Saturday, August 20, 2011

கவர்ந்த பதிவுகள்!

1. நரேனின் வடசென்னை குறித்தான பதிவுகள் - நிழலுகம்-1 & நிழலுகம்-2. பரபரவென திரில்லர் நடை எழுத்து.. நரேன் அதிகம் இப்பொழுது பதிவிடுவதில்லை என தெரிந்தாலும், அவ்வப்போது அவரது பதிவை புதிதாக ஏதாவது எழுதியிருக்கிறாரா என எட்டி பார்க்க வைப்பது இந்த கட்டுரைகளின் வெற்றி.. சுவராஸ்யமான பின்னூட்டங்களும் உண்டு.

2 . ஜெயமோகன் தனது மகன் அஜீதன் குறித்து பகிர்ந்த தேர்வு. தகப்பன்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை

3.R.P.ராஜநாயகம் அவர்களின் எல்லா பதிவுகளுமே மிகவும் ரசிக்கக்கூடியவை.. ஒரு தகப்பனாக Child is the father of the man என்றுமே மனதுக்கு நெருக்கமானது.

4. இளவஞ்சி தனது வழக்கமான இயல்பான எழுத்தில் பகிர்ந்த எமிலி என்றொரு தோழி. படித்து கொண்டே வரும் போது குபுக்கென்று ஏதோவொன்று உள்ளே உடையும்.

5. ஜெயமோகன் வாழ்வின் ஜென் தருணத்தை அழகாக சொல்லும் வாழும் கணங்கள். தெரிந்து கொள்ளுதல் மற்றும் அறிதல் பற்றிய கட்டுரை, பின்பகுதி சிறிது குழப்பினாலும், ஊன்றி வாசித்தால் மிகச் சிறந்த கட்டுரை

“தண்ணீர்” - அசோகமித்திரன்.

1991-92-ல் நான் ஒன்பதாம் வகுப்பிலிருந்த போது, புதிய வீடு கட்டி குடிபுகுந்தோம். எங்கள் வீட்டுக்கென அப்போது தனியாக தண்ணீர் இணைப்பு பஞ்சாயத்தால் வழங்க பட்டிருக்கவில்லை.எங்கள் வீட்டை ஒட்டிய மனை ஒரு சுண்ணாம்பு சூளைக்கானது.ஒரு காலத்தில் நல்ல தொழில் நடந்த,நாங்கள் போன போது நலிந்து விட்ட, சுமார் 2 ஏக்கர் அளவில் பெரிய நிலப்பரப்பை கொண்ட சூளையது. அந்த சூளையின் கடைசி மூலையில் ஒரு தண்ணீர் குழாய் இணைப்பு இருந்தது.சூளையின் உரிமையாளர் அப்பாவுக்கு பழக்கமானவராயிருந்ததால், தண்ணீர் வரும்போது அங்கு பிடித்துக் கொள்ள அனுமதி கிடைத்தது.

தண்ணீர் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை, முன்னறிவிப்பின்றி பெரும்பாலும், இரவு ஏழு மணியிலிருந்து விடிகாலை நான்கு மணிக்குள் வரும். ஒண்ணரை அல்லது இரண்டு மணி நேரம் வரும் தண்ணீரை பிடித்து வந்து, நகர்த்த கூடிய சிறு மற்றும் பெரு தொட்டிகள், சுவற்றோடு சேர்த்து கட்டப் பட்ட மிகப் பெரிய தொட்டி என பல அளவுகளில் அப்பா வீட்டில் ஏற்பட்டு செய்திருந்த தொட்டிகளில் நிரப்ப வேண்டும். சுவற்றோடு கூடிய பெரிய தொட்டி, சரியாக 150 குடங்கள் தண்ணீர் பிடிக்கும். அந்த தொட்டியில் முதல் குடம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றும் போது, களுக்கென கண்ணின் ஓரத்தில் ஆற்றாமையில்,எரிச்சலில், சலிப்பில் கண்ணீர் கட்டும். தண்ணீர் வரும் பொழுதெல்லாம், வீட்டில் எல்லோரிடத்திலும் எரிச்சலும், கோபமும் எதிரொலிக்கும்.

பெரும்பாலும் தம்பி உதவிக்கு வர மாட்டான். முகத்துக்கு நேரே அம்மாவிடம் சொல்லிவிடுவான் முடியாதென. நான் சைக்கிளில் மூன்று குடமும், அம்மா இடுப்பில் ஒரு குடம் என, ரவுண்ட் ட்ரிப் அடிப்போம். தம்பி வரும் நாட்களில், அவன் இரு குடம் சைக்கிளிலும், நான் இரு கைகளில் இரு குடமும் என அம்மாவுடன் சேர்ந்து சென்று எடுப்போம். கிட்டதட்ட அரைகிலோமீட்டர் தூரம், நிறை குடங்களுடன் சுண்ணாம்பு கற்கள் சிதறி கிடக்கும் நிலத்தில், ஈரக்கால்களில் குத்தும் கற்களினூடே நடந்து வரும்போதெல்லாம், இவ்வாழ்க்கையை சபித்த்துண்டு.

தண்ணீர் குழாய், இருவர் குத்துகாலிட்டு அமரக் கூடிய அளவிலான ஒரு மண் குழிக்குள் இருக்கும். அப்பா, குழிக்குள் இறங்கி தண்ணீர் குழாயில் குடம் மாற்றி குடம் வைத்து எடுத்துக் கொடுப்பார். அங்கு மின்சாரம் இல்லாததால், அப்பா டார்ச் லைட் உதவியுடன் உள்ளே இறங்கி நின்று தண்ணீர் பிடிப்பார். தேரை, பாம்பு, தவளை தொல்லை இருக்குமென்பதால், அப்பா எங்களை குழிக்குள் இறங்க விடமாட்டார். அப்பா வெளியூர் சென்ற நாட்களிலோ,பட்டறையில் வண்டி பிரித்து அவசர வேலையில் இருக்கும் போதோ (அப்பா,மெக்கானிக்), குழிக்குள் இறங்கி தண்ணீர் பிடிக்கும் வேலை எனக்கு. பாம்பு, பல்லியிடம் எல்லாம் பயம் இல்லை, ஆனால் தவளை வருமோ என 100-150 குடம் தண்ணீர் பிடிக்கும் வரை அருவருப்பிலேயே நின்று கொண்டிருப்பேன். அப்படியும், சில முறை தவளை காலில் ஏறிவிடும். நரக வேதனை!! எல்லா அவஸ்தையும் ஒரு குறுகிய காலம்தான்..அதிகபட்சம் ஆறு மாதம் இருக்கும்.பிறகு,எங்கள் வீட்டுக்கே தண்ணீர் இணைப்பு வந்து விட்டது..

அசோகமித்திரனின் “தண்ணீர்” நாவலை படித்தபின், இவ்வளவு நினைவுகளும் மனதின் அடியில் இருந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின் குபுக்கென மேலே வந்து விட்டது.வாசிக்கும் அனைவரும் நாவலை, கதைமாந்தர்களை மிக நெருக்கமாக உணரமுடியும். மிக நுண்ணிய விவரணைகளின் மூலம், நம்மை நாவலுடன் நெருங்க செய்கிறார் அசோகமித்திரன். தண்ணீர் தட்டுப்பாட்டின் ஊடே, மிக அத்தியாவசிய மனிதபண்புகளின் தட்டுப்பாட்டினையும் நாவல் மிக அழகாக தொட்டு செல்கிறது.அமைதியாக ஆரம்பித்து சரசரவென வேகம் பிடித்து சட்டென முடியும் நாவல். தண்ணீருக்காக ஒரு நகரம் படும் பாடுதான் மையச் சரடு, ஆனால் மனித மனங்களின் இயல்பினை பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் நாவல் இயல்பாக நமக்குள் கட்த்துகிறது. பலருக்கும் பொதுவான ஒரு சமூக இடர்பாடு அல்லது பிரச்னை எவ்வாறு நம் சிந்தனை,செயல்களை, நம் தினசரி அலுவல்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்க அல்லது எவ்வாறு நமது எண்ணங்களை, நம்பிக்கைகளை, முடிவுகளை கட்டுபடுத்த,ஊக்கபடுத்த முடியும் என்பதை அசோகமித்திரன் பல சம்பவங்கள், கதாபாத்திரங்களின் ஊடே அழகாக ஒரு தேர்ந்த ஓவியன் வண்ணம் தீட்டுவது போல, சொல்லி செல்கிறார். அசோகமித்திரன் நுண்ணிய அவதானிப்புகளே, அவரது நேர்வாழ்வில் கண்ட சென்னை மாந்தர்கள் தண்ணீருக்காக அலையும் அவலங்களை மிக சிறப்பாக நாவல் முழுவதும் பதிவு செய்வதற்கு உதவியுள்ளன.

டீச்சரம்மா ஜமுனாவுடன் நிகழ்த்தும் பெரிய உரையாடலுக்கு பின் இருவரும் தெருவில் காணும் சிறுபிள்ளைகள் தண்ணீர் கொண்டு போகும் காட்சியும், பலத்த மழைக்கிடையில் கணவனின் கடுகடுப்புக்கு பின்னும் இரண்டாவது டின்னுடன் மாடியிலிருந்து விழும் தண்ணீரை பிடிக்க மனைவி செல்லும் காட்சியும், ஜமுனாவும் சாயாவும் ஒரு வித தெளிவோடு வீட்டை விட்டு வெளியே கடற்கரைக்கு செல்லும் போது தொலைவில் பாஸ்கர் ராவின் கார் சேற்றில் மாட்டி நிற்கும் காட்சிகளும் நீண்ட நாட்களுக்கு மனதில் உறைந்த புகைப்படங்களாய் உறைய போவது நிச்சயம்.

”தண்ணீர்”
அசோகமித்திரன்
கிழக்கு பதிப்பகம் வெளியீடு

Wednesday, June 08, 2011

நான் plain married!!

நேற்றைய முன்தின இரவு எனக்கும் எனது மகளுக்குமான உரையாடல்.

------------xxxx--------xxxx---------xxxx-----------

செல்லம், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நாளைக்கு wedding day டா.. மார்னிங் தூங்கி எழுந்தவுடனே, அம்மாவுக்கு surprise wish பண்றீங்களா?

ok ப்பா.. உங்களுக்கு marriage ஆகி எவ்வளவு days ஆகுதுப்பா?

இன்னியோட 7 years complete ஆகிடுச்சு செல்லம்..

(அருகே காதருகில் வந்து), உங்களுக்கு plain marriage-ஆ இல்லை love marriage-ஆ ப்பா!

(நான் புன்முறுவலுடன்) plain marriage-னா என்ன, love marriage-னா என்னடா செல்லம்?

அப்பா, உங்களுக்கு இது கூடத் தெரியாதா?

இல்லைடா, please சொல்லுங்க!!

அது வந்துப்பா, ரெண்டு பேரும் love பண்ணி marriage பண்ணா love marriage.. love பண்ணாம marriage பண்ணா அது plain marriage ப்பா..நிஜமா உங்களுக்கு தெரியாதாப்பா?

இல்லைடா எனக்கு இப்பத்தான் தெரியும்..அப்பாவுக்கு plain marriage தாண்டா..

ok ok

செல்லம்..இந்த் plain marriage புரியுது..love marriage புரியலையே..love-னா என்னடா?

புரியலையாப்பா!! சரி..இருங்க சொல்றேன்..அது வந்துப்பா, ரெண்டு பேரு friends ஆகி rose கொடுத்துகிட்டா அதான் love-ப்பா..

oh..ok ok.எப்படிடா செல்லம் இதெல்லாம் உங்களுக்கு தெரியும்..

நான் இப்ப first standard போறேன்ப்பா..அதான், எனக்கு எல்லாம் தெரியும்..TV-ல பார்த்தேன்ப்பா..நீங்க எப்படிப்பா இதெல்லாம் தெரியாம office போறீங்க !!!

சரி..love எப்படா செல்லம் எல்லோருக்கும் வரும்?

அதுவாப்பா..அது வந்து college படிக்கிறப்ப வரும்..இல்லைன்னா உங்களை மாதிரி big ஆனா வரும்ப்பா..

Ok ok..நீ ரொம்ப intelligent-டா!!

-----xxxxxxx--------xxxxxxxxx---------xxxxxxxx------xxxxxxxxx------

இதற்க்கு மேல் இந்த உரையாடல் நீள்வது உசிதமாக படாத்தால், topic மாற்றி விட்டேன் :)