Tuesday, February 19, 2013

மணல்கடிகை - எம்.கோபாலகிருஷ்ணன்ஒரு திரைப்படமோ, சிறுகதையோ அல்லது நாவலோ எனது அளவுகோல் மிக எளிதானது. என்னை நான் எங்கேனும் ஓரிடத்திலாவது பொருத்திப் பார்க்குமளவிலிருக்க வேண்டும். கதாபாத்திரங்களோ,விவரணைகளோ அல்லது காட்சியமைப்போ/சம்பவங்களோ, என்னளவிலான வாழ்வியல் அனுபவத்தினை சார்ந்து நம்பகத் தன்மையோடு இருக்க வேண்டும். குறைந்தபட்ச தத்துவ விசாரணைக்கு என்னை நானே உட்படுத்துமளவில் இருக்க வேண்டும்.இவ்வாறு என்னால் நிலைகொள்ள முடியாத, என் எண்ணத்தினை குவிக்க முடியாத ஒரு திரைப்படமோ அல்லது எழுத்தோ என்னைப் பொறுத்த அளவில் நேரவிரயம் மட்டுமே. அது எனக்கு எந்த விதத்திலும் உதவாது.இந்த எளிய அளவுகோலின் படி, மணல் கடிகையை வாசித்த கணங்கள் எனக்கு மிக முக்கியமானவை. வாழ்நாள் முழுதும் நினைவிலிருக்கக் கூடியவை. இந்த 600 பக்க நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் என்னால் மிக நெருக்கமாக உணர முடிந்தது. என்னை சுற்றியிருப்பவர்களை, கடந்து வந்தவர்களை, நான் கடந்து வந்த வாழ்வை, பல இடங்களில் என்னையே வெகுசுலபமாக ஒவ்வொரு அத்தியாயத்தின் கதாபாத்திரங்களிலோ, காட்சி விவரணைகளிலோ,உரையாடல்களிலோ அல்லது குறியீடுகளிலோ உணர முடிந்தது.இதை விட வேறென்ன பெரிய தரிசனத்தை ஒரு எளிய வாசகனுக்கு ஒரு சிறந்த கதைசொல்லி அளிக்க முடியும்

நம்மில் பல பேர் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் வரும் ஒரு படப்பாடலில் உருவாகும் கோடிஸ்வரர்களை கேலி செய்திருப்போம். கொஞ்சம் மிகைப்படுத்தப் பட்ட சித்திரமாக இது தோன்றினாலும், திருப்பூர், சேலம், ஈரோடு கரூர் மற்றும் இன்னபிற தொழில்சார்ந்த சிறு குறுநகர மக்களுக்கு இது ஒன்றும் நகைப்புக்குரிய காட்சியமைப்பல்ல. நாள்தோறும் காதில் விழும், கண்ணில் படும் சாதரண தினசரி நிகழ்வு இவை. எங்கள் ஊரில் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு கடை கடையாக சென்று நூல் மூட்டைகளை முதுகில் ஏற்றி இறக்கிய ஒருவர், சைக்கிள் கட்டிக்கொண்டு தெரு தெருவாகச் சுற்றி காலிக் கோணிப்பைகளை சேகரித்தவர், உணவகம் ஒன்றில் மேசை துடைத்தவர், பத்தாம் வகுப்பு முடித்து விட்டு டெக்ஸ்டைலில் தினக்கூலிக்கு பிசிரு வெட்டும் வேலைக்கு சென்ற ஒருவர் ஆகியோர் இன்று எங்கள் நகரின் டாப் 10 பணக்காரர்களில் அடக்கம்.நூறு முதல் இருநூறு கோடி ரூபாய் விற்றுமுதல் செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்கள். 300 முதல் 1000 பேர் வரை வேலை செய்யும் நிறுவனங்களின் முதலாளிகள். நகரின் ஆகப்பெரிய உணவகம், திரையரங்குகள், நிதி நிறுவனங்கள் மற்றும் நகரின் பல முக்கிய கட்டிடங்களுக்கு அதிபதிகள். இந்த நிலைக்கு அவர்கள் வருவதற்க்குச் செய்த தியாகங்கள், நம்பிக்கை துரோகங்கள், உடனுள்ளோரின் திறமையை மதித்த/கணித்த பண்பு, தானங்கள், பிறர் எடுக்கத் தயங்கிய துணிச்சலான முடிவுகள், எண்ணம், திடம், தன்னம்பிக்கை, உழைப்பு என இன்னும் பல கதைகள் இவர்களை பற்றி நாட்டார் கதைகள் போல தினமும் நகருக்குள் சுற்றி வந்துக் கொண்டுதான் உள்ளன. எப்பக்கம் சுற்றி வந்தாலும் 5-10 கி.மீக்குள் எல்லை முடிந்துவிடும் இது போன்ற சிறுநகரங்களில், இந்த கதைகள் பெரும்பாலும் மேற்படி அதிபதிகளின் ஆரம்ப கட்டத்தில் உடனிருந்து உதவி செய்த அல்லது துரோகம் இழைக்கப் பட்டவர்கள், ஏதேனும் ஒரு கட்டத்தில் உடன் சாட்சியாக இருந்தவர்கள் எனப் பலராலும் ஆற்றாமையாகவோ அல்லது நம்மோடு நம்முன்னே சுற்றி கொண்டிருந்தவன் மேலேறி விட்டான் என்ற பொருமலாகவோ பல பல பேர்களுக்கு சொல்லப் பட்டு கொண்டிருக்கிறது. இக்கதைகள் ஒரு தொடர்ச்சங்கிலி ஓட்டம் போல் பல வருடங்களுக்கு ஆள் மாற்றி ஆள் சொல்லப் பட்டு நகரிலிலுள்ள அனைவரையும் சென்று சேர்ந்து கொண்டுதான் உள்ளது.

ஏதோ ஒரு சிறிய கண்ணி உள்ளது. அதை திறம்பட ஒவ்வொரு தருணத்திலும் பிடித்தவன் நூலேணியாக இருந்தாலும் அதைப் பற்றி மேலே மேலே என உயரம் சென்று விடுகிறான். அந்த கண்ணியின் சூட்சுமம் தெரியாதவன் தேவதைகளே பக்கம் வந்து நின்று ஆசிர்வதித்தாலும் உழன்று கொண்டே பாதாளத்தில் விழுந்து விடுகிறான் அல்லது இருக்குமிடம் விட்டு சாண் அளவு கூட நகர்வதில்லை. இந்நகரில் இரண்டே வகையினர்தான்.பணம் செய்யத் தெரிந்தவன் அல்லது பணம் செய்யத் தெரியாதவன்.அவ்வளவுதான்.நகரின் ராட்சத சுழல் இவையிரண்டையும் தவிர வேறெந்த கிளைப்பிரிவும் உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறது.

பள்ளிப்பருவம் முடிந்த ஐந்து நண்பர்கள்,அவர்களின் வாழ்வின் வழியே, திருப்பூர் நகரத்தின் அசுர வளர்ச்சியை, அடித்தட்டு மக்களின் தளம் விட்டு தளம் மாறும் அவல வாழ்வை அழகாக நீட்டிச் செல்கிறார் எம்.கோபாலகிருஷ்ணன்.ஒவ்வொரு அத்தியாத்திலும் ஒரு தரிசனத்தை முன்வைக்கிறார்.பதின் வயதில் அழகான பெண்ணொருத்தியின் கடைக்கண் பார்வையிலும் சிறு புன்முறுவலிலும் மயங்கி அவள் பின் அலையும் இளவட்டம் போல் நாமும் எம்.கேவின் பக்கங்களினூடே திருப்பூரின் பாண்டியன் நகரிலும், கொங்கு நகரிலும், ரயில்வே மேம்பாலத்திலும், ஊத்துக்குளி ரோடிலும், பி.என் ரோட்டிலும் பித்துப் பிடித்து படபடப்புடன் அலைகிறோம்

சிவாவின் கதாபாத்திரமே இந்நகரின் மிகச்சிறந்த மாதிரி. தொழில்சார்ந்த நகரில் லெளகீக வெற்றிக்கான திறப்புகள் விசாலமாக கண்ணின் முன்னால் எந்நேரமும் எங்கெங்கும் பரந்து நிற்கின்றன. நகரின் தெருக்களில் ஏதாவது ஒரு பணி நிமித்தம் நாள் முழுதும் அலைந்து கொண்டேயிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் சிவாவின் வார்ப்புருவாகவே இருக்கிறான். அந்த கண்ணியை தேடிக்கொண்டே, ஓடிகொண்டிருக்கும் இனத்தின் மாதிரி சிவா. அன்பழகன், பல கண்ணிகள் கைக்கு எட்டினாலும் தன்மானம் மற்றும் இன்னபிற தன்னிலை மிகு உணர்ச்சிகளின் பால் உழன்று கொண்டே, நகரின்/நண்பர்களின் வளர்ச்சியை உள்ளே ஏற்றுக் கொள்ள முடியாத மனப்புழுக்கத்துடனும்,மேலேறும் கனவுடனும் அலைந்து கொண்டேயிருக்கும் நகரின் பெருவாரியான திறமையில் சற்றும் சளைக்காத இளைஞர் கூட்டத்தின் மாதிரி. திரு, ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் காரியத்தில் கண்ணாக நகரின் வளர்ச்சியை உள்வாங்கி உபயோகித்துக் கொள்ளும், இருக்குமிடத்திலிருந்து இல்லாத இடம் ஓடி அவ்விடத்தை வளப்படுத்தி மீண்டும் வேறிடம் சென்று என சுழலிலேயே இருக்கும் பணப் பெயர்ச்சியின் சூட்சுமத்தை உணர்ந்து வளரும் நகர இளைஞர்களின் மாதிரி. பரந்தாமன், இளமை வேகத்தில் இல்லற சூறாவளியில் சிக்கி நிம்மதியிழந்து அச்சிக்கலை களைவதே வாழ்வின் பயனாக அலைபாயும் நகரின் பெருவாரியான இளைஞர்களின் மாதிரி. சண்முகம், இலட்சியவாதம் பேசி இலக்கியத்தில் மிதந்து அனைத்தையும் அவலமாக பார்க்கும் எல்லா நகரத்துக்குமான சொற்ப இளைஞர்களின் மாதிரி. இந்த இளைஞர்களின் வாழ்க்கையை, எண்ண ஓட்டங்களை இணையாக ஒவ்வொரு அத்தியாயத்தின் மூலம் 1970 களின் இறுதிவருடங்களிலிருந்து துவங்கும் கால கட்டத்தில் ஒரு சிறு நகரத்தின் அதன்தம் மக்களின் உருமாறுதலை அழகாக சொல்லிச் செல்லும் இந்த மணல்கடிகை ஒவ்வொரு இலக்கிய வாசகனுக்கும் நல்ல ஒரு அனுபவத்தைத் தரும்.

திருப்பூர் நகருக்கே உரித்தான தின அவலங்களில் ஒன்றான ஏமாற்றும் சிட்பண்ட் கம்பெனிகள், எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணில் படும் பேக்கரிகள், விடாமல் துரத்திக் கொண்டே இருக்கும் கொத்துபுரோட்டா கொத்தப் படும் சத்தம், விடி நைட் எனப்படும் இரண்டு புரோட்டாவை சாப்பிட்டு விட்டு விடிகாலை வரை வேலைசெய்யும் ஷிப்ட்கள், அந்த ஷிப்ட்களில் ஒலிக்கும் ஆமைவடை ஓட்டைவடை ரக சால்னா பாடல்கள், பதினெட்டு மணி நேர வேலைக்கு நடுவில் கிடைக்கும் ஒரு மணிநேர சாப்பாடு வேளையில் அனைவரின் கண்ணிலும் எண்ணையை விட்டு விட்டு நிறுவனத்தின் ஏதோ ஒரு மூலையில் அட்டைப்பெட்டிகளை தரையில் கிடத்தி கண நேரத்தில் புணர்ந்தெழும் சாகசங்கள், வருடத்துக்கு ஒரு முறை பெரும்தனக் காரர்களால் நடத்தப் படும் சடங்கான விஸ்கியும் பிராந்தியும் ஊற்றிக் கொடுத்து கறிவிருந்து படைக்கும் கிடா வெட்டு, ஓரளவு சம்பாதித்தபின் சென்னைக்கு ஒரு எட்டு போய் ஏதாவது ஒரு நடிகையுடன் சில இரவுகளுக்காக லட்சங்களை செலவு செய்யும் கனவான்கள், வாரம் முழுதும் சக்கையாக வேலைசெய்து வார இறுதியில் பக்கத்திலிருக்கும் குன்னூருக்கோ, கோத்தகிரிக்கோ அல்லது ஊட்டிக்கோ சென்று குடித்து கும்மாளமிட்டு மீண்டும் திங்கள் முதல் செக்கு மாட்டு வாழ்க்கைக்கு திரும்பும் இளைஞர்கள், பாரின் ஏஜண்ட் அலுவலகங்களில் வேலை செய்யும் தரச்சோதனை ஆய்வாளர்கள் இன்ஸ்பெக்சன் என்ற பெயரில் முதலாளிகளுடன் நடத்தும் கண்ணாமூச்சி விளையாட்டுகள், டெய்லர்களும்,பேக்கர்களும் இன்ன பிற தொழிலாளர்களும் அவர்களுடன் வேலை செய்யும் பெண்களும் நடத்தும் இரட்டை அர்த்த வார்த்தை விளையாட்டுகள், சூபர்வைசர்கள் பெண்களை பிராக்கெட் போடும் தொழில் நேர்த்தி, பதினைந்து வயதில் மிரட்சியுடன் ஏதோ ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பர பரவென தொழில் கற்று சில வருடங்களிலேயே வீட்டுக்குள்ளேயே கட்டிங் டேபிளும் மிஷினும் போட்டு குடும்பத்தை கரையேற்றும் பெண்கள் அதை உறிஞ்சி தின்னும் ஆண்கள், சின்னஞ்சிறு கவனக்குறைவால் அளவிலோ அல்லது வேறு ஏதேனும் விதத்திலோ உருப்படிகளின் நேர்த்தியில் தவறு நேர்ந்து மாதக்கணக்கில் இரவு பகலாக வேலை செய்த மொத்த வேலையும் நிறுவனங்களினால் நிராகரிக்கப் பட்டு கண்முன் கிடக்கும் வேதனை என பக்கங்களால் எழுதி நிரப்பமுடியாத அத்தனை தகவல்களையும் தரவுகளையும் 
திருப்பூரின் இண்டு இடுக்குளில் புகுந்தெழுந்து, நகரவாசிகளின் மனதில் உட்சென்று வெளியேறாமல் இப்படி ஒரு படைப்பு ஒரு ஆசிரியருக்கு சாத்தியமேயில்லை.இந்த நகருக்கு மட்டுமே உரித்தான இவ்வளவு தகவல்களையும் கதையில் வலிந்து திணிக்காத எழுத்து நடையுடன் நாவல் எழுதிச் செல்லப்படும் விதம் முற்றிலும் புதிய வாசிப்பனுபவத்துக்கு உரித்தாக்குகிறது..

கதாபாத்திரங்களாகட்டும், இயந்திரத் தனமான நகரின் அசுர வளர்ச்சியினை விவரிப்பதாகட்டும், நகரத்தின் அகோரபசியுடன் இணைந்து உருமாறும் மக்களின் வாழ்வும், வாழ்வு சார்ந்த பார்வைகளாகட்டும், நகரத்தின்  தொழில் மற்றும் அது சார்ந்த நுண்ணிய விவரணைகளாகட்டும் - மிகப்பெரிய ஆச்சர்யங்களை வாசித்து செல்லும் ஒவ்வொரு பக்கங்களிலும் ஆசிரியர் பொதித்து வைத்துள்ளார். மனிதர்களை மற்றும் நகரத்தினை மிகக்கூர்மையாக அவதானித்தது மட்டுமல்லாமல் அதை எழுத்திலேற்றி வாசகனுக்கு சற்றும் குறைவில்லாமல் கடத்தியுள்ளார். அசோகமித்திரனின் தண்ணீர் மற்றும் நாஞ்சில் நாடனின் எட்டுதிக்கும் மதயானைக்கு பின் ஒரு நகரத்தினையும் அது மக்கள் மனதில் உண்டாக்கும் மாற்றங்களையும்  இவ்வளவு அருகில் நான் தரிசித்தது இந்நாவலில்தான்.எனக்கு நெருங்கிய களம் என்பதால் இந்நாவல் இன்னும் நெருக்கமாக உள்ளே சென்று மனதில் சம்மணமிட்டு அமர்கிறது.

மணல்கடிகை – MAGNUM OPUS!

திரு.எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என்றென்றும் என் நன்றிகள்.

வெளியீடு-தமிழினி

2 comments:

rajasundararajan said...

சரியாக உள்வாங்கி இருக்கிறீர்கள். உங்கள் எழுத்தை வாசிக்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது! நன்றி!

ராகின் said...

ரா.சு சார்.. மகிழ்ச்சி.கொஞ்சம் நெருங்கிய கதைக்களம் என்பதால் வாசிப்பு எளிதாகிவிட்டது.

Post a Comment