Sunday, December 30, 2007

பன்னிரண்டு வருட நட்புக்கு சாவுமணி!!

நண்பா! கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியவில்லை,நம் நட்புக்கு இன்னும் சில தினங்களில் முடிவுரை.

எத்தனை வருட பழக்கம் நமக்குள், சுமார் பன்னிரண்டு வருடங்கள்.கல்லூரியில் ஆரம்பித்த நட்பு இப்போது திடீரென முடிய போகிறது என நினைக்கும் போது துக்கம் தொண்டை அடைக்கிறது.

யோசித்து பார்க்கிறேன்.இந்த பன்னிரண்டு ஆண்டுகளில்,

நிலையில்லா சந்தோஷம் வந்த போதும் உன்னிடம்தான் பகிர்ந்தேன்

மனமுடைந்த சோக தருணங்களிலும் நீதான் மனதை தேற்றினாய்

தேவையில்லாத குழப்பங்கள் மனதை வாட்டிய போதும் நீதான் குழப்பங்கள் தீர்த்து தெளிவான சிந்தனை தந்தாய்

என் மீது பலமுனை தாக்குதல்கள் பல பக்கங்களிலிருந்து வந்த போதும், நீதான் தைரியம் தந்தாய்

எனக்கென்று நண்பர்கள் யாரும் கிடையாது.எல்லா நேரங்களிலும் உன்னிடம்தான் ஓடி வந்திருக்கிறேன்.அப்போதெல்லாம் நீ எனக்களித்த நட்பை,அரவணைப்பை யாரும் எனக்கு தந்ததுமில்லை, கண்டிப்பாக இனி யாரும் தரவும் முடியாது.

நாமுண்டு நம் நட்புண்டு என்றிருந்தோம் என் திருமணம் வரை.என் மனைவி உன்னை இவ்வளவு வெறுப்பாள் என நான் நிச்சயம் எண்ண வில்லை.நம் நட்பு தொடர கூடாதென இந்த இரண்டு ஆண்டுகளாய் அவள் என்னிடம் சண்டை போடாத நாளில்லை.கல்லூரி முடிந்து நான் புதிதாய் அலுவலத்தில் சேர்ந்த புதிதில்,தினமும் குறைந்தது பத்து தடவையாவது சந்திப்போம் இல்லையா..ம்ம்ம் அதெல்லாம் பொற்காலம்.நீ இருந்ததால்தான் இரவு பகலாக உழைத்தாலும் என்னால் புத்துணர்ச்சி கொள்ள முடிந்தது( அதெல்லாம் சும்மா உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கீறீர்கள் என்கிறாள் என் மனைவி).என் திருமணத்துக்கு பின் நம் சந்திப்பு நான்கைந்து முறைதான் என்ற நிலைக்கு தள்ள பட்டோம்.நாளடைவில் என் மனைவி சம்மதம் இல்லாமல் உன்னை பார்க்கவே முடியாது என்ற நிலையில், இப்போதெல்லாம் வாரம் ஒரு முறை உன்னை பார்ப்பதற்கே நான் தலைகீழாய் தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது.

இனியும் இந்த நிலை வேண்டாம்.என் மனைவியிடம் நம் நட்பை முறித்து கொள்கிறேன் என்று சத்தியம் செய்து விட்டேன்.உன்னிடம் சொல்ல கஷ்டமாகத்தான் உள்ளது.இனி நாம் சந்திக்க வேண்டாம். நான், 2007ம் ஆண்டுக்கு மட்டுமல்ல, நம் நட்புக்கும் விடை தருகிறேன்.என்னால் முடியுமா என தெரியவில்லை ஆனால் வேறு வழியில்லை நண்பா!

பன்னிரண்டு வருடங்களாய் என்னுடன் தினமும் இருந்த என் உயிர் நண்பனே, அடி மனதில் இருந்து சொல்கிறேன், உன் போல் ஒரு துணை எனக்கு நிச்சயம் இனி கிடையாது.கண்ணீர் துளிகளுடன் விடை தருகிறேன்!! போய் வா நண்பா!

கடைசி முறை உன் பேரை அழுத்தமாக உச்சரிக்க ஆசை..................

கோல்ட் பிளேக் கிங்ஸ்

ஆஹா! என்ன ஒரு ஆனந்தம் பேர் சொல்லும் போதே..பை பை நண்பா!!!!

Saturday, December 22, 2007

மணியடிச்சா சோறுன்னு ஒரு வாழ்க்கை..

அரைத்தூக்கத்தில்,பேப்பர் சீக்கிரம் படிக்க வேண்டுமே என்கிற அவதியில் பல்துலக்கல்,சொந்தக்காசில் வாங்கும் தினமலர்,எக்கானாமிக் டைம்ஸ், ஓசி தினகரன்( பக்கத்து வாடகைக்கடைக்கு வரும் நாளிதழ் நம்ம வீட்டில்தான் விழும்),பேப்பரினூடே சூடாக காபி,டாய்லெட்-ல் இருக்கும் லைப்ரரியில் (வீட்டுகாரம்மா அப்படித்தான் சொல்வாங்க) இருந்து ஒரு புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டு காலைக்கடன்,ஆபிஸ் சமாச்சரங்கள் மனசுக்குள் டிரையிலர் ஓட குளியல், cnbc+ndtv profit மாத்தி மாத்தி பார்த்துக்கிட்டே டிபன்,கர்சீப்,பனியன்..இத்யாதி காணோம்னு அலப்பறையை பண்ணிகிட்டே டிரெஸ்ஸிங்,வீட்ல கொடுக்கற சோத்து டப்பாவை பத்து வருசம் ஓல்ட் மாடல் வண்டில மாட்டிக்கிட்டு,phone-ல இருக்கிற player playlist-ல ஒண்ணை செலக்ட் பண்ணி headset காதுல மாட்டிகிட்டு, பன்னிரெண்டு வருசமா போற அதே ரூட்டுல இருபது நிமிசம் வண்டியை ஓட்டிக்கிட்டு போயி,பன்னிரெண்டு வருசமா உட்கார்ந்து தேஞ்சு போன அதே நாற்காலி,என் வாழ்நாள்ல என்கூட அதிக நாள் இருந்த கம்ப்யூட்டரில் மெயில் செக் பண்ணி,ரிப்ளை பண்ணி, கத்தி கத்தி, டென்ஷனாகி, ஒவ்வொரு shipment-ம் ontime-ல ship ஆகணும்னு விரட்டி, செஞ்சு செஞ்சு அலுத்து போன அதே வேலை,அதே முகம்,
அதே தவறுகள்,அதே பிரச்னைகள், தீர்வுகள்,மதியச்சாப்பாடு,அப்பப்ப பங்குச்சந்தை பக்கம் எட்டி பார்த்து எதையாவது வாங்கி,எதையாவது வித்து, வீட்டுகாரம்மாக்கிட்ட இருந்து இன்னும் கிளம்பலையான்னு போன் வந்தவுடனே அவசர அவசரமா எல்லாத்தையும் அள்ளி உள்ள போட்டுட்டு,வேக வேகமா வீட்டுக்கு போய் இரண்டு வயது செல்லப்பெண்ணுடன் விளையாட்டு, மீண்டும் அதே cnbc யோட டின்னர்..அப்புறம் வீட்டுக்காரம்மாவோட லெக்சர் கேட்டுகிட்டே தூக்கம்..


ஏன்,ஏன் இப்படி..எல்லோருக்குமே இப்படித்தானா.. மணியடிச்சா சோறுன்னு ஒரு வாழ்க்கை!!!வேற வழியே இல்லையா!!தப்பிக்கவே முடியாதா!!

Saturday, November 17, 2007

எல்லோரும் ஒரு நாள் தாத்தா,பாட்டி ஆவோம்!!

எங்க பார்த்தாலும் ஞானி-கலைஞர் புகைச்சலா இருக்கு( நான் இந்த பதிவை எழுத நினைத்த போது இருந்தது).இந்த பதிவு,அந்த பிரச்னையை பற்றி இல்லை.ஆனால்,இந்த பிரச்னைதான் என் மனதில் ரொம்ப நாட்களாக என் தாத்தாவை பற்றி நான் வருந்தியதை,பதிவாக எழுத தூண்டியது.

எங்க தாத்தா அதாவது அம்மாவின் அப்பா, ஒரு சிக்ஸர் அடிச்சா செஞ்சுரி போட்டுவிடும் வயசு.கொள்ளு பேரன், பேத்தி பார்த்து விட்டார்.எங்கள் வீட்டின் மாடி போர்ஷனில் இருந்தார். இப்பொழுது எங்கள் கூட இல்லை.எங்கள் மாமா வீட்டில் இருக்கிறார்.

தினமும் காலைல ஆறு மணிக்கு எழுந்து விடுவார்.வெந்நீர் குளியல் முடித்து விட்டு,ஒரு சூரிய நமஸ்காரம்.காலை சன் நியூஸ் பார்த்து விட்டு டிபன். கொஞ்சம் தூக்கம்.பதினோரு மணிக்கு டீ + கொஞ்சம் நொறுக்ஸ். ஒரு மணிக்கு மதிய உணவு.பின்,தூக்கம்.நாலு நாலரைக்கு டீ+நொறுக்ஸ்.மாலை,அக்கம் பக்கம் உள்ள மற்ற பெரிசுகளுடன் அரட்டை.எட்டு மணிக்கு டிபன்.பின் உறக்கம். இதுதான் தாத்தாவின் தினப்படி நேர அட்டவணை.

தாத்தா ஆஜானுபாகுவானவர்.ஆறடி உயரம்.நடக்கும் போது, தூரமாக இருந்து பார்த்தால்,கூன் கூட தெரியாது. பக்கமாக சென்று பார்த்தால்தான் தெரியும்.ஆறுமாசத்துக்கு முன்னாடி வரை யாரோட துணையும் இல்லாம தனியாவே அவர் வேலைகளை செய்து கொள்வார். பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் இப்பொழுது படுக்கையில்தான் எல்லாமே.ரெண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை,நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடன் நிறைய பேசுவேன்.அவரும், ஆர்வத்துடன் பழங்கதை பல சொல்வார்.

தாத்தா பதினாறு வயதில் கூலிக்கு உழவு செய்ய ஆரம்பித்தவர். அவரது பதினெட்டாவது வயதில்,இரண்டு செண்ட் நிலம் வாங்கினாராம். அதன் பிறகு கடின உழைப்பின் மூலம், அவரது நாற்பதாவது வயதில் கிட்டதட்ட இருபது ஏக்கருக்கு அதிபதியாகி விட்டார்.எனது சிறு வயதில் தாத்தா ஊரில் விடுமுறைக்கு சென்ற போதெல்லாம் பார்த்திருக்கிறேன்.ஒவ்வொரு சாப்பாட்டு வேளையும்,கல்யாண பந்தி போல நடக்கும். கிட்டதட்ட நாற்பது,ஐம்பது பேர் சாப்பிடுவார்கள்.களத்து மேட்டில் தாத்தா இறங்கி, வேலையாட்களை விரட்டி வேலை வாங்குவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.தாத்தாவின் நிலத்தில் பாதி நிலம் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இருந்தது.இன்றைய மதிப்பு நிச்சயம் பல கோடிகள்
இருக்கும்.

ஆனால், ஒரு பிடி நிலம் கூட தாத்தா வசம் இன்று இல்லை. தாத்தாவுக்கு நான்கு பெண்கள் + மூன்று மகன்கள். தாத்தா வாரிசுகளின் திருமணத்திற்க்கு சொத்தை விற்றார்.மேலும் மகன்களும் சொத்துகளை சரியாக நிர்வாகம் செய்யாததால், எல்லாவற்றையும் இழந்து, இன்று ஊரை விட்டு வெளியேறி எங்களுடன் பல வருடங்கள் இருந்தார்.இன்று எங்கள் மாமா வீட்டில் இருக்கிறார்.

நான்கு வருடங்களுக்கு முன்பு, " ஒன்பது ரூபாய் நோட்டு" படித்து விட்டு என்னால் அதன் தாக்கத்திலிருந்து வெளிவர சில நாட்களானது.அந்த நாவலில் வரும் மாதவ படையாச்சியும்,அவரது வாழ்க்கை பயணமும் அப்படியே என் தாத்தாவை எனக்கு கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.என் தாத்தா மிக்க சுயமரியாதை உடையவர்.ஆனால் இன்று உயிர்வாழ்தலுக்காக எல்லோருடனும் தின நடவடிக்கைகள் முதல் அனைத்து விஷயங்களிலும் நிறைய சமரசம் செய்து கொண்டு வாழ்ந்தாலும்,அவரது உள்மனது எந்த அளவு பாதிக்கபட்டிருக்கிறது என்பது அவருடன் உரையாடும் போது நன்கு புரியும்.யாருக்காக எல்லாம் அவரது வாழ்க்கை முழுவதும் ஓடி ஓடி உழைத்தாரோ அவர்கள் எல்லாம் இன்று அவரை உதாசீனப்படுத்துவதாக நினைத்து நிறைய மன உளச்சலுக்கு ஆளாகிறார்.

இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில்,யாரும் அவரிடம் மனம் விட்டு பேசுவது கிடையாது. அவராலும்,அனைவரையும் அனுசரித்து போக முடிவதில்லை.

எனக்கு மனதில் அடிக்கடி தோன்றுவதெல்லாம் பின்வரும் கேள்விகள்தான்.

1.ஒரு மனிதன் என்னதான் நல்ல விதமாக மக்கள் மற்றும் பொருள் சம்பாதித்தாலும், கடைசி காலத்தில் மதிக்க படுவதில்லை என்பது பரவலாக நடப்பது ஏன்?

2.போன தலைமுறை ( அப்பா,அம்மா) அதன் முந்தைய தலைமுறையை கையாண்ட விதமும், நாம் நமது முந்தைய இரண்டு தலைமுறை மனிதர்களை கையாளும் விதமும் நமக்கே தெரியும்.அப்படியானால்,நாம் நமது அடுத்த இரண்டு தலைமுறைகளை எப்படி எதிர்கொள்கிற போகிறோம்??

3.அறுபது, எழுபது வயதுக்கு மேல், ஒரு மனிதனுக்கு நிஜமான அரவணைப்பு தேவைப்படும் காலத்தில், அவனது சுற்றம் அவனை உதாசீனப் படுத்தினால், அவனுக்கு அவன் வாழ்ந்த வாழ்க்கையே கேள்விக்குறியாக, அர்த்தமற்றதாக ஆகி விடாதா??

Thursday, October 18, 2007

பக்கத்து சீட்ல சனி!! ( தொடர்ச்சி)

ஒருவழியா பத்தாயிரம் ரூபாயோட பங்குசந்தைல
கால்வைச்சேன்.( பிளாஷ்பேக் இங்கே)

என்னோட புரோக்கர் மெயில்ல அனுப்பற
பரிந்துரைல இருந்து ஒரு ஸ்டாக்கை செலக்ட்
பண்ணி வாங்கினேன்.அந்த ஸ்டாக்கை நான்
வாங்கின அப்புறம், என் அளவுக்கு
NSE வெப்சைட்டை ரீபிரெஷ் பண்ணவங்க யாரும்
இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.நிமிஷத்துக்கு
ஒரு தடவை என் ஷேர் எவ்வளவு ஏறி இருக்குன்னு
பார்த்துக்கிட்டே இருப்பேன்.அது என்னமோ தெரியலை,
10000+ ல இருந்த சென்செக்ஸ் 12000+ ஆனாலும் என்
ஷேர் மட்டும் நாட்டாமை மாதிரியே( அதாங்க என்னைக்கும்
ஒரே சொல்லுன்னு சொல்வாருல்ல..அதே மாதிரி
நம்ம ஷேரும் என்னைக்கும் ஒரே ரேட்டுதான்) இருந்தது.

நாம டென்ஷனாகி ஒரு நூறு ரூபா லாபத்துல
வித்துட்டு வெளிய வந்தாச்சு..வித்ததுக்கு அப்புறம்
contract note பார்த்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது
லாபம் நூறு ரூபா இல்ல வெறும் பதினாலு ரூபான்னு.

சரி இதெல்லாம் ஒரு அனுபவம் மனசை தளர
விடாதன்னு பக்கத்து சீட்ல இருந்து சனி பகவான்
குரல் கொடுத்தார்.அப்பதான் உள்ளே இருந்து சிங்கம்
குரல் விட்டாரு.நமக்கு இதெல்லாம் சரிப்படாதுப்பா..
வா..day trading பண்ணுவோம்னாரு..இது நடக்கறது..ஏப்ரல் 2005.
சரின்னு புரோக்கர் கொடுத்த மெயில்ல ரிதமிங்கா
இருந்த ஒரு ஷேரை செலக்ட் பண்ணி ஒரு டிரேட் பண்ணதுல
ஒரே நாள்ல ஏழாயிரம் லாபம்.உள்ளேர்ந்து "அதான்
சொன்னோம்ல" அப்படின்னு குரல் வந்தது.

இங்க ஆரம்பிச்சதுங்க வினை..அதுக்கப்புறம் கண்ணு
மண்ணு தெரியாம day trading தான்..சம்பந்தமில்லாம ஒரு
கம்பெனியை வாங்கி வைச்சுக்கிட்டு நாள் பூரா
பார்த்துக்கிட்டே இருந்தா,அது என்னமோ நாம
வாங்கறதுக்கினே காத்துக்கிட்டு இருந்த மாதிரி,
ரிவர்ஸ் கியர்ல அப்படி பறக்கும்..ஆனா இப்ப நினைச்சு பார்க்கிறேன்,நாமல்லாம் வீரபரம்பரைங்க,,பின்ன அதெல்லாம்
பார்த்துக்கிட்டு அசராம இருந்துருக்கோம்ல.

இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தப்ப லாபமும் இருந்தது,
நஷ்டமும் இருந்தது.ஆனா இன்னைக்கு வரைக்கும்
நஷ்டம்தான் ஞாபகத்துல இருக்குது.அப்படின்னா,லாபம்
எவ்வளவுன்னு சொல்ல வேண்டியதில்லை.

எங்கேயோ,எதையோ படிச்சதுக்கப்புறம்,historical price movement
பார்த்து ஷேர் வாங்குவோம்னு முடிவு பண்ணிணேன்.இப்பயும்,
நம்ம புரோக்கர் கொடுத்த பரிந்துரைல இருந்து ஒரு
ஸ்டாக்கை செலக்ட் பண்ணோம்.ஏன்னா,Rs.325 இருந்த
ஸ்டாக்குக்கு Rs.450 டார்கெட் கொடுத்து இருந்தாங்க.
2006,மே-10ம் தேதின்னு நினைக்கிறேன்..இந்த ஷேரை
வாங்கினேன்.எத்தனை மணிக்கு தெரியுமா? 3.20க்கு.எப்படி
வாங்கினேன் தெரியுமா? மார்ஜின் டிரேட்ல.ஏன் தெரியுமா?
நாலு நாளா அந்த ஷேர் ரொம்ப ஊசாலட்டத்துல ஏறுறதும்,
இறங்கறதுமா இருந்தது.நம்ம ஐடியா என்னன்னா,நாம
முதல் நாள் குறைஞ்ச விலைக்கு வாங்கி, ரெண்டு நாள்
கழிச்சு விலை ஏறியதுக்கப்புறம் வித்துடாலாம்னு.

நான் Rs.324க்கு அந்த ஷேரை வாங்கிட்டு, ரெண்டு நாளா
அந்த பக்கமே எட்டி பார்க்கலை.அப்புறம் பார்த்தா, நம்ம
ஷேர் விலை Rs.280க்கு இருந்தது.அப்பவும் நமக்கு நினைப்பு
என்னன்னா,Rs.380வரைக்கும் ஏற்கனவே போயிருந்த ஷேர்
நம்மளை மோசம் பண்ணாது,கண்டிப்பா ரெண்டு நாள்ல
சரியா போயிரும்னு.மே-18,2006- நம்ம சந்தை அடிச்சது
பாருங்க ஒரு அந்தர் பல்டி( சென்செக்ஸ் சுமார் 800
புள்ளிகளை இழந்தது).சரி,நம்ம சூப்பர் பெர்பார்மர் எந்த
நிலைமைல இருக்காருன்னு பார்த்தா,எனக்கே
சந்தேகமாயிருச்சு,நம்ம ஷேரோட ரேட்தானா இதுன்னு.பின்ன,
நம்மாளு,Rs.324 ல இருந்து Rs.220க்கு போயிட்டாருல்ல.
அன்னைக்கு நம்ம காதுல புகை வந்த மாதிரி,என்னைக்குமே
வந்ததுல்லைங்க.நமக்கு நம்ம பாசக்கார ஷேரை விட
மனசில்லாததால,வீட்டம்மாகிட்டே கெஞ்சி கூத்தாடி டப்பு
ரெடி பண்ணி டெலிவரி எடுத்துட்டேன்.

நம்ம சிங்கம் உள்ளேர்ந்து,கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க சொன்னாரு.
அப்புறம் ஒரு ரெண்டு மாசம் கழிச்சு மறுபடியும்,day trading
பண்ண ஆரம்பிச்சோம்.பழைய கதைதான்..ஆனா என்ன இப்ப
கொஞ்சம் large cap and most trading counters ல மட்டும்.பெரிசா
லாபமும் இல்லை,நஷ்டமும் இல்லைங்கற நிலைமை.ஆனா,
சின்ன நஷ்டம் கூட நிறைய யோசிக்க வைச்சுது.

அதுக்கப்புறம்தான் நம்ம சனி பகவானை பேக் பண்ணி அனுப்பி வைச்சுட்டு,வாலை சுருட்டிக்கிட்டு, just மார்க்கெட்ல என்ன நடக்குது,
எந்த ஷேர் ஏறுது,ஏன் ஏறுது.எப்ப வாங்கனும்,எப்ப விக்கனும்,இன்னும் நிறைய கவனிக்க ஆரம்பிச்சேன்.கிட்டதட்ட இன்னைக்கு வரை அதான் செஞ்சுகிட்டு இருக்கேன்,ஒரு சில உருப்படியான investment மட்டும்
பண்ணி இருக்கேன்.


சரி..இப்ப வேலு நாயக்கர் சொல்ற நாலு நல்ல விஷயத்தை
கேளுங்க ( இது கண்டிப்பா அறிவுரை கிடையாது ஆனா
என்னோட அனுபவம்).

1.ஷேர் மார்க்கெட் கண்டிப்பாக சூதாட்டக்களம் கிடையாது.நீங்கள்
எந்த அளவு விஷயம் தெரிந்து வைத்துள்ளீர்களோ அந்தளவு
நஷ்டம் தவிர்க்கலாம்.லாபமும் பார்க்கலாம்

2.லாபம் பார்க்க,அவசரம் வேண்டாம்.பொறுமை தேவை.அதிக கால முதலீடுகள் பல சமயங்களில் நல்ல வருமானம் தரும்.
கீழே,நான் சென்ற வருடம் day trading பண்ண சில ஷேர்களோட அன்றைய விலை மற்றும் இன்றைய விலைகளை கொடுத்துள்ளேன்.

IFCI
அன்றைய விலை- Rs.18.00
இன்றைய விலை - Rs.80.00

BHARTI AIRTEL
அன்றைய விலை - Rs.350.00
இன்றைய விலை - Rs.1000.00

RELIANCE COMMUNICATIONS
அன்றைய விலை - Rs.250.00
இன்றைய விலை - Rs.750.00

3.முக்கியமாக, day trading மற்றும் short term ல் ஈடுபடும் போது
அந்த counter பற்றிய அனைத்து தகவல்களும் விரல் நுனியில்
வைத்து இருப்பது நல்லது.முடிந்த அளவு,ஊடகங்களை பயன்
படுத்துங்கள்.ஒரு நாள்,நான் 600 ரூபாய்க்கு ஒரு ஷேர்
வாங்கினேன்.சில நிமிடங்களில்,அது 10% அதிக விலைக்கு
போனவுடன் விற்றுவிட்டேன்.பிறகுதான் தெரிந்தது, அந்த
கம்பெனிக்கு 1 பில்லியன் டாலர்க்கு ஒரு ஆர்டர் கிடைத்த
செய்தி வெளியானதால்தான்,ஸ்டாக் எகிற ஆரம்பித்து
இருக்கிறது.நான் விற்ற இரண்டு வாரத்திலேயே அந்த ஸ்டாக்,
1700 ரூபாய்க்கு போய் என்னை பார்த்து நக்கலாக சிரித்தது.So,
UPDATION is VERY IMP.

4.எல்லாம் தெரிஞ்ச டை கட்டிய கோயிஞ்சாமிகள் மற்றும்
ஊடகங்களில் கிடைக்கும் tips ஆகியவற்றை அப்படியே எடுத்துக்
கொள்ள வேண்டாம்.உங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை கொண்டு
வடிகட்டி ஸ்டாக்களை செலக்ட் செய்யவும்.

5.உங்களுக்கு என ஒரு வழிமுறை வைத்துக்கொள்வது நல்லது,
எவ்வளவு லாபம் மற்றும் நஷ்டம் பார்த்தவுடன் வெளியேறுவது
என்பதை முன்பே முடிவு செய்து அதை அப்படியே பின்பற்றுவது
சாலச்சிறந்தது..

நாம பட்ட அடிக்கு,ஒரு புக்கே எழுதலாம்.ஆனா போதும்
நிறுத்திக்கலாம்னு நினைக்கிறேன்..நான் இன்னுமே
பங்குசந்தைல ஒரு அமெச்சூர்தான்..அதனால இந்த பதிவு
அறிவுரை சொல்றதுக்காக இல்லை..நம்ம கதையை ஊருக்கு
சொன்னா,நாலு பேருக்கு உதவுமேங்கற எண்ணம்தான்..

நம்ம பங்குச்சந்தை குப்புற விழுந்துக்கிட்டு இருக்கிற இந்த
நேரத்துல,இந்த பதிவு பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்.
சென்செக்ஸ் target 20000ங்கறது போய் இப்ப 25000,40000ன்னு பேச
ஆரம்பிச்சுருக்கிற இந்த நேரத்துல,நல்லா தெரிஞ்சு,புரிஞ்சு
நிறைய பணம் பண்ணுங்க மக்களே..நம்மளை மாதிரி
இருந்துறாதிங்க!!!

எழுத ஆரம்பிச்சப்ப இருந்த திருப்தி,முடிக்கறப்ப இல்லை..
ஏன்னு தெரியலை..வந்தனம்.

Wednesday, October 17, 2007

சந்தோஷம்!துக்கம்!! ஒரே நாளில்..

நான் முதன் முதலில் சிரமப்பட்டு எழுதிய நீண்ட பதிவு இது( எனக்கு இது நீண்ட பதிவுதான்பா!).இந்த பதிவு எழுதிய போது என் வலைப்பதிவு தமிழ்மணத்திலோ,தேன்கூடிலோ இணைக்கப்பட வில்லை.எனவே மீள்பதிகிறேன்( ஒரே வாரத்துல மீள்பதிவு பண்ண முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன்)

செப்டம்பர் 30' 2007 - என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது.இரு நிகழ்ச்சிகள்,ஒன்று மிக சந்தோஷமான நிகழ்வு, மற்றொன்று துயரமானது.இந்த இரு சம்பவங்களுமே எனக்களித்த அனுபவம் ஏராளம்.

துயரமான நிகழ்வு:

நீங்கள் இருபது வருடமாக வசித்து வரும் ஒரு இடத்தில் உள்ள காலி இடத்தில்,திடீரென ஒரு நாள் காலை, ஒரு குடிசை முளைக்கிறது.ஒரு கும்பல் உள்ளே உட்கார்ந்து இருக்கிறது.நீங்கள் விசாரிக்கும் பொழுது, அந்த இடத்தை வாங்க ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளேன் என்கிறான் ஒருவன்.உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?. இதுதான் எனக்கு நிகழ்ந்தது. அக்டோபர் 1ம் தேதி காலை எங்கள் இடத்தை ஒருவன் ஆக்கிரமிப்பு செய்தான்.சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சமூக விதிகளை மீறாமல்,வருமான வரி ஒழுங்காக அரசுக்கு செலுத்தி வாழ்க்கையை நடத்தும் மத்திய தர வர்க்க சாதாரண குடிமகனான எனக்கு இச்சம்பவத்தின் வீச்சு புரிபட சில மணித்துளிகளானது.அடாவடி முறையில் இச்சம்பவத்தை எதிர்கொள்வதை விட, நிதானமான முறையில் எதிர்கொள்வது என முடிவெடுத்தேன்.பதற்றத்தை தவிர்த்து விட்டு காவல்நிலையத்தில் புகார் செய்தோம்.சில நல்ல உள்ளங்களின் உதவியுடன், நான்கு நாட்கள் அலைக்களிப்புக்கு மற்றும் சில பத்தாயிரங்கள் விரயத்திற்க்கு பிறகு, இடம் எங்கள் வசமானது.இச்சம்பவம் எனக்கு உணரவைத்த ஒரே விஷயம். " வல்லவன் வகுத்ததே வாய்க்கால்".நில ஆக்கிரமிப்பு செய்தவன் மீது பல வழக்குகள் ஏற்கனவே காவல் நிலையத்தில் உள்ளது. இருந்தும் எனக்கு உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை.காரணம்,அவன் அரசியல் ரீதியில் செல்வாக்கு உள்ளவன் நாம் என்னதான் படித்திருந்தாலும்,நிர்வாக முறையில் சிறந்து விளங்கினாலும், இம்மாதிரி பிரச்சினைகளில், நீங்கள் காவல் நிலைய, அரசியல் குழுக்களின் நெளிவு சுளிவு விளையாட்டுளில் வளைந்து போய்த்தான் பிரச்னையை முடித்தாக வேண்டும்.நானும் என்னால் முடிந்த அழுத்தத்தை மேல் மட்ட அளவில் இருந்து கொடுத்த பிறகுதான் பிரச்சினையில் இருந்து வெளிவர முடிந்தது.

இம்மாதிரி தருணங்கள்தான், நாம் நமக்குள்ளே வகுத்து கொண்டுள்ள நேர்மை,வாக்கு தவறாமை, நாணயம் போன்றவற்றை கேலிப்பொருளாக்குகின்றன. ஆனால் இன்னும் எனக்கு நம்பிக்கை குறையவில்லை.

மகிழ்ச்சியான நிகழ்வு:

நீங்கள் கல்லூரியை விட்டு வெளிவந்த பின், சுமார் பதினோரு வருடங்கள் கழித்து, உங்கள் வகுப்பு தோழர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சந்த்தித்தால் அதுவும், உங்கள் துறைத்தலைவர் மற்றும் ஆசிரியர்களும் உடன் இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அந்த நிகழ்வை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தவர் நீங்கள் என்னும் பொழுது, இதை விட சந்தோஷம் தரும் நிகழ்வு ஏதும் நிச்சயம் உங்களுக்கு அமையாது!! நான் இந்த மனநிலையில்தான் இருந்தேன், செப்டம்பர் 30ம் தேதி அன்று!.( மேலே குறிப்பிட்ட சம்பவத்திற்கு முதல் நாள்). நானும் பெங்களூரிவில் உள்ள என் நண்பனும் இருமாதங்களாக அனைவரையும் தொடர்பு கொண்டு, ஒருங்கிணைத்து, செப்டம்பர் 30ம் தேதி, முன்னாள் மாணவர் சந்திப்பை நடத்தினோம். அறுபது மாணவர்கள் மற்றும் எங்களது மூன்று ஆசிரியர்களுடன் கழித்த அந்த நாள் மிக இனிமையான மறக்க முடியாத அனுபவம்.வகுப்பறையில் செய்த அதே அலப்பறையுடன், நிகழ்ச்சி நடந்தது. அனைவரையும் பேசவைத்தோம்.

சிங்கப்பூர்,மலேசியாவில் இருந்தவர்களையும் விடாமல், தொலைபேசி ஸீபிக்கர் மூலம் உரையாட வைத்தோம். எண்ணற்ற ஆச்சர்யங்கள்!

1.அமைதியே உருவான நண்பன், இயற்கை உரத்தயாரிப்பின் மூலம், தி இந்து கட்டுரையில் இடம் பெற்றது.
2.வகுப்பின் முதல் மாணவன், குடும்ப சூழல் காரணமாக, அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியனானது.
3.மிக சராசரியென அறியப்பட்ட நண்பன், இருநூறு பேர் மற்றும் இருநூறு கோடி விற்றுமுதல் கொண்ட அலுவலககிளையின் மேலாளராக இருப்பது. 4.டெக்ஸ்டைல்ஸ் படித்து விட்டு, சிங்கப்பூரில் மென்பொருள் எழுதும் நண்பன் 5.டெக்ஸ்டைல்ஸ் படித்து விட்டு,மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணிபுரியும் நண்பன்
6.இன்னும் வேலைதேடிக்கொண்டிருக்கும் நண்பன்
7.எங்கள் வரவேற்பினால் கண்கலங்கிய எங்கள் துறைத்தலைவர் 8.எங்களை விட இளமையாக இருந்த எங்கள் ஆசிரியர்கள்
9.கீரியும்,பாம்புமாக இருந்த நண்பர்கள் கொஞ்சி குலாவியது

இன்னும் பல ஆச்சர்யங்கள்!!வீடு,அலுவல் எனஅனைத்தையும் மறந்து சந்தோஷமாக இருந்த நாளது..

இச்சந்திப்பிற்கு பிறகு தொடர்புகள் புதுப்பிக்கபடுகின்றன..மெயில்பாக்ஸ்கள் நிரம்பி வழிகின்றன..நிறைய குறுஞ்செய்திகள்,கைப்பேசியில்..இச்சந்திப்பை ஒருங்கிணைத்தவன் என்ற முறையில், அளப்பறியா மகிழ்ச்சி எனக்கு..

மீண்டும் 2010ல் சந்திப்பதாக முடிவு செய்துள்ளோம்.