Monday, June 02, 2014

மற்றுமொரு நாள்!

மணி ஏழரை.இன்னும் அரை மணிநேரத்தில் ஷிப்ட் முடிந்து விடும்.அதற்குள் பேக்கிங் முடித்து வண்டியில் லோடு ஏற்றியாக வேண்டும். லோடு முடித்து தார்ப்பாய் கட்டி வண்டி கிளம்ப ஒன்பதாகி விடும். ஒன்பதுக்கு கிளப்பினால்தான் காலையில் சென்னையில் குறித்த நேரத்தில் லோடு டெலிவரியாகி, கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ் முடித்து நாளை மாலைக்குள் ஷிப்மெண்ட் ஹேண்ட் ஓவர் செய்து, திட்டமிட்ட கப்பலில் ஷிப்மெண்ட் கிளம்பும். ஏகப்பட்ட முறை மெயில் மற்றும் தொலைபேசி வழி மும்பையில் இருந்து உறுதி செய்து விட்டார்கள்..நாளை மாலை நிச்சயம் ஹேண்ட் ஓவர் ஆகவில்லையென்றால் ஷிப்மெண்ட் ஏர் மோடில்தான் செல்லும் என..ஏர் மோடில் சென்றால் சுளையாக பத்து லட்சத்துக்கும் மேல் காலி..

தொலைபேசியில் சப்ளையர்க்கு தொடர்பு கொண்டு வரவேண்டிய சொச்ச சரக்குகளை சீக்கிரம் கொண்டு வருமாறு சத்தம் போட்டு விட்டு, சென்னையில் இருக்கும் ஷிப்மெண்ட் கிளியரன்ஸ் ஏஜண்ட் ரகுமானுக்கு பேசினேன்..சிறிது நேரத்தில் வண்டி கிளம்பிவிடும்,காலையில் பத்து மணிக்கு மதுரவாயலில் லோடு இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்து விட்டு, பதிலளிக்க வேண்டிய சில மெயில்களை முடித்து விட்டு நிமிர்ந்தால் மணி எட்டு..

வேக வேகமாக ஃபேக்டரிக்குள் நுழைந்தேன்.வீட்டிலிருந்து அதற்குள் அழைப்பு..

என்னங்க, கிளம்பிட்டிங்களா?.நாங்க ரெடி” .

இல்லைடா..ஷிப்மெண்ட் ஒண்ணு அர்ஜெண்ட்..அரை மணிநேரத்துல வந்துடறேன்

லேட் பண்ணிடாதீங்க..மிட் நைட் ட்ரைவ் வேண்டாம்”..

இல்லை இல்லை.. இதோ வந்துடறேன்..நீங்க ரெடியா நில்லுங்க”.நாளை பாண்டியில் மாமனாருக்கு முதல் வருட திதி..வாஞ்சையான மனிதரின் முகம் நினைவில் வந்து போனது.

கடைசி நேர அவசர பேக்கிங் நடந்து கொண்டிருந்தது..வேலு அதற்குள் தயாராய் இருந்த முக்கால் சதம் பெட்டிகளை வண்டியில் ஏற்றுவதற்கு ஆரம்பித்து விட்டிருந்தான்.

என்னய்யா, எவ்வளவு நேரமாகும்”.

இன்னும் ஒரு பத்து பாக்ஸ்தான் பேலன்ஸ் சார்.கால் மணில முடிஞ்சுடும்”.

நேரே லோடு ஏறிக் கொண்டிருக்கும் பகுதிக்கு வந்தேன்..சிகரெட் ஒன்றை பற்ற வைத்து டிரைவரை அழைத்தேன்.

தம்பி, ரொம்ப அர்ஜெண்ட் சரக்கு..காலையில ஒம்போது மணிக்கு மதுரவாயல் கல்லு குடோன்ல வண்டி நிக்கணும்”.

எங்கே சார்!! அவசரம்னு ஏத்தி விடறீங்க..அங்கே போனா சாயந்திரம்தான் இறக்குவாங்க”.

யோவ்..இல்லைய்யா..இதுக்கு எல்லா பேப்பரும் அங்கே ரெடியா இருக்கு..காலைல வண்டி லேட்டாச்சுன்னா, மொதலுக்கே மோசமாயிடும்..லோடு ஏத்தின உடனே நேரா போய் பேட்டா வாங்கிட்டு எங்கேயும் நிறுத்தாம போயிடு. குடியை கெடுத்துடாத சாமி..இத்தனை பேர் பொழப்பும் வீணாப் போய்டும்”.

லோடை சீக்கிரம் ஏத்தி வுடுங்க சார்.ஒண்ணும் பிரச்னையில்ல..காலைல ஆறு மணிக்கெல்லாம் போய்டுவேன்”.

பார்த்துய்யா!எங்கேயாவது வழில வண்டையை போட்டுட்டு படுத்துடாதகையில் இருநூறை திணித்து விட்டு, பேக்டரிக்குள் நுழையவும், கடைசி பத்து பெட்டியும் பேக் ஆகி வண்டிக்கு சென்று கொண்டிருந்தது. தார்ப்பாய் போட்டு வண்டி கிளம்புவதை பார்த்து விட்டு, அடுத்த நாள் வேலைக்கான சில உத்தரவுகளை பிறப்பித்து விட்டு, இன்னும் சில மெயில்களுக்கு பதிலனுப்பி விட்டு, ட்ரான்ஸ்போர்ட் ஓனர் சாமிநாதனை அழைத்தேன்.

அர்ஜெண்ட் லோடு சார்!வண்டி வெளியே போய்டுச்சு..சீக்கிரமா பேட்டா கொடுத்து டிரைவர்கிட்ட சொல்லி அனுப்புங்க.நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு வண்டி ரீச் ஆகிடணும்..எங்கேயாவது மட்டையாகி படுத்துடப் போறாரு!!”.

நான் சொல்லிடறேன் சார்!..நிச்சயம் போய்டும்என்ற பதிலை வாங்கி, அவசர அவசரமாக மேஜையில் கிடந்தவற்றை அள்ளி உள்ளே போட்டு விட்டு கிளம்பினேன்..வீட்டில் மனைவியும், குழந்தைகளும் கிளம்பி பைகளுடன் தயாராக இருந்தனர்..அவசர குளியல் போட்டு, உடைமாற்றி, காரை கிளப்புகையில் மணி பத்தாகி விட்டிருந்தது. இரண்டு மணி ஜாமத்தில் பாண்டி சென்று வீடடைந்தோம்..

ஆறு மணிக்கு எழுந்த போது கண்ணெல்லாம் காந்தியது..மூன்று நாட்களாக தூக்கமில்லை..லேட் நைட் வொர்க்கிங் மற்றும் நேற்றைய இரவு ட்ரைவிங்கினால் அசதியாய் இருந்தது..சிறிது நேரம் கழித்து, ட்ரைவருக்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுந்து குளிக்கச் சென்றேன்..புரோகிதர் வந்து காய்கறிகள் மற்றும் இன்ன பிற படையல் பொருட்களை பரப்பி, மந்திரம் சொல்ல ஆரம்பித்திருந்தார்..குளித்து வேஷ்டி உடுத்தி, உறவினர் அனைவருக்கும் முகமன் சொல்லி ஓரமாய் நின்று, சிறிது நேரம் மாமனாருடன் நடந்த உரையாடல்களை, மற்றவர் மூலம் அறிந்திருந்த அவரது பெரும் வாழ்வை மெதுவாக அசை போட்டுக் கொண்டிருந்தேன்..

சரியாய் ஏழு மணிக்கு ட்ரான்ஸ்போர்ட் ஓனர் சாமிநாதன் அழைத்தார்..வழக்கமாய் இந்நேரத்துக்கு அழைக்க மாட்டார் என்பதால், அவரது எண்ணை பார்த்தவுடனே திக்கென்றிருந்தது..மெதுவாக வீட்டை விட்டு வெளியே வந்து, அழைப்பை எடுத்தேன்..

சொல்லுங்க சாமிநாதன்”.

இந்நேரத்துக்கு டிஸ்டர்ப் பண்றதுக்கு சாரி சார்.நைட் லோட் ஏத்திட்டு போன வேன் திண்டிவனம் பக்கத்துல மேஜர் ஆக்சிடெண்ட்..சரக்கு அர்ஜெண்டா சார்?”

என்னங்க விளையாடறீங்களா? அதான் நைட்டே சொன்னேன்ல!”

இல்லை சார்! அதான் என்ன பண்ணலாம்ன்னு கேட்கத்தான் கூப்பிட்டேன்

டிரைவர்க்கு என்ன ஆச்சு?”

டிரைவர் கால் போயிடுச்சுன்னு தகவல்”.

கட் பண்ணுங்க கூப்பிடறேன்

எரிச்சல் மண்டியது..மிகவும் இக்கட்டான ஷிப்மெண்டில் பிரச்னை..கண்களில் எரிச்சல்,காதில் புரோகிதரின் மந்திர ஓதல்,விபத்தின் வீரியம் சார்ந்த கற்பனை என எல்லாம் சேர்ந்து, சற்று முன் இருந்த ஆசுவாசம் காணாமல் போய் ஆத்திரம் அதிகரிக்க ஆரம்பித்தது..

கொஞ்சம் யோசிக்க வேண்டும்..அதனால்தான் சாமிநாதனின் அழைப்பை துண்டித்தேன்..முதலில் வீட்டிலிருந்து வெளியே போக வேண்டும்..இச்சூழல் வேலைக்காகது எனத் தோன்றியது. உள்ளே சென்று மனைவியை தனியே அழைத்தேன்..கலங்கிய கண்களுடன் வந்தாள்..அப்பாவின் நினைவால் நேற்றிலிருந்தே கரைந்து கொண்டிருந்தாள்..ஆதரவாக நெற்றியில் தடவி, சுருக்கமாக விவரம் சொல்லி,யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம், திண்டிவனம் வரை போய் வந்து விடுகிறேன் என்றேன்.மனசே சரியில்லை,பத்திரம்என்றவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வெளியே வந்து காரை விரைந்து எடுத்தேன். ஊரை விட்டு வெளிவந்து காரை விரட்டிய படியே சாமிநாதனை அழைத்தேன்..

பாக்ஸ் எல்லாம் வேற வண்டிக்கு மாத்தணும்..வேற வழியில்லை

இல்லை சார்..அது சிரமம்.போலிஸ் ஸ்பாட்ல இருக்காங்க..ச் பண்ண முடியாது

கடுப்பேத்தாதீங்க.பத்து லட்சத்துக்கும் மேல லாஸ் ஆகுங்க. போலிஸ் எல்லாம் நீங்க பேசி சரி பண்ணுங்க..எனக்கு வேற வண்டி உடனே ரெடி பண்ணி, ஸ்பாட்க்கு வரச்சொல்லிடுங்க..அதிகபட்சம் ஒன் அவர்ல வேற வண்டி அங்கே நிக்கணும். நான் முக்கால் மணி நேரத்துல ஸ்பாட்ல இருப்பேன்

”சார், நீங்க எப்படி?”

”நான் கரூர்ல இல்லை.பாண்டில இருக்கேன். இப்ப திண்டிவனத்துக்கு கிளம்பிட்டேன்.என்ன பண்ண முடியும்னு பார்க்கிறேன்..வண்டி ரெடி பண்ணிட்டு, ட்ரைவர் நம்பர் எனக்கு மெசேஜ் பண்ணுங்க”.

ஷிப்பிங் ஏண்ட் ரகுமானுக்கு அழைத்து பிரச்னையை விளக்கினேன்..

சார், பாக்ஸ் டேமேஜாகி இருந்தா ஒண்ணும் பண்ண முடியாது. இம்போர்ட்டரோட ஏஜண்ட் பாக்ஸ் ஓரமா கொஞ்சம் நசுங்கி இருந்தா கூட உள்ளே எடுக்க மாட்டானே?”

ரகுமான், பாக்ஸ் கண்டிசன் தெரியலை..ஆனால், நிச்சயம் மோசமாத்தான் இருக்கும்..நேர்ல போய் பார்த்தாத்தான் தெரியும்குட்ஸ் அங்கே ஒரு மணிக்கு வர மாதிரி ஏற்பாடு பண்றேன். டேமேஜ் எவ்வளவுன்னு பார்த்துட்டு மேற்படி என்ன பண்றதுன்னு யோசிப்போம்..யார் யார்கிட்ட டைம் எக்ஸ்டென்சன் வாங்கணுமோ, கெஞ்சி கூத்தாடி ஏற்பாடு பண்ணுங்க..இல்லைன்னா பெரிய இஷ்யூ ஆகிடும்

வில் ட்ரை மை பெஸ்ட் சார்..ஸ்பாட்க்கு போய்ட்டு அப்டேட் பண்ணுங்க”..

வண்டி நூற்றி இருபதில் திண்டிவனம் நோக்கிய நெடுஞ்சாலையில் சீறிக் கொண்டிருந்தது. பலவித எண்ணங்கள் அலைக்கழிக்க ஆரம்பித்தன. நிச்சயம் இது நல்ல அறிகுறி இல்லை.இது ஏப்ரல் மாதம். வருடம் முழுக்க மேல் மட்டத்திலிருந்து, கீழ்மட்டம் வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரட்டி வேலை வாங்கியிருக்கிறேன். துளி பிசகலோ அல்லது கரும்புள்ளியோ எந்த ஒரு ஷிப்மெண்ட்டிலும் இல்லாமல் இது வரை கொண்டு வந்தாகி விட்டது..இன்னும் இரண்டு வாரத்தில், தலைமை அலுவலகத்து அதிகார மையங்களுடன் சம்பள உயர்வு மற்றும் போனஸ்க்காக முட்டி மோத வேண்டியிருக்கும்..கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவு லாபத்தை இந்த ஆண்டு எட்டியிருக்கிறோம் மிகக்குறைந்த ஆட்களையும், செலவினங்களையும் கொண்டு அடைந்திருக்கும் லாபம் இது..அதற்கேற்ற மன மற்றும் உடல் உழைப்பை அனைவருமே போட்டிருக்கிறோம்..அதற்கான பலனை கிட்டதட்ட நூறு பேர் எதிர்பார்த்து நிற்கும் தருணமிது..இந்த ஷிப்மெண்ட் ஏதேனும் பிரச்னையில் சிக்கி ஆகாய மார்க்கமாய் செல்லும் நிலை வந்தால், இது ஒன்று போதும் மற்ற எல்லா நல்ல விஷயங்களையும் மறக்கடித்து, முழம் என்ன பல அடி சறுக்க வைக்க..ஆயாசமாய் இருந்தது.சிகரெட் ஒன்றை பற்ற வைத்து ஆழ இழுத்த போது சாமிநாதனிடம் இருந்து அழைப்பு..

சார்! நம்ம வண்டியே சென்னை லோடு போனது ரிட்டர்ன் ஆகிட்டு இருந்தது..திண்டிவனத்துல நிறுத்திட்டேன். டிரைவர் நம்பர் மெசேஜ் பண்ணி இருக்கேன்...ஸ்டேசன்ல பேசிட்டு இருக்கேன்..மறுபடி லைன்ல வரேன்”..

சரி..நான் ஆள் வைச்சு லோடு மாத்திடறேன்..அடிபட்ட டிரைவர் எங்கே இருக்கான்?”

ஆம்புலன்ஸ்ல கொண்டு போய்ட்டாங்கன்னு ஸ்டேசன்ல சொன்னாங்க..அவன் செல் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு..நான் இப்ப கிளம்பிட்டேன்..நாலு மணி நேரத்துல அங்கே இருப்பேன்..நான் பார்த்துக்கிறேன் சார்..நீங்க குட்ஸை பாருங்க

மெசேஜில் வந்த டிரைவரின் எண்ணுக்கு அழைத்தேன்.

”என்னண்ணே, ஸ்பாட்டுக்கு வந்துட்டிங்களா? வண்டிக்கு அடி பலமா?”

ஆமாண்ணே..மரண குத்து வாங்கியிருக்கு வண்டி!”

ஆளுக்கு என்ன ஆச்சாம்?”

ஓனர் கால் போயிடுச்சுன்னார்..இங்கே பக்கத்துல ஆம்புலன்ஸ்ல ஏத்தி உட்ட டீக்கடைக் காரர் அவ்ளோ ஒண்ணும் சேதாரமில்ல..ஆள் சிரிச்சுகிட்டுதான் ஆம்புலன்ஸ்ல போனாங்கிறார்..ஒண்ணும் புரியலைன்ணே

வண்டில பார்த்தீங்களா? பாக்ஸ் எல்லாம் எப்படி இருக்கு?.போலிஸ் யாராவது இருக்காங்களா? கூட எத்தனை பேர் இருக்காங்க?

பார்த்தேன்ணே..இருபது முப்பது பாக்ஸ் நல்ல அடி வாங்கி இருக்கு..பீஸெல்லாம் வெளிய சிதறி இருக்கு..நானும் க்ளீனரும் இருக்கோம்..போலிஸ்லாம் இல்லைன்ணே..பெட்டி எல்லாம் மாத்திடலாங்களா?”

டீக்கடைல யாராவது ஆள் இருந்தா காசு தரேன்னு சொல்லி கூப்பிட்டுக்குங்க..போலிஸ் யாராவது வந்து சத்தம் போட்டா, என் நம்பரை போட்டு கொடுங்க..நான் பேசிக்கறேன்..லோடு மாத்தறப்ப டேமேஜ் ஆன பாக்ஸ் மட்டும் ஓரமா வைங்க..நான் வந்து பாத்துக்கறேன்

மணி எட்டு..வேலுவுக்கு அழைத்தேன்..

தம்பி, நேத்து நைட் ஏத்துன லோடு ஆக்ஸிடெண்ட்..அரைமணி நேரத்துல நீயும்,குகனும் ஆபிஸ் வந்துட்டு என் கால்க்கு வெயிட் பண்ணுங்கஇந்த ஆர்டர் பாக்ஸ்க்கு மேட்ச் ஆகற எம்ப்டி பாக்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வைங்க ஸ்டாக்ல பார்த்து..அரை மணி நேரத்துல எல்லா டீடெயிலும் தரேன்”..

அடுத்து அலுவலகத்தின் ட்ரைவருக்கு அழைத்தேன்.

உடனே கிளம்பி ஆபிஸ் போய் இன்னோவா டீசல் ஃபுல் பண்ணிட்டு,ரெடியா இருங்க..சென்னை வர மாதிரி இருக்கும்..வேலு டீடெயில் சொல்வான்..ஒன்பது மணிக்கு நீங்க ரெடியா இருக்கணும் ஆபிஸ்ல”.

அரைமணி நேரத்தில் ஸ்பாட்டை அடைந்தேன்..வேனின் முன்பக்கத்துக்கு நல்ல சேதாரம்..ரொம்பவே நசுங்கி இருந்தது..ஆனால், அடித்த வேகத்தில் முன் இன்ஜினோடு சேர்த்து மேலேறி இருந்ததே ஒழிய, ஸ்டியரிங்கும் டிரைவர் சீட்டும் சேதாரமில்லாமல் இருந்ததை பார்த்த போது, ட்ரைவர்க்கு அடி பலமாயிருக்க வாய்ப்பில்லை என நம்பினேன்..பின் பக்கம் போனேன்..வேர்க்க விறு விறுக்க, சென்னையிலிருந்து வந்த ட்ரைவரும், க்ளீனரும் இன்னுமொரு பொடியனும் கிட்டதட்ட எல்லா பெட்டியையும் மாற்றி விட்டிருந்தனர்..டேமேஜான பெட்டியனைத்தையும் ஒரு ஓரமாக ஏற்றி விட்டிருந்தனர்..வேஷ்டியை மடித்துக் கட்டி, மேலேறி பார்த்த போது, அதிர்ச்சியாக இருந்தது..கிட்டதட்ட பத்து பெட்டிகள் உருக்குலைந்து போயிருந்தன..இன்னுமொரு பத்து பெட்டிகள் ஓரளவு சேதமடைந்திருந்தன..பல கோணங்களில் போட்டோ எடுத்து விட்டு, வியர்வை வழிய, எல்லா பெட்டிகளையும் புரட்டி அவற்றின் எண்களை குறித்தேன்..

கீழே குதித்து, ட்ரைவருக்கு நன்றியை சொல்லி, ஒரு ஐந்நூறை கையில் வைத்து, நேரே கல்லுகுடோன் மதுர வாயல் போய்டுங்க..ஒரு மணிக்குள்ள இருக்கணும் என்று  வழியனுப்பி வைத்தேன்..உடைந்த பெட்டிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்..இப்படியே ஷிப் செய்ய முடியாது..வேலுவுக்கு அழைத்தேன்..

மொத்தம் 23 பாக்ஸ்..நம்பர்ஸ் குறிச்சுக்கோ..எல்லாமே டேமேஜ்..இது எல்லாத்துக்கும் செட்டாகிற பாக்ஸ் எடுத்துக்குங்க..கொஞ்சம் பீஸ் அழுக்காகி இருக்கு..இருக்கிற எக்ஸெஸ் பீஸ் எல்லாம் அள்ளிப் போட்டுக்குங்க..மணி இப்ப ஒன்பது. அதிகபட்சம் ஒரு மணி நேரம். வண்டி கிளம்பிடணும்..நம்ம டிரைவரை இன்னோவா ரெடி பண்ண சொல்லி இருக்கேன்..அதுல எல்லாத்தையும் ஏத்தி விட்டுடு..நீ அங்கே பார்த்துக்கோ..குகன்,பார்த்தி, சேட்டான் மூணு பேத்தையும் வண்டில ஏத்தி அனுப்பு..நம்ம ட்ரைவர் வேண்டாம்..வெளியே இருந்து குமார் டிரைவர் வருவார்..அவரை வண்டியை எடுக்கச் சொல்லு.ஏதாவது டவுட்டுன்னா, எனக்கு கூப்பிடு”..

சார்! இன்னைக்கு ஷிப்மெண்ட் போய்டுமா சார்?”

பார்க்கலாம்யாஅதுக்குதான் ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்கேன்..நீ லேட் பண்ணாம சீக்கிரம் கிளப்பி விடு..வண்டியை கிளப்பி விட்டுட்டு எனக்கு போன் அடி”..

அடுத்து ரகுமான்..

லோடு மாத்தி வண்டி கிளம்பிடுச்சு..எப்படியும் அங்கே வர ஒரு மணியாகிடும்..இருபது பாக்ஸ் நல்ல டேமேஜ்..எப்படியாவது வேற பெட்டில மாத்தியோ அல்லது ஏதாவது பண்ணி கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ் வாங்குங்க..அதுக்கப்புறம் நீங்க ஏஜண்ட்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்றதுக்குள்ள நான் வேற எம்ப்டி பாக்ஸ் ரெடி பண்ணிட்டு இருக்கேன்.. ஈவ்னிங் அஞ்சு மணிக்கு வந்துடும்..வந்த உடனே அதுல சரக்கை மாத்திடலாம்

சார்! இந்த ஏஜண்ட் பெரிய லார்டு மாதிரி பேசுவான்..அஞ்சு மணிக்கெல்லாம் டான்னு லாக் பண்ணிட்டு போய்டுவானுங்க. அதுவும், குட்ஸ் ஒரு மணிக்கெல்லாம் கேட்டு இருக்கான்..அஞ்சு மணி வரை வெயிட் பண்ணுவாங்களான்னு தெரியலை..வெஸல் மிஸ்ஸாக சான்ஸ் இருக்கு சார்

சரி! நான் பாம்பேல சொல்லி பேசச் சொல்றேன். நீங்களும் ஒரு லெட்டர் கொடுத்துடுங்க..குட்ஸ் மெட் வித் ஆக்ஸிடெண்ட்.மேக்கிங் ஆல்டர்நேட் அரேஞ்ச்மெண்ட்ஸ்..வில் ஹேண்ட் ஓவர் குட்ஸ் பை ஃபைவ் வித்தவுட் ஃபெயில்ன்னு”..

சில போட்டோக்களை தேர்ந்தெடுத்து, மும்பைக்கு வாட்சப்பில் அனுப்பி,லாஜிஸ்டிக்ஸ் மேனேஜரை அழைத்து, விவரம் சொல்லி, எங்கெங்கு பேசி நேரம் வாங்க முடியுமோ வாங்கு, ஐந்து மணிக்குள் நல்ல படியாக சரக்கை சேர்க்கிறேன் என்ற உத்தரவாதம் அளித்து விட்டு அங்கிருந்த டீக்கடை பெஞ்சில் அமர்ந்தேன்..அனல் உக்கிரமாய் தகித்தது..டீ குடித்துக் கொண்டே,ஆக்டிங் ட்ரைவர் குமாருக்கு அழைத்தேன்..டிரைவிங்கில் வித்தகன்..பால்ய நண்பன்..

எல்லாவற்றையும் சொல்லி முடித்து,“குமாரு!.ஆபிஸ்ல இன்னோவோ ரெடியா இருக்கு..மூணு பசங்க வராங்க..கொஞ்சம் எம்ப்டி பாக்ஸ் அர்ஜெண்டா சென்னை கொண்டு வரணும்..வண்டியை ஸ்டார்ட் பண்றப்ப கூப்பிடு”.

அடுத்து என்ன என்று யோசித்தேன்..வீட்டு ஞாபகம் வந்தது..ஏதாவது சாஸ்திர பரிகாரத்துக்கு தேடுவார்களோ என்ற யோசனையோடு காரை கிளப்பி திண்டிவனம் பைபாஸ் சாலை வந்ததும்தான் சட்டென உறைத்தது..வண்டியை யூ டர்ன் அடித்து நகருக்குள் நுழைந்து, அரசு மருத்துவமனைக்கு வழி கேட்டேன்..

அந்த மருத்துவமனை வளாகம் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தது..வியர்வையில் கசங்கிய சட்டை மற்றும் முழுவதும் கருப்பு மற்றும் செம்மண் கறையாகிப் போன வேஷ்டியுடன் அந்த நீண்ட வாரந்தாவில் நடந்து, விவரம் சொல்லி, வழி கேட்டு அந்த வார்ட்டுக்கு போன போது, பாதி படுக்கை காலியாக இருந்தது..நான்கைந்து படுக்கை தாண்டி அவன் படுத்திருந்தான்..நேற்று இரவு நான் பேசி அனுப்பிய டிரைவர்..என்னைப் பார்த்தவுடன், அகலமாக சிரித்தான்..

என்ன சார்! இங்கே! லைட்டா கண்ணசந்துட்டேன் சார்..நின்னுகிட்டு இருந்த டேங்கரை மூவிங்ல இருக்குன்னு நினைச்சு பின்னாடி போய் அடிச்சுட்டேன்என்று சிரித்தான்..

காலைப் பார்த்தேன்..கட்டு எதுவும் இல்லை..களிம்பு மாதிரி ஏதோ தடவி இருந்தது..முழங்கையின் கீழே பெரும் சிராய்ப்பொன்று..மற்றபடி ஏதும் தென்படவில்லை..

என்னய்யா..அடி பலம் அப்படின்னு ஓனர் சொன்னாரு

அடிபட்ட உடனே பேசிட்டேன் சார்..பயப்பட ஒண்ணுமில்லைன்னு..சும்மா சிராய்ப்புதான் சார்..அதான் சார் பென்ஸ் இன்ஜின் மகிமை..அந்த சாத்து சாத்தினாலும் டாப்புக்குதான் எகிறுச்சே ஒழிய, உள்ள குத்து வாங்கலை சார்”.. சத்தம் போடுவேன் என்றோ அல்லது ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்யச் சொல்லி செலவு வைப்பேனென்றோ சாமிநாதன் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்ததும் எரிச்சல் மண்டியது.

யோவ்! நீ கெளம்புன நேரத்துக்கு காலைல ஆறு மணிக்கெல்லாம் தாம்பரம் தாண்டி இருக்கணுமேஎப்படி திண்டிவனத்துல சிக்குன

இல்லை சார்..வைஃப் போகலைன்னா கோச்சுக்கும் சார்.. நைட் சாப்பாடு வீட்ல போய் சாப்பிட்டு கிளம்ப லேட்டாகிடுச்சு.” என்று சிரித்தான்..

ஓனர் வந்துட்டு இருக்கார்..அதுவரை ஏதாவது வேணும்னா வாங்கி சாப்பிடுஎன்று இரண்டு மூன்று நூறு ரூபாய் தாள்களை அவன் பையில் வைத்து விட்டு, “ஏதாவது டிபன் வாங்கி கொடுத்துட்டு போகட்டுமாஎன்றேன்..”அதெல்லாம் ஆச்சு சார்..அதோ அந்த பெட்டுக்கு ஒருத்தர் இட்லி வாங்க போறேன்னார்..எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வரச் சொல்லி சாப்பிட்டேன்..சிகரெட் மட்டும் இருந்தா கொடுத்துட்டு போ சார்என்றவனிடம் பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டை கொடுத்து முறைத்து விட்டு வெளியேறினேன்..

காருக்குள் வந்தமர்ந்து இன்ஜினையும், ஏஸியை முழுதாக ஓடவிட்டு அப்படியே அமர்ந்திருந்தேன்..குமார் அழைத்தான்..

எல்லாம் ரெடி மாப்ள..கிளம்பறோம்”..

டேய் நல்லா கேட்டுக்க..மணி பத்தரை..டீ சாப்பிடக் கூட நிறுத்தக் கூடாது..பசிச்சா, எங்கேயாவது ரோட்டு மேல நிறுத்தி அஞ்சு நிமிசத்துல புரோட்டா சாப்பிட்டுட்டு டக்குன்னு கிளம்பிடணும்..கரெக்டா நாலு மணிக்கு நீ மதுரவாயல்ல இருக்கணும்..சொதப்பிடாத”.. அசுர வேகத்தில் வர வேண்டும். 350 கிமீ..

மாப்ள,,நாலு மணி கொஞ்சம் கஷ்டம்..முடிஞ்ச வரை இழுத்து பிடிச்சு வந்துடறேன்”..

தொலைபேசியை அணைத்ததும், வெறுப்பாய் இருந்தது. கிளம்ப மனதில்லாமல் அமர்ந்திருந்தேன்..குளிர்ச்சி இதமாக இருந்தது. வாரந்தாவின் முனைக்கு வந்து, வேப்ப மர நிழலில் நின்று, டிரைவர் சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டிருந்தான்..

மீண்டும் குமாரை அழைத்தேன். “டேய்! அவசரம்தான்..ரொம்ப விரட்டாத..உன் கண்ட்ரோல்ல வா..லேட்டானா பரவாயில்லைஎன்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் போனை தூக்கி சீட்டில் எறிந்து விட்டு, வண்டியை கிளப்பினேன்..