Tuesday, April 23, 2013

புத்தகங்களினால் அமைந்த வாழ்வு!



எங்கிருந்து புத்தகம் படிக்கும் வழக்கம் வந்தது எனத் தெரியவில்லை.அனேகமாக அம்மாவிடமிருந்து இருக்கலாம். ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போதே வாசிக்கும் பழக்கம் வந்து விட்டது. பக்கத்து வீட்டுக்கு ஒரு தாத்தா சைக்கிளில் கொண்டு வந்து வாராவாரம் புத்தகம் கொடுத்து விட்டு போவார்.சைக்கிள் மூலம் வரும் லெண்டிங் லைப்ரரி அது.விகடன், குமுதம், ராணி, ராணிமுத்து ஆகியவை பெரும்பாலும் வரும். எப்போதாவது அம்மா ராணி புத்தகம் எடுத்து வந்து இரண்டு, மூன்று நாட்கள் வைத்து படிப்பார்.முதலில் வாசிக்க ஆரம்பித்தது அதுதான். குரும்பூர் குப்புசாமிதான் நான் தொடர்ந்த முதல் ரெகுலர் எழுத்தாளர்.ராணி எடுத்தால்,முதலில் அந்த பத்திதான் படிப்பேன்.வெளிநாட்டு பயணக் கட்டுரைகள்.அப்படியே, தினசரிகளின் பக்கம் கவனம் திரும்பியது.

கிட்டதட்ட, ஆறாம் வகுப்பில் செய்திதாள் படிக்க ஆரம்பித்தேன்.அப்பாவிடம் சொல்லி தினமும் வீட்டுக்கு தினமலர் வரவைத்தேன். சிறுவர் மலர்தான் அப்போதைய ஒரே குதூகலம். பலமுக மன்னன் “ஜோ”வை படிக்காமல் வெள்ளிக்கிழமை குளிக்கக் கூட போக மாட்டேன்.கிட்டதட்ட, புதன்கிழமையிலிருந்தே சிறுவர்மலர்க்காக மனம் துள்ளும். கோடை விடுமுறையில் பெரியப்பா வீட்டுக்கு நரசிங்கன் பேட்டை சென்ற போதுதான்  பெரும் புதையலை கண்டேன்.வீட்டை ஒட்டியே இருந்த சின்ன நூலகத்தில் கிடைத்த பூந்தளிர் கபீஷ்ம், அம்புலிமாமாவின் வேதாளமும், கோகுலமும் விடுமுறைகளை கோலகலமாக்கின. தினமும் இரவு படுக்கப் போகும் போதெல்லாம், புத்தகங்களால் வழியும் அந்த நூலகம் முழுவதும் எனக்குதான் என்ற எண்ணம் பெரும் உவகையை அளிக்கும்.ரசித்து, ரசித்து ஒவ்வொரு புத்தகமாக படித்தேன்.ஒரு நாள் பைண்ட் செய்யப்பட்ட சங்கர்லால் துப்பறிகிறார் கிடைத்தது.அந்த விடுமுறை முழுவதும் வைத்து படித்தேன்.

இதற்குள், ஒரு மிக நல்லப் பழக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.சாப்பிடும் போதும், ஏதாவது படிப்பது.கிட்டதட்ட ஏழாம் வகுப்பிலிருந்து, திருமணம் ஆகும் வரை இந்தப் பழக்கம் இருந்தது.வீட்டில் சாப்பிடும் போதெல்லாம் ஏதாவது கையில் புத்தகம் இருக்க வேண்டும்.உறவினர் வீட்டில் கூட ஏதாவது புத்தகம் தேடி எடுத்துக் கொண்டே சாப்பிட உட்காருவேன்.எல்லோரும் திட்டி, திட்டி ஒரு கட்டத்தில் விட்டு விட்டார்கள்:). ஏழாவதில் வீடு மாற்றி வேறு ஏரியாவுக்கு போன போது கிடைத்த நண்பர்கள் குழாம், காமிக்ஸ் வெறியர்களாக இருந்தார்கள்.மாதம் ஒரு முறை வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு, நகரின் முக்கிய கடைகளில் காமிக்ஸ் வேட்டை நடத்துவோம்.இரும்புக்கை மாயாவி, லக்கி லூக்,ஜேம்ஸ் பாண்ட் என ஆளுக்கு ஒரு புத்தகம் வாங்கி படித்து முடித்து பரிமாறிக் கொள்வோம்.தீபாவளி வந்தால் கொண்டாட்டம்தான்.தடித் தடியாக புத்தம் புது காமிக்ஸ் புத்தகங்கள் கடைகளில் தொங்கும் காட்சியே அலாதியாக இருக்கும். விகடன்,குமுதம்,கல்கண்டு என படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் புத்தகங்களின் தொடர்ச்சியாக.

எங்களுக்கு எல்லா உறவினருமே குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணி நேர பயண தூரத்தில்தான் இருந்தனர்.எனவே, பேருந்து பயணங்கள் புத்தகம் வாங்க பெரிதும் உதவின.ராஜேஷ் குமாரும், சுபாவும், பிகேபியும் இந்த பேருந்து நிலையக் கடைகளில் இருந்துதான் மனதுக்குள் இறங்கி  சிம்மாசனமிட்டனர்.கரூரில் ஏறி, திருச்சியில் சாப்பிட இறங்கி மீண்டும் கும்பகோணம் பேருந்தில் அம்மாவுடன் ஏறும் போது கையில் கிரைம் நாவல் இருக்கும். கும்பகோணம் போய்ச் சேரும் போது முடித்து விடுவேன். ஊர் போய் இறங்கியவுடனேயே அண்ணன் என்ன புக்டா வழியில் வாங்கின? என பைகளில் துழாவுவார்,அவர் படிக்க.ஜெமினி சினிமா வாங்கும் வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கும்.அம்மாவும் சரி, அப்பாவும் சரி சம்மதிக்க மாட்டார்கள்.மீறி சம்மதம் வாங்கி, ஜெமினி சினிமாவோடு போனால் பெரியப்பா சத்தம் போடுவார். ஒம்பதாவது படிக்கிற பையன் வைச்சிருக்கிற புக்கை பாருன்னு.

இப்படி, பாக்கெட்,கிரைம் நாவல்களோடு ஓடிக்கொண்டிருந்தவன், பத்தாவதில் நண்பனொருவன் கையில் வைத்திருந்த மெர்க்குரிப் பூக்கள் மூலம் வேறு உலகினுள் நுழைந்தேன்.அது வரை வாசிப்பில் பார்த்து வந்த உலகிலிருந்து இது வேறு வகையாக இருந்தது. அந்த நண்பன் மூலமாகவே, புத்தகம் படிக்கும் ஒரு நண்பர்கள் வட்டம் பழக்கமாகி பாலகுமாரனின் கிட்டதட்ட அனைத்து நாவல்களும் வாசித்து முடித்தேன். அந்த வாசிப்பில், ஒரு வகையான சுரப்பி உச்சத்தில் சுரந்த காலமது. வந்தார்கள் வென்றார்கள், ஏன்,எதற்கு, எப்படி? என பத்தாம் வகுப்பு கழிந்தது. பத்தாவது முடித்து டிப்ளமோவின் ஆரம்ப காலத்தின் ஒரு ரயில் பயணத்தில், இரவல் கிடைத்த சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்பில் ”அன்பைத் தேடி” என்னை சிறுகதைப் பக்கம் உந்தியது.அந்த ஒரு கதையை படித்து முடித்தவுடன் இரவல் கொடுத்தவர் புத்தகத்தை திரும்ப வாங்கிவிட்டார்.ஊர் போய்ச் சேர்ந்தவுடன், அண்ணனின் புத்தக அலமாரியில் சுஜாதா எனக் கண்ணில் பட்ட புத்தகத்தையெல்லாம் தேடி எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அந்த விடுமுறையின் பொக்கிஷம் “ஆதலினால் காதல் செய்வீர்” மற்றும் “கனவுத் தொழிற்சாலை”. கல்லூரிக் காலம் முழுதும் பாலகுமாரனும், ராஜேஷ்குமாரும், சுஜாதா ஓரளவும் என ஓடிக் கொண்டிருந்தது என் வாசிப்பு. அடிக்கடி நாஞ்சில் நாடன், ஜீரோ டிகிரி, சுந்தர ராமசாமி என வெகுஜனப் பத்திரிக்கைகளில் பெயர்கள் அடிபடும்.

வேலையில் சேர்ந்த நாட்களில் தேடலும்,தவிப்பும் வேறு பக்கம் பாய்ந்ததால் வாசிப்பில் ஒரு பெரும் தொய்வு ஏற்பட்டது. அப்பாவை ஒரு சமயம் ஒரு விபத்துக்காக மருத்துவமனையில் சேர்த்து அறுவைச் சிகிச்சை முடித்து, அப்பொழுதுதான் டிஸ்சார்ஜ் செய்து இருந்தோம். கூட இருந்து கவனித்த பிறகான சோர்வும், ஒரு பெரிய ஆர்டருக்காக இரண்டு மூன்று நாள் இரவு மூன்று, நான்கு மணி வரை வேலை பார்த்து, அந்த ஆர்டர் ஷிப்மெண்ட் ஆன பிறகான ஆசுவாசமும் கலந்த ஒரு இரவில், வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, நகரின் ஒரு ஓரத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் புத்தகக் கடை வேன் நின்று கொண்டிருந்தது.ரொம்ப நாள் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த புத்தக ஆர்வம் உந்த, உள்ளே நுழைந்தேன்.வாசிக்க விரும்பியிருந்த நிறைய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நிறைய இருந்தன.கிட்டதட்ட பத்து புத்தகம் வரை எடுத்து விட்டு, கடைசியாக எடுத்த புத்தகம் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதை தொகுப்பு.மொத்தமாக பைண்ட் செய்யப் பட்ட ரூ.300 அளவிலான புத்தகம்.அதுவரையில் அவ்வளவு விலை கொடுத்து, அதுவும் அவ்வளவு பெரிய புத்தகம் எதுவும் வாங்கியதில்லை. எடுத்த எல்லா புத்தகத்தையும் வைத்து விட்டு அந்த ஒரு தொகுப்பை மட்டும் எடுத்து வந்தேன். வாசிப்பில் ஒரு பரவசத்தை,ஒரு புதிய பாய்ச்சலை எனக்குள் நிகழ்த்தியவை நாஞ்சிலின் இந்த சிறுகதைகள்.அதுவும் “வந்தான்,வருவான், வாராநின்றான் ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் எனக்குள் அப்படியே இருக்கிறது.நான் அடிக்கடி எடுத்து வாசிக்கும் கதைகளில் இதுவும் ஒன்று.இந்த தொகுப்பே, எனக்கு பைபிள் மாதிரி ரொம்ப காலம் இருந்தது. இன்னும் இருக்கிறது. அடிக்கடி இத்தொகுப்பை எடுத்து, ஏதேனும் ஒரு கதை படிக்கும் போதெல்லாம், வாசிப்பின் வழி நான் நல்ல வழியைத்தான் வந்தடைந்திருக்கிறேன் என்று மகிழ்வேன். நாஞ்சில் நாடனின் அனைத்து நாவல்களும் வாங்கி படித்த அடுத்த 3-4 மாத காலம், கிட்டதட்ட ஒரு காதலியுடன் பழக ஆரம்பித்த பொழுது கிடைத்த கிளர்ச்சிக்கு இணையானது. இதற்கு பின், மாதா மாதம் ஒரு தொகை ஒதுக்கி ஒவ்வொரு எழுத்தாளரையும் வாசிக்க ஆரம்பித்தேன். வாழ்வில் மனதளவிலும், லெளகீகமாகவும் பல நிலைகளை தாண்டி வந்தாலும், அன்று முதல் இன்று வரை வாசிப்பிற்க்கிணையான அனுபவத்திற்க்கு மாற்றே கிடையாது. அதுவும், கையில் கிளாசும், அம்மணி முறைப்பினூடே வறுத்து கொடுத்த முந்திரியும் துணையிருக்க, நாஞ்சிலோ, அசோகமித்திரனோ, பிரபஞ்சனோ, வண்ணதாசனோ படிப்பதென்பதுதான் இந்த பூவுலகில் கிட்டக் கூடிய ஆகப் பெரிய சந்தோஷமாய் இருக்க முடியும்.

உலகப் புத்தக தினமான இன்று அனைத்து எழுத்தாளர்களுக்கும்,பதிப்பாளர்களுக்கும் மனப் பூர்வமான நன்றி!. ஏதோ ஒரு எழுத்தாளரின் ஏதோ ஒரு சொல், ஒரு பத்தி, ஒரு கதை எல்லா நேரத்திலும் துணையிருந்து வாழ்வின் அர்த்தத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment