Monday, April 07, 2014

மகளுக்கு பெயர் வைத்த காதை!

பெண் குழந்த பெற்ற அப்பன்களுக்கு அதுவும் சிறுவயதில் இருந்தே பெண்வாசம் இன்றி நாட்களை கழிக்க சாபம் பெற்ற அப்பன்களுக்கு, பெண்குழந்தையை கையில் வாங்கிய நொடியில் இருந்து கால்கள் தரையில் நிற்காது. சடுதியில் மனத்திரையில் அவளுடன் சினேகமாக கழிக்கப் போகும் அந்திமக் காலம் வரையிலான பல காட்சிகள் ஊர்வலம் போக ஆரம்பிக்கும். நிதர்சனம் வேறென்று புரிவதெல்லாம் நாற்பது வயதில்தான். அப்படியாகப்பட்ட அப்பன்மார்கள், உலகையும்,தன்னையும் ரட்சித்து அரவணைக்க வந்த தேவதைக்கு பெயர் தேர்ந்தெடுக்கும் உவகை இருக்கிறதே.அடடா!

நாங்கள் முதல் குழந்தைக்கென பெயர் எதுவும் முடிவு செய்ய வில்லை.எந்த குழந்தையென்ற முன்முடிவு ஏதும் இல்லை. ”உன்னை மாதிரி தான்தோன்றிபயலுக்கெல்லாம் பொண்ணுதாண்டா பிறக்கும்” என்பது சகதர்மணியின் ஆசிர்வாதம்.அப்படியே ஆனது. மதியம் 2.30க்கு பாண்டிச்சேரி க்ளூனியில் பிறந்தாள். எப்பொழுதும்,எல்லாவற்றையும் மற்றுமொரு நிகழ்வு அல்லது இதிலென்ன இருக்கிறது என்ற பாவனையிலேயே கடக்கும் எனக்கும் அந்த சிசுவை புதிதாக கையில் ஏந்திய கண நேரம் ஏதோவொன்று நடந்தது :).

அறையில் சென்று மனைவி,குழந்தையை விட்டு விட்டு சென்றமர்ந்த இடம் அருகிலிருந்த பூங்கா.எவற்றிலும் நிலைகொள்ள முடியவில்லை.தகப்பனான பின்னர் உண்டான குழப்பமான மனநிலை.ஒரு மாதிரியான அவஸ்தை அது. அங்கிருந்து கிளம்பி, கடற்கரை சாலையிலிருந்த ஒரு பிரவுசிங் செண்டர் சென்றேன். நிறைய பெயர்கள் வடிகட்டி எடுத்து வந்தாலும், எதுவுமே என் மகளுக்கானது அல்ல என்று தோன்றியது. பிரிண்ட் எடுத்த தாள்களுடன் நடந்து சென்று, கடலை பார்த்து அமர்ந்து இருந்த போது சட்டென ’தயா’ என்ற பெயர் தோன்றியது. உடனே எழுந்து மனைவியிடம் சொல்லலாமென ஓடி வந்தால், ஐசியூவில் அரைமயக்கத்தில் கிடந்தாள்.

அவளுக்கு நினைவு வந்ததும் அருகிலிருந்தவனை பார்த்து சிரித்தவளிடம்,

 ”தயா”என்றேன்.

“ஆரம்பிச்சுட்டியா? மாடர்னா இல்லையே! ”.

”நல்லாருக்கு.இதுதான் பேர்”.

”வேற என்ன பேர் பார்த்து வைச்சுருக்க” என்றவளிடம், வேண்டுமென்றே அவளுக்கு பிடிக்காத பெயர் பட்டியல் ஒன்று வாசித்தேன்.

 ”என்னால இப்ப சண்டை போட முடியாது” என்றவள், காலையில் “அதையே வைச்சுக்கோ.நல்லாருக்கு”எனச் சொல்லி விட்டாள்.

அப்பா, ஆயுத பூஜை மற்றும் டெக்!

அப்பா மெக்கானிக்.நாளும் பொழுதும், இரவும் பகலும் பட்டறையிலேயேதான் கிடப்பார்.இரும்பு பிடிச்சவன் கையும், சிரங்கு பிடிச்சவன் கையும் சும்மாயிருக்காதுன்னு சொலவடை இருக்கில்லையா.அதுக்கு முழுசா பொருந்தக் கூடிய உதாரணம் அப்பாதான். இப்ப 70 வயசாகுது,இன்னமும் அப்படித்தான். நல்லா ஓடற மோட்டாரை தண்ணி வேகமா இழுக்க மாட்டேங்குதுன்னு சொல்லி அக்கு வேறா ஆணி வேறா கழட்டி அதை சுத்தமா ஓடாம பண்ணி, அப்புறம் மண்டைய உடைச்சு சரி பண்ணி, ரெண்டு மூணு நாள் கழிச்சு  ஓடவைப்பார்.

இன்னைக்கு காலையில் கூட வீட்டுக்கு வந்தவர் ”ஏன்ப்பா இந்த ஃபேன் ஸ்லோவோ ஓடுதுன்னு சொல்லி கழட்டி ஏதோ பண்ணிட்டு இருந்தார்.நான் ஆபிஸ்க்கு வந்துட்டேன்..எனக்கு தெரியும் சாயந்திரம் வீட்டுக்கு போனா, அந்த ஃபேன் குத்துயிர் கொலையுயிராய் மூலைல கிடக்கும்..ரெண்டு நாள் கழிச்சு கண்டென்ஸர் போய்டுச்சுப்பான்னு சொல்லி கொண்டு வந்து வேற மாத்தி போட்டுட்டு போவார். எனக்கு வாய்ச்சவங்க அவருக்கு சப்போர்ட்டுங்கிறதால,ஓரளவுக்கு மேல அவரை கண்டிக்க முடியாது. இப்படியாகப்பட்ட அப்பா அதிக பட்ச உற்சாகமா கொண்டாடறது ஆயுத பூஜை.

காலையிலேயே பட்டறைக்கு போய்டுவோம்.கொஞ்ச நேரத்துல தெருப்பசங்க எல்லாம் பட்டறைக்கு வந்துடுவாங்க.ஒரே கூத்தும் கும்மாளமுமா க்ளீனிங் நடக்கும்.வருசக் கணக்கா க்ளீன் பண்ணாம கிடக்கும் எண்ணற்ற ஸ்பேனர்ஸ்,சுத்தியல்கள், திருப்புளிகள்,ஜாக்கிகள்,பைப்புகள்ன்னு ஏகப்பட்ட சமாச்சாரங்கள்.எல்லாத்தையும் கொண்டு வந்து ஒரு இடத்துல குமிச்சு, தண்ணி விட்டு, சீயக்காய் போட்டு, தண்ணி விட்டு, சோப்பு போட்டு, மீண்டும் தண்ணி விட்டு அலசி, துணியில் நல்லா துடைச்சு சந்தனம், குங்குமம், விபூதி வைச்சு அலங்கரிப்போம்.அதுக்குள்ள அப்பா அவரோட சீடர்கள் ரெண்டு மூணு பேர் இருப்பாங்க.அவங்களை வைச்சு சுவர்,தரை எல்லாம் துடைச்சு, ஒட்டடை அடிச்சு, கழுவி வைப்பார்.

எல்லா சாமானையும் கொண்டு போய் அந்தந்த இடத்துல அழகா அடுக்கிட்டு அதற்கப்புறம் கலர் பேப்பர் அலங்காரம். அப்பாகிட்ட காசு வாங்கிட்டு பசங்களை கூட்டிட்டு கடைவீதி போய், டிசைன் டிசைனா சாதா கலர் பேப்பர்ஸ், ஜிகினா வகையறாக்கள் வாங்குவோம்.எப்படி தீபாவளி வெடி பர்சேஸ் பட்ஜெட்டுல 60% பிஜிலி கிராக்கர்ஸ்க்கு போகுமோ அதே மாதிரி 60% காசு முக்கோணமா கலர் பேப்பர்ஸ் வருமே அதுக்கு போயிடும்.கத்தை கத்தையா வாங்கி தோரணம் கட்டுவோம். எல்லா பேப்பர் மற்றும் சரடு வாங்கிட்டு போனா, அம்மா ரெடியா மைதா மாவு பசை காய்ச்சி வச்சிருப்பாங்க.எல்லா பயலும் செட்டு பிரிஞ்சு, கிடைக்கிற இடத்துல எல்லாம் சரடு கட்டி வரிசையா அதுல கலர் பேப்பர் ஒட்டி தோரணம் கட்ட ஆரம்பிச்சுடுவோம். அங்கங்க நடுவில் மானே, தேனே மாதிரி தொங்கல் பேப்பர் கோபுரங்கள், ஜிகினா சரங்கள் எல்லாம் கட்டப்படும். ஆளுயர சைஸ்க்கு ஸ்பீக்கர்ஸ் மற்றும் நிறைய குமிழ்களுடன் ஆம்ப்ளிஃபயர் வந்து இறங்கும்.லேட்டஸ்ட் பாட்டு போட்டு நிலம் அதிர கேட்டுகிட்டே பசங்க உற்சாகமா வேலை செய்வோம்.

ஒரு நாலஞ்சு மணி போல எல்லா அலங்காரமும் முடிச்சுட்டு, அவசர அவசரமா ஓடிப்போய் குளிச்சு ட்ரெஸ் மாத்திட்டு வரதுக்குள்ள பெரிய பெரிய பாத்திரங்களில் சுண்டல், பெரிய மூட்டையில் பொறின்னு ரெடியா இருக்கும். பசங்க சுத்தி உட்கார்ந்து பாலித்தீன் பைகளில் எல்லாத்தையும் போட்டு ரெடி பண்ணி ஓரங்கட்டுவோம்.அந்த ஏரியாவிலேயே அப்பா ரொம்ப வருசம் இருப்பவர் என்பதால் நிறைய பேர் பூஜைக்கு வருவார்கள்.எனவே, மலை போல் சுண்டல் மற்றும் பொறி பைகள் குவியும். ஆறு மணிபோல அப்பாவும் அவர் சீடர்களும் பயபக்தியா சூடம்,சாம்பிராணி சகிதம் சாமி கும்பிட்டு முடிக்க பொறி,சுண்டல் போணியாகும்.அதுக்கப்புறம் பெரியவங்க செட் ஒரு புறமும் வாண்டுகள் ஒரு பக்கமும் அரட்டை முடித்து எல்லோரும் கிளம்புவார்கள்.நிற்க.

இதற்கப்புறம்தான் பொடுசுங்க ஆவலுடன் எதிர்பார்க்கும் முக்கிய நிகழ்வு ஆரம்பமாகும்

நைட்டு எட்டு மணி வாக்கில் எல்லோரும் வீடு போய் சாப்பிட்டு வந்த பின் அந்த உற்சாக அனுபவம் ஆரம்பமாகும்.அதுதான் டெக்கில் படம் பார்ப்பது.

சாயந்திரம் கலர் பேப்பர் வாங்கப் போகும் போதே ராதா வீடியோ விஷனில் போய் டெக் வாடகைக்கு எடுத்து விடுவோம். அன்னிக்கு வந்து வாடகைக்கு எடுப்போம்ன்னு ரெண்டு மூணு நாளுக்கு முன்னமேயே போய் ரிசர்வ் வேற பண்ணி வைக்கணும். டெக் எடுக்கறது பெரிய விசயமில்லை.கேசட் செலக்ட் பண்ணறதுதான் அலாதியான அனுபவம்.நாலைஞ்சு ஃபைல்ல, பாலித்தீன் கவர்க்குள்ள இங்க் பேனால, குண்டு குண்டா அழகான கையெழுத்துல எழுதி பேப்பர் சொருகி இருக்கும். முதலில் வருவது எம்.ஜி.ஆர்.ஹிட்ஸ் அப்புறம் சிவாஜி வழியே, ரஜினி, கமல்ன்னு லிஸ்ட் தொடரும்..ரெண்டு மூணு நாள் தீவிர டிஸ்கசன் பண்ணி, படம் பேர் எல்லாம் சீட்டுல குறித்து வைத்து கொண்டு போனால் அதில் பாதி இருக்காது.ஆனாலும், பொறுமையாக தேடித் தேடி கேசட் பொறுக்குவோம். one of the toughest situation to make a decision till date அப்படின்னா அது இந்த கடையில வருசத்துக்கு ஒருக்கா போய் இந்த கேசட் செலக்ட் பண்ணறதுதான் :)

டெக்,கலர் டிவி வாடகை எவ்வளவு என மறந்து விட்டது.கேசட் பத்து ரூபாய் ஒரு நாளைக்கு.24 hrs செக் இன்.அடித்து பிடித்து அடுத்த நாள் அதே நேரத்துக்குள் கொண்டு வந்து கொடுத்து விட்டு, அடுத்த செட் எடுத்துப் போவோம். ஒவ்வொரு காலகட்டத்துலயும் வாழ்க்கை லட்சியமா ஏதாவது ஒண்ணு இருக்கும். காலேஜ் படிக்கிறப்ப ஸ்போர்ட்ஸ் ஷீக்கும், டிவிஎஸ் சுசுகி பைக்குக்கும் ஆசைப்பட்ட மாதிரி. இந்த டெக் வாடகைக்கு எடுக்கிற கட்டத்துல் இருந்த லட்சியம், சொந்தமா டெக்கும்,கலர்டிவியும் வீட்டுல இருக்கணும் அப்படிங்கறதுதான் :)

பாயும்புலி, போக்கிரி ராஜா, சட்டம் ஒரு விளையாட்டு (குள்ளநரி,புல்லுக்கட்டு, வெள்ளாடு எத்தனை பேருக்கு இந்த பாட்டு ஞாபகம் இருக்கு:)), உரிமை கீதம், சங்கர்குரு இப்படி இருக்கும் கேசட் லிஸ்ட். இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த என்றொரு படம் யாராவது பார்த்திருக்கீங்களா?.அந்த கேசட் எல்லாம் எடுத்து வந்து பார்ப்போம். அப்பா பட்டறைக்கு பக்கத்தில் ஒரு அண்ணண் வெல்டிங் பட்டறை வைத்திருப்பார்.அவர் தனியே பணம் கொடுத்து ஜெய்சங்கர் படம் எடுத்து வரச் சொல்வார். மினிமம் ஐந்து கேசட் எடுத்துக் கொள்வோம்.

ஒன்பது மணி வாக்கில், கலர் டிவி, டெக் அனைத்தும் பட்டறைக்கு வெளியே செட் செய்யப் படும். மினிமம் ஐம்பது பேராவது குழுமியிருப்பார்கள்.எவ்வளவுதான் விவரமாக டெக் வாடகைக்கு விடுபவரிடம் கேட்டிருந்தாலும், மிகச்சரியாக வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள் ஒயர்கள் மாற்றி சொருகப் படும்.ஊமைப் படம் மட்டும் ஓடும்.ஒயர்கள் மாற்றி சொருகினால் காட்சி மறைந்து சத்தம் மட்டும் கேட்கும்.சரி செய்யப் படும் நேரத்திற்குள்ளாக டைட்டில் முடிந்து, வசனம் ஆரம்பித்து விட்டால் கூட்டத்தில் சலசலப்பு அதிகமாகும். அட்வைஸ் அய்யாசாமிகளின் அட்ராசிட்டி அதிகமாகும்.படம் போய் கொண்டிருக்கிறதே என்ற பதட்டம் சூழலை உஷ்ணமாக்கும். கேசட் திருப்பி போட்டு பாருப்பா என்று சொன்ன பிரகஸ்பதி எல்லாம் உண்டு.

ஒரு வழியாக எல்லாம் சரியாகி ரீவைண்ட் செய்து படம் போடப்படும் போது, மொத்த கூட்டமும் ஆன்மாவை கண்டுணர்ந்த நிலையில் அமைதி காக்கும்.கேசட் தேய்ந்து போயிருந்தால், பத்து நிமிடம் ஓடிய பிறகு க்ரெயின்ஸ் வர ஆரம்பிக்கும் அல்லது டேப் சிக்கி கொள்ளும்.மெதுவாக கேசட்டை வெளியில் எடுத்து, சிக்கியுள்ள டேப்பை அலுங்காமல் குலுங்காமல் வெளியில் இழுத்து, சுண்டுவிரல் கொண்டு அந்த அடிபட்ட டேப்பின் பகுதியை கொஞ்சம் ஓட்டி விட்டு,  கேசட் மீண்டும் சொருகப் பட்டு  படம் ஆரம்பிக்கும். விடிவதற்குள் மூன்று படமாவது பார்த்து விடுவோம்..

அடுத்த நாள், டிவியும் டெக்கும் வீட்டுக்கு ஷிப்ட் ஆகிவிடும். நாள் முழுமைக்குமான சாப்பாடு முந்தின நாளே ரெடியாகி விடும் எல்லோர் வீட்டிலும்.ஒரு படம் முடிந்ததும் அதிக பட்சம் அரைமணி நேர கேப்.உஸ் இஸ் என எல்லோரும் திரும்ப ஆஜராகி விடுவார்கள் அடுத்த படத்துக்கு.இங்கே பெரும்பாலும் அம்மா மற்றும் அக்கம்பக்கத்து அத்தை,அக்காக்களின் செலக்சன்தான்.சரஸ்வதி சபதம் (what an epic!!), நவக்கிரக நாயகி, எதிர் நீச்சல், கலாட்டா கல்யாணம் என்று போகும் அந்த லிஸ்ட்.அதை கொஞ்ச கொஞ்சம் சாய்ஸில் ரெஸ்ட் விட்டு பார்ப்போம். அப்பத்தான் நைட் கிடைக்கிற கேப்பில் ஆர்மர் ஆஃப் காட், ப்ரொஜெக்டர் எல்லாம் பார்க்க முடியும்.

ரெண்டு மூணு நாள் கொண்டாட்டம் முடிந்து, மனசேயில்லாமல் டெக்,டிவியை கொண்டு போய் கொடுத்து விட்டு அடுத்த சீசன் விளையாட்டை ஆரம்பித்து விடுவோம்.அதிகம் சினிமாக்களுக்கு எல்லாம் அப்பா கூப்பிட்டு போக மாட்டார்.பக்கத்துல இருக்கிற டெண்ட் தியேட்டர் எல்லாம் ஒன்பது,பத்தாவது படிக்கிறப்ப எட்டி பார்த்ததுதான். அதனால், தீபாவளிக்கு சற்றும் குறையாத உற்சாக மனநிலை இந்த ஆயுதபூஜைல டெக் மற்றும் சினிமாக்கள் மூலமா கிடைக்கும்.

சுபம் :)

சக்கை!

90களின் இறுதியில், அலுவலகத்தில் ஃபேக்ஸ்க்கு என்று லேண்ட்லைன் நம்பர் ஒன்றிருந்தது. மும்பை தலைமை அலுவலத்திலிருந்து  ஏதேனும் அவசரச் செய்தி என்றால் அந்த ஃபேக்ஸ் மெலிதாக அலறும்..பொதுவாக எல்லோரும் ஆர்வமாய் அந்த ஃபேக்ஸ் வெளியே துப்பப் படும் வரை காத்திருக்க, எனக்கு மட்டும் அந்த ரிங் திகில் பந்தை வயிற்றில் உருளச் செய்யும்..ஏனெனில், பெரும்பான்மையான பெரிய ஆர்டர்கள் என் கையில் இருக்கும்.அவற்றில் ,எப்படிப் பார்த்தாலும் ஏதேனும் ஒரு இழவு விழுந்திருக்கும்..வரும் ஃபேக்ஸ் செய்தியானது,மிகச் சரியாக அந்த பிரச்னையில் இருக்கும் ஆர்டர்,இரு நாட்களில் ஷிப் ஆக வேண்டும் என்ற கட்டளையுடன் இருக்கும்..ஃபேக்ஸ் கையில் கிடைத்த நொடியில் ஓட ஆரம்பித்தால் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு டீ,சிகரெட் மட்டும் குடித்து ஷிப்மெண்ட் முடித்து வண்டி ஏற்றி அனுப்பிய நொடி சுரக்கும் ஒரு ஆசுவாசம் அந்த இரண்டு நரக நாட்களை மறக்கடிக்கும்..எத்தனையெத்தனை ஃபேக்ஸ்கள்... எத்தனையெத்தனை ஓட்டங்கள்.

அப்படியாகப்பட்ட ஃபேக்ஸ் அலறல் ஒன்று, அலுவல் முடித்து, வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த 1997 அல்லது 1998 நவம்பர் மாத இரவு ஒன்பதரை மணி வாக்கில் வந்து சேர்ந்தது.வழக்கம் போல ஒரு குறிப்பிட்ட பெரிய ஆர்டரை குறிப்பிட்டு, அடுத்த இரண்டு நாட்களில் அது சென்னை துறைமுகத்தில் சேர்க்கப் பட்டு ஷிப்மெண்ட் ஆகவேண்டும் , தவறும் பட்சத்தில் நிறுவனத்தின் கணக்கில் வானூர்தியில் சரக்கு எய்யப் பட வேண்டும் என்ற துக்கச் செய்தியை தாங்கி வந்த ஃபேக்ஸ் அது. ஏர் ஷிப்மெண்ட் என்பது எங்கள் அகராதியில் கெட்ட வார்த்தை.எவனொருவனின் ஷிப்மெண்ட் ஏர் ஷிப்மெண்ட் ஆகிறதோ, அவன் பெரும் குற்றம் செய்தவன் என்ற கண்ணோட்டத்திலேயே நோக்கப் படுவான். குற்றவுணர்ச்சியில் தள்ளி அடுத்த சில வாரங்களுக்கு தூங்க விடாத அவஸ்தை அது. ஏர் ஷிப்மெண்ட் செலவு  மிகுந்த நஷ்டத்தை உண்டாக்குவது.

ஃபேக்ஸ் வந்த அடுத்த நிமிடம், ”யார்டா ஆர்டர் சூபர்வைசர்?” என ’சார்’ கேட்க, செய்தியின் தாக்கத்தில் துவண்டு போய் கிடந்த நான், அறைக்குள் குறிப்பிட்ட ஆர்டரின் ஃபைல்களோடு சென்றமர்ந்து, கவலைக்கிடமாக கிடந்த ஆர்டர் குறித்த தகவல்களை, அமைதியாக சொல்ல ஆரம்பித்தேன். எதிரிலிருந்தவருக்கு,  வாழ்வின் பெரும் துயரம் அனைத்தும் ஒரு சேரச் சூழ்ந்து, என் கைகளில் இருந்த கோப்புகளின் தாள்களில் இருந்து, எனது சற்றே குறைந்து ஒலித்த குரல் வழியே அவரை அடைந்து கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றிக் கொண்டிருந்தது. நாசி துடிக்க, முகமெல்லாம் சிவப்பேற, நரம்பு புடைக்க, நல்லிரவு சொல்லி உத்தரவு வாங்கி கிளம்ப அறை வாசலில் காத்திருந்த சகாக்கள் அத்தனை பேர் மற்றும் நானும் எதிர்பார்த்தவாறே, காத்திரமான சொற்கள் பெரும் கூச்சலிடையே வந்து விழ ஆரம்பித்தது.முத்தாய்ப்பாக, “ரெண்டாவது நாள் நைட் ஷிப்மெண்ட் போகலைன்னா, அப்படியே எங்கேயாவது ஓடிப் போயிரு” என்று அதிர்ந்து விட்டு கிளம்பி விட்டார்.

அந்நேரத்துக்கு அனைவருக்கும் தகவல் சொல்லி, ஆட்களை ஏற்பாடு செய்து, ஓட்டத்தை ஆரம்பித்தேன். விடிய விடிய வேலை. அடுத்த நாள் பகல் முழுவதும், ஒவ்வொரு டெய்லரிங் மற்றும் இன்னபிற ஜாப் வொர்க் யூனிட்களுக்கும் இடையே பம்பரமாய் நகரின் மூலை முடுக்கெல்லாம் வண்டியில் சுற்றி வந்த படியே இருக்க, அனுமார் வால் போல வேலை முடியாமல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் என வேலை முடிய முடிய சரக்குகளை ஆள் வைத்து இடம் மாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக எங்களது தொழிற்சாலைக்குள் கொண்டு வந்த சேர்த்த படியே இருக்க, நேரம் கரைந்து கொண்டேயிருக்கிறது. இரவு ஒன்பது மணிக்குதான் உறைக்கிறது. தயாராகி கொண்டிருக்கும் ஆர்டருக்குண்டான பேக்கிங் லிஸ்ட், மாலை ஆறுமணிக்கே மும்பைக்கு அனுப்பப் பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மும்பை அலுவலகம் அடுத்த நாள் இறுதி ஆவணங்களை தயார் செய்து சென்னைக்கு அனுப்ப, அதற்கடுத்த நாள் சென்னை சென்று இறங்கும் சரக்குகள் கஸ்டம்ஸ் க்ளியர் செய்யப் படும். ஆர்டரின் மேற்பார்வையாளன் என்ற முறையில் என்னைத் தவிர வேறு யாரும் பேக்கிங் லிஸ்ட்க்கான தகவல்களைத் தர முடியாது.

விழுந்தடித்து ஒன்பது மணிக்கு அலுவலகம் சென்றால், ’சார்’ மட்டும் கடுகடுப்புடன் உட்கார்ந்திருக்கிறார்..  ”ரெண்டு மணி நேரமா எல்லா இடத்துலயும் ஃபோன் போட்டு கேட்டுகிட்டே இருக்கேன். எங்கடா போன?”. நான் மாலை முழுவதும், கைத்தறிகள் அமைந்த, தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத, ஊரின் வெளிப்புறம் சுற்றிக் கொண்டிருந்தேன். ஆறு மணிக்கு போக வேண்டிய ஸ்டெனோவை எட்டு மணி வரை இருக்கச் சொல்லியிருக்கிறார். என்னிடம் இருந்து எந்த தகவலும் வராது போகவே, ஸ்டெனோ வீட்டுக்கு போயாகி விட்டது. ”காலைல ஏழு மணிக்கே பாம்பே ஆபிஸ்ல வரேன்னு சொல்லிட்டாங்க.நைட் நீயே உட்கார்ந்து பேக்கிங் லிஸ்ட் ரெடி பண்ணி ஃபேக்ஸ் பண்ணிடு.பழைய ஃபேக்ஸ் நம்பர் ஒர்க் ஆகலை..இந்தா புது நம்பர்” என்று ஃபேக்ஸ் எண் குறித்த சிறு தாள் ஒன்றினை கையில் புதைத்து விட்டு சென்று விட்டார். மிச்ச சொச்ச ஃபாலோஅப்கள் கொஞ்சம் இருந்தது. வெளியே சென்று அதை முடித்து விட்டு வந்து டைப்ரைட்டரில் உட்காரும் போது மணி பதினொன்று.

அது வரை ஓர் எழுத்துக் கூட தட்டச்சு செய்ததில்லை. ’டப் டப்’  என்ற அந்த ஒலியே நாராசமாய் ஒலிக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது, ஸ்டெனோ ஏதாவது வேகமாக டைப் செய்தால், ”கொஞ்சம் மெதுவா அடிங்க..இல்லைன்னா பத்து நிமிசம் பொறுங்க..நான் வெளியே கிளம்பிடுவேன்..அப்புறம் அடிச்சுக்குங்க” என்று சொல்கிற ஆள் நான். விதியே என்று, ஒவ்வொரு எழுத்தையும் எண்ணையும் துழாவி துழாவி தட்டச்ச ஆரம்பித்தேன்.நான்கு பக்க பேக்கிங் லிஸ்ட்டை அடித்து முடித்த போது விடிகாலை ஐந்து மணி ஆகி விட்டிருந்தது. நான்கு பக்கத்தையும் எடுத்துச் சென்று, ஃபேக்ஸ் மெஷினுக்கு கொடுத்தால், அது எரர் மெசேஜை துப்பியது.

அதிகம்  ஃபேக்ஸ் மெஷின் உபயோகித்ததில்லை..அதிக பட்ச ஃபேக்ஸ் மெஷின் அறிவென்பது, பேப்பரை ட்ரேயில் வைத்து, நம்பர் டயல் செய்து, பச்சை பட்டனை அழுத்தினால்,ஃபேக்ஸ் போய் விடும். அவ்வளவுதான். அப்படி ஒரு சுளுவான விஷயமாகத்தான் அந்த நாள் வரை இருந்தது. மற்றபடி, ஸ்டெனோதான் எப்பொழுதும் ஃபேக்ஸ் அனுப்புவார்கள்.  ஆனால், அன்று மட்டும்  டெலிவரி உறுதிச் சீட்டுக்கு பதிலாக, எரர் மெசேஜ் மட்டுமே வந்து விழுந்து கொண்டிருந்தது.விதம் விதமாக, பக்கங்களை மாற்றி வைத்தும், கொஞ்சம் இடம் வலம் மாற்றி வைத்தும், எப்படி எப்படியோ அரைமணி நேரம் முயற்சித்தும் சுபமில்லை.

ஒரு நொடி கூட கண் மூடாத இரண்டு முழு இரவுகளை கடத்தி காந்திய கண்கள், நேற்றுக் காலை வீட்டிலிருந்து வந்தவன் அதே உடையோடு சுற்றிக் கொண்டிருந்ததில் வந்த பிசுபிசுப்பு, பகல் முழுவதும் அலைந்ததில் உண்டான அசதி, காலையிலிருந்து டீ,சிகரெட் மட்டுமே உட்கொண்டதால் வந்த பசி, எரிச்சல், எல்லாம் கலந்து தன்நிலை முற்றிலும் இழந்து கொண்டிருந்தேன். உடல், மனம் இரண்டுமே ஒத்துழைக்க வில்லை. எந்தவொரு கணத்தில் அது ஆரம்பித்தது எனத் தெரியவில்லை.வெளி வந்த பக்கங்களை வெறிகொண்டு மீண்டும் மீண்டும் ஃபேக்ஸ் மெஷினில் வைத்து நம்பரை அழுத்திக் கொண்டேயிருந்தேன். ஆளில்லாத மறுபக்கம்  யாரவது வந்து ஒரு வேளை பக்கங்களை இழுத்துக் கொள்ளக் கூடும் என்ற நினைப்பு அது.நினைவு தெரிந்து ஒரு மணி நேரம் இந்த விளையாட்டு நடந்தது. அதற்கப்புறம் எவ்வளவு நேரம்  எனத் தெரியவில்லை.அசதியில், அங்கிருந்த சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து, ஃபேக்ஸ் டேபிளில் தலை சாய்த்து கவிழ்ந்து கிடக்கிறேன்.

காலை ஏழரை மணிக்கெல்லாம் வந்து விட்ட ’சார்’ , தோளை பிடித்து உலுக்குகிறார்..”என்னடா பண்ணி வைச்சுருக்க?” என்று தரையை காண்பித்து கேட்கிறார்.எங்களை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஃபேக்ஸ் எரர் மெசேஜ் குப்பைகள் கொஞ்சம் கூட தரை தெரியாத அளவு நிறைந்து கிடக்கிறது.

“ ஃபேக்ஸ் போகலை” என்றவுடன், சட்டையை கோர்த்து இழுத்து, சப்பென அறைகிறார். வெடுக்கென தாள்களை பிடுங்கி, ஒவ்வொன்றாக ஃபேக்ஸ் செய்கிறார். அமைதியாக, வெகு நிதானமாக ஒவ்வொரு பக்கமாக உள்நுழைந்து வெளியேறுகிறது. அதையே வெறித்துக் கொண்டிருக்கிறேன்.ஆயிற்று. எல்லாத் தாள்களும் சென்றாகி விட்டது. டெலிவரி சீட்டும் பிரிண்ட் ஆகி வருகிறது.கையில் எடுத்து, முகத்தில் விட்டெறிகிறார்..நான் இன்னமும் மெஷினையே முறைத்துக் கொண்டிருக்கிறேன்.  பழைய ஃபேக்ஸ் எண்ணுக்கே அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறேன்..அவர் கொடுத்துச் சென்ற புதிய எண் புத்தியில் நிலைக்க வில்லை.

தோள் பிடித்து திருப்பி,  முகவாய் நிமிர்த்தி, கடுமையான தொனியில் கேட்கிறார். ”நேத்து முழுசும் சாப்ட்டியாடா?”.இட வலமாக தலையசைக்கிறேன். ”வீட்டுக்கு போனியாடா?”. அமைதியாக இருக்கிறேன்..கண்ணுக்குள் பார்த்துக் கொண்டேயிருக்கிறார். சில நொடிகளுக்கு பின், அமைதியாக தலை குனிகிறேன். சிகரெட் எடுத்து பற்ற வைத்து இழுத்துக் கொண்டே, அவரது இருக்கையில் அமர்கிறார்.எதிர் இருக்கையில் கை காண்பிக்கிறார். அமர்கிறேன்.மெதுவாக, ஆனால் உறுதியான குரலில் சொல்கிறார்.

”I'll give you two hours. Go home.Take bath.Dress up and eat.I need you to be here by 9 and you should tell me that we are shipping this today at any cost.".

எதுவும் பேசாமல், அமைதியாக வெளியேறுகிறேன். ஸ்கூட்டரில் உட்கார்ந்து கிளப்பி, எடுத்த எடுப்பில் இரண்டாவது கியர் பின் நான்காவது கியர் என வேகமாக மாற்றி, ஆக்ஸிலேட்டர் திராட்டிலை பலம் கொண்ட மட்டும் முறுக்கி ஆளரவமில்லாத ரோட்டில் ஓட்டிய போது, அந்த  நாளை எதிர்கொள்ள தயாராகி விட்டிருந்தேன்..