Tuesday, July 06, 2010
எனக்கு இப்படி. உங்களுக்கு எப்படி?
ஏன் - நாம வாங்கின உடனே அந்த ஷேர் ரேட் இறங்குது, விற்றால் உடனே ஏறுது?
ஏன் - ஒரு பொருள் தொலைந்து போன பின் தேடி தேடிப் பார்த்து கடுப்பாகி, வேற வாங்கின உடனேயே தொலைந்த பொருள் கிடைத்து விடுகிறது?
ஏன் - பல இடங்களில் தேடிப்பார்த்து,விசாரித்து, அலசி ஆராய்ந்து வாங்கிய பிறகு, அதை விட சிறப்பான பொருளை நண்பரிடத்தில் பார்க்க முடிகிறது?
ஏன் – நாம் நிற்கும் வரிசையை விட, அடுத்த வரிசை எப்பொழுதும் சீக்கிரம் நகர்கிறது?
ஏன் – நம் வீட்டு குழந்தை மட்டும் சாப்பிடவே மாட்டேங்கிறான்/ள்..அடுத்த/பக்கத்து வீட்டு குழந்தை மட்டும் நல்ல புஷ்டியாக இருக்கிறது?
ஏன் - மனதுக்குள் மிகுந்த ஆர்ப்பாட்டமான முன்னேற்பாட்டோடு உட்கார்ந்து முழு மேட்ச்சும் பார்க்கும் கிரிக்கெட் அல்லது எந்த விளையாட்டிலும, நம் விருப்ப அணி தோற்றுப் போய்விடுகிறது?
Monday, July 05, 2010
நகுலனின் பார்வையில் வாழ்க்கை(அ) மரணம்
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு
- நகுலன்
இவ்வளவு எளியதுதானே வாழ்க்கை..இதுக்குதானே இவ்வளவு ஆட்டமும்,ஓட்டமும்.ஆனால்,மனசு புத்தியை அடக்கமாட்டேங்குதே...
Sunday, July 04, 2010
Sunscreen - வாழ்வை கொண்டாட சொல்லும் ஒரு பாடல்.
Saturday, June 26, 2010
மணி அடிச்சாதான் சோறா?
ஒரு ஊர்ல பீட்டர்னு ஒரு சின்ன பையன் இருந்தானாம்.ஒரு நாள் விபத்துல அவனோட அப்பா,அம்மா ரெண்டு பேரும் துரதிர்ஷட வசமா இறந்துட்டாங்களாம். நிராதராவா நின்ன பையனை ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு போய் அந்த ஊர்லயே இருந்த பெரிய சர்ச்ல பாதிரியார்கிட்ட விட்டு இவனை நீங்கதான் பார்த்துகணும்னு சொல்லிட்டாங்களாம்.
அந்த சர்ச்ல ஒரு ஆலயமணி இருந்தது.ஜெபத்துக்கு முன்,பின் மற்றும் ஊர்ல நடக்கிற நல்ல சேதி, கெட்ட சேதியை பரிமாறன்னு பல விஷயங்களுக்கு மணி அடிச்சு தகவல் பரிமாறுவதுதான் வழக்கம்.பாதிரியார் பீட்டரை கூப்பிட்டு அந்த மணி அடிக்கற வேலையை கொடுத்துட்டார். காலம் அப்படியே உருண்டோடுச்சு. பீட்டரும் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் மணி அடிச்சுகிட்டே வளர்ந்தான். பாதிரியாருக்கு ரொம்ப வயசாகிட்டதால, அவர் ஓய்வில் செல்ல, புதுசா ஒரு பாதிரியார் பொறுப்புக்கு வந்தார்.
இவர் கொஞ்சம் இளைஞர் மற்றும் சிந்தனாவாதி. இவர் நிறைய நிபந்தனைகள் மற்றும் ஒழுக்க கட்டுப்பாடுகளை அங்கிருக்கும் ஊழியர்கள் முன் வைத்தார். முக்கியமான நிபந்தனை, அனைவருக்கும் எழுதப் படிக்க தெரிய வேண்டும். எல்லோருக்கும் ஆறு மாதகால அவகாசம் கொடுத்து, யாருக்கெல்லாம் ஆறுமாத கால முடிவில் எழுத படிக்க தெரியலையோ, அவங்க வேலைல இருந்து நீக்கப் படுவாங்கன்னு அறிவிச்சுட்டார். நம்ம பீட்டரோ கைநாட்டு. எல்லோரும் சிரமப் பட்டு படிக்க ஆரம்பிக்க நம்ம பீட்டர் மட்டும் மணி அடிச்சா சோறுன்னு இருந்தானாம். ஆறு மாசம் முடிஞ்சது. எல்லோரையும் கூப்பிட்டு பாதிரியார் சோதனை பண்ணினார். ஒரு சில பேர் எழுதி,படிச்சு காட்ட, ஒரு சில பேர் தட்டு தடுமாறி எழுதவும், எழுத்துக் கூட்டி படிக்கவும் செஞ்சாங்க..நம்ம பீட்டர் மட்டும் ”தேமேன்னு” எதுவுமே பண்ணாம இருக்க, பாதிரியார் கோபப்பட்டு வேலையை விட்டு போன்னு சொல்லிட்டார்.
ஊர் பெரிசுங்க எல்லாம் பரிதாப பட்டு கொஞ்சம் டைம் எக்ஸ்டன்சன் கேட்க, பாதிரியார் இன்னும் ஒரு மூணு மாசம் டைம் கொடுத்தார். ஆனா, நம்ம பீட்டர்க்கிட்ட மூணு மாதம் முடிந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.கொஞ்சம் இறங்கி வந்த பாதிரியார், “சரி, ஒரு மாசம் டைம் தரேன். உன் பேர் மட்டுமாவது கையெழுத்து போட கத்துகிட்டா, வேலை தங்கும்”னார். ஊஹிம்..பாவம் நம்ம பீட்டர்..அதுவும் அவனால முடியலை..கடுப்பான் பாதிரியார், பீட்டரை வேலையை விட்டு தூக்கிட்டார்..
30 வருசமா பார்த்த வேலையை விட்டுட்டு சோகமா வெளியே வந்த பீட்டர், தம்மடிக்கலாம்னு பார்த்தா..ஒரு கடையும் அந்த தெருவுல காணோம்..உடனே அவனுக்கு ஒரு யோசனை வந்தது..இவ்வளவு நாளா சேர்த்து வைச்ச சின்ன சேமிப்புல, சர்ச் இருக்கிற தெருவிலேயே சின்ன பெட்டிக் கடை ஆரம்பிச்சான். சிகரெட், குளிர்பானம், தினசரிகள்னு சீக்கிரமே வியாபாரம் பிக்-அப் ஆச்சு...
ஓரளவு வியாபாரம் செட் ஆனதும் ஒரு சின்னப் பையனை கடையை பார்த்துக்க சொல்லிட்டு, மெயின் கடைவீதில ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சார்.
இப்படியே அந்த ஊர்ல ஒவ்வொரு தெருவா போய் பார்த்து, எது தேவையோ அதை உணர்ந்து வரிசையா துணிக்கடை, செருப்புக் கடைன்னு ஆரம்பிக்க,சர்ச்சுக்கு தினசரி வந்துகிட்டு இருந்த ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, அவனுக்கு வங்கி கடன் கிடைக்க ஏற்பாடு பண்ண, அவரோட ரொம்ப நாள் சர்ச் விசுவாசம் மற்றும் பணிவு காரணமா, அவர் மேல் ஊர்மக்களுக்கு இருந்த நம்பிக்கைல, அவங்க ஆதரவோட எல்லா தொழிலும் நல்ல லாபத்துல போச்சு..
புதுசா அந்த ஊருக்கு வந்த பேங்க் மேனேஜர், நம்ம “தொழிலதிபர்” பீட்டர் பத்தி கேள்விபட்டு “டெபாசிட் அக்கவுண்ட்”க்காக அவரை போய்பார்த்தாராம். அப்பதான், பீட்டர்கிட்ட சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்டே இல்லைன்னு தெரிய வந்து ஆச்சர்யமா “ஏன் சார்” ன்னு கேட்டாராம். “எனக்கு கையெழுத்து போட தெரியாததால அக்கவுண்ட் ஓப்பன் பண்ண முடியாதுன்னு நினைச்சேன்”னு பீட்டர் சொன்னாராம்
அதிர்ச்சியோட உச்சத்துக்கே போன மேனேஜர் “ சார், கைநாட்டு போட தெரிஞ்சே இவ்வளவு உயரத்துக்கு வந்துட்டீங்க..உங்களுக்கு கையெழுத்து மட்டும் போட மட்டும் தெரிஞ்சு இருந்தா ?” அப்படிங்க...
பீட்டர் சிரிச்சுக்கிட்டே சொன்னாராம் “ மணி அடிச்சுகிட்டு இருந்திருப்பேன்”.
---------xxxxxxxx-----------------xxxxxxxxxxxx-------------
டிஸ்கி : லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது..நீதியை மட்டும் பார்க்கணும் :)
Friday, October 10, 2008
ஒரு தலைமுறையின் முதல்நாள்.
நேற்றிலிருந்தே என்று சொல்லலாம். வயிற்றுக்குள் ஏதோ பிசைந்து கொண்டிருப்பது போன்ற அவஸ்தை! காலையில் பிசைவு அதிகமாகி கொண்டே வந்தது..என் இரண்டரை வயது செல்ல மகள் இன்று முதன் முதலாக பள்ளி செல்கிறாள்.
மிகுந்த பிடிவாத குணம் உடையவள். ஒரு முறை, சுமார் ஆறுமணி நேரம் வேண்டியது கிடைக்கவில்லை என அழுதிருக்கிறாள்.அவளது பிடிவாதத்துக்கான காரணங்கள் விசித்திரமாய் இருக்கும். மின்விசிறியை அவள் போடும் முன் நான் போட்டது, அவள் படுத்திருக்கும் தலையணையில் நான் கை வைத்தது, அவளை கேட்காமல் நான் ஷர்ட்டில் இருந்து டிஷர்ட்டிற்க்கு மாறியது என இது போன்ற எண்ணற்ற காரணங்களுக்கெல்லாம் பிடிவாதம் பிடித்து அழுவாள். பிறந்ததிலிருந்து இதுவரை என் அல்லது மனைவியின் அருகாமை இல்லாமல் அவள் இருந்ததில்லை.அவள், புத்திசாலி. ஒரு விசயத்தை பொறுமையாக சொன்னால், கச்சிதமாக பிடித்து கொள்வாள். பார்க்கும்/கேட்கும் எந்த விசயத்தையும் அப்படியே மனதில் இருத்தி கொள்வாள்.
பள்ளி செல்ல அவள் முரண் பிடிக்க கூடாதென சுமார் ஆறுமாத காலமாக பள்ளிச் சூழல் பற்றி நல்ல விதமாக அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி, அவளும் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமை பள்ளிக்கு முதல் நாள் அவளுடன் சென்று புத்தாடைகள் எடுத்து கொடுத்ததை மிகவும் ரசித்தாள். "அப்பா, டோரா பேக் வாங்கி கொடுப்பா", " ஷீ வாங்கி கொடுப்பா" என ஆனந்த கூத்தாடினாள்..
தினமும் 8 மணிக்கு தூங்கி எழும் பழக்கமுள்ளவள், பள்ளி செல்லும் நாள் அதிசயமாக ஏழு மணிக்கே எழுந்து விட்டாள். அவளுடன் போராடி குளிக்க வைத்து, புத்தாடை அணிய செய்து, சாப்பிட வைக்க தயார் செய்யும் போது பள்ளி வாகனம் வந்து விட்டது. வாகனத்தை பார்த்தவுடன் குஷியாகி செருப்பணிந்து அதில் ஏற ஓடி விட்டாள். முதல் நாள் என்பதால் நாங்கள் கொண்டு வந்து பள்ளியில் விடுகிறோம் என சொல்லி விட்டு அவளை சாப்பிட வைக்க முயற்சி செய்தோம். அவள் சாப்பிடாமல் அடம் பிடிக்க, பால் மட்டும் குடிக்க செய்து விட்டு, நானும் மனைவியும் மகளுடன் பள்ளிக்கு கிளம்பினோம்.
என் மகள், புதிதாக யாரும் அவளை தொடக்கூட அனுமதிக்க மாட்டாள்.கத்துவாள். வழியெல்லாம், நான் அவளுக்கு எப்படி "மிஸ்ஸிடம்" தண்ணீர் வேண்டும் என கேட்க வேண்டும், எப்படி அவசர உபாதைகளுக்கு "மிஸ்ஸின்" உதவியை நாட வேண்டும், எப்படி மற்ற குழந்தைகளுடன் ஒத்து உறவாட வேண்டும் என விளக்கமாக சொல்லி கொண்டே வந்தேன். எல்லாவற்றுக்கும் " ஓகேப்பா" "ஓகேப்பா" என சொல்லி கொண்டே வந்தாள்.
பள்ளியை நெருங்க நெருங்க என் இதய துடிப்பு அதிகரிப்பதை உணந்தேன். ஏற்கனவே ஒருமுறை என் மகளை பள்ளிக்கு அழைத்து சென்றிருப்பதால், பள்ளியை பார்த்த உடனேயே "அப்பா ! எங்க "ஸ்கூல்" என சந்தோஷ கூச்சலிட ஆரம்பித்து விட்டாள். உள்ளே நுழைந்தவுடன், அங்கே இருந்த கத்தரிப்பூ செடியை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டாள். அவளை அழைத்து கொண்டு உள்ளே நுழைந்தோம். அவளது வகுப்பில் மொத்தம் 20 பேர். உள்ளே நுழைத்தவுடன், அவளுக்கென்று ஒரு சிறிய நாற்காலி தந்தார்கள்.அழகாக அதில் உட்கார்ந்து விட்டாள். நானும்,மனைவியும் "ஒகே டா செல்லம் bye" என்றோம். "எங்கம்மா போறீங்க?" என்றாள். " பாப்பா இங்க பிரண்ட்ஸ் கூட இருப்பாளாம். அம்மா ஏற்கனவே சொன்ன மாதிரி அப்புறமா வந்து கூப்பிட்டுட்டு போவேனாம்!!" என்றவுடன், "ஒகேம்மா.bye" என்றாள்.
நாங்கள் வீடு திரும்பும் போது, மனைவி ஏதேதோ பேசி கொண்டு வந்தார்கள். என் காதில் எதுவுமே விழவில்லை. மனமெல்லாம், என் மகளிடமே இருந்தது. மனைவியை வீட்டில் விட்டு விட்டு அலுவலகம் வந்து சேரும் வரை மனம் முழுவதும் மகளே ஆக்கிரமித்திருந்தாள்.
அலுவலக வேலைகளில் நான் கரைந்து, பின் சிறிது ஆசுவாசபடுத்த நேரம் கிடைத்த போது மணி 11.00 ஆகி விட்டிருந்தது..மீண்டும் மகளின் முதல் பள்ளி நாள் ஞாபகத்துக்கு வர, ஏனோ நீண்ட நாட்களுக்கு பிறகு என்னையும் அறியாமல்..என் கண்களின் ஓரங்களில்..சிறுதுளிகள்..
