன். “டேய்! நீ எங்கடா இங்கே?என்றார். “நைட் பெட்டி அனுப்பிச்சுட்டு காலைல கிளம்பி வந்துட்டேன் சார் என்றேன். “சரிடா! ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வரலாமில்ல! என்றார். “அதெல்லாம் வேண்டாம் சார் என்றவனிடம் புன்னகைத்தவர், சரி இன்னைலருந்து ஆபிஸ்ல போடறேன் சமாளிச்சுடுவியா என்றார். “சரி சார் என்றவன் அன்று முதல் சூபர்வைசர் ஆனேன்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஆர்டர்கள் மும்பையில் தலைமை அலுவலகத்திலிருந்து எங்களுக்கு அனுப்பப் படும். அறுபது முதல் எழுபது நாட்களில், அதை சப்ளையர்களிடம் கொடுத்து உற்பத்தி செய்து, எங்களிடம் உள்ள 150 செக்கர்ஸ் மற்றும் பேக்கர்ஸ்  கொண்டு செக்கிங் மற்றும் பேக்கிங் செய்து ஏற்றுமதி செய்யவேண்டும்.சூபர்வைசரான எனது பணி, அந்த அறுபது நாட்களும் சப்ளையர் மற்றும் அவர்களின் அனைத்து உற்பத்தி தளங்களுக்கும் சென்று, தரத்தினை உறுதி செய்து,குறிப்பிட்ட நாட்களுக்குள் அனைத்து சரக்கினையும் உள்ளே கொண்டு வந்து சேர்த்து ஃபேக்டரியுடன் ஒருங்கிணைந்து சரக்குகளை குறிப்பிட்ட தினத்துக்குள் ஏற்றுமதி செய்ய வேண்டும்.கிட்ட தட்ட 10 சூபர்வைசர்கள் இருந்தோம்.ஒவ்வொருவரும் நான்கு அல்லது ஐந்து சப்ளையர்களுக்கு பொறுப்பு.நான் பொறுப்பேற்ற சிறிது காலத்தில் எல்லாம் முக்கியமான சப்ளையர்களுக்கு சூபர்வைசராக ஆனேன். ஒரு ஆறு மாதம் பெரிய பிரச்னை ஏதும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த போது, ஒரு பின் மதியவேளையில் அந்தச் சம்பவம் நடந்தது.

சார் ரொம்பவே கோபக்காரர்.மும்பை அலுவலகத்துக்கு ஒரு கமிட்மெண்ட் கொடுத்து விட்டால், அதை தலைகீழாக நின்றாவது முடிக்க வேண்டும் என நினைப்பவர். பெருங்குரலெடுத்து கத்தினால், அடிவயிறு கலங்கும். ஆர்டர் ஸ்டேட்டஸ் டிஸ்கஸ் செய்யும் போது, அவர் கேட்கும் குறுக்கு கேள்விகள், எவ்வளவு முட்டாளாக வேலை செய்து கொண்டிருக்கிறோம் என நினைக்க வைக்கும். ஆர்டர்களில் பிரச்னை ஏற்படும் போது, சிகரெட் புகை சுழலும் அந்த அறைக்குள் நுழைந்து, அவரது அடிக்கண் பார்வை முறைப்பை எதிர்நோக்கும் போதே கிலி பிடிக்கும்.

ஒரு செவ்வாய் கிழமை இரவு ஒன்பது மணி போல் எல்லோரும் வீட்டிற்க்கு கிளம்ப ஆய்த்தமாகி கொண்டிருந்த போது, அந்த ஃபேக்ஸ் வந்த்து.ஆர்டர் # 1027 சனிக்கிழமை காலை சென்னை துறைமுகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் சரக்குகள் ஏர் ஃப்ரைட் ஆகும். ஃபேக்ஸ் வந்த உடனே, சார் பரபரப்பாகிவிட்டார். “யாரெல்லாம்பா 1027 ஆர்டர் பாக்கிறது.ஸ்டேட்டஸ் எடுத்துகிட்டு வாங்க என சவுண்ட் விட்டார். மொத்தம் பத்து சப்ளையர்களிடம் அந்த ஆர்டர் உற்பத்தியில் இருந்தது.அதில் என்னுடைய சப்ளையர் ஆறு பேர். பலிகடாக்கள் போல் இரண்டு, மூன்று சூபர்வைசர்கள் அவரது அறைக்குள் சென்றோம். “ம்!.சொல்லுங்கப்பா.டெலிவரி டேட் முடிஞ்சு ரெண்டு நாள் ஆச்சு.எல்லா சரக்கும் சப்ளையர்கிட்ட ரெடிதானே! என்றார். மற்ற சூபர்வைசர்கள் எல்லாம், ரெடியா இருக்கு சார், காலையில உள்ளே எடுத்துடலாம் என்றனர்.நான் மேற்பார்வை செய்து கொண்டிருந்த ஒரு சப்ளையர் வசம் ஆர்டர் நிரம்பவே ஊத்தலில் இருந்தது. என்னடா பம்முற?! என்றார். இல்லை சார், அஞ்சு சப்ளையர்ர்கிட்ட சரக்கு ரெடியா இருக்கு.வீணா எக்ஸ்போர்ட்ஸ் மட்டும் ரெடியாக ஒரு நாலு நாளாகும்னேன்.எடுத்தார் ருத்ரதாண்டவம்.ஏண்டா, இதை இவ்வளவு நாளா சொல்லலை.எவ கூட படுத்து எந்திரிச்சு ஊர் பொறுக்கிட்டு இருந்த ன்னு ஆரம்பிச்சு சுமார் ஒரு மணி நேரம் செறிவான அர்ச்சனை கிடைத்தது.எல்லாரையும் உட்கார வைத்து, யார் யார் அடுத்த மூணு நாலு நாளுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு ஆக்சன் பிளான் உடனே தயரானது. என்னிடம் முறைப்போடு “காலைல வீணா போய் உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணி வெள்ளிக்கிழமைக்குள்ளே என்னென்ன ரெடியாகும், என்ன ரெடியாகாதுன்னு லிஸ்ட் ரெடி பண்ணி கொண்டு வாஎன்று  சொன்னார். இரவோடு இரவாக வீணா எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளரை வீட்டில் போய் தூக்கி வந்து விடிய விடிய உட்கார்ந்து லிஸ்ட் எடுத்து காலைல கொண்டு போய் சாரிடம் கொடுத்தேன். அவரும் பாம்பேவுக்கு போன் மேல போன் போட்டு டிலே ஆகிற ஒரு குறிப்பிட்ட சரக்குக்கு மட்டும் ஏர் ஃபிரைட் அனுப்ப ஒரு வழியாக சம்மதம் வாங்கினார். எந்த சரக்கு ரெடியாகுமோ, அதுக்கு மட்டும் பேக்கிங் லிஸ்ட் டைப் பண்ணி பாம்பேவுக்கு ஃபேக்ஸ் அனுப்பியானது எக்ஸ்போர்ட்ஸ் டாகுமெண்ட்ஸ் ரெடி பண்ண. எனக்கு ஒருவனுக்குதான் தெரியும், நான் அவரிடம் கொடுத்த லிஸ்ட் எலுமிச்சைப் பழம் மட்டுமே. பலா அளவுக்கான சரக்குகளை வெள்ளிக்கிழமைக்குள் தயார் செய்ய வேண்டுமென்றால் ராட்சஸ உழைப்பு தேவை. கொஞ்சம் சரக்கு நெசவே செய்யப்படாமல் தறியில் கவுந்தபாடியிலும், வெள்ளக்கோவிலிலும் கிடந்த்தது.அனைத்தையும் லிஸ்ட்ல் சேர்த்தால்,ஏர் ஃப்ரைட் செலவு ஏகத்துக்கும் எகிறும்.எனவே, கண்டிப்பாக தயார் செய்ய முடியாதவற்றுக்கு மட்டும் லிஸ்ட் கொடுத்து விட்டு,மற்றதை ஏதேனும் செய்து சமாளித்து விடலாம் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கையில் லிஸ்ட் கொடுத்துவிட்டேன்.

வெள்ளிக்கிழமை வரை மூணு நாள் தூக்கம், தண்ணி கிடையாது.பெரிய ஆர்டர் என்பதால்,எங்களிடம் இருந்த 150 பேரை மட்டும் வைத்து மூன்று நாளில் பேக்கிங் செய்ய முடியாது. பாதி சரக்கினை எங்களது ஃபேக்டரியிலும், மீதியை சப்ளையர் கடைகளில் வைத்தும் பேக் செய்ய ஆரம்பித்தோம்.ஒவ்வொரு சப்ளையர் கடையிலும் 30-50 பேர் இரவு பகலாக வேலையில் இருந்தார்கள்.பெரும்பாலான ஆர்டர் சம்பந்தப்பட்ட தகவல்கள் எனக்கு மட்டுமே முழுவதும் தெரியும் என்பதால், டிவிஎஸ் 50 எடுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பேன். சூபர்வைசர் எல்லாம் அவனவன் ஆர்டர் முடிஞ்சு அடுத்தவனுக்காக பொதுச்சேவை செய்யும் எண்ணத்தில் குஷி மூடில் இருந்த்தார்கள்.நானொருவன் மட்டும் உள்ளும் வெளியும் எரிய சுழன்று கொண்டிருந்தேன்.ஃபேக்டரிகுள் சென்று வரும் ஒவ்வொரு முறையும் அவர் என்னை முறைக்க, நான் அவரை தவிர்க்கன்னு கண்ணாமூச்சி ஆடுவோம்.

வெள்ளிக்கிழமை காலையில்தான் அந்த குண்டை வீணா எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் வீசினார். தம்பி, அன்னிக்கு கொடுத்த கணக்குல ஒரு தப்பு இருக்கப்பா.கவுந்தபாடில இருந்து கருப்பு கலர் மேட் வரும்னு நினைச்சேன், அந்த கடங்காரன் கருப்பு டிசைனுக்கு பதிலா பச்சைக் கலரை நெசவு செஞ்சு அனுப்பி இருக்கான்.இப்ப கருப்பு டிசைன்ல சரக்கு குறையுதுப்பாஎன்றார். எவ்வளவு  அவரிடம் கத்த முடியுமோ கத்தி விட்டு,  அலுவலகம் சென்று, மென்று விழுங்கி சாரிடம் விசயத்தை  சொன்னேன். அவ்வளவுதான் ,சாமி மலையேறினார். கிட்டதட்ட, இருபது பக்க பேக்கிங் லிஸ்ட்.  இப்பொழுது அதில் மாற்றம் செய்தால், ஏற்கனவே பேக் செய்து அடுக்கப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான பெட்டிகளின் பெட்டி எண் மாற்றப்பட வேண்டும்.மேலும், ரிவைஸ்டு பேக்கிங் லிஸ்ட் பற்றி பாம்பே அலுவலகத்தில் பேச முடியாது.குதறி எடுத்து விடுவார்கள்.ஏனெனில், அவர்கள் அனைத்து எக்ஸ்போர்ட் டாகுமெண்ட்ஸ்ம் மீண்டும் தயார் செய்து சென்னைக்கு அனுப்ப வேண்டும்.அன்றைய இரவுக்குள் இவை அனைத்தும் நடந்தாக வேண்டும். இவையனைத்தும் சேர்ந்து அவரை தகிப்பின் உச்சத்தில் வைத்து இருந்தது.வாடா எங்கூடஎன்று சொல்லி அவரது வண்டி பில்லியனில் உட்கார வைத்து நேராக வீணா கடைக்குச் சென்றார்.ஏன் சார், ஒரு லிஸ்ட் கொடுக்கிறப்ப அறிவு வேண்டாமா.சரக்குதான் டைம்க்கு ரெடி பண்ணலை, எவ்வளவு ரெடியாகும்னு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிற நீரெல்லாம் என்ன மசுருக்கு தொழில் பண்றீருன்னு விட்டு எகிற, ஆடிப்போன வீணா எக்ஸ்போர்ட் ஓனர், சார்! நான் கணக்கெல்லாம் கரெக்டாதான் சொன்னேன்.தம்பிதான் டென்சன்ல டிசைன் கலர் மாத்தி நோட் பண்ணிட்டாருன்னு ஒரே போடா போட்டாரு.

அப்பத்தான் அது நடந்தது. கோபத்தின் உச்சியில்,உன்னையெல்லாம் வைச்சுகிட்டு நான் எப்படிறா கம்பெனி நடத்தறது.உங்கப்பனா இப்ப பாம்பேல பேசறதுன்னு  சொல்லிட்டு கொத்தா சட்டைய பிடிச்சு தூக்கி வேகமாக என்னை சார் தள்ளி விட, வீணா எக்ஸ்போட்ஸ் கடையின் நடுவில் நிலைகுலைந்து விழுந்தேன்.

தம்மடித்து விட்டு நிரம்ப நேரம் உறைந்து போய் உட்கார்ந்து இருந்தவனுக்கு, அன்று ஷிப்மெண்ட் வெளியே போகணும்னு உறைக்க, எல்லாவற்றையும் மறந்து விட்டு மறுபடியும் வேலையில் முழுகினேன்.கிட்டதட்ட 150 ரகம் அந்த ஆர்டரில். எல்லோருக்குமே டவுட்.இன்னிக்கு இந்த ஆர்டர் முடிஞ்சு வெளியே போகுமா என்று.கடைசி நேரம் நெருங்க நெருங்க ஏகப்பட்ட பிரசர். இதைக் காணோம், அதைக்காணோம், இது ரிஜக்ட், அது ரிஜக்ட்னு. ஒவ்வொரு முறை ஃபேக்டரிக்குள்ளே ஓடிட்டு வெளியே வரும் போதும், ஒரு லாரி லோடாகிட்டு இருக்கும்.ரொம்ப தாமதமாத்தான் உறைத்த்து.எல்லோருக்கும் ஆர்டர் போகுமான்னு டவுட் இருந்தாலும், சார் மட்டும் என்கிட்ட எதுவும் மதியத்துக்கப்புறம் கேட்க வில்லையென்று.கிட்டதட்ட பத்து லாரி லோடு.கடைசி லோடு முடியும் போது விடிகாலை மூன்று மணி. லாரி ஓட்டுனரிடம், “அண்ணா! எப்படியாவது நாளைக்கு மதியம் பனிரெண்டு மணிக்குள்ள் கொண்டு போய் சென்னைல சேர்த்துருன்னு சொல்லி வண்டியை அனுப்பி விட்டு, தம்மடித்து விட்டு திரும்பினால், சார் பின்புறம் நின்று கொண்டிருந்தார். சாரிடாஎன்றார். நான் பதிலேதும் கூறாமல் விறைப்பாக நின்றேன்.Don’t feel bad da! Miles to go! But am extremely sorry!” என்று சொல்லி விட்டு தோளை பிடித்து, பக்கவாட்டில் இழுத்து சின்னதாக ஒரு ஹக் பண்ணி விட்டு டக்குன்னு திரும்பி பார்க்காம சென்று விட்டார். பத்தாவது லாரியை அனுப்பி விட்டு, அந்த ஹக் வாங்கிட்டு, நான் அன்று அந்த டிவிஎஸ் 50 ஓட்டிக் கொண்டு, ஆளரவற்ற நகரத்தின் தார்ச்சாலையில் வந்த போது கிடைத்த பரவசமும், ஆசுவாசமும் என் வாழ்வின் ஆகச்சிறந்த கணங்களில் முதன்மையானது.

இந்த ஆர்டர் நம்பர் 1027 சம்பவம் நடந்தது 1997ல். இப்பொழுது இதை டைப் செய்து கொண்டிருக்கும் போது, ஆர்டர் நம்பர் 7900 லோடாகி கொண்டு இருக்கிறது.ஏகப்பட்ட சம்பவங்கள் அதன் பிறகு நடந்து விட்டது. சூபர்வைசராக இருந்த நான், சீனியர் சூபர்வைசர்,புரடக்சன் கண்ட்ரோலர், அஸிஸ்டெண்ட் பிராஞ்ச் மேனேஜராகி இப்பொழுது பிராஞ்ச் மேனேஜர். சார் இப்ப ரீஜனல் மேனேஜர்.இப்பொழுதும்  இரண்டு பேரும் சண்டை போடுவோம்.இரண்டு மூன்று நாள் முறைத்துக் கொண்டு  இருப்போம். பிறகு சென்று பாரில் அமர்ந்து விடுவோம். :)

நாஞ்சில் நாடனின் அவர்களின் வைக்கோல்கதை படிக்கும் போதெல்லாம் மேற்சொன்ன சம்பவம் மனதில் வந்து கொஞ்சம் நேரம் நாஸ்டால்ஜியாவை அசை போடச் சொல்லும்.இன்று இறக்கிவைத்து விட்டேன். :)

7 comments:

பா.ராஜாராம் said...

செம ஃப்ளோ ராகின். எவ்வளவு சேலஞ்சிங்கான வேலை. சீக்கிரம் நீங்களே உங்க சார் ஆயிடுவீங்க பாருங்களேன். ஆயிட்டீங்கன்னா, என்னைய எப்பவாவது பாத்தீங்கன்னா எனக்கு ஒரு குவாட்டர் வாங்கித் தாங்க. நம்பித்தேன் இந்தக் கமெண்ட் போடுறேன். மறந்துடாதீங்க :-)

ராகின் said...

பாராண்ணே!

ஒரு கவிதையே..அடடே ஆச்சர்யகுறி தான் ஞாபகம் வருது நீங்க "செம ஃப்ளோ"ன்னு சொல்றப்ப :). நன்றி. குவார்ட்டர் போதுமாண்ணே? அந்த நாளும் வந்திடாதோ.?

Ramani S said...

அருமை
நிகழ்வின் போங்கிலேயே என் உணர்வுகளும்.,..
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்

melliyal said...
This comment has been removed by the author.
Robert said...

வெகு இயல்பாய் இருந்தது எழுத்து நடை .அருமை.

ராகின் said...

@ramani & @robert நன்றி :)

சிங்கை நாதன்/SingaiNathan said...

Tahnks to Mustafa i read this post now. Many more happy returns of the day.

Post a Comment