எங்க பார்த்தாலும் ஞானி-கலைஞர் புகைச்சலா இருக்கு( நான் இந்த பதிவை எழுத நினைத்த போது இருந்தது).இந்த பதிவு,அந்த பிரச்னையை பற்றி இல்லை.ஆனால்,இந்த பிரச்னைதான் என் மனதில் ரொம்ப நாட்களாக என் தாத்தாவை பற்றி நான் வருந்தியதை,பதிவாக எழுத தூண்டியது.
எங்க தாத்தா அதாவது அம்மாவின் அப்பா, ஒரு சிக்ஸர் அடிச்சா செஞ்சுரி போட்டுவிடும் வயசு.கொள்ளு பேரன், பேத்தி பார்த்து விட்டார்.எங்கள் வீட்டின் மாடி போர்ஷனில் இருந்தார். இப்பொழுது எங்கள் கூட இல்லை.எங்கள் மாமா வீட்டில் இருக்கிறார்.
தினமும் காலைல ஆறு மணிக்கு எழுந்து விடுவார்.வெந்நீர் குளியல் முடித்து விட்டு,ஒரு சூரிய நமஸ்காரம்.காலை சன் நியூஸ் பார்த்து விட்டு டிபன். கொஞ்சம் தூக்கம்.பதினோரு மணிக்கு டீ + கொஞ்சம் நொறுக்ஸ். ஒரு மணிக்கு மதிய உணவு.பின்,தூக்கம்.நாலு நாலரைக்கு டீ+நொறுக்ஸ்.மாலை,அக்கம் பக்கம் உள்ள மற்ற பெரிசுகளுடன் அரட்டை.எட்டு மணிக்கு டிபன்.பின் உறக்கம். இதுதான் தாத்தாவின் தினப்படி நேர அட்டவணை.
தாத்தா ஆஜானுபாகுவானவர்.ஆறடி உயரம்.நடக்கும் போது, தூரமாக இருந்து பார்த்தால்,கூன் கூட தெரியாது. பக்கமாக சென்று பார்த்தால்தான் தெரியும்.ஆறுமாசத்துக்கு முன்னாடி வரை யாரோட துணையும் இல்லாம தனியாவே அவர் வேலைகளை செய்து கொள்வார். பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் இப்பொழுது படுக்கையில்தான் எல்லாமே.ரெண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை,நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடன் நிறைய பேசுவேன்.அவரும், ஆர்வத்துடன் பழங்கதை பல சொல்வார்.
தாத்தா பதினாறு வயதில் கூலிக்கு உழவு செய்ய ஆரம்பித்தவர். அவரது பதினெட்டாவது வயதில்,இரண்டு செண்ட் நிலம் வாங்கினாராம். அதன் பிறகு கடின உழைப்பின் மூலம், அவரது நாற்பதாவது வயதில் கிட்டதட்ட இருபது ஏக்கருக்கு அதிபதியாகி விட்டார்.எனது சிறு வயதில் தாத்தா ஊரில் விடுமுறைக்கு சென்ற போதெல்லாம் பார்த்திருக்கிறேன்.ஒவ்வொரு சாப்பாட்டு வேளையும்,கல்யாண பந்தி போல நடக்கும். கிட்டதட்ட நாற்பது,ஐம்பது பேர் சாப்பிடுவார்கள்.களத்து மேட்டில் தாத்தா இறங்கி, வேலையாட்களை விரட்டி வேலை வாங்குவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.தாத்தாவின் நிலத்தில் பாதி நிலம் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இருந்தது.இன்றைய மதிப்பு நிச்சயம் பல கோடிகள்
இருக்கும்.
ஆனால், ஒரு பிடி நிலம் கூட தாத்தா வசம் இன்று இல்லை. தாத்தாவுக்கு நான்கு பெண்கள் + மூன்று மகன்கள். தாத்தா வாரிசுகளின் திருமணத்திற்க்கு சொத்தை விற்றார்.மேலும் மகன்களும் சொத்துகளை சரியாக நிர்வாகம் செய்யாததால், எல்லாவற்றையும் இழந்து, இன்று ஊரை விட்டு வெளியேறி எங்களுடன் பல வருடங்கள் இருந்தார்.இன்று எங்கள் மாமா வீட்டில் இருக்கிறார்.
நான்கு வருடங்களுக்கு முன்பு, " ஒன்பது ரூபாய் நோட்டு" படித்து விட்டு என்னால் அதன் தாக்கத்திலிருந்து வெளிவர சில நாட்களானது.அந்த நாவலில் வரும் மாதவ படையாச்சியும்,அவரது வாழ்க்கை பயணமும் அப்படியே என் தாத்தாவை எனக்கு கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.என் தாத்தா மிக்க சுயமரியாதை உடையவர்.ஆனால் இன்று உயிர்வாழ்தலுக்காக எல்லோருடனும் தின நடவடிக்கைகள் முதல் அனைத்து விஷயங்களிலும் நிறைய சமரசம் செய்து கொண்டு வாழ்ந்தாலும்,அவரது உள்மனது எந்த அளவு பாதிக்கபட்டிருக்கிறது என்பது அவருடன் உரையாடும் போது நன்கு புரியும்.யாருக்காக எல்லாம் அவரது வாழ்க்கை முழுவதும் ஓடி ஓடி உழைத்தாரோ அவர்கள் எல்லாம் இன்று அவரை உதாசீனப்படுத்துவதாக நினைத்து நிறைய மன உளச்சலுக்கு ஆளாகிறார்.
இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில்,யாரும் அவரிடம் மனம் விட்டு பேசுவது கிடையாது. அவராலும்,அனைவரையும் அனுசரித்து போக முடிவதில்லை.
எனக்கு மனதில் அடிக்கடி தோன்றுவதெல்லாம் பின்வரும் கேள்விகள்தான்.
1.ஒரு மனிதன் என்னதான் நல்ல விதமாக மக்கள் மற்றும் பொருள் சம்பாதித்தாலும், கடைசி காலத்தில் மதிக்க படுவதில்லை என்பது பரவலாக நடப்பது ஏன்?
2.போன தலைமுறை ( அப்பா,அம்மா) அதன் முந்தைய தலைமுறையை கையாண்ட விதமும், நாம் நமது முந்தைய இரண்டு தலைமுறை மனிதர்களை கையாளும் விதமும் நமக்கே தெரியும்.அப்படியானால்,நாம் நமது அடுத்த இரண்டு தலைமுறைகளை எப்படி எதிர்கொள்கிற போகிறோம்??
3.அறுபது, எழுபது வயதுக்கு மேல், ஒரு மனிதனுக்கு நிஜமான அரவணைப்பு தேவைப்படும் காலத்தில், அவனது சுற்றம் அவனை உதாசீனப் படுத்தினால், அவனுக்கு அவன் வாழ்ந்த வாழ்க்கையே கேள்விக்குறியாக, அர்த்தமற்றதாக ஆகி விடாதா??
9 comments:
கொடிது கொடிது இளமையில் வ்றுமை கொடிது. அதனைவிட முதுமையில் செயல்பட முடியாமல் கிடையில் விழுவதுதான். வாழ்ந்து முடித்த காலத்தில் மன உளைச்சலுக்கு ஆளாவது
மிகக் கொடுமையானது.
mikavum yosikka vaitha pathivu... nan kooda neriya thadavai yosithu paarthathundu ithai patri...
but onnu mattum nichayam.. in the next generation, and generation after next, it will be very difficult to survive in old age...
தாமோதர் சந்துரு ,
//வாழ்ந்து முடித்த காலத்தில் மன உளைச்சலுக்கு ஆளாவது
மிகக் கொடுமையானது//
மிகச்சரி.வருகைக்கு நன்றி
அனானி,
என் வரையிலும் நானும் பெரியவர்கள் வாழ்ந்து முடித்த விதத்தைப் பார்த்துத்தான் வருகிறேன்.
சில அதிர்ஷ்டசாலிகள் பிள்ளைகளால் கவனிக்கப் பட்டு அமைதியாக உயிர் பிரிகிறார்கள்.
சிலர் அவதிப்பட்டே இறக்கிறார்கள்.
இதற்கு வரை முறற சட்டதிட்டம் இல்லை.
ஏதோ ஒரு கயிறு இழுத்துப் போகிறது.
நல்வாழ்வு நல் சாவு இரண்டுமே வேண்டும்.
//நல்வாழ்வு நல் சாவு இரண்டுமே வேண்டும்//
வல்லி சிம்ஹன்,மிகச்சரி
மிகவும் சிந்திக்கவைத்த பதிவு.
இதற்க்கு பதில் சொல்லும் அளவு பக்குவம் இன்னும் ஆகவில்லை என்றே என்னுகிறேன்.
சிவா,
//மிகவும் சிந்திக்கவைத்த பதிவு// நன்றி..
நல்லா எழுதியிருக்கீங்க.. இப்ப தான் படிச்சேன்..
தாத்தா இப்போ எப்படி இருக்காங்க.. என் நமஸ்காரங்களைச் சொல்லவும்..
அவரிடம் அன்புடன் பேசுங்கள்.. அது மிக நல்லது..
அன்புடன்,
சீமாச்சு
test
Post a Comment