Tuesday, April 23, 2013

புத்தகங்களினால் அமைந்த வாழ்வு!



எங்கிருந்து புத்தகம் படிக்கும் வழக்கம் வந்தது எனத் தெரியவில்லை.அனேகமாக அம்மாவிடமிருந்து இருக்கலாம். ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போதே வாசிக்கும் பழக்கம் வந்து விட்டது. பக்கத்து வீட்டுக்கு ஒரு தாத்தா சைக்கிளில் கொண்டு வந்து வாராவாரம் புத்தகம் கொடுத்து விட்டு போவார்.சைக்கிள் மூலம் வரும் லெண்டிங் லைப்ரரி அது.விகடன், குமுதம், ராணி, ராணிமுத்து ஆகியவை பெரும்பாலும் வரும். எப்போதாவது அம்மா ராணி புத்தகம் எடுத்து வந்து இரண்டு, மூன்று நாட்கள் வைத்து படிப்பார்.முதலில் வாசிக்க ஆரம்பித்தது அதுதான். குரும்பூர் குப்புசாமிதான் நான் தொடர்ந்த முதல் ரெகுலர் எழுத்தாளர்.ராணி எடுத்தால்,முதலில் அந்த பத்திதான் படிப்பேன்.வெளிநாட்டு பயணக் கட்டுரைகள்.அப்படியே, தினசரிகளின் பக்கம் கவனம் திரும்பியது.

கிட்டதட்ட, ஆறாம் வகுப்பில் செய்திதாள் படிக்க ஆரம்பித்தேன்.அப்பாவிடம் சொல்லி தினமும் வீட்டுக்கு தினமலர் வரவைத்தேன். சிறுவர் மலர்தான் அப்போதைய ஒரே குதூகலம். பலமுக மன்னன் “ஜோ”வை படிக்காமல் வெள்ளிக்கிழமை குளிக்கக் கூட போக மாட்டேன்.கிட்டதட்ட, புதன்கிழமையிலிருந்தே சிறுவர்மலர்க்காக மனம் துள்ளும். கோடை விடுமுறையில் பெரியப்பா வீட்டுக்கு நரசிங்கன் பேட்டை சென்ற போதுதான்  பெரும் புதையலை கண்டேன்.வீட்டை ஒட்டியே இருந்த சின்ன நூலகத்தில் கிடைத்த பூந்தளிர் கபீஷ்ம், அம்புலிமாமாவின் வேதாளமும், கோகுலமும் விடுமுறைகளை கோலகலமாக்கின. தினமும் இரவு படுக்கப் போகும் போதெல்லாம், புத்தகங்களால் வழியும் அந்த நூலகம் முழுவதும் எனக்குதான் என்ற எண்ணம் பெரும் உவகையை அளிக்கும்.ரசித்து, ரசித்து ஒவ்வொரு புத்தகமாக படித்தேன்.ஒரு நாள் பைண்ட் செய்யப்பட்ட சங்கர்லால் துப்பறிகிறார் கிடைத்தது.அந்த விடுமுறை முழுவதும் வைத்து படித்தேன்.

இதற்குள், ஒரு மிக நல்லப் பழக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.சாப்பிடும் போதும், ஏதாவது படிப்பது.கிட்டதட்ட ஏழாம் வகுப்பிலிருந்து, திருமணம் ஆகும் வரை இந்தப் பழக்கம் இருந்தது.வீட்டில் சாப்பிடும் போதெல்லாம் ஏதாவது கையில் புத்தகம் இருக்க வேண்டும்.உறவினர் வீட்டில் கூட ஏதாவது புத்தகம் தேடி எடுத்துக் கொண்டே சாப்பிட உட்காருவேன்.எல்லோரும் திட்டி, திட்டி ஒரு கட்டத்தில் விட்டு விட்டார்கள்:). ஏழாவதில் வீடு மாற்றி வேறு ஏரியாவுக்கு போன போது கிடைத்த நண்பர்கள் குழாம், காமிக்ஸ் வெறியர்களாக இருந்தார்கள்.மாதம் ஒரு முறை வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு, நகரின் முக்கிய கடைகளில் காமிக்ஸ் வேட்டை நடத்துவோம்.இரும்புக்கை மாயாவி, லக்கி லூக்,ஜேம்ஸ் பாண்ட் என ஆளுக்கு ஒரு புத்தகம் வாங்கி படித்து முடித்து பரிமாறிக் கொள்வோம்.தீபாவளி வந்தால் கொண்டாட்டம்தான்.தடித் தடியாக புத்தம் புது காமிக்ஸ் புத்தகங்கள் கடைகளில் தொங்கும் காட்சியே அலாதியாக இருக்கும். விகடன்,குமுதம்,கல்கண்டு என படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் புத்தகங்களின் தொடர்ச்சியாக.

எங்களுக்கு எல்லா உறவினருமே குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணி நேர பயண தூரத்தில்தான் இருந்தனர்.எனவே, பேருந்து பயணங்கள் புத்தகம் வாங்க பெரிதும் உதவின.ராஜேஷ் குமாரும், சுபாவும், பிகேபியும் இந்த பேருந்து நிலையக் கடைகளில் இருந்துதான் மனதுக்குள் இறங்கி  சிம்மாசனமிட்டனர்.கரூரில் ஏறி, திருச்சியில் சாப்பிட இறங்கி மீண்டும் கும்பகோணம் பேருந்தில் அம்மாவுடன் ஏறும் போது கையில் கிரைம் நாவல் இருக்கும். கும்பகோணம் போய்ச் சேரும் போது முடித்து விடுவேன். ஊர் போய் இறங்கியவுடனேயே அண்ணன் என்ன புக்டா வழியில் வாங்கின? என பைகளில் துழாவுவார்,அவர் படிக்க.ஜெமினி சினிமா வாங்கும் வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கும்.அம்மாவும் சரி, அப்பாவும் சரி சம்மதிக்க மாட்டார்கள்.மீறி சம்மதம் வாங்கி, ஜெமினி சினிமாவோடு போனால் பெரியப்பா சத்தம் போடுவார். ஒம்பதாவது படிக்கிற பையன் வைச்சிருக்கிற புக்கை பாருன்னு.

இப்படி, பாக்கெட்,கிரைம் நாவல்களோடு ஓடிக்கொண்டிருந்தவன், பத்தாவதில் நண்பனொருவன் கையில் வைத்திருந்த மெர்க்குரிப் பூக்கள் மூலம் வேறு உலகினுள் நுழைந்தேன்.அது வரை வாசிப்பில் பார்த்து வந்த உலகிலிருந்து இது வேறு வகையாக இருந்தது. அந்த நண்பன் மூலமாகவே, புத்தகம் படிக்கும் ஒரு நண்பர்கள் வட்டம் பழக்கமாகி பாலகுமாரனின் கிட்டதட்ட அனைத்து நாவல்களும் வாசித்து முடித்தேன். அந்த வாசிப்பில், ஒரு வகையான சுரப்பி உச்சத்தில் சுரந்த காலமது. வந்தார்கள் வென்றார்கள், ஏன்,எதற்கு, எப்படி? என பத்தாம் வகுப்பு கழிந்தது. பத்தாவது முடித்து டிப்ளமோவின் ஆரம்ப காலத்தின் ஒரு ரயில் பயணத்தில், இரவல் கிடைத்த சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்பில் ”அன்பைத் தேடி” என்னை சிறுகதைப் பக்கம் உந்தியது.அந்த ஒரு கதையை படித்து முடித்தவுடன் இரவல் கொடுத்தவர் புத்தகத்தை திரும்ப வாங்கிவிட்டார்.ஊர் போய்ச் சேர்ந்தவுடன், அண்ணனின் புத்தக அலமாரியில் சுஜாதா எனக் கண்ணில் பட்ட புத்தகத்தையெல்லாம் தேடி எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அந்த விடுமுறையின் பொக்கிஷம் “ஆதலினால் காதல் செய்வீர்” மற்றும் “கனவுத் தொழிற்சாலை”. கல்லூரிக் காலம் முழுதும் பாலகுமாரனும், ராஜேஷ்குமாரும், சுஜாதா ஓரளவும் என ஓடிக் கொண்டிருந்தது என் வாசிப்பு. அடிக்கடி நாஞ்சில் நாடன், ஜீரோ டிகிரி, சுந்தர ராமசாமி என வெகுஜனப் பத்திரிக்கைகளில் பெயர்கள் அடிபடும்.

வேலையில் சேர்ந்த நாட்களில் தேடலும்,தவிப்பும் வேறு பக்கம் பாய்ந்ததால் வாசிப்பில் ஒரு பெரும் தொய்வு ஏற்பட்டது. அப்பாவை ஒரு சமயம் ஒரு விபத்துக்காக மருத்துவமனையில் சேர்த்து அறுவைச் சிகிச்சை முடித்து, அப்பொழுதுதான் டிஸ்சார்ஜ் செய்து இருந்தோம். கூட இருந்து கவனித்த பிறகான சோர்வும், ஒரு பெரிய ஆர்டருக்காக இரண்டு மூன்று நாள் இரவு மூன்று, நான்கு மணி வரை வேலை பார்த்து, அந்த ஆர்டர் ஷிப்மெண்ட் ஆன பிறகான ஆசுவாசமும் கலந்த ஒரு இரவில், வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, நகரின் ஒரு ஓரத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் புத்தகக் கடை வேன் நின்று கொண்டிருந்தது.ரொம்ப நாள் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த புத்தக ஆர்வம் உந்த, உள்ளே நுழைந்தேன்.வாசிக்க விரும்பியிருந்த நிறைய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நிறைய இருந்தன.கிட்டதட்ட பத்து புத்தகம் வரை எடுத்து விட்டு, கடைசியாக எடுத்த புத்தகம் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதை தொகுப்பு.மொத்தமாக பைண்ட் செய்யப் பட்ட ரூ.300 அளவிலான புத்தகம்.அதுவரையில் அவ்வளவு விலை கொடுத்து, அதுவும் அவ்வளவு பெரிய புத்தகம் எதுவும் வாங்கியதில்லை. எடுத்த எல்லா புத்தகத்தையும் வைத்து விட்டு அந்த ஒரு தொகுப்பை மட்டும் எடுத்து வந்தேன். வாசிப்பில் ஒரு பரவசத்தை,ஒரு புதிய பாய்ச்சலை எனக்குள் நிகழ்த்தியவை நாஞ்சிலின் இந்த சிறுகதைகள்.அதுவும் “வந்தான்,வருவான், வாராநின்றான் ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் எனக்குள் அப்படியே இருக்கிறது.நான் அடிக்கடி எடுத்து வாசிக்கும் கதைகளில் இதுவும் ஒன்று.இந்த தொகுப்பே, எனக்கு பைபிள் மாதிரி ரொம்ப காலம் இருந்தது. இன்னும் இருக்கிறது. அடிக்கடி இத்தொகுப்பை எடுத்து, ஏதேனும் ஒரு கதை படிக்கும் போதெல்லாம், வாசிப்பின் வழி நான் நல்ல வழியைத்தான் வந்தடைந்திருக்கிறேன் என்று மகிழ்வேன். நாஞ்சில் நாடனின் அனைத்து நாவல்களும் வாங்கி படித்த அடுத்த 3-4 மாத காலம், கிட்டதட்ட ஒரு காதலியுடன் பழக ஆரம்பித்த பொழுது கிடைத்த கிளர்ச்சிக்கு இணையானது. இதற்கு பின், மாதா மாதம் ஒரு தொகை ஒதுக்கி ஒவ்வொரு எழுத்தாளரையும் வாசிக்க ஆரம்பித்தேன். வாழ்வில் மனதளவிலும், லெளகீகமாகவும் பல நிலைகளை தாண்டி வந்தாலும், அன்று முதல் இன்று வரை வாசிப்பிற்க்கிணையான அனுபவத்திற்க்கு மாற்றே கிடையாது. அதுவும், கையில் கிளாசும், அம்மணி முறைப்பினூடே வறுத்து கொடுத்த முந்திரியும் துணையிருக்க, நாஞ்சிலோ, அசோகமித்திரனோ, பிரபஞ்சனோ, வண்ணதாசனோ படிப்பதென்பதுதான் இந்த பூவுலகில் கிட்டக் கூடிய ஆகப் பெரிய சந்தோஷமாய் இருக்க முடியும்.

உலகப் புத்தக தினமான இன்று அனைத்து எழுத்தாளர்களுக்கும்,பதிப்பாளர்களுக்கும் மனப் பூர்வமான நன்றி!. ஏதோ ஒரு எழுத்தாளரின் ஏதோ ஒரு சொல், ஒரு பத்தி, ஒரு கதை எல்லா நேரத்திலும் துணையிருந்து வாழ்வின் அர்த்தத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

Thursday, April 18, 2013

நரசிங்கன்பேட்டை

நான் பள்ளியில் படிக்கும்போது ஒவ்வொரு வருடமும் ஜனவரி வந்து விட்டாலே மனம் கோடை விடுமுறைக்கென தவம் கிடக்கும். ஏனெனில், சொந்த ஊரான நரசிங்கன்பேட்டை. விடுமுறையின் பெரும்பான்மை தினங்கள் அங்கேதான் இருப்போம். கும்பகோணம் டு மயிலாடுதுறை ரூட்டில் 17வது கிலோமீட்டரில் அமைந்திருக்கும் காவிரியோடும் சின்ன கிராமம். அதுதான் அப்பாவின் பூர்விகம்.பெரியப்பா குடும்பம் அங்கேதான் இன்னும் இருக்கிறார்கள்.கிட்டதட்ட பதினாறு பேர் கொண்ட பெரும் கூட்டுக் குடும்பம்.ஐந்து பெரியப்பாக்கள். பெரியவர் ஊர் பிரசிடெண்ட். இருவர் ஆசிரியர்கள்,சொந்த ஊரிலேயே.ஒருவர் குடும்பத்துக்கான விவசாயத்தை பார்த்துக் கொண்டார்.ஒருவர் இந்திய விமானப் படையில் அதிகாரி. விமானப் படையில் இருந்த பெரியப்பா குடும்பம் தவிர அனைவரும் ஒரே வீட்டில் இருந்தனர். பதினெட்டு படிக்கட்டுகளுடன், நாற்பதடி அகலத் திண்ணை கொண்ட பிரமாண்ட வீடு. இரண்டு பெரிய முற்றங்களும் (சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் அளவு) இரண்டு மிகப்பெரிய தாழ்வாரங்களும்(குறைந்தது ஐம்பது பேர்க்கு ஒவ்வொரு தாழ்வாரத்திலும் பந்தி போடலாம்), ஊஞ்சல் கட்டிய மிகப் பெரிய ஹாலும், பத்துக்கும் மேற்பட்ட அறைகளும், இரண்டு மாமரங்களும், எண்ணற்ற தென்னையும் வாழையும் கொண்ட தோட்டமும், பத்து பதினைந்து மாடுகள் கட்டிய கொட்டிலும் கொண்ட அழகான வீடு.

ஐந்து மணிக்கு விழித்து இரவு ஒன்பது மணிக்கு உறங்கச் செல்லும் வீடு. நாங்கள் ஏழு மணிக்கு படுக்கையிலிருந்து எழும் போது பெரியம்மாக்களின், அண்ணன், அக்காக்களின் சிரிப்பொலிகள் சமையலறையிலிருந்து கிளம்பி வீடு முழுதும் நிறைந்திருக்கும். பல் துலக்கக் கூட தோன்றாமல் அங்கே போய் உட்கார்ந்து வாய்பிளந்து கதை கேட்போம்.அந்த வீட்டின் உயிரோட்டமே நக்கலும், நையாண்டியும்தான்.வீட்டில் மட்டுமல்ல,எதிர் மற்றும்ம் பக்கத்து வீடுகளில் மற்றும் தெரு முழுதும் இருந்த பங்காளி இன்னபிற வீடுகளில் உள்ள அனைவருக்குமே நக்கல், எதிர் நக்கல் பேச்சுக்கள் ரத்தத்தில் ஊறியவை.கல்யாண வீடோ, துக்க வீடோ, எப்பொழுதும் யாரையாவது காலை வாரிவிட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த காலை வேளையிலேயே காபி குடித்து அரட்டை அடிக்க அக்கம் பக்க வீடுகளிலிருந்து சில அண்ணன்,அக்காக்கள் இங்கே வந்து விடுவர்.காலை ஏழு மணிக்கு சமையலறை இப்படி களை கட்டி கிடப்பது கும்மாளமாக இருக்கும்.எட்டு மணி வரை இருந்து இரண்டு காப்பி குடித்து அரட்டையெல்லாம் முடிந்துதான் சபை கலையும். இது சமையலறை நிலவரம்.

அப்படியே வாசல் பக்கம் திண்ணைக்குப் போனால், அப்பாவும், பெரியப்பா மார்களும், அண்ணன்களும், தெருவிலிலுள்ள மற்ற ஒன்று விட்ட பெரியப்பா, சித்தப்பா மார்களும் என ஜமா முழு வீச்சில் இருக்கும்.முழுக்க முழுக்க ஊர் நிலவரமும்,அரசியல் நிலவரமும் என வாக்குவாதங்கள் பட்டையை கிளப்பும்.வெற்றிலை சீவலும், புகையிலையும், சுண்ணாம்பும் கைகளில் மாறிக் கொண்டேயிருக்கும்.அந்த மாதிரியான ஸ்திரமான அரசியல் விவாதங்களை, பார்வைகளை, அரசியல் சார்புகளை, அந்த மண்ணுக்கே உரிய கெட்ட வார்த்தை அர்ச்சனைகளை, எரிச்சல் படாத அதே சமயம் அழுத்தமான கருத்துப் பரிமாறல்களை எல்லாவற்றுக்கும் மேலாக திராவிட வரலாற்றை, அரசியல் கிசு கிசுக்களை நான் வேறெங்கும் இது வரை கேட்டதில்லை.பாதிக் கும்பல் ஆசிரியர்கள் என்பதால், பெரும்பாலும் தி.மு.க சார்புதான் விவாதங்களில் மேலோங்கி இருக்கும்.தினமணி, தினகரன் தலையங்கங்கள், துக்ளக், ஜீனியர் விகடன் கட்டுரைகள் என அனைத்தும் விவாதிக்கப் படும். ஒவ்வொரு மாவட்டத்தின் அரசியல் பலம் மற்றும் பலவீனங்கள் தேர்தல் சமயங்களில் அலசப்படும். அந்த வயதில் கிடைத்த அந்த அரட்டை கேட்கும் அனுபவம் அலாதியானது. பத்தாவதுக்குள் படிக்கும் அண்ணன்மார்கள் சமையலறை சபையில் இருந்தால், பத்தாவதுக்கு மேல் படிக்கும் அதாவது கைலி கட்ட ஆரம்பித்த அண்ணன்மார்கள் திண்ணையில் இருப்பார்கள்.என் பாடுதான் திண்டாட்டம்.எனக்கு பெரியம்மாக்கள், அக்காக்களின் குதூகலமும் பார்க்க ஆசையாயிருக்கும், திண்ணை அரட்டையின் பார்வையாளனாக இருக்கவும் மனம் அலைபாயும்.இரண்டுக்கும் இடையில் அல்லாடுவேன்.

அப்படியே எட்டு, ஒன்பது மணிவாக்கில் இரண்டு இடத்திலும் சபை கலைந்தவுடன், வாண்டுகள் அனைவரும் சேர்ந்து வீட்டுக்கு எதிரேயுள்ள வாழையும்,தென்னை ம்ரங்களும் உள்ள கொல்லைக்கு போய் பம்ப்செட் போட்டு விட்டு ஒரு மணி நேரம் அந்த பெரிய தொட்டியில் குளிப்போம்.பிறகு, காலைச் சிற்றுண்டி.விறகு அடுப்பின் தணலில் வார்க்கப் பட்ட மொறு மொறு தோசை, அல்லது மிளகாய் சட்னியுடனான இட்லி அல்லது ஸ்டப்டு சப்பாத்தியும் அதன் மேல் கொட்டப்பட்ட வீட்டிலேயே எடுக்கப் பட்ட வெண்ணெய் கட்டி என சமையலறைக்குள் நுழைந்தவுடனேயெ மெனு வயிற்றில் சுரப்பிகளை வடியச் செய்யும்..சாப்பிட்ட பின் பேட்டும், பாலும் எடுத்துக் கொண்டு தென்னந்தோப்புக்குள் போய் மதியம் வரை கிரிக்கெட்.நடுவில் இளநீர் வந்து விடும் அல்லது பக்கத்து தெருவில் உள்ள இரண்டு வீடுகளில் ஒரு ரூபாய்க்கு கலர் பாட்டில் கிடைக்கும்..சோடா மேக்கர் வைத்து வீட்டிலேயே தயாரிக்கப் படும் அந்த கலர் பாட்டிலின் சுவையை அதற்கப்புறம் எந்தவொரு பெப்ஸியோ அல்லது கோக்கோ கொடுத்ததில்லை. காவிரி தண்ணீர் கொடுத்த சுவை அது.

மதியம் நெய் போட்டு சாம்பாரும், தணலில் வறு பட்ட வாழைக்காயும் என திவ்யமாய் சாப்பாடு..அதன் பின் கேரம்,ரம்மி,செஸ், தாயம் அல்லது ஆடு புலி ஆட்டம் என குழு பிரியும்.சாப்பிட்டு வரும் பெரியம்மாக்கள், அனைவரையும் அதட்டி கிளப்பி ஷாமியானா சைஸ் ஜமுக்காளம் போட்டு பெரியப்பாக்களுக்கு நடுவே படுக்க விடுவார்கள்.பெரியப்பாக்களுக்கு கை,கால் பிடித்து,முதுகு சொறிந்து அதன்பின் அவர்களின் டர் புர் காற்று வெளியேற்றும் சத்தங்களுக்கிடையே குட்டித் தூக்கம். மாலையில் எழுந்து டீ, நொறுக்குத் தீனிகள் முடித்து வீட்டின் பக்கத்தில் இருக்கும், பெரியப்பா நிர்வகித்து வந்த பஜனை மடம் சென்று பாட்டுப் பாடி, அவல் மற்றும் வெல்லம் போட்ட பொரியை அனைவருக்கும் வினியோகித்து பின் நாங்களும் உண்டு வீடு வந்தடைவோம்.

வழியில் உள்ள நூலகத்தில் ஒரு சின்ன இளைப்பாறல். ஓய்வு பெற்ற ஆசிரியரான ஒன்று விட்ட பெரியப்பா ஒருவர் தன்னார்வத்தில் நடத்தி வந்த அழகான சின்ன நூலகம் அது.எனது வாசிப்பு ஆரம்பமானது அங்கேதான்.அதற்கு முன்னமே ராணியும், குமுதமும் அவ்வப் பொழுது அம்மாவிடம் வாங்கி புரட்டினாலும், சிரத்தையான வாசிப்பு அங்கேதான் அமைந்தது.ஆறாவதோ, ஏழாவதோ படிக்கும் போது நான் அங்கே படிக்க ஆரம்பித்த முதல் நூல் சங்கர்லால் துப்பறிகிறார்.ஒரு விடுமுறை முழுவதும் பெரிதாக பைண்ட் செய்யப் பட்ட அந்த புத்தகத்துடனே அலைந்தேன்.பூந்தளிர், கோகுலம், கடல் புறா, மெர்க்குரி பூக்கள், பொன்னியின் செல்வன் எல்லாம் அங்கேதான் அறிமுகமானது.பெரிய அண்ணன் நிறையப் படிப்பார்.வீட்டில் இரண்டு பீரோக்கள் முழுவதும் புத்தகமாக அடுக்கி வைத்திருப்பார்.இன்றும் அந்த புத்தகங்கள் அப்படியே உள்ளன, அண்ணன் அங்கு இல்லையென்றாலும்.அவரிடமிருந்து எடுத்து வந்த வண்ணதாசன் கதைகள் பெரிய தொகுப்பு இன்னும் அந்த ஊரின் வாசனையோடு என்னிடம்தான் உள்ளது. நூலகத்தில் படித்து விட்டு, வீடு வந்து அரட்டையுடன் இரவு உணவு முடித்து ஒன்பது மணிக்கெல்லாம் மீண்டும் படுக்கை.

சில நாட்களின் மாலை வேலைகளில் பெரியம்மா, அண்ணன், அக்காக்கள் சூழ ஊரின் பின்புறம் உள்ள ஐந்நூறாண்டு பழமியான மிகப் பிரமாண்ட சிவன் கோவிலில் வழிபாடு முடித்து ஊருக்கு பின் உள்ள சாத்தனூர் அணைக்குச் செல்வோம்.சிறிய அணையான அதன் வேகமான நீரோட்டத்தை குறைக்க மதகுகளை அண்ணன்மார்கள் ஆட்களிடம் சொல்லி மூடி விடுவர். திகட்ட திகட்ட குளியல், மணலில் பெரியம்மாக்களுடன் ஓட்டப் பந்தயம் முடித்து ஈரம் சொட்ட சொட்ட வீடு வருவோம். சில நாட்களில் அண்ணன்களுடன் ஊரிலுள்ள டெண்ட் கொட்டகையில் திரைப்படம். மொத்தமே இருபது முப்பது பேர் மட்டுமுள்ள் திரையரங்கில் பால்கனியில் நாங்கள் மட்டும் முன்சீட்டில் கால் போட்டு படம் பார்ப்போம்.சில நாட்களில் ஊரின் மிகப் பெரிய ஆலமரங்கள் சூழ்ந்த நீண்ட ரயில்வே பிளாட்பார்மில் உட்கார்ந்து சென்னை எக்ஸ்பிரஸ்சை வேடிக்கை பார்த்து வழியனுப்பி விட்டு, எட்டு மணி வரை அரட்டை அடித்து விட்டு வீடு திரும்புவோம்.

மாதத்தின் ஏதோ ஒரு நாளில் குடும்பமே கிளம்பிச் சென்று கும்பகோணம் சீமாட்டியிலோ அல்லது மாயவரம் மகாராஜாவிலோ ஊரிலிருந்து வந்துள்ள் அனைத்து வாண்டுகளுக்கும் புத்தாடைகள் வாங்கி ஹோட்டலில் சாப்பிட்டு ஏதோ ஒரு திரைப்படம் பார்த்து விட்டு வீடு திரும்புவோம். தேர்தல் சீசன் என்றால் இன்னும் குதூகலம்தான்.பிரசிடெண்ட் பெரியப்பா, கோ.சி.மணி அவர்களின் செல்லப் பிள்ளை.வீட்டுக்கு வருவார்.எம்.எல்.ஏக்களும்,எம்.பிக்களும் சர்வசாதரணமாக வந்து செல்வர்.ரஸ்னா போன்ற சமாச்சாரங்கள் வீடு முழுவதும் அந்த சமயங்களில் வழிந்தோடும்.கணக்கு வழக்கில்லாமல் குடிப்போம். நான் வெஜ் விருந்துகள் களை கட்டும். அண்ணன்கள் கூட விடிய விடிய பூத் சிலிப் எழுதுவோம்.பிராச்சர ஸ்லோகன்களுக்கு ஐடியா கொடுப்போம்.

இரண்டு பெரிய கோவில்கள் ஊரில்.ஒன்று மாரியம்மன் கோவில் அதில் தலைமை ஆசிரியரான பெரியப்பா ஆலோசனைக் குழு தலைவர்..இன்னொன்று, எங்கள் குடும்பத்தாலும் மற்ற உறவினர்களாலும் கட்டப் பட்ட திரவுபதி அம்மன் கோவில்.விழாக்காலங்களில் பூ மிதித்தல், அலகு குத்தல் ஊர்வலம் என அனைத்தும் கூட இருந்து வேடிக்கை பார்ப்போம். மாவிலக்குச் சீட்டு கொடுத்தல், கோவில் பிரகாரங்களில் ஊர்க்காரர்களுக்கு ஒத்தாசை, இரவுகளில் அரவான் மற்றும் இன்னபிற நாடகம், சாமி ஊர்வலத்தில் உடன் செல்தல் என அண்ணன்கள் பின்னேயே அலைவோம்.

ஒன்றல்ல இரண்டல்ல, பல ஆண்டுகள் மேற்சொன்ன அனைத்தையும் அந்த வீட்டில், ஊரில் அனுபவித்தோம்..

நாட்கள் ஓடின..பொருள் தேடும் வாழ்வின் சுழற்சியில் ஊருக்குப் போவது கொஞ்சம் குறைந்தது.அண்ணன் மார்கள் திருமணத்துக்கப்புறம் இடம் பெயர ஆரம்பித்தார்கள்.முதுமையில் பெரியப்பா, பெரியம்மாக்கள் மூப்பெய்தினார்கள்.வாழ்வின் ஆகப் பெரிய சந்தோசங்களை அனைவருக்கும் அளித்த அந்த வீடு கொஞ்சம் ஆசுவாசமாகி அமைதி கொண்டது.வீட்டில் இப்போது இருப்பது இரண்டே இரண்டு ஜீவன்கள்தான். இப்பொழுதும், வருடத்துக்கு ஒருமுறையேனும் அனைவரும் ஊருக்கு போகிறோம். வாழ்வின் அர்த்தங்கள் புரிவது ஊருக்குப் போகும் அந்த ஓரிரு நாட்களில்தான்.ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போதும் மனைவிக்கும், இரண்டாம் வகுப்பில் படிக்கும் மகளுக்கும் நான் அந்த வீட்டில் அடைந்த சந்தோஷத்தை விளக்கிச் சொல்ல முயற்சித்துக் கொண்டேயிருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் தோற்றுத்தான் போகிறேன்,மனதிலிருப்பதை அப்படியே வார்த்தைகளில் கடத்துவதற்க்கு.