Monday, April 07, 2014

சக்கை!

90களின் இறுதியில், அலுவலகத்தில் ஃபேக்ஸ்க்கு என்று லேண்ட்லைன் நம்பர் ஒன்றிருந்தது. மும்பை தலைமை அலுவலத்திலிருந்து  ஏதேனும் அவசரச் செய்தி என்றால் அந்த ஃபேக்ஸ் மெலிதாக அலறும்..பொதுவாக எல்லோரும் ஆர்வமாய் அந்த ஃபேக்ஸ் வெளியே துப்பப் படும் வரை காத்திருக்க, எனக்கு மட்டும் அந்த ரிங் திகில் பந்தை வயிற்றில் உருளச் செய்யும்..ஏனெனில், பெரும்பான்மையான பெரிய ஆர்டர்கள் என் கையில் இருக்கும்.அவற்றில் ,எப்படிப் பார்த்தாலும் ஏதேனும் ஒரு இழவு விழுந்திருக்கும்..வரும் ஃபேக்ஸ் செய்தியானது,மிகச் சரியாக அந்த பிரச்னையில் இருக்கும் ஆர்டர்,இரு நாட்களில் ஷிப் ஆக வேண்டும் என்ற கட்டளையுடன் இருக்கும்..ஃபேக்ஸ் கையில் கிடைத்த நொடியில் ஓட ஆரம்பித்தால் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு டீ,சிகரெட் மட்டும் குடித்து ஷிப்மெண்ட் முடித்து வண்டி ஏற்றி அனுப்பிய நொடி சுரக்கும் ஒரு ஆசுவாசம் அந்த இரண்டு நரக நாட்களை மறக்கடிக்கும்..எத்தனையெத்தனை ஃபேக்ஸ்கள்... எத்தனையெத்தனை ஓட்டங்கள்.

அப்படியாகப்பட்ட ஃபேக்ஸ் அலறல் ஒன்று, அலுவல் முடித்து, வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த 1997 அல்லது 1998 நவம்பர் மாத இரவு ஒன்பதரை மணி வாக்கில் வந்து சேர்ந்தது.வழக்கம் போல ஒரு குறிப்பிட்ட பெரிய ஆர்டரை குறிப்பிட்டு, அடுத்த இரண்டு நாட்களில் அது சென்னை துறைமுகத்தில் சேர்க்கப் பட்டு ஷிப்மெண்ட் ஆகவேண்டும் , தவறும் பட்சத்தில் நிறுவனத்தின் கணக்கில் வானூர்தியில் சரக்கு எய்யப் பட வேண்டும் என்ற துக்கச் செய்தியை தாங்கி வந்த ஃபேக்ஸ் அது. ஏர் ஷிப்மெண்ட் என்பது எங்கள் அகராதியில் கெட்ட வார்த்தை.எவனொருவனின் ஷிப்மெண்ட் ஏர் ஷிப்மெண்ட் ஆகிறதோ, அவன் பெரும் குற்றம் செய்தவன் என்ற கண்ணோட்டத்திலேயே நோக்கப் படுவான். குற்றவுணர்ச்சியில் தள்ளி அடுத்த சில வாரங்களுக்கு தூங்க விடாத அவஸ்தை அது. ஏர் ஷிப்மெண்ட் செலவு  மிகுந்த நஷ்டத்தை உண்டாக்குவது.

ஃபேக்ஸ் வந்த அடுத்த நிமிடம், ”யார்டா ஆர்டர் சூபர்வைசர்?” என ’சார்’ கேட்க, செய்தியின் தாக்கத்தில் துவண்டு போய் கிடந்த நான், அறைக்குள் குறிப்பிட்ட ஆர்டரின் ஃபைல்களோடு சென்றமர்ந்து, கவலைக்கிடமாக கிடந்த ஆர்டர் குறித்த தகவல்களை, அமைதியாக சொல்ல ஆரம்பித்தேன். எதிரிலிருந்தவருக்கு,  வாழ்வின் பெரும் துயரம் அனைத்தும் ஒரு சேரச் சூழ்ந்து, என் கைகளில் இருந்த கோப்புகளின் தாள்களில் இருந்து, எனது சற்றே குறைந்து ஒலித்த குரல் வழியே அவரை அடைந்து கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றிக் கொண்டிருந்தது. நாசி துடிக்க, முகமெல்லாம் சிவப்பேற, நரம்பு புடைக்க, நல்லிரவு சொல்லி உத்தரவு வாங்கி கிளம்ப அறை வாசலில் காத்திருந்த சகாக்கள் அத்தனை பேர் மற்றும் நானும் எதிர்பார்த்தவாறே, காத்திரமான சொற்கள் பெரும் கூச்சலிடையே வந்து விழ ஆரம்பித்தது.முத்தாய்ப்பாக, “ரெண்டாவது நாள் நைட் ஷிப்மெண்ட் போகலைன்னா, அப்படியே எங்கேயாவது ஓடிப் போயிரு” என்று அதிர்ந்து விட்டு கிளம்பி விட்டார்.

அந்நேரத்துக்கு அனைவருக்கும் தகவல் சொல்லி, ஆட்களை ஏற்பாடு செய்து, ஓட்டத்தை ஆரம்பித்தேன். விடிய விடிய வேலை. அடுத்த நாள் பகல் முழுவதும், ஒவ்வொரு டெய்லரிங் மற்றும் இன்னபிற ஜாப் வொர்க் யூனிட்களுக்கும் இடையே பம்பரமாய் நகரின் மூலை முடுக்கெல்லாம் வண்டியில் சுற்றி வந்த படியே இருக்க, அனுமார் வால் போல வேலை முடியாமல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் என வேலை முடிய முடிய சரக்குகளை ஆள் வைத்து இடம் மாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக எங்களது தொழிற்சாலைக்குள் கொண்டு வந்த சேர்த்த படியே இருக்க, நேரம் கரைந்து கொண்டேயிருக்கிறது. இரவு ஒன்பது மணிக்குதான் உறைக்கிறது. தயாராகி கொண்டிருக்கும் ஆர்டருக்குண்டான பேக்கிங் லிஸ்ட், மாலை ஆறுமணிக்கே மும்பைக்கு அனுப்பப் பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மும்பை அலுவலகம் அடுத்த நாள் இறுதி ஆவணங்களை தயார் செய்து சென்னைக்கு அனுப்ப, அதற்கடுத்த நாள் சென்னை சென்று இறங்கும் சரக்குகள் கஸ்டம்ஸ் க்ளியர் செய்யப் படும். ஆர்டரின் மேற்பார்வையாளன் என்ற முறையில் என்னைத் தவிர வேறு யாரும் பேக்கிங் லிஸ்ட்க்கான தகவல்களைத் தர முடியாது.

விழுந்தடித்து ஒன்பது மணிக்கு அலுவலகம் சென்றால், ’சார்’ மட்டும் கடுகடுப்புடன் உட்கார்ந்திருக்கிறார்..  ”ரெண்டு மணி நேரமா எல்லா இடத்துலயும் ஃபோன் போட்டு கேட்டுகிட்டே இருக்கேன். எங்கடா போன?”. நான் மாலை முழுவதும், கைத்தறிகள் அமைந்த, தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத, ஊரின் வெளிப்புறம் சுற்றிக் கொண்டிருந்தேன். ஆறு மணிக்கு போக வேண்டிய ஸ்டெனோவை எட்டு மணி வரை இருக்கச் சொல்லியிருக்கிறார். என்னிடம் இருந்து எந்த தகவலும் வராது போகவே, ஸ்டெனோ வீட்டுக்கு போயாகி விட்டது. ”காலைல ஏழு மணிக்கே பாம்பே ஆபிஸ்ல வரேன்னு சொல்லிட்டாங்க.நைட் நீயே உட்கார்ந்து பேக்கிங் லிஸ்ட் ரெடி பண்ணி ஃபேக்ஸ் பண்ணிடு.பழைய ஃபேக்ஸ் நம்பர் ஒர்க் ஆகலை..இந்தா புது நம்பர்” என்று ஃபேக்ஸ் எண் குறித்த சிறு தாள் ஒன்றினை கையில் புதைத்து விட்டு சென்று விட்டார். மிச்ச சொச்ச ஃபாலோஅப்கள் கொஞ்சம் இருந்தது. வெளியே சென்று அதை முடித்து விட்டு வந்து டைப்ரைட்டரில் உட்காரும் போது மணி பதினொன்று.

அது வரை ஓர் எழுத்துக் கூட தட்டச்சு செய்ததில்லை. ’டப் டப்’  என்ற அந்த ஒலியே நாராசமாய் ஒலிக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது, ஸ்டெனோ ஏதாவது வேகமாக டைப் செய்தால், ”கொஞ்சம் மெதுவா அடிங்க..இல்லைன்னா பத்து நிமிசம் பொறுங்க..நான் வெளியே கிளம்பிடுவேன்..அப்புறம் அடிச்சுக்குங்க” என்று சொல்கிற ஆள் நான். விதியே என்று, ஒவ்வொரு எழுத்தையும் எண்ணையும் துழாவி துழாவி தட்டச்ச ஆரம்பித்தேன்.நான்கு பக்க பேக்கிங் லிஸ்ட்டை அடித்து முடித்த போது விடிகாலை ஐந்து மணி ஆகி விட்டிருந்தது. நான்கு பக்கத்தையும் எடுத்துச் சென்று, ஃபேக்ஸ் மெஷினுக்கு கொடுத்தால், அது எரர் மெசேஜை துப்பியது.

அதிகம்  ஃபேக்ஸ் மெஷின் உபயோகித்ததில்லை..அதிக பட்ச ஃபேக்ஸ் மெஷின் அறிவென்பது, பேப்பரை ட்ரேயில் வைத்து, நம்பர் டயல் செய்து, பச்சை பட்டனை அழுத்தினால்,ஃபேக்ஸ் போய் விடும். அவ்வளவுதான். அப்படி ஒரு சுளுவான விஷயமாகத்தான் அந்த நாள் வரை இருந்தது. மற்றபடி, ஸ்டெனோதான் எப்பொழுதும் ஃபேக்ஸ் அனுப்புவார்கள்.  ஆனால், அன்று மட்டும்  டெலிவரி உறுதிச் சீட்டுக்கு பதிலாக, எரர் மெசேஜ் மட்டுமே வந்து விழுந்து கொண்டிருந்தது.விதம் விதமாக, பக்கங்களை மாற்றி வைத்தும், கொஞ்சம் இடம் வலம் மாற்றி வைத்தும், எப்படி எப்படியோ அரைமணி நேரம் முயற்சித்தும் சுபமில்லை.

ஒரு நொடி கூட கண் மூடாத இரண்டு முழு இரவுகளை கடத்தி காந்திய கண்கள், நேற்றுக் காலை வீட்டிலிருந்து வந்தவன் அதே உடையோடு சுற்றிக் கொண்டிருந்ததில் வந்த பிசுபிசுப்பு, பகல் முழுவதும் அலைந்ததில் உண்டான அசதி, காலையிலிருந்து டீ,சிகரெட் மட்டுமே உட்கொண்டதால் வந்த பசி, எரிச்சல், எல்லாம் கலந்து தன்நிலை முற்றிலும் இழந்து கொண்டிருந்தேன். உடல், மனம் இரண்டுமே ஒத்துழைக்க வில்லை. எந்தவொரு கணத்தில் அது ஆரம்பித்தது எனத் தெரியவில்லை.வெளி வந்த பக்கங்களை வெறிகொண்டு மீண்டும் மீண்டும் ஃபேக்ஸ் மெஷினில் வைத்து நம்பரை அழுத்திக் கொண்டேயிருந்தேன். ஆளில்லாத மறுபக்கம்  யாரவது வந்து ஒரு வேளை பக்கங்களை இழுத்துக் கொள்ளக் கூடும் என்ற நினைப்பு அது.நினைவு தெரிந்து ஒரு மணி நேரம் இந்த விளையாட்டு நடந்தது. அதற்கப்புறம் எவ்வளவு நேரம்  எனத் தெரியவில்லை.அசதியில், அங்கிருந்த சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து, ஃபேக்ஸ் டேபிளில் தலை சாய்த்து கவிழ்ந்து கிடக்கிறேன்.

காலை ஏழரை மணிக்கெல்லாம் வந்து விட்ட ’சார்’ , தோளை பிடித்து உலுக்குகிறார்..”என்னடா பண்ணி வைச்சுருக்க?” என்று தரையை காண்பித்து கேட்கிறார்.எங்களை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஃபேக்ஸ் எரர் மெசேஜ் குப்பைகள் கொஞ்சம் கூட தரை தெரியாத அளவு நிறைந்து கிடக்கிறது.

“ ஃபேக்ஸ் போகலை” என்றவுடன், சட்டையை கோர்த்து இழுத்து, சப்பென அறைகிறார். வெடுக்கென தாள்களை பிடுங்கி, ஒவ்வொன்றாக ஃபேக்ஸ் செய்கிறார். அமைதியாக, வெகு நிதானமாக ஒவ்வொரு பக்கமாக உள்நுழைந்து வெளியேறுகிறது. அதையே வெறித்துக் கொண்டிருக்கிறேன்.ஆயிற்று. எல்லாத் தாள்களும் சென்றாகி விட்டது. டெலிவரி சீட்டும் பிரிண்ட் ஆகி வருகிறது.கையில் எடுத்து, முகத்தில் விட்டெறிகிறார்..நான் இன்னமும் மெஷினையே முறைத்துக் கொண்டிருக்கிறேன்.  பழைய ஃபேக்ஸ் எண்ணுக்கே அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறேன்..அவர் கொடுத்துச் சென்ற புதிய எண் புத்தியில் நிலைக்க வில்லை.

தோள் பிடித்து திருப்பி,  முகவாய் நிமிர்த்தி, கடுமையான தொனியில் கேட்கிறார். ”நேத்து முழுசும் சாப்ட்டியாடா?”.இட வலமாக தலையசைக்கிறேன். ”வீட்டுக்கு போனியாடா?”. அமைதியாக இருக்கிறேன்..கண்ணுக்குள் பார்த்துக் கொண்டேயிருக்கிறார். சில நொடிகளுக்கு பின், அமைதியாக தலை குனிகிறேன். சிகரெட் எடுத்து பற்ற வைத்து இழுத்துக் கொண்டே, அவரது இருக்கையில் அமர்கிறார்.எதிர் இருக்கையில் கை காண்பிக்கிறார். அமர்கிறேன்.மெதுவாக, ஆனால் உறுதியான குரலில் சொல்கிறார்.

”I'll give you two hours. Go home.Take bath.Dress up and eat.I need you to be here by 9 and you should tell me that we are shipping this today at any cost.".

எதுவும் பேசாமல், அமைதியாக வெளியேறுகிறேன். ஸ்கூட்டரில் உட்கார்ந்து கிளப்பி, எடுத்த எடுப்பில் இரண்டாவது கியர் பின் நான்காவது கியர் என வேகமாக மாற்றி, ஆக்ஸிலேட்டர் திராட்டிலை பலம் கொண்ட மட்டும் முறுக்கி ஆளரவமில்லாத ரோட்டில் ஓட்டிய போது, அந்த  நாளை எதிர்கொள்ள தயாராகி விட்டிருந்தேன்..

No comments:

Post a Comment