Monday, February 25, 2013

பாடப் படாதவன்!


தோனி ஒத்தகையில ஆட்டத்தை நம்ம பக்கம் நேத்து கொண்டு வந்தப்பதான் ”அவரை” பத்தி ஞாபகம் வந்தது..எத்தனை ஆட்டங்களை கடைசிவரை உயிரைக் கொடுத்து கொண்டு சென்றிருக்கிறார். இடைநிலை ஆட்டகாரர்களின் வெற்றி ஓட்டங்கள் என்றுமே சிலாகிக்கப் படுவது..இந்த மாதிரியான ஓட்டங்களை பெற வேண்டுமெனில் கொஞ்சம் நிறைய நேரம் ஆடக்கிடைக்க வேண்டும்..அப்படி நிறைய நேரம் கிடைக்கிறதென்றாலே, அவருக்கு முன்னே களமிறங்கிய முதல்வரிசை ஆட்டக்காரர்கள் சொதப்பி விட்டார்கள் என்பது திண்ணம்..அப்படி குறைந்த ஓட்டங்களில் அனைத்து முதல் வரிசை ஆட்டக்காரர்களும் கூட்டுக்கு திரும்பியவுடன் களமிறங்கும் ஆட்டக்காரருக்கு இருக்கும் மனஅழுத்தம் மிக அதிகம்.. அப்படிப் பட்ட அழுத்தத்துடன் இந்த மாதிரியான சாதனை ஆட்டங்களை வெளிப்படுத்தும் இடைநிலை ஆட்டக் காரர்கள் மிகப் பாராட்டுக்குரியவர்கள்..

1997-1999 வரையிலான காலகட்டத்தில் அப்படி ஒரு ஆபத்பாந்தவனாக நமக்கு ஒரு நாள் ஆட்டங்களில் கிடைத்தவர்தான் ”அவர்”...அப்பொழுதெல்லாம், தெண்டுல்கரின் ஆட்டம் முடிந்தவுடனே தொலைக்காட்சியை அணைத்துக் கொண்டிருந்த பெரும்பான்மையானவர்களுக்கு மத்தியில், தான் களத்திலிருக்கும் வரை ஆட்டம் முடியாது என தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஒரு சிறுபான்மை ரசிகப் பட்டாளத்தை வைத்துக் கொண்டிருந்தார்.. மேல்வரிசை அனைத்தும் களத்தை காலி செய்த பின் களமிறங்கி வால்களை துணைக்கு வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டங்களை சேகரித்துக் கொண்டிருக்கும் அவரை பார்க்கும் போதெல்லாம் உற்சாகத்தை விட பரிதாபம்தான் மேலோங்கி இருக்கும்..

அப்பொழுது, கவுந்தப் பாடியில் ஒரு பத்து நாள் தங்கியிருந்தேன்.. டேபிள் மேட் நெசவு செய்யும் கைத்தறிகளை மட்டுமே முழுவதும் கொண்ட ஊர்.. கிட்டதட்ட பத்திருபது கிராமங்கள் கவுந்தப் பாடியை சுற்றி..அனைத்துக்கும் முதன்மையான தொழில் நெசவுதான்..பத்துக்கு இருபதடி வீட்டில், எட்டுக்கு எட்டு தறி அடைத்துக் கொண்டு மீதியுள்ள இடத்தில்தான் சமையல், தூக்கம், தொலைக்காட்சி இன்ன பிற..தினமும் மாலையில் தறி தறியாக சென்று அன்று முழுவதும் நெசவான டேபிள் மேட்களை வசூல் செய்து அன்றிரவு பேருந்தில் ஊருக்கு பார்சல் அனுப்புவேன்..தறி ஒன்றுக்கு தினமும் 24 டேபிள் மேட்கள் ஒழுங்காக உட்கார்ந்து நெய்தால் உற்பத்தியாகும்.. மேட்டுப் பாளையம் என்றொரு பகுதியுண்டு..தெருவுக்கு நூறு தறியுள்ள ஊர்.. இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய தெருக்கள்..மாலையில் அந்த ஊரில்தான் கடைசியாக வசூல் செய்வேன்..நாளொன்றுக்கு 2000 முதல் 2400 மேட்களை வசூல் செய்வேன்..தினமும் மதியமே அலுவலத்துக்கு தகவல் சொல்லியாக வேண்டும் அன்று மொத்தம் எவ்வளவு சரக்கு அனுப்ப முடியுமென..மொத்த நெசவில் இருக்கும் தறிகளை கணக்கில் கொண்டு தறிக்கு 20 மேட்கள் எனக் கணக்கு போட்டு முன்கூட்டியே சொல்லிவிடுவேன்.. 50-100 மேட்கள் முன்னே பின்னே சென்றால் பிரச்னையில்லை.. நிறைய துண்டு விழுந்தால் ரணகளம்தான்..நான் கொடுக்கும் கணக்கை வைத்து அடுத்த நாள் போகும் ஷிப்மண்ட்க்கு பேக்கிங் ஸ்லிப் தயார் செய்து பாம்பேக்கு ஃபேக்ஸ் அனுப்பி விடுவார்கள்..அடுத்த நாள் அந்தளவு பெட்டி சென்னைக்கு வண்டியேற்ற வேண்டும்.. அப்படியொரு நாள், கணக்கை கொடுத்து விட்டு, ஊர் ஊராக சென்று மேட்களை வசூல் செய்து கொண்டிருந்தேன்..ஓரளவு எதிர்பார்த்த அளவு எல்லா இடத்திலிருந்தும் சரக்கை எடுத்துக் கொண்டிருந்தேன்.. கடைசியாக மேட்டுப் பாளையம்..அங்குதான் ஒரு 40 தறிகள்..வீடு வீடாக சென்று பார்க்கிறேன்..பெரும்பான்மையான வீட்டில் தறியில் ஆளில்லை.. 24 மேட்கள் ஆக வேண்டிய இடத்தில் பத்து முதல் பதினைந்து மேட்களே ஆகியிருந்தன..அதுவும் தறியிலேயே உள்ளது..அறுத்து சுத்தம் செய்யப் படவில்லை..பகீரென்றது.. கடைசியாக ஒரு தறியில் சென்று பார்த்தால் எல்லா பயலும் அங்கே கிடைத்த சந்து பொந்துகளில் புகுந்து கொண்டு இந்தியா- தென்னாப்ரிக்கா ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.. செம காண்டாகி, காட்டுக் கத்தல் கத்தி தொலைக்காட்சியை அணைத்து விட்டேன்..ஒரே கூச்சல், களேபரம்.. அதுவரை நன்றாக ஆடிக் கொண்டிருந்த ஜடேஜா சதத்திற்க்கு நெருக்கமாக வந்து அப்போதுதான் ஆட்டமிழந்திருந்தார்.. ”அவ்ளோதான்யா, ஆட்டம் முடிந்து விட்டது..போய் பிழைப்பை பாருங்கள்” என்றேன்..அப்பதான் ஒரு பொடியன் சொன்னான்..”சார், நம்ம ஹீரோ உள்ளே இருக்க வரை ஆட்டம் முடியாது சார்..மேட்ச் பார்க்க விடு.நம்ம ஜெயிக்கிறோம்..அதே குஷில வந்து உட்கார்ந்து உனக்கு இன்னிக்கு வசூலாக வேண்டிய மேட் எல்லாம் நெஸ்சு தரோம் சார்” அப்படின்னான்.. ”நீ சொன்னா பத்தாதுடா, எல்லோரையும் சொல்ல சொல்லுன்னேன்”..கோரஸா ஒத்துக்கிட்டாங்க..அவனுங்ககிட்ட இருந்த பீடியை வாங்கி வலிச்சுகிட்டே கயித்து கட்டில்ல உட்கார்ந்து வேற வழியில்லாம ஆட்டத்தை நானும் தொடர்ந்தேன்..

நம்ம கதாநாயகர் கடைசி ரெண்டு விக்கெட்காரனுங்களை கூட வைச்சுக்கிட்டு குரோனியேவுக்கும்,போல்லாக்குக்கும் செமையா தண்ணி காட்டி கடைசி ஒரு பந்து மிச்சமிருக்கிறப்போ அந்த 300 ரன்னை சேஸ் பண்ணி ஜெயிக்க வைச்சார்.. அப்படி ஒரு சந்தோசம் பய புள்ளைகளுக்கு..நெசவாகலைங்கற கடுப்புல இருந்த நான் எப்ப அந்த ஆட்டத்துக்குள்ளே முழுகினேன்னு எனக்கே தெரியலை..வின்னிங் ஷாட் அடிச்ச உடனே பக்கத்துல இருந்த பசங்களை கட்டிப் புடிச்சுட்டேன்..”என்னா மாதிரி ஆட்டம் பாத்த இல்ல சார்..எப்ப சார் கிடைக்கும் இந்த மாதிரி ஒரு மேட்ச்..ஷிப்மண்ட் தெனமும்தான் போகுது” அப்படின்னு நம்மளையே நக்கல் விட்டானுங்க..ஒரு வழியா கொண்டாடி முடிச்சு எல்லா பயலும் தறிக்குள்ள பூந்தானுங்க.. ”சார், நைட் எல்லாத்துக்கு புரோட்டா வாங்கிட்டு வந்துடு. எந்நேரம் ஆனாலும் உன் மேட்டை நெஸ்சு கைல குடுக்காம படுக்க மாட்டோம்”னு சொல்லிட்டு நெய்ய ஆரம்பிச்சானுங்க.. அதுவரைக்கும் வசூலான மேட் அனைத்தையும் பார்சல் பண்ணி பேருந்தில் வைத்து விட்டு அலுவலகத்துக்கு தகவல் சொன்னால், என்னய்யா 300 மேட் குறையுதுன்னு கதற ஆரம்பிச்சுடானுங்க..”இல்லை சார், ஒரு தெருவுல எழவு விழுந்துடுச்சு.அங்கேதான் நிறைய தறியிருக்குது..எவ்ளோ ஆகியிருக்குன்னு தெரியலை.காலைலதான் சொல்ல முடியும்”னு சொல்லிட்டு செம ஏத்து வாங்கினேன்.. நம்பிக்கையே இல்லாம எல்லா பயலுக்கும் புரோட்டா வாங்கிட்டு போறேன்..

வழக்கமா ஏழு,எட்டு மணிக்கெல்லாம் தறியை விட்டு இறங்கிடுவாங்க..ஒன்பது மணிக்கு ஊரே அமைதியாகிடும்..நான் போனப்ப ஒரு ஒன்பது மணி இருக்கும்..தெருவுக்குள்ளே நுழையறேன், டக் டக் டக் டக்-னு கைத்தறில ஊடை வாட்டு போட்டு நெசவு செய்ற பத்து-பதினைந்து தறிக்கான கோரஸ் சத்தம்..அப்படியே கண்ணுல கர கரன்னு தண்ணி வந்துடுச்சு.. இரண்டு மணி நேரத்துக்கும் மேல சுத்தி சுத்தி வந்து எல்லா பயலுககிட்டேயும் பேச்சு கொடுத்துட்டே இருந்தேன்.. இரவு ஒரு பன்னிரெண்டு மணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு மேட் வசூலாச்சு..எல்லாத்துக்கும் ஒரு பெரிய கும்பிடா போட்டுட்டு, பார்சலை இரு சக்கர வண்டியில் வைத்து எடுத்துக் கொண்டு 30 கி.மீ பயணம் செய்து ஈரோடு வந்து பேருந்தில் வைத்து விட்டு, ஊருக்கு தகவல் கொடுத்ததுட்டு ஒரு தம்மை இழுத்தப்பதான் மூச்சே வந்தது..

காலையில் எழுந்து தினசரி பார்த்தேன்.. ஆட்டத்தை வென்ற செய்தியுடன் ராபின் சிங்கின் படம்.. முன்னிரவின் நிகழ்வுகள் மனதில் ஓட, சொல்லிக் கொண்டேன் “ஹீரோடா நீ” .

Saturday, February 23, 2013

மருத்துவமனையும் அது சொல்லும் கதைகளும்!

டிப்ளமோ முடித்து விட்டு டெக்ஸ்டைல் எக்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றில் சேர்ந்து, படித்தவற்றில் ஒன்று கூட நடைமுறை தொழிலுக்கு உதவாத கிலி பிடித்த நிலையில் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல், பரம ரகசியமாக தொழில் சூத்திரங்கள் அடைகாக்கப் பட்டு சாதிய ரீதியாய் இறுகி கிடக்கும் ஒரு குறுநகரத்தில், பலதும் வெறித்தனமாய் கற்று சுழன்று கொண்டிருந்த நேரம். காலையில் எட்டு மணிக்கு கிளம்பினால் அலுவலகம் முடிந்து ஓட்டை டி.வி.எஸ் பிஃப்டியில் கிளம்ப இரவு பதினொன்று,பனிரெண்டு ஆகிவிடும்.. ஞாயிற்றுக் கிழமை மட்டும் ஆறு, ஏழு மணிக்கு கிளம்பலாம்.. பத்து வருடங்களாக சீட்டை தேய்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்த சீனியர்களை விட அதிகம் தொழில்நேர்த்தி காட்டி பேரெடுக்க வேண்டும் என்ற பேராசையில் கண்ணில் பட்ட வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு நாயலைச்சல் அலைந்து கொண்டிருப்பேன்.. தொட்ட வேலையில் பாதி சொதப்பும்.. மேலாளரிடமிருந்து உலகத்தின் அனைத்து வசவுச் சொற்களையும் காதில் வாங்கி பெரும்பான்மை நேரங்களில் கண்ணோரத்தில் வழியும் நீருடன் தான் வீட்டுக்கு செல்வேன்.. ஆனால், என்னமோ செய்றாண்டா, எப்படியாவது ஷிப்மண்ட் வெளியெ அனுப்பிடறாண்டா என ஓரளவு பேரெடுத்திருந்தேன்.. அனைத்தும் எக்ஸ்போர்ட் ஆர்டர்கள்.. குறிப்பிட்ட தேதியில் கப்பலில் ஏற்றியாக வேண்டும் இல்லையெனில் ஏர் ஷிப்மண்ட் கம்பெனி கைக்காசில் அனுப்ப வேண்டும்..படு நட்டம்.. ஏர் ஷிப்மண்ட் ஆகக் கூடாது என்ற அச்சுறுத்தல் ஒவ்வொரு நொடியும் வருடம் முழுதும் பெரும் அழுத்தமாய் ஒவ்வொரு ஆர்டருக்கும் துரத்திக் கொண்டிருக்கும்..சராசரியாக வருடத்துக்கு 300-400 ஆர்டர்கள் என்வசம் இருக்கும். அந்த ஆர்டர்களின் ஆதி முதல் அந்தம் வரை எனக்கு மட்டுமே தெரியும்..கொஞ்சம் கொஞ்சமாய் மேலேறி ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வந்து அலுவலகத்தில் கொஞ்சம் ஆசுவாசப்பட ஒரு நான்கு வருடம் ஆனது..

அந்த நிலையில், அப்பாவுக்கு ஒரு ஆக்சிடெண்ட்..டூ வீலரில் போய்கொண்டிருந்தவரை அரசு பஸ் இடித்து கை உடைந்து விட்டது..எனக்குதான் போன் பண்ணினார். அடித்து பிடித்துப் போய் அவரை வண்டியில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தேன்.. மருத்துவர் பரிசோதித்து விட்டு அறுவை சிகிச்சை செய்து தகடு வைக்க வேண்டும், ஐந்தாறு நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்..எனக்கு விவரம் தெரிந்து அப்பாவுக்கு இருமல்,காய்ச்சல் கூட வந்ததில்லை.. மருத்துவமனை வாசமே அறியாதவர்..அங்கே அனுமதித்தவுடன் கொஞ்சம் கலங்கி விட்டார். அவரால் வலியும் தாங்க முடியவில்லை..அம்மா கொஞ்சம் எமோஷனல்..அப்பாவை மருத்துவமனை கட்டிலில் பார்த்தவுடன் ஒரே அழுகை..அம்மா இருந்தால் ஒத்து வராது என முடிவு செய்து அம்மாவை பேக்கப் பண்ணி வீட்டுக்கு போகச் சொல்லி விட்டு, தினமும் காலையில் ஒரு மணி நேரம் வந்து பார்த்தால் போதும் எனச் சொல்லிவிட்டேன்..நான்கைந்து நாள் விடுப்பெடுத்து அப்பாவுடனே மருத்துவமனையில் துணியிருந்தேன். அந்த நான்கைந்து நாட்கள் அந்த மருத்துவமனைச் சூழலும் அனுபவங்களும் முகத்திலறைந்து சொன்ன செய்திகள் பற்பல..கொஞ்சம் கூட வேறு நினைவே இல்லாமல் அலுவலே கதி என நான்கு வருடங்கள் அலைந்த எனக்கு அந்த நான்கு நாட்களில் கிடைத்த அனுபவங்கள் பெரும் திறப்பை ஏற்படுத்தின..என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்ன எனக்கு தேவை எனக்கு உணர்த்திய நாட்கள்.. கிட்டதட்ட 30-40 படுக்கை அறைகள் கொண்ட மருத்துவமனை அது..அந்த நாட்களில் அங்கு அனுமதிக்கப் பட்டிருந்த, வந்து சென்ற பார்வையாளர்கள் மூலம் கிடைத்த சித்திரங்களும்,அனுபவமும் அதற்கு முன் நான் நேரடியா உணராதவை.. கொதிப்பான பால் கொட்டி வயிறு முழுதும் பொசுங்கிய ஒரு வயது குழந்தை, ஒரு காலை கையில் பிடித்தபடி ஆம்புலன்ஸில் வந்திறங்கிய விபத்துக்குள்ளான புதுமாப்பிள்ளை என தினம் இரண்டு மூன்று பேர் வந்திறங்குவர்.. அந்த காட்சிகள் உணர்த்திய பல விசயங்கள் அதுவரை நான் அதுவரை அறியாதவை அல்லது அறிய முயற்சிக்காதவை..

அந்த நான்கு நாட்களுக்கு பின், அதுவரை இருந்த ஒரு கொதிநிலை மனநிலை ஒரு சமனத்துக்கு வந்தது..கொஞ்சம் நிதானமாக சுற்றியிருந்த உலகை பார்க்கவும், உணரவும், ரசிக்கவும் தொடங்கினேன்..நிற்காமல் இலக்கில்லாமல் ஓடிக் கொண்டேயிருந்த அந்த ஆரம்ப கட்ட நாட்களின் மடத்தனம் புரிய ஆரம்பித்தது.. இந்த காலகட்டத்துக்கு பின்தான் ஓரளவு நிறைய நேரம் வாசிப்பிற்க்கும் ஒதுக்க முடிந்து நிறைய படித்தேன்.. மருத்துவமனையில் இருந்து அப்பாவை டிஸ்சார்ஜ் செய்து ஒரு வாரம் கழிந்த பின் அலுவலகத்திலிருந்து வரும் வழியில், நியுசெஞ்சுரி புக் ஹவுசின் நடமாடும் புத்தகக் கடையை கண்டு நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதை தொகுப்பு வாங்கினேன்.. ஒரு சிறுகதையின் தலைப்பு ரொம்பவே பிடித்துப் போக அதை முதலில் வாசித்தேன். வாசித்து முடித்தபின் அன்றைக்கிருந்த மனநிலையில் ரொம்பநேரம் அப்படியே என்னை அமரவைத்த கதை அது. எல்லோருக்கும் ஒரு pause தேவைப்படுகிறது..அது நெருங்கியவர்களின் மரணம் அல்லது விபத்து எனும் போது சுயவிசாரணை அதன் உச்சத்தை அடைகிறது என்பது நிதர்சனம்.

அந்தக் கதை இங்கே.


http://azhiyasudargal.blogspot.in/2013/02/blog-post_23.html

Tuesday, February 19, 2013

மணல்கடிகை - எம்.கோபாலகிருஷ்ணன்



ஒரு திரைப்படமோ, சிறுகதையோ அல்லது நாவலோ எனது அளவுகோல் மிக எளிதானது. என்னை நான் எங்கேனும் ஓரிடத்திலாவது பொருத்திப் பார்க்குமளவிலிருக்க வேண்டும். கதாபாத்திரங்களோ,விவரணைகளோ அல்லது காட்சியமைப்போ/சம்பவங்களோ, என்னளவிலான வாழ்வியல் அனுபவத்தினை சார்ந்து நம்பகத் தன்மையோடு இருக்க வேண்டும். குறைந்தபட்ச தத்துவ விசாரணைக்கு என்னை நானே உட்படுத்துமளவில் இருக்க வேண்டும்.இவ்வாறு என்னால் நிலைகொள்ள முடியாத, என் எண்ணத்தினை குவிக்க முடியாத ஒரு திரைப்படமோ அல்லது எழுத்தோ என்னைப் பொறுத்த அளவில் நேரவிரயம் மட்டுமே. அது எனக்கு எந்த விதத்திலும் உதவாது.இந்த எளிய அளவுகோலின் படி, மணல் கடிகையை வாசித்த கணங்கள் எனக்கு மிக முக்கியமானவை. வாழ்நாள் முழுதும் நினைவிலிருக்கக் கூடியவை. இந்த 600 பக்க நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் என்னால் மிக நெருக்கமாக உணர முடிந்தது. என்னை சுற்றியிருப்பவர்களை, கடந்து வந்தவர்களை, நான் கடந்து வந்த வாழ்வை, பல இடங்களில் என்னையே வெகுசுலபமாக ஒவ்வொரு அத்தியாயத்தின் கதாபாத்திரங்களிலோ, காட்சி விவரணைகளிலோ,உரையாடல்களிலோ அல்லது குறியீடுகளிலோ உணர முடிந்தது.இதை விட வேறென்ன பெரிய தரிசனத்தை ஒரு எளிய வாசகனுக்கு ஒரு சிறந்த கதைசொல்லி அளிக்க முடியும்

நம்மில் பல பேர் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் வரும் ஒரு படப்பாடலில் உருவாகும் கோடிஸ்வரர்களை கேலி செய்திருப்போம். கொஞ்சம் மிகைப்படுத்தப் பட்ட சித்திரமாக இது தோன்றினாலும், திருப்பூர், சேலம், ஈரோடு கரூர் மற்றும் இன்னபிற தொழில்சார்ந்த சிறு குறுநகர மக்களுக்கு இது ஒன்றும் நகைப்புக்குரிய காட்சியமைப்பல்ல. நாள்தோறும் காதில் விழும், கண்ணில் படும் சாதரண தினசரி நிகழ்வு இவை. எங்கள் ஊரில் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு கடை கடையாக சென்று நூல் மூட்டைகளை முதுகில் ஏற்றி இறக்கிய ஒருவர், சைக்கிள் கட்டிக்கொண்டு தெரு தெருவாகச் சுற்றி காலிக் கோணிப்பைகளை சேகரித்தவர், உணவகம் ஒன்றில் மேசை துடைத்தவர், பத்தாம் வகுப்பு முடித்து விட்டு டெக்ஸ்டைலில் தினக்கூலிக்கு பிசிரு வெட்டும் வேலைக்கு சென்ற ஒருவர் ஆகியோர் இன்று எங்கள் நகரின் டாப் 10 பணக்காரர்களில் அடக்கம்.நூறு முதல் இருநூறு கோடி ரூபாய் விற்றுமுதல் செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்கள். 300 முதல் 1000 பேர் வரை வேலை செய்யும் நிறுவனங்களின் முதலாளிகள். நகரின் ஆகப்பெரிய உணவகம், திரையரங்குகள், நிதி நிறுவனங்கள் மற்றும் நகரின் பல முக்கிய கட்டிடங்களுக்கு அதிபதிகள். இந்த நிலைக்கு அவர்கள் வருவதற்க்குச் செய்த தியாகங்கள், நம்பிக்கை துரோகங்கள், உடனுள்ளோரின் திறமையை மதித்த/கணித்த பண்பு, தானங்கள், பிறர் எடுக்கத் தயங்கிய துணிச்சலான முடிவுகள், எண்ணம், திடம், தன்னம்பிக்கை, உழைப்பு என இன்னும் பல கதைகள் இவர்களை பற்றி நாட்டார் கதைகள் போல தினமும் நகருக்குள் சுற்றி வந்துக் கொண்டுதான் உள்ளன. எப்பக்கம் சுற்றி வந்தாலும் 5-10 கி.மீக்குள் எல்லை முடிந்துவிடும் இது போன்ற சிறுநகரங்களில், இந்த கதைகள் பெரும்பாலும் மேற்படி அதிபதிகளின் ஆரம்ப கட்டத்தில் உடனிருந்து உதவி செய்த அல்லது துரோகம் இழைக்கப் பட்டவர்கள், ஏதேனும் ஒரு கட்டத்தில் உடன் சாட்சியாக இருந்தவர்கள் எனப் பலராலும் ஆற்றாமையாகவோ அல்லது நம்மோடு நம்முன்னே சுற்றி கொண்டிருந்தவன் மேலேறி விட்டான் என்ற பொருமலாகவோ பல பல பேர்களுக்கு சொல்லப் பட்டு கொண்டிருக்கிறது. இக்கதைகள் ஒரு தொடர்ச்சங்கிலி ஓட்டம் போல் பல வருடங்களுக்கு ஆள் மாற்றி ஆள் சொல்லப் பட்டு நகரிலிலுள்ள அனைவரையும் சென்று சேர்ந்து கொண்டுதான் உள்ளது.

ஏதோ ஒரு சிறிய கண்ணி உள்ளது. அதை திறம்பட ஒவ்வொரு தருணத்திலும் பிடித்தவன் நூலேணியாக இருந்தாலும் அதைப் பற்றி மேலே மேலே என உயரம் சென்று விடுகிறான். அந்த கண்ணியின் சூட்சுமம் தெரியாதவன் தேவதைகளே பக்கம் வந்து நின்று ஆசிர்வதித்தாலும் உழன்று கொண்டே பாதாளத்தில் விழுந்து விடுகிறான் அல்லது இருக்குமிடம் விட்டு சாண் அளவு கூட நகர்வதில்லை. இந்நகரில் இரண்டே வகையினர்தான்.பணம் செய்யத் தெரிந்தவன் அல்லது பணம் செய்யத் தெரியாதவன்.அவ்வளவுதான்.நகரின் ராட்சத சுழல் இவையிரண்டையும் தவிர வேறெந்த கிளைப்பிரிவும் உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறது.

பள்ளிப்பருவம் முடிந்த ஐந்து நண்பர்கள்,அவர்களின் வாழ்வின் வழியே, திருப்பூர் நகரத்தின் அசுர வளர்ச்சியை, அடித்தட்டு மக்களின் தளம் விட்டு தளம் மாறும் அவல வாழ்வை அழகாக நீட்டிச் செல்கிறார் எம்.கோபாலகிருஷ்ணன்.ஒவ்வொரு அத்தியாத்திலும் ஒரு தரிசனத்தை முன்வைக்கிறார்.பதின் வயதில் அழகான பெண்ணொருத்தியின் கடைக்கண் பார்வையிலும் சிறு புன்முறுவலிலும் மயங்கி அவள் பின் அலையும் இளவட்டம் போல் நாமும் எம்.கேவின் பக்கங்களினூடே திருப்பூரின் பாண்டியன் நகரிலும், கொங்கு நகரிலும், ரயில்வே மேம்பாலத்திலும், ஊத்துக்குளி ரோடிலும், பி.என் ரோட்டிலும் பித்துப் பிடித்து படபடப்புடன் அலைகிறோம்

சிவாவின் கதாபாத்திரமே இந்நகரின் மிகச்சிறந்த மாதிரி. தொழில்சார்ந்த நகரில் லெளகீக வெற்றிக்கான திறப்புகள் விசாலமாக கண்ணின் முன்னால் எந்நேரமும் எங்கெங்கும் பரந்து நிற்கின்றன. நகரின் தெருக்களில் ஏதாவது ஒரு பணி நிமித்தம் நாள் முழுதும் அலைந்து கொண்டேயிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் சிவாவின் வார்ப்புருவாகவே இருக்கிறான். அந்த கண்ணியை தேடிக்கொண்டே, ஓடிகொண்டிருக்கும் இனத்தின் மாதிரி சிவா. அன்பழகன், பல கண்ணிகள் கைக்கு எட்டினாலும் தன்மானம் மற்றும் இன்னபிற தன்னிலை மிகு உணர்ச்சிகளின் பால் உழன்று கொண்டே, நகரின்/நண்பர்களின் வளர்ச்சியை உள்ளே ஏற்றுக் கொள்ள முடியாத மனப்புழுக்கத்துடனும்,மேலேறும் கனவுடனும் அலைந்து கொண்டேயிருக்கும் நகரின் பெருவாரியான திறமையில் சற்றும் சளைக்காத இளைஞர் கூட்டத்தின் மாதிரி. திரு, ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் காரியத்தில் கண்ணாக நகரின் வளர்ச்சியை உள்வாங்கி உபயோகித்துக் கொள்ளும், இருக்குமிடத்திலிருந்து இல்லாத இடம் ஓடி அவ்விடத்தை வளப்படுத்தி மீண்டும் வேறிடம் சென்று என சுழலிலேயே இருக்கும் பணப் பெயர்ச்சியின் சூட்சுமத்தை உணர்ந்து வளரும் நகர இளைஞர்களின் மாதிரி. பரந்தாமன், இளமை வேகத்தில் இல்லற சூறாவளியில் சிக்கி நிம்மதியிழந்து அச்சிக்கலை களைவதே வாழ்வின் பயனாக அலைபாயும் நகரின் பெருவாரியான இளைஞர்களின் மாதிரி. சண்முகம், இலட்சியவாதம் பேசி இலக்கியத்தில் மிதந்து அனைத்தையும் அவலமாக பார்க்கும் எல்லா நகரத்துக்குமான சொற்ப இளைஞர்களின் மாதிரி. இந்த இளைஞர்களின் வாழ்க்கையை, எண்ண ஓட்டங்களை இணையாக ஒவ்வொரு அத்தியாயத்தின் மூலம் 1970 களின் இறுதிவருடங்களிலிருந்து துவங்கும் கால கட்டத்தில் ஒரு சிறு நகரத்தின் அதன்தம் மக்களின் உருமாறுதலை அழகாக சொல்லிச் செல்லும் இந்த மணல்கடிகை ஒவ்வொரு இலக்கிய வாசகனுக்கும் நல்ல ஒரு அனுபவத்தைத் தரும்.

திருப்பூர் நகருக்கே உரித்தான தின அவலங்களில் ஒன்றான ஏமாற்றும் சிட்பண்ட் கம்பெனிகள், எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணில் படும் பேக்கரிகள், விடாமல் துரத்திக் கொண்டே இருக்கும் கொத்துபுரோட்டா கொத்தப் படும் சத்தம், விடி நைட் எனப்படும் இரண்டு புரோட்டாவை சாப்பிட்டு விட்டு விடிகாலை வரை வேலைசெய்யும் ஷிப்ட்கள், அந்த ஷிப்ட்களில் ஒலிக்கும் ஆமைவடை ஓட்டைவடை ரக சால்னா பாடல்கள், பதினெட்டு மணி நேர வேலைக்கு நடுவில் கிடைக்கும் ஒரு மணிநேர சாப்பாடு வேளையில் அனைவரின் கண்ணிலும் எண்ணையை விட்டு விட்டு நிறுவனத்தின் ஏதோ ஒரு மூலையில் அட்டைப்பெட்டிகளை தரையில் கிடத்தி கண நேரத்தில் புணர்ந்தெழும் சாகசங்கள், வருடத்துக்கு ஒரு முறை பெரும்தனக் காரர்களால் நடத்தப் படும் சடங்கான விஸ்கியும் பிராந்தியும் ஊற்றிக் கொடுத்து கறிவிருந்து படைக்கும் கிடா வெட்டு, ஓரளவு சம்பாதித்தபின் சென்னைக்கு ஒரு எட்டு போய் ஏதாவது ஒரு நடிகையுடன் சில இரவுகளுக்காக லட்சங்களை செலவு செய்யும் கனவான்கள், வாரம் முழுதும் சக்கையாக வேலைசெய்து வார இறுதியில் பக்கத்திலிருக்கும் குன்னூருக்கோ, கோத்தகிரிக்கோ அல்லது ஊட்டிக்கோ சென்று குடித்து கும்மாளமிட்டு மீண்டும் திங்கள் முதல் செக்கு மாட்டு வாழ்க்கைக்கு திரும்பும் இளைஞர்கள், பாரின் ஏஜண்ட் அலுவலகங்களில் வேலை செய்யும் தரச்சோதனை ஆய்வாளர்கள் இன்ஸ்பெக்சன் என்ற பெயரில் முதலாளிகளுடன் நடத்தும் கண்ணாமூச்சி விளையாட்டுகள், டெய்லர்களும்,பேக்கர்களும் இன்ன பிற தொழிலாளர்களும் அவர்களுடன் வேலை செய்யும் பெண்களும் நடத்தும் இரட்டை அர்த்த வார்த்தை விளையாட்டுகள், சூபர்வைசர்கள் பெண்களை பிராக்கெட் போடும் தொழில் நேர்த்தி, பதினைந்து வயதில் மிரட்சியுடன் ஏதோ ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பர பரவென தொழில் கற்று சில வருடங்களிலேயே வீட்டுக்குள்ளேயே கட்டிங் டேபிளும் மிஷினும் போட்டு குடும்பத்தை கரையேற்றும் பெண்கள் அதை உறிஞ்சி தின்னும் ஆண்கள், சின்னஞ்சிறு கவனக்குறைவால் அளவிலோ அல்லது வேறு ஏதேனும் விதத்திலோ உருப்படிகளின் நேர்த்தியில் தவறு நேர்ந்து மாதக்கணக்கில் இரவு பகலாக வேலை செய்த மொத்த வேலையும் நிறுவனங்களினால் நிராகரிக்கப் பட்டு கண்முன் கிடக்கும் வேதனை என பக்கங்களால் எழுதி நிரப்பமுடியாத அத்தனை தகவல்களையும் தரவுகளையும் 
திருப்பூரின் இண்டு இடுக்குளில் புகுந்தெழுந்து, நகரவாசிகளின் மனதில் உட்சென்று வெளியேறாமல் இப்படி ஒரு படைப்பு ஒரு ஆசிரியருக்கு சாத்தியமேயில்லை.இந்த நகருக்கு மட்டுமே உரித்தான இவ்வளவு தகவல்களையும் கதையில் வலிந்து திணிக்காத எழுத்து நடையுடன் நாவல் எழுதிச் செல்லப்படும் விதம் முற்றிலும் புதிய வாசிப்பனுபவத்துக்கு உரித்தாக்குகிறது..

கதாபாத்திரங்களாகட்டும், இயந்திரத் தனமான நகரின் அசுர வளர்ச்சியினை விவரிப்பதாகட்டும், நகரத்தின் அகோரபசியுடன் இணைந்து உருமாறும் மக்களின் வாழ்வும், வாழ்வு சார்ந்த பார்வைகளாகட்டும், நகரத்தின்  தொழில் மற்றும் அது சார்ந்த நுண்ணிய விவரணைகளாகட்டும் - மிகப்பெரிய ஆச்சர்யங்களை வாசித்து செல்லும் ஒவ்வொரு பக்கங்களிலும் ஆசிரியர் பொதித்து வைத்துள்ளார். மனிதர்களை மற்றும் நகரத்தினை மிகக்கூர்மையாக அவதானித்தது மட்டுமல்லாமல் அதை எழுத்திலேற்றி வாசகனுக்கு சற்றும் குறைவில்லாமல் கடத்தியுள்ளார். அசோகமித்திரனின் தண்ணீர் மற்றும் நாஞ்சில் நாடனின் எட்டுதிக்கும் மதயானைக்கு பின் ஒரு நகரத்தினையும் அது மக்கள் மனதில் உண்டாக்கும் மாற்றங்களையும்  இவ்வளவு அருகில் நான் தரிசித்தது இந்நாவலில்தான்.எனக்கு நெருங்கிய களம் என்பதால் இந்நாவல் இன்னும் நெருக்கமாக உள்ளே சென்று மனதில் சம்மணமிட்டு அமர்கிறது.

மணல்கடிகை – MAGNUM OPUS!

திரு.எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என்றென்றும் என் நன்றிகள்.

வெளியீடு-தமிழினி