Saturday, June 26, 2010

மணி அடிச்சாதான் சோறா?



ஒரு ஊர்ல பீட்டர்னு ஒரு சின்ன பையன் இருந்தானாம்.ஒரு நாள் விபத்துல அவனோட அப்பா,அம்மா ரெண்டு பேரும் துரதிர்ஷட வசமா இறந்துட்டாங்களாம். நிராதராவா நின்ன பையனை ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு போய் அந்த ஊர்லயே இருந்த பெரிய சர்ச்ல பாதிரியார்கிட்ட விட்டு இவனை நீங்கதான் பார்த்துகணும்னு சொல்லிட்டாங்களாம்.

அந்த சர்ச்ல ஒரு ஆலயமணி இருந்தது.ஜெபத்துக்கு முன்,பின் மற்றும் ஊர்ல நடக்கிற நல்ல சேதி, கெட்ட சேதியை பரிமாறன்னு பல விஷயங்களுக்கு மணி அடிச்சு தகவல் பரிமாறுவதுதான் வழக்கம்.பாதிரியார் பீட்டரை கூப்பிட்டு அந்த மணி அடிக்கற வேலையை கொடுத்துட்டார். காலம் அப்படியே உருண்டோடுச்சு. பீட்டரும் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் மணி அடிச்சுகிட்டே வளர்ந்தான். பாதிரியாருக்கு ரொம்ப வயசாகிட்டதால, அவர் ஓய்வில் செல்ல, புதுசா ஒரு பாதிரியார் பொறுப்புக்கு வந்தார்.

இவர் கொஞ்சம் இளைஞர் மற்றும் சிந்தனாவாதி. இவர் நிறைய நிபந்தனைகள் மற்றும் ஒழுக்க கட்டுப்பாடுகளை அங்கிருக்கும் ஊழியர்கள் முன் வைத்தார். முக்கியமான நிபந்தனை, அனைவருக்கும் எழுதப் படிக்க தெரிய வேண்டும். எல்லோருக்கும் ஆறு மாதகால அவகாசம் கொடுத்து, யாருக்கெல்லாம் ஆறுமாத கால முடிவில் எழுத படிக்க தெரியலையோ, அவங்க வேலைல இருந்து நீக்கப் படுவாங்கன்னு அறிவிச்சுட்டார். நம்ம பீட்டரோ கைநாட்டு. எல்லோரும் சிரமப் பட்டு படிக்க ஆரம்பிக்க நம்ம பீட்டர் மட்டும் மணி அடிச்சா சோறுன்னு இருந்தானாம். ஆறு மாசம் முடிஞ்சது. எல்லோரையும் கூப்பிட்டு பாதிரியார் சோதனை பண்ணினார். ஒரு சில பேர் எழுதி,படிச்சு காட்ட, ஒரு சில பேர் தட்டு தடுமாறி எழுதவும், எழுத்துக் கூட்டி படிக்கவும் செஞ்சாங்க..நம்ம பீட்டர் மட்டும் ”தேமேன்னு” எதுவுமே பண்ணாம இருக்க, பாதிரியார் கோபப்பட்டு வேலையை விட்டு போன்னு சொல்லிட்டார்.

ஊர் பெரிசுங்க எல்லாம் பரிதாப பட்டு கொஞ்சம் டைம் எக்ஸ்டன்சன் கேட்க, பாதிரியார் இன்னும் ஒரு மூணு மாசம் டைம் கொடுத்தார். ஆனா, நம்ம பீட்டர்க்கிட்ட மூணு மாதம் முடிந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.கொஞ்சம் இறங்கி வந்த பாதிரியார், “சரி, ஒரு மாசம் டைம் தரேன். உன் பேர் மட்டுமாவது கையெழுத்து போட கத்துகிட்டா, வேலை தங்கும்”னார். ஊஹிம்..பாவம் நம்ம பீட்டர்..அதுவும் அவனால முடியலை..கடுப்பான் பாதிரியார், பீட்டரை வேலையை விட்டு தூக்கிட்டார்..

30 வருசமா பார்த்த வேலையை விட்டுட்டு சோகமா வெளியே வந்த பீட்டர், தம்மடிக்கலாம்னு பார்த்தா..ஒரு கடையும் அந்த தெருவுல காணோம்..உடனே அவனுக்கு ஒரு யோசனை வந்தது..இவ்வளவு நாளா சேர்த்து வைச்ச சின்ன சேமிப்புல, சர்ச் இருக்கிற தெருவிலேயே சின்ன பெட்டிக் கடை ஆரம்பிச்சான். சிகரெட், குளிர்பானம், தினசரிகள்னு சீக்கிரமே வியாபாரம் பிக்-அப் ஆச்சு...

ஓரளவு வியாபாரம் செட் ஆனதும் ஒரு சின்னப் பையனை கடையை பார்த்துக்க சொல்லிட்டு, மெயின் கடைவீதில ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சார்.

இப்படியே அந்த ஊர்ல ஒவ்வொரு தெருவா போய் பார்த்து, எது தேவையோ அதை உணர்ந்து வரிசையா துணிக்கடை, செருப்புக் கடைன்னு ஆரம்பிக்க,சர்ச்சுக்கு தினசரி வந்துகிட்டு இருந்த ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, அவனுக்கு வங்கி கடன் கிடைக்க ஏற்பாடு பண்ண, அவரோட ரொம்ப நாள் சர்ச் விசுவாசம் மற்றும் பணிவு காரணமா, அவர் மேல் ஊர்மக்களுக்கு இருந்த நம்பிக்கைல, அவங்க ஆதரவோட எல்லா தொழிலும் நல்ல லாபத்துல போச்சு..

புதுசா அந்த ஊருக்கு வந்த பேங்க் மேனேஜர், நம்ம “தொழிலதிபர்” பீட்டர் பத்தி கேள்விபட்டு “டெபாசிட் அக்கவுண்ட்”க்காக அவரை போய்பார்த்தாராம். அப்பதான், பீட்டர்கிட்ட சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்டே இல்லைன்னு தெரிய வந்து ஆச்சர்யமா “ஏன் சார்” ன்னு கேட்டாராம். “எனக்கு கையெழுத்து போட தெரியாததால அக்கவுண்ட் ஓப்பன் பண்ண முடியாதுன்னு நினைச்சேன்”னு பீட்டர் சொன்னாராம்

அதிர்ச்சியோட உச்சத்துக்கே போன மேனேஜர் “ சார், கைநாட்டு போட தெரிஞ்சே இவ்வளவு உயரத்துக்கு வந்துட்டீங்க..உங்களுக்கு கையெழுத்து மட்டும் போட மட்டும் தெரிஞ்சு இருந்தா ?” அப்படிங்க...

பீட்டர் சிரிச்சுக்கிட்டே சொன்னாராம் “ மணி அடிச்சுகிட்டு இருந்திருப்பேன்”.

---------xxxxxxxx-----------------xxxxxxxxxxxx-------------

நான் இன்னும் அடிச்சுகிட்டுதான் இருக்கேன்..நீங்க பாஸ் ?



டிஸ்கி : லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது..நீதியை மட்டும் பார்க்கணும் :)

No comments:

Post a Comment