Saturday, May 10, 2014

கானல் நீர்! - 1

பாழாய்ப் போன சங்கோஜம்தான்!. இரண்டு வருடத்தில் எண்ணி நான்கு தடவை கூட பேச விட்டதில்லை உள்ளே இருக்கும் கூச்ச சுபாவி. ஆனால்,பேசினால் கூட மகிழ்ந்திருப்பேனா எனத் தெரியவில்லை.இன்னவெல்லாம் பேச வேண்டும் என்ற கனவுகளே மிதப்பில் வைத்திருந்தது.

மூன்றாம் வருடத்தின் அந்திமக் காலங்களில் சின்னதாய் புன்னகை பரிமாறல்கள், அடாவடி நண்பர்கள் குழாம் அரட்டை அடிக்கும் போது, கூட நின்ற காரணத்தினால் சின்ன சின்ன விசாரிப்புகள் (”ஏம்பா, எப்ப பார்த்தாலும் திருநீர் பட்டை அடிச்சுட்டு வர?”, “ஹாப் ஹேண்ட் சர்ட் போட மாட்டியா? உனக்கு நல்லா இருக்கும்பா”). அவ்வளவுதான்!..கடைசி நாட்களின் ஆட்டோ கிராஃப் சம்பிரதாயங்களில், உன்னிடமும் அந்த டைரியை நீட்ட, இரண்டு பக்கத்துக்கு எழுதியிருந்தாய்.ஏதோ ஒரு கவிதையில் ஆரம்பித்து.

”ஏன் நீ எப்பொழுதும் எங்களுடன் பேசியதேயில்லை. எங்கள் எல்லோருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்.அடாவடிக் கும்பலுடன் சுற்றி வந்தாலும், நீ அவர்களில் ஒருவன் இல்லை என்பது நன்றாக தெரியும்.ஏனோ எனக்கு உன்னிடம் ஒரு செண்டிமெண்ட். டெஸ்ட் பேப்பர்ஸ் வாங்கும் போதெல்லாம் உன்னை பார்த்து விட்டு வாங்குவேன்.ரிசல்ட் நன்றாக இருக்கும்.கிட்டதட்ட மூன்று செமஸ்டராக உன்னை பார்த்த பின்தான் டெஸ்ட் பேப்பர் எழுந்து சென்று வாங்குவேன்.நீ ஏன் பேசியதில்லை என்பது தெரியாது.ஆனால்,என்னைப் பொறுத்த வரை எல்லோரும் நல்ல நண்பர்களே.பேசாத உன்னையும் சேர்த்து.கண்டிப்பாக பைனல் ரிஸல்ட் பார்க்குமன்று வந்து விடு.உன்னை பார்த்த பின்புதான் ரிசல்ட் பார்க்க செல்வேன்” என்று இன்னும் என்னென்னவோ எழுதியிருந்தாய்..

மூன்று வருடங்களை வீணடித்து விட்டதாய் கழிவிரக்கம் வந்து சூழ்ந்தது அந்த ஆட்டோகிராஃபை படித்த கணத்தில்.கல்லூரி முடித்த இரண்டாவது வாரத்திலேயே பணியில் அமர்ந்து விட்டேன். தேர்வு முடிவுகள் வெளியிட்ட நாளன்று அலுவலகத்தில் ஆகப் பெரிய இக்கட்டில் மாட்டிக் கொண்டேன். மாலை நான்கு மணிக்கு அடித்து பிடித்து, அந்த டிவிஎஸ் 50 வண்டியை கதறக் கதற முறுக்கி கல்லூரியில் கொண்டு வந்து நிறுத்திய போது, நாலைந்து நண்பர்களே இருந்தனர். ஜேம்ஸ் சொன்னான்.”மாப்ளே, எல்லோரும் இப்பதாண்டா 3.45 சதாஸ்ல ஏறிப் போனாங்க. சத்யா கூட உன்னை தேடிகிட்டு இருந்தாடா”.போர்டிகோவில் இருந்து அப்படியே திரும்பியவன், நேராக பேருந்து நிலையம் வந்து திருப்பூர் செல்லும் அனைத்து பேருந்துகளில் ஏறி இறங்கியும், உன்னை பார்க்க முடியவில்லை.என்னை நானே முழுமனதாக வெறுத்த தினம் அது.

இன்னுமொரு இரண்டு,மூன்று மாதங்கள் ஓடியது. தனிமை நடைபிணமாக்கியது. விடுமுறைகளற்ற வாழ்க்கை.விடுபட விரும்பா வாழ்க்கை. ஞாயிறு மாலை ஆறு மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி அப்படியே கண்வழி தோன்றும் சாலைகளில் சென்று கொண்டிருப்பேன். ஊரின் ஒதுக்குப் புறத்தில் ரயில்வே தண்டாவளங்களை ஒட்டிக் கிடந்த பாறைகளில் இரவு ஏழுமணிக்கும் வெயிலின் வெதுவெதுப்பு ஊறிக் கொண்டிருக்கும். அதில் படுத்து வெயிலை என்மீது வாங்கி சிகரெட் புகைப்பதென்பது அப்போதைய வாராந்திர வாடிக்கையாகி விட்டிருந்தது.

அப்படியான பொழுதொன்றில் சட்டென தோன்றவே, வண்டியில் வைத்திருந்த அலுவலக ஏடொன்றை எடுத்து, சரசரவென எழுத ஆரம்பித்தேன்.இப்பொழுது தெளிவாக நினைவில் இல்லை.ஆனால்,அக்கணத்து சஞ்சலத்தினை தெளிவாக எழுத்தில் இறக்கிய நினைவிருக்கிறது.

தனிமை,தனிமை,தனிமை எனக் கரைந்த அப்பொழுதுகளை எழுத்தில் இறக்கினேன்.இரண்டு நாட்களாக என்னுடனேயே வைத்திருந்த அக்கடிதத்தை கடைசியில் அஞ்சலும் செய்தேன். இரண்டு வாரங்கள் ஓடியும் பதில் இல்லை. பதிலின்மை பெரிய ஏமாற்றத்தை தரவில்லை.ஒரு வழிப்பாதை பயணமே போதுமென இருந்த நாட்களது. மூன்றாவது வாரம் மீண்டும் ஒரு கடிதம்.அதே இடம்.அதே ஏட்டில் இருந்து கிழித்த தாள்.என் முன் கரைந்து கொண்டிருந்த காகம், என்னைக் கடந்த புகைவண்டி, அதில் தெரிந்த சன்னலோர சினேகிதிகள் தந்த ஆசுவாசம் என அப்பொழுதைய என் சுற்றம் எல்லாவற்றையும் கடிதத்தில் நிறைத்தேன்.என்னையும், என் சுற்றத்தையும், அது எனக்குள் ஏற்படுத்தும் சஞ்சலங்களையும் கடிதம் வழி உன்னிடம் கடத்துகிறேன் என்பதே என்னை அப்பொழுது இலகுவாக்கியது.உற்சாகமாக வழிநடத்தியது. சுகமாக போய்க் கொண்டிருந்த ஒரு வழிப் பயணத்தை, ஒரு மதிய நேரத்தில் உன்னிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் வாயிலாக நிறுத்தினாய்.

-தொடரும்

கானல் நீர்! - 2

No comments:

Post a Comment