Wednesday, December 29, 2010

மனுஷ்ய புத்திரனின் மழைநாள்!!

சோம்பலான மழையும், சில்லிப்பான மதியமுமான இந்த நேரத்தில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் படித்த இந்த மனுஷ்ய புத்திரனின் இந்த கவிதையை தேடி எடுத்தேன்.. எப்பொழுதெல்லாம் மழை பெய்கிறதோ, அப்பொழுதெல்லாம் இந்த கவிதை நினைவுக்கு வந்து விடும்.......

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்

குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்

நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்

கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.

ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது

செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்

வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்

பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்

வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை

- மனுஷ்ய புத்திரன்

Tuesday, December 28, 2010

சிதம்பர நினைவுகள் - லெளகீக வாழ்வின் யதார்த்தங்கள்!!


சிதம்பர நினைவுகள்


நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்றைய இரவில் நேரமும்,மனமும் ஒத்திசைய புத்தக அலமாரியில் தேடிக் கொண்டிருந்த போது, சிதம்பர நினைவுகள் கிடைத்தது.. முதல் முறை படித்தபோது ஒரே மூச்சில் படித்த நூல் இது.. மிகவும் பிடித்த நூல்களில் இதுவும் ஒன்று.. நேற்று மீள்வாசிப்பு செய்த போதும் நிறைவாக இருந்தது..

கே.வி.சைலஜா அவர்களால் சிறப்பாக மொழிபெயர்க்கப் பட்ட, கேரளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் கட்டுரைத் தொகுப்பு “சிதம்பர நினைவுகள்”.. மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு, நம்மை பாலச்சந்திரனுக்கு மிக அருகாமையில் கொண்டு செல்கிறது.. பாலச்சந்திரன், அவரின் வாழ்க்கை பக்கங்களை திறந்த புத்தகமாக வாசகனுக்கு படிக்க கொடுக்கிறார்..எத்தனை எத்தனை சம்பவங்கள், மாந்தர்கள்.. அத்தனையும் நீண்ட காலம் ஒவ்வொரு வாசகன் மனதிலும் நிற்கும்..

ஓரளவு சமூக அடையாளம் பெற்ற பிறகு அந்த நிலையை பாதுகாக்க நிறைய அகம் மற்றும் புறம் சார்ந்த ஒப்பனைகளிலேயே நாம் வாழ்வை கடத்தி விடுகிறோம்.. எல்லா அறிவுஜீவிகளை போலவே,பாலச்சந்திரன் அதை பற்றியெல்லாம் யோசிப்பதில்லை.. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை அப்படியே வாசகனுக்கும் இந்த புத்தகத்தின் வாயிலாக கடத்தி இருக்கிறார்..

பாலச்சந்திரனை வறுமையும்,பசியும் பெரும்பாலும் துரத்திக் கொண்டே இருந்திருக்கிறது என்பதை கட்டுரைகள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்துகிறது.. பரத்தையுடனான பெளர்ணமி இரவும், மருத்துவமனை வாரண்டாவில் வாடும் ஏழைக்கவிஞன் மனைவியின் வைராக்கியமும், திருவோண திண்ணை விருந்தும், விஜயலட்சுமியிடம் கருக்கலைப்புக்காக வாதாடும் போது வன்முறையை பிரயோகிக்கும் கையலாகத்தனமும், விற்பனை பிரதிநிதியின் இடை தடவலுக்கு பின்னான தவிப்பும், ராதிகாவின் மேலிருந்த மோகம் கலந்த பயமும்,அம்மாவுக்கு உதவ முடியா அவலமும் மற்றும் இன்னும் பல சம்பவங்களும் மிக யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது..

எல்லா கட்டுரைகளிலும் என்னால் முழுமனதுடன் ஒன்ற முடிந்தது ஒன்றே ஒன்றை தவிர.. அது, ”மகாநடிகன் ”என்னும் நமது செவாலியேவுடனான பாலச்சந்திரனின் சந்திப்பு பற்றியது..அதீதமான உணர்ச்சிப் பெருக்குடன் எழுதப்பட்டது போலிருந்தது..

நல்லது, கெட்டது, வெற்றி, தோல்வி என்று எடைபோடாமல், வாழ்வின் கணங்களை அப்படியே அனுபவிக்க சொல்கின்றன கட்டுரைகள்..பாலச்சந்திரனின் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்,

“வாழ்ந்து மட்டுமே கற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கிறது வாழ்க்கை”

Friday, December 03, 2010

கடவுளின் தேசம்!!

இரண்டு வருடங்களுக்கு முன் அலுவலகத்தில் ஒரு அருமையான உல்லாசப் பயணம் திட்டமிட்டோம்.நான் ஏற்கனவே தனியாக ஒரு முறை இங்கே சென்று வந்திருந்தாலும், அலுவலக நண்பர்களுக்கு அந்த மறக்க முடியாத அனுபவத்தை தர எண்ணி மீண்டும் ஒரு பயணம்..

கொல்லம் முதல் ஆலப்புழா வரையிலான 75 கி.மீ தூரத்தை பிரத்யேக படகில் கடக்கும் பயணம்தான் அது.மொத்தம் பதினைந்து பேர் ஒரு அழகான ஓடத்தில் ஒரு நாள் முழுவதையும் ஏகாந்தமாக செலவிட்டோம்.. போத்தல் + சீட்டாட்டம் + மீன் சாப்பாடு + எங்கெங்கு காணிணும் பச்சை என கொண்டாட்டமான என்றென்றும் மனதிலிருக்கும் நாளது.. பயணத்தின் சில புகைப்படங்களை இங்கே பதிந்து வைக்கிறேன்..


ரதம் தயார்..





வழியெங்கும் தனித்தீவு வீடுகள்




போட் ஸ்டாப்!!



மதிய உணவு தயராகிறது



தனியே தன்னந்தனியே!!



மாலை கருக்கலில்..



ஊர்க்காவலன்!!




அமைதியான நதியினிலே ஓடம்!




கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் அனுபவிக்க வேண்டிய பயணம்..

Saturday, November 27, 2010

நந்தலாலா - ஒரு மழைநாளின் இரவில் !

அசோகமித்திரன்,வண்ணதாசன் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகளில் கிடைக்கும் வாசிப்பனுபவமும்,தர்க்க சிந்தனையயும், திரையில் கொடுக்க முடியாதா என்ற எனது நீண்ட நாள் கேள்விக்கு எனக்கு கிடைத்துள்ள பதில்தான் “நந்தலாலா”..

வார்த்தைகளால் அல்லாமல் காட்சிகளால் ரசிகனுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை மிஷ்கினும், மகேஷ் முத்துசாமியும் அளித்துள்ளனர்..

மிஷ்கின் பட டைட்டில் கார்டு எப்போதும் தனித்து இருக்கும்.. நந்தலாலாவிலும் அப்படியே.. தண்ணீருடன் ஊடாடும் அந்த செடிகள் தரும் புத்துணர்ச்சிக்காகவே கண்டிப்பாக இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும்..

மகேஷ் முத்துசாமி அஞ்சாதேவில் முதற் காட்சி வானத்தை நோக்கி கேமராவை வைத்து இருப்பார்..அங்கே நிமிர்ந்து உட்காரும் நாம் கடைசி காட்சி வரை படத்துடன் ஒன்றி இருப்போம்.. நந்தலாலாவிலும், டைட்டில் கார்டும் அதனை தொடர்ந்த சிறுவன் அகியின் கவிழ்ந்த முகத்தில் ஆரம்பமாகும் நீளமான அந்த முதல் ஷாட்டும் நம்மை ஒரு புதிய அனுபவத்திற்கு தயார் செய்கின்றன( மிஷ்கினின் எல்லா கதாபாத்திரங்களும் பெரும்பாலான காட்சிகளில் தலை குனிந்தே பேசுகின்றனர் ..சித்திரம் பேசுதடி,அஞ்சாதேவில், நரேன்..இப்பொழுது நந்தலாலாவில் அகியும்,மிஷ்கினும்..இதன் பின் உள்ள குறிப்பென்ன? )

சிறுவன் அகியும், மனநலம் பாதிக்கப்பட்ட மிஷ்கினும் ஒரு தருணத்தில் இணைந்து அவரவர் தாயைத் தேடி செல்லும் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் நபர்கள் மற்றும் அனுபவங்களே நந்தலாலா.. ஒரு ரசிகனுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் நந்தலாலா படைக்கப்பட்டிருக்கிறது..

எனக்கு தெரிந்து காட்சியமைப்புகளுக்காக ஒரு இயக்குனர் தொடந்து கைதட்டல் வாங்கியதை அஞ்சாதேவில் முதன்முதலில் பல காட்சிகளில் பார்த்தேன்..நந்தலாலாவிலும் இது தொடர்கிறது...அதே போல் படம் முடிந்தபின் அனைத்து வகுப்பு ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி விட்டு வெளிவருவதை நான் பார்த்ததும் நந்தலாலாவில்தான்..

மிகவும் ரசித்த விசயங்கள் :

- காட்சியமைப்புகள் மற்றும் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹைக்கூ போல எழுதப்பட்ட திரைக்கதை. கதாபாத்திரத்தின் முகத்தில் ஷாட் ஓப்பன் செய்து அந்த முகத்தின் அதிர்ச்சியினை ரசிகனுக்கு கடத்தி விட்டு அதன்பின் அந்த காட்சியை விளக்குதல்..ஒரு கட்டத்தில் இந்த உத்தியே திரும்ப திரும்ப வந்தாலும் அலுப்பை தரவில்லை.

-லொகேஷன் தேர்வுகளும், மகேஷ் முத்துசாமியின் மனதை அள்ளும்/பாதிக்கும் கேமிரா கோணங்களும்.... இது போன்ற திரைக்கதைக்கு கேமிரா கோணங்கள் படத்தை தாங்கி செல்ல உதவுகிறது..

- இளையராஜாவின் ஆளுமை..வழக்கம் போல தேவையற்ற இடங்களில் இசையின்றி செய்து, தேவையான இடங்களில் வருடி கொடுக்கிறார்.. அந்த டிராக்டர் பயணம் ஆரம்பமானதும் ஒலிக்கும் இளையராஜா குரலுக்கு ஏக கரகோஷம்.

இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தாலும், பட்டென மனதில் தோன்றுபவை மேற்சொன்னவை..

தவிர்த்திருக்க வேண்டியவை :

- மிஷ்கின் அம்மாவை பார்த்தவுடன் காட்டும் எதிர்வினை அவரது கதாபாத்திரத்திலிருந்து முரண்படுவதாக எனக்கு தோன்றுகிறது..

- ஸ்நிக்தா பாலத்திற்கு அடியில் உட்கார்ந்து பேசும் கிளிஷே வசனம் ( ஆனால் அந்த வசனம் முடிந்தவுடன் காட்டப்படும் இரண்டு குண்டர்கள்,மிஷ்கின் மற்றும் சிறுவன் உட்கார்ந்திருக்கும் ஷாட் நிச்சயம் உலகத்தரமான ஒன்று)

- கடைசி காட்சியில் மிஷ்கினை(பலூனுடன்)முதிர்ச்சியாக காட்டுவது..

மற்றபடி ஏதும் குறையில்லை..

ஒரு மழைநாளின் சில்லிட்ட இரவில் எனக்கு நந்தலாலா தந்த இந்த அனுபவமும்,மனநிறைவும் நீண்ட நாட்கள் என் மனதில் இருக்கும்.

Monday, August 02, 2010

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொறு நாளே - மறு வாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன்.. என் வாசிப்பில், இவ்வளவு பாய்ச்சலான நடையை எந்த நாவலிலும் கண்டதில்லை..

எல்லாம் தெரிந்த ஆனால் ஒன்றுமே இல்லாத ஒருவனின் ஒரு நாள் வாழ்க்கையினை பல சம்பவங்கள்,கதாபாத்திரங்கள் மூலம் நகர்த்தி செல்லும் நாவல்..கந்தனின் கதாபாத்திரம் நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் பலமானவை.. கந்தன் வாழ்வு குறித்து கொண்டுள்ள புரிதல்,அவனது ஆளுமை, தர்க்கரீதியான சிந்தனையோட்டம் ஆகியவற்றை மிகச்சிறப்பாக நாகராஜன் சம்பவங்களினூடே விவரித்து செல்கிறார்..

முடிந்தால், முழு வாசிப்பும் முடிந்தவுடன் இங்கு பதிவிடுகிறேன்..

Tuesday, July 20, 2010

பட்டென்று பிடுங்குவதில் இவையெல்லாம் நாய்கள்!!




சில நாய்கள்

வேளைகெட்ட வேளைகளில் உறங்கும்

சில நாய்கள்

பளுக் என கக்கி

அக்கக்கலை

அதி சுவாரஸியமாய் நக்கி உண்ணும்

சில நாய்கள்

புட்டிப் புண்களை ஈக்கள் லபக்காக்க

முக்கி முதுகு வளைத்து

வாய்க்கு எட்டாது நகர்ந்தோடும்

புட்டியின் ஜாலம் புரியாது சரியும்.

சில நாய்கள்

இருந்த இருப்பில்

கத்த தொடங்கி

நிறுத்த தெரியாமல்

அக்கத்தலில்

மாட்டிக் கொண்டு சுழலும்

கொடும் வெயிலில்

சில நாய்கள்

பெண்துவாரம் தேடி அலைந்து

ஏமாந்து

பள்ளி சிறுவர்களை விரட்டும்

இவ்வாறு

இவ்வாறு

இவ்வுலகில்

நான் கண்ட நாய்களில் சீலங்கள்

வாலுக்கு ஒருவிதம்

என்றாலும்

உண்ணும் உணவில் குறுக்கிட்டால்

பட்டென்று பிடுங்குவதில்

இவையெல்லாம்

நாய்கள்

xxxxxxxxxxxxxxxxx

சுந்தர ராமசாமி (பசுவய்யா) அவர்களின் படைப்புகளில் என்னை கவர்ந்த சில வரிகள் மேலே..எப்போதோ படித்தது..மீள் வாசிப்பில்,சட்டென கதவு திறந்தது போன்ற வெளிச்சம்..குறிப்பாக, கடைசி இரண்டு வரிகளில்..

Sunday, July 18, 2010

மீண்டும் நகுலன்!

வாசிப்பின் ஆரம்ப கட்டங்களில் ஒருநாள் முதல் முறை “ஜே ஜே சில குறிப்புகள்” படித்த பொழுது, ஒரு சில பக்கங்களை படித்த உடனேயே ஒரு வித மன அழுத்தம் ஏற்பட்டது.. அப்படி பல பக்கங்களில் கிடைத்த மன அழுத்தம், நகுலனின் கீழ்கண்ட மூன்று வரிகளில் கிடைத்தது.

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.


உண்மைதான், நினைவு சமயங்களில் எவ்வளவு கலவரத்தை உண்டு பண்ணுகிறது.

Saturday, July 17, 2010

அல் பசினோ - நடிகர்களின் நடிகன்!

என்னை பொறுத்த வரை, அல்பசினோ பேசும் எல்லா வசனமும் நல்ல வசனம்தான்..மனிதரின் குரல் அப்படி.. “ I'll make him an offer he can't refuse “ மறக்க கூடிய வசனமா இது... ஒரு சில வசனங்கள், ஒரு நடிகனின் வாழ்க்கையை தீர்மானிக்கும் விதம் அமைந்துவிடும்..அல்பசினோவுக்கு இந்த வசனமும் கிட்டதட்ட அதே மாதிரிதான்...

இந்த மகா நடிகனின் ஒரு மாஸ்டர் பீஸ் கீழே....perfect motivational speech.. அல்பசினோவின் குரலும், டயலாக் டெலிவரி்யும் அற்புதமாக இருக்கும்..

Saturday, July 10, 2010

அலுவலத்தில் ஒரு மாலை நேர உரையாடல்(அ) அக்கப்போர்

ஹலோ..குட் ஈவ்னிங் தங்கராஜ்..நம்ம வண்டி பீஸ் ஏத்த வந்துடுச்சா?

இல்லை சார் இன்னும் வரலையே..அதுக்குதான் வெயிட்டிங்..வந்துடுமா சார்..கொஞ்ச நேரத்துல ஷிப்ட் முடிஞ்சு டெஸ்பாட்ச் செக்சன் ஆளுங்க போயிட்டா, லோடு இன்னிக்கு பண்ண முடியாது...

அய்யய்யோ..இன்னிக்கு கண்டிப்பா டெலிவரி வேணும்..நாளைக்கு சேம்பிள் குரியர் பண்ணலைன்னா BUYER ஆப்படிச்சுடுவான்..

நான் என்ன சார் பண்ணட்டும்..வண்டி வந்தா ஏத்திடுவேன்..

லைன்லயே இருங்க தங்கராஜ்..டெஸ்பாட்ச் செக்சன்ல வண்டி எப்ப கிளம்புச்சுன்னு கேட்கறேன்..

(இண்டர்காமில்) ஹலோ ! ஈரோட்டுக்கு வண்டி எப்பண்ணே கிளம்புச்சு?

சார், மூணு மூணரை இருக்கும்..

அப்ப அஞ்சு அஞ்சரைக்கு போயிரக்கணுமே..ஏழு மணி ஆச்சு..இன்னும் போகலையாம்..எந்த வண்டிண்ணே அனுப்புனீங்க..

ரெகுலர் வண்டி வேற லோடுக்கு போயிடுச்சுன்னு புது வண்டி அனுப்புனாங்க சார்..கிளம்புறப்பவே அந்தாளு கொஞ்சம் டவுட்டாதான் சார் அட்ரஸ் கேட்டார்..

இப்ப நல்லா சொல்லுங்க விளக்கம்..அப்பவே இந்த டவுட்டு எழவை என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே..லைன்ல இருங்க....

தங்கராஜ்..நீங்க வைங்க..நான் இப்ப வண்டி டிரைவர்கிட்ட பேசிட்டு கூப்பிடறேன்..

அண்ணே, வண்டி நம்பர் சொல்லுங்க..

ஒரு நிமிசம் சார்.. சார் .. TN 45

யோவ்..வெறியேத்தாத...மொபைல் நம்பரை சொல்லுயா..

சாரி சார்..989xxxxxxxx

வைங்க..நான் அவனை கூப்பிடறேன்...

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஹலோ..டிரைவரா...

ஆமாம் சார்...

______ கம்பெனிலருந்து பேசறேன்...எங்க போயிட்டு இருக்கீங்க...

சார்,பக்கத்துல போயிட்டேன்..இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்..

ஏம்பா உன்னை இங்க இருந்து அனுப்பி மூணரை மணி நேரம் ஆகுது,..ஏம்ப்பா லேட்டு...

சார், நிக்காம போய்க்கிட்டேதான் இருக்கேன்...பத்து பேரை வைச்சு வண்டியை பின்னாடி இருந்து தள்ளவா முடியும்...

அகராதிக்கெல்லாம் குறைச்சல் இல்லை...அங்க ஒண்ணும் என் மாமனார் வீட்டுக்கு நீ பொகலை...இன்னும் பத்து நிமிசத்துல அங்க இல்லைன்னா லோடு ஏத்த மாட்டானுங்க,பார்த்துக்க..வாடகை வாங்க மாட்ட..

டென்சன் ஆகாதிங்க சார்...போயிடுவேன்,..

வை...

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஹலோ..தங்கராஜ்,எவனோ ஒரு நம்மளை விட பெரிய அகராதியை தேடிப் பிடிச்சு நம்ம பசங்க அனுப்பிருக்கானுங்க..மூணரை மணி நேரமா வந்துகிட்டு இருக்கான்..அஞ்சு நிமிசத்துல வந்துடுவான்..பார்த்து லோடு பண்ணிடுங்க பாஸ்...

ok ok சார்..அனுப்பிடறேன்..

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஹலோ..டேய் தம்பி,பிரிண்ட் பீஸ் நைட்டு வர லேட்டாகும்..எந்நேரம் ஆனாலும் இருந்து எடுத்துட்டு போய் சாம்பிள் தைக்க குடுத்துடு..நாளைக்கு குரியர் பண்ணனும்..கூட இருந்து measurements செக் பண்ணிக்கோ..அப்புறம் குரியர் டைம்ல வந்து முதுகுக்கு பின்னாடி நின்னுட்டு, அண்ணே, சாம்பிள் ஊத்திக்குச்சுன்னு சொன்ன, சங்குதான் பார்த்துக்க..

சரிண்ணே...பார்த்துக்கிறேன்..

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஹலோ..

ம்ம்ம்

என்னங்க...

ம்ம்ம்ம்..சொல்லு

வரப்ப சமோசா வாங்கிட்டு வரீங்களா..

ஸ்ஸ்ஸ்ஸ்....முடியலை...

Wednesday, July 07, 2010

ராசராச சோழனின் கனவு

ஆயிரம் வருடங்கள் கடந்து நிற்கும் அற்புத படைப்பில் என்னை மறந்த சில கணங்கள்...எனது கேமராவிலிருந்து





Tuesday, July 06, 2010

எனக்கு இப்படி. உங்களுக்கு எப்படி?

ஏன் - ஒரு விஷயம் தப்பா நடந்தா வரிசையா எல்லாமே தப்பா நடக்குது?

ஏன் - நாம வாங்கின உடனே அந்த ஷேர் ரேட் இறங்குது, விற்றால் உடனே ஏறுது?

ஏன் - ஒரு பொருள் தொலைந்து போன பின் தேடி தேடிப் பார்த்து கடுப்பாகி, வேற வாங்கின உடனேயே தொலைந்த பொருள் கிடைத்து விடுகிறது?

ஏன் - பல இடங்களில் தேடிப்பார்த்து,விசாரித்து, அலசி ஆராய்ந்து வாங்கிய பிறகு, அதை விட சிறப்பான பொருளை நண்பரிடத்தில் பார்க்க முடிகிறது?

ஏன் – நாம் நிற்கும் வரிசையை விட, அடுத்த வரிசை எப்பொழுதும் சீக்கிரம் நகர்கிறது?

ஏன் – நம் வீட்டு குழந்தை மட்டும் சாப்பிடவே மாட்டேங்கிறான்/ள்..அடுத்த/பக்கத்து வீட்டு குழந்தை மட்டும் நல்ல புஷ்டியாக இருக்கிறது?

ஏன் - மனதுக்குள் மிகுந்த ஆர்ப்பாட்டமான முன்னேற்பாட்டோடு உட்கார்ந்து முழு மேட்ச்சும் பார்க்கும் கிரிக்கெட் அல்லது எந்த விளையாட்டிலும, நம் விருப்ப அணி தோற்றுப் போய்விடுகிறது?

Monday, July 05, 2010

நகுலனின் பார்வையில் வாழ்க்கை(அ) மரணம்

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு

- நகுலன்

இவ்வளவு எளியதுதானே வாழ்க்கை..இதுக்குதானே இவ்வளவு ஆட்டமும்,ஓட்டமும்.ஆனால்,மனசு புத்தியை அடக்கமாட்டேங்குதே...

Sunday, July 04, 2010

Sunscreen - வாழ்வை கொண்டாட சொல்லும் ஒரு பாடல்.

இந்த வீடியோ கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புது உத்வேகம் அளிக்கும்..


Saturday, June 26, 2010

மணி அடிச்சாதான் சோறா?



ஒரு ஊர்ல பீட்டர்னு ஒரு சின்ன பையன் இருந்தானாம்.ஒரு நாள் விபத்துல அவனோட அப்பா,அம்மா ரெண்டு பேரும் துரதிர்ஷட வசமா இறந்துட்டாங்களாம். நிராதராவா நின்ன பையனை ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு போய் அந்த ஊர்லயே இருந்த பெரிய சர்ச்ல பாதிரியார்கிட்ட விட்டு இவனை நீங்கதான் பார்த்துகணும்னு சொல்லிட்டாங்களாம்.

அந்த சர்ச்ல ஒரு ஆலயமணி இருந்தது.ஜெபத்துக்கு முன்,பின் மற்றும் ஊர்ல நடக்கிற நல்ல சேதி, கெட்ட சேதியை பரிமாறன்னு பல விஷயங்களுக்கு மணி அடிச்சு தகவல் பரிமாறுவதுதான் வழக்கம்.பாதிரியார் பீட்டரை கூப்பிட்டு அந்த மணி அடிக்கற வேலையை கொடுத்துட்டார். காலம் அப்படியே உருண்டோடுச்சு. பீட்டரும் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் மணி அடிச்சுகிட்டே வளர்ந்தான். பாதிரியாருக்கு ரொம்ப வயசாகிட்டதால, அவர் ஓய்வில் செல்ல, புதுசா ஒரு பாதிரியார் பொறுப்புக்கு வந்தார்.

இவர் கொஞ்சம் இளைஞர் மற்றும் சிந்தனாவாதி. இவர் நிறைய நிபந்தனைகள் மற்றும் ஒழுக்க கட்டுப்பாடுகளை அங்கிருக்கும் ஊழியர்கள் முன் வைத்தார். முக்கியமான நிபந்தனை, அனைவருக்கும் எழுதப் படிக்க தெரிய வேண்டும். எல்லோருக்கும் ஆறு மாதகால அவகாசம் கொடுத்து, யாருக்கெல்லாம் ஆறுமாத கால முடிவில் எழுத படிக்க தெரியலையோ, அவங்க வேலைல இருந்து நீக்கப் படுவாங்கன்னு அறிவிச்சுட்டார். நம்ம பீட்டரோ கைநாட்டு. எல்லோரும் சிரமப் பட்டு படிக்க ஆரம்பிக்க நம்ம பீட்டர் மட்டும் மணி அடிச்சா சோறுன்னு இருந்தானாம். ஆறு மாசம் முடிஞ்சது. எல்லோரையும் கூப்பிட்டு பாதிரியார் சோதனை பண்ணினார். ஒரு சில பேர் எழுதி,படிச்சு காட்ட, ஒரு சில பேர் தட்டு தடுமாறி எழுதவும், எழுத்துக் கூட்டி படிக்கவும் செஞ்சாங்க..நம்ம பீட்டர் மட்டும் ”தேமேன்னு” எதுவுமே பண்ணாம இருக்க, பாதிரியார் கோபப்பட்டு வேலையை விட்டு போன்னு சொல்லிட்டார்.

ஊர் பெரிசுங்க எல்லாம் பரிதாப பட்டு கொஞ்சம் டைம் எக்ஸ்டன்சன் கேட்க, பாதிரியார் இன்னும் ஒரு மூணு மாசம் டைம் கொடுத்தார். ஆனா, நம்ம பீட்டர்க்கிட்ட மூணு மாதம் முடிந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.கொஞ்சம் இறங்கி வந்த பாதிரியார், “சரி, ஒரு மாசம் டைம் தரேன். உன் பேர் மட்டுமாவது கையெழுத்து போட கத்துகிட்டா, வேலை தங்கும்”னார். ஊஹிம்..பாவம் நம்ம பீட்டர்..அதுவும் அவனால முடியலை..கடுப்பான் பாதிரியார், பீட்டரை வேலையை விட்டு தூக்கிட்டார்..

30 வருசமா பார்த்த வேலையை விட்டுட்டு சோகமா வெளியே வந்த பீட்டர், தம்மடிக்கலாம்னு பார்த்தா..ஒரு கடையும் அந்த தெருவுல காணோம்..உடனே அவனுக்கு ஒரு யோசனை வந்தது..இவ்வளவு நாளா சேர்த்து வைச்ச சின்ன சேமிப்புல, சர்ச் இருக்கிற தெருவிலேயே சின்ன பெட்டிக் கடை ஆரம்பிச்சான். சிகரெட், குளிர்பானம், தினசரிகள்னு சீக்கிரமே வியாபாரம் பிக்-அப் ஆச்சு...

ஓரளவு வியாபாரம் செட் ஆனதும் ஒரு சின்னப் பையனை கடையை பார்த்துக்க சொல்லிட்டு, மெயின் கடைவீதில ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சார்.

இப்படியே அந்த ஊர்ல ஒவ்வொரு தெருவா போய் பார்த்து, எது தேவையோ அதை உணர்ந்து வரிசையா துணிக்கடை, செருப்புக் கடைன்னு ஆரம்பிக்க,சர்ச்சுக்கு தினசரி வந்துகிட்டு இருந்த ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, அவனுக்கு வங்கி கடன் கிடைக்க ஏற்பாடு பண்ண, அவரோட ரொம்ப நாள் சர்ச் விசுவாசம் மற்றும் பணிவு காரணமா, அவர் மேல் ஊர்மக்களுக்கு இருந்த நம்பிக்கைல, அவங்க ஆதரவோட எல்லா தொழிலும் நல்ல லாபத்துல போச்சு..

புதுசா அந்த ஊருக்கு வந்த பேங்க் மேனேஜர், நம்ம “தொழிலதிபர்” பீட்டர் பத்தி கேள்விபட்டு “டெபாசிட் அக்கவுண்ட்”க்காக அவரை போய்பார்த்தாராம். அப்பதான், பீட்டர்கிட்ட சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்டே இல்லைன்னு தெரிய வந்து ஆச்சர்யமா “ஏன் சார்” ன்னு கேட்டாராம். “எனக்கு கையெழுத்து போட தெரியாததால அக்கவுண்ட் ஓப்பன் பண்ண முடியாதுன்னு நினைச்சேன்”னு பீட்டர் சொன்னாராம்

அதிர்ச்சியோட உச்சத்துக்கே போன மேனேஜர் “ சார், கைநாட்டு போட தெரிஞ்சே இவ்வளவு உயரத்துக்கு வந்துட்டீங்க..உங்களுக்கு கையெழுத்து மட்டும் போட மட்டும் தெரிஞ்சு இருந்தா ?” அப்படிங்க...

பீட்டர் சிரிச்சுக்கிட்டே சொன்னாராம் “ மணி அடிச்சுகிட்டு இருந்திருப்பேன்”.

---------xxxxxxxx-----------------xxxxxxxxxxxx-------------

நான் இன்னும் அடிச்சுகிட்டுதான் இருக்கேன்..நீங்க பாஸ் ?



டிஸ்கி : லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது..நீதியை மட்டும் பார்க்கணும் :)