Wednesday, December 29, 2010

மனுஷ்ய புத்திரனின் மழைநாள்!!

சோம்பலான மழையும், சில்லிப்பான மதியமுமான இந்த நேரத்தில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் படித்த இந்த மனுஷ்ய புத்திரனின் இந்த கவிதையை தேடி எடுத்தேன்.. எப்பொழுதெல்லாம் மழை பெய்கிறதோ, அப்பொழுதெல்லாம் இந்த கவிதை நினைவுக்கு வந்து விடும்.......

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்

குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்

நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்

கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.

ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது

செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்

வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்

பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்

வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை

- மனுஷ்ய புத்திரன்

Tuesday, December 28, 2010

சிதம்பர நினைவுகள் - லெளகீக வாழ்வின் யதார்த்தங்கள்!!


சிதம்பர நினைவுகள்


நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்றைய இரவில் நேரமும்,மனமும் ஒத்திசைய புத்தக அலமாரியில் தேடிக் கொண்டிருந்த போது, சிதம்பர நினைவுகள் கிடைத்தது.. முதல் முறை படித்தபோது ஒரே மூச்சில் படித்த நூல் இது.. மிகவும் பிடித்த நூல்களில் இதுவும் ஒன்று.. நேற்று மீள்வாசிப்பு செய்த போதும் நிறைவாக இருந்தது..

கே.வி.சைலஜா அவர்களால் சிறப்பாக மொழிபெயர்க்கப் பட்ட, கேரளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் கட்டுரைத் தொகுப்பு “சிதம்பர நினைவுகள்”.. மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு, நம்மை பாலச்சந்திரனுக்கு மிக அருகாமையில் கொண்டு செல்கிறது.. பாலச்சந்திரன், அவரின் வாழ்க்கை பக்கங்களை திறந்த புத்தகமாக வாசகனுக்கு படிக்க கொடுக்கிறார்..எத்தனை எத்தனை சம்பவங்கள், மாந்தர்கள்.. அத்தனையும் நீண்ட காலம் ஒவ்வொரு வாசகன் மனதிலும் நிற்கும்..

ஓரளவு சமூக அடையாளம் பெற்ற பிறகு அந்த நிலையை பாதுகாக்க நிறைய அகம் மற்றும் புறம் சார்ந்த ஒப்பனைகளிலேயே நாம் வாழ்வை கடத்தி விடுகிறோம்.. எல்லா அறிவுஜீவிகளை போலவே,பாலச்சந்திரன் அதை பற்றியெல்லாம் யோசிப்பதில்லை.. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை அப்படியே வாசகனுக்கும் இந்த புத்தகத்தின் வாயிலாக கடத்தி இருக்கிறார்..

பாலச்சந்திரனை வறுமையும்,பசியும் பெரும்பாலும் துரத்திக் கொண்டே இருந்திருக்கிறது என்பதை கட்டுரைகள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்துகிறது.. பரத்தையுடனான பெளர்ணமி இரவும், மருத்துவமனை வாரண்டாவில் வாடும் ஏழைக்கவிஞன் மனைவியின் வைராக்கியமும், திருவோண திண்ணை விருந்தும், விஜயலட்சுமியிடம் கருக்கலைப்புக்காக வாதாடும் போது வன்முறையை பிரயோகிக்கும் கையலாகத்தனமும், விற்பனை பிரதிநிதியின் இடை தடவலுக்கு பின்னான தவிப்பும், ராதிகாவின் மேலிருந்த மோகம் கலந்த பயமும்,அம்மாவுக்கு உதவ முடியா அவலமும் மற்றும் இன்னும் பல சம்பவங்களும் மிக யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது..

எல்லா கட்டுரைகளிலும் என்னால் முழுமனதுடன் ஒன்ற முடிந்தது ஒன்றே ஒன்றை தவிர.. அது, ”மகாநடிகன் ”என்னும் நமது செவாலியேவுடனான பாலச்சந்திரனின் சந்திப்பு பற்றியது..அதீதமான உணர்ச்சிப் பெருக்குடன் எழுதப்பட்டது போலிருந்தது..

நல்லது, கெட்டது, வெற்றி, தோல்வி என்று எடைபோடாமல், வாழ்வின் கணங்களை அப்படியே அனுபவிக்க சொல்கின்றன கட்டுரைகள்..பாலச்சந்திரனின் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்,

“வாழ்ந்து மட்டுமே கற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கிறது வாழ்க்கை”

Friday, December 03, 2010

கடவுளின் தேசம்!!

இரண்டு வருடங்களுக்கு முன் அலுவலகத்தில் ஒரு அருமையான உல்லாசப் பயணம் திட்டமிட்டோம்.நான் ஏற்கனவே தனியாக ஒரு முறை இங்கே சென்று வந்திருந்தாலும், அலுவலக நண்பர்களுக்கு அந்த மறக்க முடியாத அனுபவத்தை தர எண்ணி மீண்டும் ஒரு பயணம்..

கொல்லம் முதல் ஆலப்புழா வரையிலான 75 கி.மீ தூரத்தை பிரத்யேக படகில் கடக்கும் பயணம்தான் அது.மொத்தம் பதினைந்து பேர் ஒரு அழகான ஓடத்தில் ஒரு நாள் முழுவதையும் ஏகாந்தமாக செலவிட்டோம்.. போத்தல் + சீட்டாட்டம் + மீன் சாப்பாடு + எங்கெங்கு காணிணும் பச்சை என கொண்டாட்டமான என்றென்றும் மனதிலிருக்கும் நாளது.. பயணத்தின் சில புகைப்படங்களை இங்கே பதிந்து வைக்கிறேன்..


ரதம் தயார்..





வழியெங்கும் தனித்தீவு வீடுகள்




போட் ஸ்டாப்!!



மதிய உணவு தயராகிறது



தனியே தன்னந்தனியே!!



மாலை கருக்கலில்..



ஊர்க்காவலன்!!




அமைதியான நதியினிலே ஓடம்!




கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் அனுபவிக்க வேண்டிய பயணம்..