Tuesday, January 01, 2013

2012


அலுவலக நிதி நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியதால், நிர்வாகம் சில சிக்கன நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டது. சுமார் 15 முதல் 18 வருடம் வேலை செய்த சிலரையும், தேவைக்கதிகமாக சில துறைகளில்  இருந்த சிலரையும் பணி விடுப்பு செய்ய நேரிட்டது. அனுபவஸ்தர்களை வீட்டுக்கனுப்பி விட்டு,அடுத்த நிலை சகாக்களை மேலுயர்த்தி அலுவல்களை தொடர்வது ஆரம்பத்தில் மிகுந்த வேலைப்பளுவையும், மன உளைச்சலையும் கொடுத்தாலும் இப்பொழுது ஓரளவு அனைத்தும் நிலையில் வந்துவிட்டது.  எப்பொழுதும் செய்து வந்த வேலைதான் என்றாலும், கிளை மேலாளர் என்ற அலுவல்ரீதியான அடைமொழி இந்த ஆண்டு கிடைத்தது.

நீண்ட நாள் ஆசைகள் இரண்டு இந்த ஆண்டு நிறைவேறியது. சிறிய ஆசை - லேப் டாப். பல நாட்களாக தள்ளிப் போட்ட ஆசை, தயாவின் வீட்டு பாடங்கள் மற்றும் பங்கு வர்த்தகத்தினை சாக்கிட்டு வாங்கி விட்டேன். ஆனால், வாங்கிய பின் அதன் முழுமுதற் காரணமான பங்கு வர்த்தகத்தினை வெகுவாக குறைத்து விட்டேன், அலுவலக பணிச்சுமை காரணமாக. ஆனால், கிட்டதட்ட ஒரு ஐம்பதுக்கும் மேலான நல்ல ஆங்கில படங்கள் பார்த்து விட்டேன். லேப்டாப்பில் ஹெட்போனில் தனிமையில் படம் பார்ப்பது தனி அனுபவம். மேலும், மிக நல்ல இளையராஜாவின் சேகரிப்புகளையும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுபவித்து கேட்க முடிந்தது. லேப்டாப்பின் செலவாணி பணம் சுகாவின் இந்த கட்டுரையை ஹெட்போனில் படித்த இரவில் செரித்தது.

இரண்டாவதாக சற்றே பெரிய நீண்ட நாள் ஆசை - ஒரு அழகான சின்ன கார். நீண்ட யோசனைக்கு பின், வீடு வாங்குவதை தள்ளிப்போட்டு விட்டு ஃபோர்ட் ஃபிகோ கார் டிசம்பர் மாதம் வாங்கினேன். மனதுக்கு நெருக்கமான கருப்பு கலர் காரின் சவாரி கடந்த இரு வாரங்களாக தரும் மகிழ்ச்சி இதுவரை அனுபவிக்காதது. குடும்பத்துடன் ஒரு சின்ன சவாரியும் பிள்ளையார்பட்டி வரை சென்று வந்தாகிவிட்டது.. கார் வாங்கிய சந்தோஷத்தை விட, அதில் “புத்தம் புது காலை”யும் “ஒரு கிளி உருகுது” வும் ஒலித்த போது கிடைத்த சந்தோஷம் அலாதி. வீட்டுக் கடன் தவணை காலத்தை எண்ணி பார்த்த போது உண்டான ஆயாசமே கார் வாங்கச் சொல்லி உந்தியது.. இருக்கும் வரை நாமும், குழந்தைகளும் அனுபவிப்போம். வீடு எனும் மாயச்சுழலிலும், தாங்கமுடியாக் கடனிலும் சிக்கி அல்லலுறவேண்டாம் என்பதே 2012ல் எடுத்த ஆகப்பெரிய முடிவு. பசங்களை நல்லா படிக்க வைப்போம், சந்தோஷத்தை கொடுப்போம்.அதுக்கப்புறம் அவங்க வாழ்க்கை,அவங்க கையில்!

 ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முக்கிய முடிவுகளை பற்றி யோசிப்பேன். ஒன்று புகை, மற்றொன்று தொலைக்காட்சி.. இந்த ஆண்டும் கொஞ்ச காலம் இரண்டுமே தீவிரமாக குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டது. 2013ன் முக்கிய தீர்மானமே இவைதான். மேலும், எல்லா 30+ம் எடுக்கும் தீர்மானமான எடைகுறைத்தல் மற்றும் சீரான உடற்பயிற்சியும் 2013ன் பட்டியலில் உண்டு.

படிப்பது பெருமளவு இந்த ஆண்டு குறைந்து விட்டது.. நாவல்களை விட கட்டுரை தொகுப்புகளையே மனம் நாடியது. படித்தவை வெட்டுப்புலி, பல நேரங்களில் பல மனிதர்கள், வண்ணதாசன் சிறுகதை தொகுப்பு (பாதி நிலுவையில்),நாஞ்சில் நாடனின் சிறுகதை தொகுப்பிலிருந்து சில கதைகளின் மறுவாசிப்பு மற்றும் காவலன் காவன் எனின், பிரபஞ்சனின் தாழ பறக்காத பரத்தையர் கொடி மற்றும் எஸ்ராவின் உறுபசி.

 இந்த ஆண்டுதான் அரங்குகளில் பார்த்த திரைப்படங்களின் எண்ணிக்கை குறைவென நினைக்கிறேன்..கவர்ந்தவை பீட்சா மற்றும் நான் ஈ (மகளுடன் பார்த்ததால்).எரிச்சலை கிளப்பியவை துப்பாக்கி,ஒரு கல் ஒரு கண்ணாடி, வழக்கு எண் 18/9 மற்றும் பில்லா II..

உதயனின் மழலையும்(இப்பொழுது அவனுக்கு 2 1/4 வயது), அளவுக்கதிமான சேட்டைகளும் நிறைய மகிழ்வான தருணங்களை அளித்தது.

2013-க்கென பிரமாதமான திட்டங்கள் ஏதுமில்லை..மனதில் தோன்றும் சில..முடிந்தவரை தமிழக நிலபரப்பை காரில் அளந்து விட வேண்டும். ஒளி ஊடகங்களை குறைத்து, ஒலி மற்றும் புத்தகங்களுக்கு அதிக நேரம் மற்றும் கொஞ்சம் உடல் கவனிப்பு. அவ்வளவே!

பிற்சேர்க்கை : 2004/05 ல் இருந்து பதிவுலகை நெருக்கமாக கவனித்து வந்தாலும் இதுவரை எங்கும் அதாவது பதிவுகள், பஸ் மற்றும் பிளஸ்களில் அதிக தொடர்பில் இருந்தது இல்லை..சில பின்னூட்டங்கள் மட்டும் சிலருக்கு அளித்தது உண்டு..இந்த ஆண்டு கொஞ்சம் இணைய உலகில் ஆக்டிவாக இருக்க அவா. பார்ப்போம்!

No comments:

Post a Comment