Saturday, May 10, 2014

கானல் நீர்! -2

கானல் நீர்! - 1

பரபரப்பான நாளொன்றின் மதியம். அலுவலகத்தில் உணவை எடுத்து பரப்ப ஆரம்பித்த நேரத்தில் அந்த தொலைபேசி அழைப்பு.

அருகில் அமர்ந்திருந்த சரவணன் பேசி விட்டு என்னருகில் தொலைபேசியை தள்ளினான்.

“யார்டா?”

”பேசு” என சிரித்தான்.

”ஹலோ”

குரல் கேட்டவுடனேயே அந்த அவஸ்தையான பிசைவு. ””நீங்க?””

“சத்யா””

“ஏய்! என்ன இது சர்ப்பரைஸ்””

“சொல்றேன்! பஸ்ஸ்டாண்ட்ல இருக்கேன்””

“எந்த பஸ்ஸ்டாண்ட்ல?”

“மாடே! உங்க ஊர்லதான்.பசிக்குது.வந்து சீக்கிரம் கூப்பிட்டு போ.திருப்பூர் பஸ் நிக்கற இடத்துல வெயிட் பண்றேன்.இங்க நிக்கவே பிடிக்கல””            

“சரி! சரி! வை..உடனே வரேன்”

இவள் எப்படி இவ்வளவு உரிமையோடு ”மாடே” என வைகிறாள் என்ற குழப்பம் மற்றும் குதூகலத்துடன் ””டேய்! சாப்பிடலையா?”” என்ற சரவணனுக்கு “பசங்ககிட்ட லன்ச் கொடுத்துடு மாப்ள” என சொல்லி விட்டு வேகமாக வெளியேறினேன்.

வெயிலில் வந்திறங்கி வேர்வை வழிய நின்றிருந்தாள். ஏதேதோ பேச வேண்டும் என்ற ஒத்திகையோடு வண்டியை கொண்டு போய் நிறுத்தினேன். உடனே வந்து வண்டியில் உட்கார்ந்தவள், ”சீக்கிரம் எங்கேயாவது நிழல்ல கூட்டிப் போய் உட்கார வை” என்றாள்.

“கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடறியா”

“பசிக்குதுன்னு சொன்னேன்ல”

“சரி!சரி!போலாம்”

நேரே கொண்டு போய் ஊரின் சிறந்த ரெஸ்ட்டாரண்டில் நிறுத்தி, உள்ளே போய் சில்லிடும் அறையில் அமர்ந்தோம்.கொஞ்ச நேரம் கண்மூடி ஆசுவாசமானாள்.கண் திறந்து சிரித்தாள்.

சிரித்தேன்.

”ஏண்டா அசடு வழியறே”

“பொண்ணுங்க முன்னாடி சிரிச்சு பழக்கமில்லை”

“அதான் தெரியுமே” என்று மீண்டும் சிரித்தாள்.

குளிர் உள்ளேயும்,வெளியேவும் இதமாக இறங்கி கொண்டிருந்தது.

“என்ன சாப்பிடறே”

“எது வேணும்னாலும்”

வகைக்கொன்றாக இன்னதென்று இல்லாமல் சராமாரியாக ஆர்டர் செய்து வெயிட்டரை ”சீக்கிரம் கொண்டு வா” என்றேன்.

“ஏன் பக்கி மாதிரி ஆர்டர் பண்றே.யார் சாப்பிடுவா இத்தனையும்”

”பசிக்குதுன்ன!”

”ஐய்யோ! சகிக்கல”  என்றவள் வெயிட்டரை கூப்பிட்டு சிலவற்றை கேன்சல் செய்தாள்.

“இப்ப சொல்லு. என்ன திடீர்னு பூதம் மாதிரி வந்து நிக்கறே?”

”வீட்ல சண்டை அம்மா,அப்பாகிட்ட..அடிக்கடி வரும்.கோவிச்சுகிட்டு எங்கேயாவது பஸ்ல போய்ட்டு அப்புறமா வீட்டுக்கு போவேன்.இன்னைக்கு சிவன்மலை கோவிலுக்கு காலையிலேயே வந்துட்டேன்.படில உட்கார்ந்துட்டு இருந்தப்ப கீழே ஒரு கல்யாணப் பத்திரிக்கை கிடந்துச்சு.அதுல உன் பேர் இருந்துச்சா.சரி இந்த பையன் இத்தனை லெட்டர் போட்டுச்சே.போய் பார்க்கலாம்ன்னு கிளம்பி வந்துட்டேன்”

”அடிப்பாவி! அப்ப அந்த பத்திரிக்கைல வேற எவனாவது தெரிஞ்சவன் பேர் இருந்திருந்தா அங்க போயிருப்பியா?”

சொன்னதன் பிறகுதான் உளறியது உறைத்தது.

”அறைஞ்சுடுவேன். இந்த மாதிரி என்கிட்ட பேசாத”.

”சாரி..சாரி.”

இருவரது அலுவல், குடும்பம் என பேச ஆரம்பித்தோம்.

நல்ல பசி. சாப்பிட ஆரம்பித்தேன். அவளோ கொறித்துக் கொண்டிருந்தாள்.

”போதும்பா”

”ஏய்!அப்படியே இருக்கு.சாப்பிடு”

”இல்லைடா.பசிச்சது.ஆனா,சாப்பிட முடியலை. பசி போய்டுச்சு.சரி, உன் வீட்டுக்கு போலாமா. அம்மா,அப்பாவை எல்லாம் பார்க்கணும்”

”எல்லோரும் ஊர்ல..ரெண்டு நாளாகும் வர”

”ஓ! சரி வா கிளம்பலாம்”

”எங்க?”.

”நான் ஊருக்கு கிளம்பறேன்”

”இப்பத்தானே வந்தே..அதுக்குள்ள என்ன?”

”இல்லை பராவாயில்லை. ஜஸ்ட் பார்க்கணும்ன்னு தோணுச்சு.என்னை கொண்டு வந்து பஸ்ஸ்டாண்ட்ல விடு”

சரி பாதி கூட காலியாகாத அந்த உணவுக்கு பில் செட்டில் செய்து விட்டு, “வெங்கட்,பேக் பண்ணி பக்கத்துல காமாட்சியம்மன் கோவில் வாசல்ல யார்கிட்டயாவது  கொடுத்துடுங்க ப்ளீஸ்” என்றேன்.

”கோவில் வாசல்ல இருக்கிறவங்க சிக்கன் சாப்பிடுவாங்களா?”

”வெயில்ல, பட்டினில காஞ்சு போய் கிடக்கிறவங்களுக்கு காயும், கறியும் ஒண்ணுதான்”

”அய்யோடா! தெரியாம சொல்லிட்டேன்..நீ உன் பிரசங்கத்தை ஆரம்பிச்சுடாத”

கிளம்பினோம்.பேருந்து நிலையம் நெருங்கியதும்,

”ரொம்ப பிஸியா நீ?”

”ஆமாம். ஏன்?”.

”சரி,பிஸியா இருந்தாலும் பரவாயில்லை..என்னை கொண்டு வந்து வெள்ளக்கோவில்ல பஸ் ஏத்தி விடு”.

”ஏய் லூஸா நீ.என்னா வெயிலு! எனக்கு வேற நிறைய வேலை இருக்கு”.

”நீதான் லூஸு.. சரி இங்கேயே விடு”

பேருந்து நிலையத்தின் உட்புகுந்து திருப்பூர் பேருந்து வரிசை அருகே சென்றவன்,  வண்டியை நிறுத்தாமல் அப்படியே வெளிவந்தேன்.

”ஏன்?”

”இல்லை. வா கொண்டு வந்து விடறேன்”.

அலுவலகத்தில் தொங்கலில் நிற்கும் பணிகள் நினைவில் அழுத்த, வேகமாக முறுக்கினேன்.

”இப்படியெல்லாம் வேகமா போறதா இருந்தா, நான் பஸ்லயே போய்க்கறேன்”.

”இம்சை உன்னோட.நங்குன்னு மத்தியானம் ரெண்டு மணிக்கு வந்து குதிச்சுட்டு நீ பண்ற வேலையும், பேசற பேச்சும்”.

 ஒரு மணி நேரம் கழித்து வெள்ளக்கோவிலை அடைந்தோம். வெள்ளக்கோவிலில் பேருந்து நிலையச் சாலையில் திரும்பாமல் மீண்டும் நேர் சாலையிலேயே பயணித்தேன்.

”ஏய்! இந்தப் பக்கம் போகணும்”.

”தெரியும்.காங்கேயத்துல ஏத்தி விடறேன்”.

”ஹே! ரொம்ப பொறுப்புப்பா! ஏன் உன் ஆபிஸ் இப்பவெல்லாம் உன்னைத் தேடாதா”

”போன் பண்ணி இன்ஸ்ட்ரக்ஸன்ஸ் கொடுத்துக்கறேன்”.

”ரொம்பத்தான் பிலிம் காட்டற நீ”

”நீ ஏன் பேச மாட்ட?”

ஓலப்பாளையம் அருகே அடர்ந்த புளியமரங்களின் கீழே நிதான வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது  பைக்.

”ஏய் ஏய்.. நிறுத்து. புளியங்காய் சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு..அடிச்சுத்  தா”

” உன்னையெல்லாம் வீட்டுல சண்டை போடாம வைச்சு கொஞ்சுவாங்களா”

”நான் இப்படித்தான் இருப்பேன்..பிடிக்காதது எம்பிரச்னையில்ல்லை..அவங்கவங்க பிரச்னை”

சாலையோர வெள்ளை நிற சிமெண்ட் கட்டைகளில் அமர்ந்தோம். வாகான கல்லெடுத்து கொஞ்சம் புளியங்காய்களை அடித்து இறக்கினேன்..

”உனக்கு?”

”உவ்வே!.நமக்கு இதெல்லாம் செட்டாகாது”

சம்மணமிட்டு அமர்ந்து புளியங்காய்களை ஷாலில் சுற்றி, கட்டையில் கொட்டி உறிக்க தொடங்கினாள்.

”இப்படி மத்தியான வெயில்ல, ஊர்ல இருந்து ஐம்பது கிலோமீட்டர் தாண்டி, பொண்ணோட ரோட்டோரத்துல உட்கார்ந்து புளியங்காய் அடிப்பேன்னு யாராவது இன்னைக்கு காலையில என்கிட்ட சொல்லியிருந்தா போடா பைத்தியம்ன்னு சொல்லியிருப்பேன்”.

”ஏன் நான் கூடதான் இப்ப நினைச்சேன்.ட்ரெயின்ல போற புள்ளைங்களை ஊருக்கு ஒதுக்குப் புறமா உட்கார்ந்து சைட் அடிச்சுட்டு, எழுதறப்ப மட்டும் என்ன பில்டப்பு பாருன்னு. இப்ப என்னடான்னா புளியங்கா எல்லாம் அடிச்சு தர்ற!”

முறைத்தேன்.

காங்கேயம் வரைக்குமான அந்தப் பயணம் நீண்டு கொண்டேயிருந்தது. சலிக்காமல் பேசிக் கொண்டே வந்தாள். திருப்பூருக்கான மூன்று பேருந்துகள் உள் நுழைந்து வெளியேறி விட்டிருந்தது.”கூட்டம் அதிகமா இருக்கு”, ”இவன் டவுன் பஸ் மாதிரி போவான்”, ”இதுல சீட் சரியில்லை” என்று மூன்று பேருந்துகளும் இருவராலும் மாற்றி மாற்றி வழியனுப்பி வைக்கப் பட்டு, முடிவாய் நான்காவது பேருந்தில் ஏறிப் போய் விட்டாள்.

அவள் கொடுத்துச் சென்றிருந்த இல்லத்து தொலைபேசிக்கு இரவு அழைத்தேன்.

”ஹேப்பியா இருந்தேம்பா” என்றாள்.

”சண்டே வரட்டுமா, அங்க?”

”ம்க்கும்.வரப்ப பேசாத.அப்புறம் எதுக்கு மறுபடியும் பார்க்கணுமாம்”

”அது.. நீ திடீர்ன்னு வந்து நின்னியா.அதான்...”

”சரி.. சண்டே வா” என்று சிரித்தாள்..புழுங்கும் அந்த பொதுத் தொலைபேசி ஒற்றையறையில் நின்று மணிக்கணக்காக பேசிவிட்டு வெளிவந்த போது, சாலையோர உணவகங்கள் அடைக்கப் பட்டு கொண்டிருந்தன.

எப்பொழுதும் தவறாது கூடவே வரும் துரதிர்ஷடம் அவ்வாரமும் குத்துகாலிட்டு அருகில் வந்தமர்ந்தது. சனிக்கிழமை முடிக்க வேண்டிய வேலை சில புண்ணியாத்மாக்களால் முடிவில்லாமல் நீண்டதால், ஞாயிறு அலுவலகம் செல்லும்படியாகி விட்டது. சனிக்கிழமை இரவு அழைத்து அமிழ்ந்த குரலில் மெதுவாக சொன்னேன். பட்டென தொலைபேசி சாத்தப்பட்டது. திரும்ப திரும்ப அழைத்தும் அழைப்பு கதற விடப்பட்டது. அவள் மொட்டை மாடிக்கு போயிருப்பாள். பழகிப் போன மற்றுமொரு சபிக்கப் பட்ட தினம்!

அவ்வாரத்தில் எப்பொழுது அழைத்தாலும், குரல் கேட்டவுடனேயே பதில் இல்லாமல் தொலைபேசி அறைந்து சாத்தப்படும். அவளது கோபம் தந்த கோபம் போய் சிரிக்க ஆரம்பித்தேன் ஒவ்வொரு முறை தொலைபேசி அறையப்படும் போதும். அந்த புதிய விளையாட்டு பிடித்திருந்தது.அவளும் ஒவ்வொரு முறையும் புன்முறுவலுடனே தொலைபேசியை எரிந்திருக்க கூடும்.

அடுத்த ஞாயிறு மீண்டும் அழைத்தேன். பழகிய மெளனம்.

”வைச்சுடாத. உங்க ஊர் பஸ்ஸ்டாண்ட்லதான் நிக்கிறேன்”

”அய்யய்யோ! அறிவாளி சொல்லிட்டு வர மாட்டியா”

”எங்க சொல்ல விட்ட.போன் மாத்தி வேற வைச்சுட்டீங்களா இல்லை இன்னும் சுக்கு நூறா உடைஞ்ச அதே போன்தானா”

“கடிக்காத.என்னால இப்ப வர முடியாது.சான்ஸே இல்லை.பெரியம்மாவும், அக்காவும் வந்திருக்காங்க.விட்டுட்டு நகர முடியாது. இப்ப கோவிலுக்கு கிளம்பறோம்.நெக்ஸ்ட் வீக் பார்க்கலாமா.சாரி.சாரி..பட் தப்பு என்மேல இல்லை..உன்னை யாரு இப்ப நங்குன்னு வந்து நிக்க சொன்னது”

இப்பொழுது என் முறை. பதிலே சொல்லாமல் போனை அறைந்து சாத்தினேன். எதிரிலிருந்த டெலிபோன் பூத் அம்மையார் முறைத்தார்.


கானல் நீர்! - 1

பாழாய்ப் போன சங்கோஜம்தான்!. இரண்டு வருடத்தில் எண்ணி நான்கு தடவை கூட பேச விட்டதில்லை உள்ளே இருக்கும் கூச்ச சுபாவி. ஆனால்,பேசினால் கூட மகிழ்ந்திருப்பேனா எனத் தெரியவில்லை.இன்னவெல்லாம் பேச வேண்டும் என்ற கனவுகளே மிதப்பில் வைத்திருந்தது.

மூன்றாம் வருடத்தின் அந்திமக் காலங்களில் சின்னதாய் புன்னகை பரிமாறல்கள், அடாவடி நண்பர்கள் குழாம் அரட்டை அடிக்கும் போது, கூட நின்ற காரணத்தினால் சின்ன சின்ன விசாரிப்புகள் (”ஏம்பா, எப்ப பார்த்தாலும் திருநீர் பட்டை அடிச்சுட்டு வர?”, “ஹாப் ஹேண்ட் சர்ட் போட மாட்டியா? உனக்கு நல்லா இருக்கும்பா”). அவ்வளவுதான்!..கடைசி நாட்களின் ஆட்டோ கிராஃப் சம்பிரதாயங்களில், உன்னிடமும் அந்த டைரியை நீட்ட, இரண்டு பக்கத்துக்கு எழுதியிருந்தாய்.ஏதோ ஒரு கவிதையில் ஆரம்பித்து.

”ஏன் நீ எப்பொழுதும் எங்களுடன் பேசியதேயில்லை. எங்கள் எல்லோருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்.அடாவடிக் கும்பலுடன் சுற்றி வந்தாலும், நீ அவர்களில் ஒருவன் இல்லை என்பது நன்றாக தெரியும்.ஏனோ எனக்கு உன்னிடம் ஒரு செண்டிமெண்ட். டெஸ்ட் பேப்பர்ஸ் வாங்கும் போதெல்லாம் உன்னை பார்த்து விட்டு வாங்குவேன்.ரிசல்ட் நன்றாக இருக்கும்.கிட்டதட்ட மூன்று செமஸ்டராக உன்னை பார்த்த பின்தான் டெஸ்ட் பேப்பர் எழுந்து சென்று வாங்குவேன்.நீ ஏன் பேசியதில்லை என்பது தெரியாது.ஆனால்,என்னைப் பொறுத்த வரை எல்லோரும் நல்ல நண்பர்களே.பேசாத உன்னையும் சேர்த்து.கண்டிப்பாக பைனல் ரிஸல்ட் பார்க்குமன்று வந்து விடு.உன்னை பார்த்த பின்புதான் ரிசல்ட் பார்க்க செல்வேன்” என்று இன்னும் என்னென்னவோ எழுதியிருந்தாய்..

மூன்று வருடங்களை வீணடித்து விட்டதாய் கழிவிரக்கம் வந்து சூழ்ந்தது அந்த ஆட்டோகிராஃபை படித்த கணத்தில்.கல்லூரி முடித்த இரண்டாவது வாரத்திலேயே பணியில் அமர்ந்து விட்டேன். தேர்வு முடிவுகள் வெளியிட்ட நாளன்று அலுவலகத்தில் ஆகப் பெரிய இக்கட்டில் மாட்டிக் கொண்டேன். மாலை நான்கு மணிக்கு அடித்து பிடித்து, அந்த டிவிஎஸ் 50 வண்டியை கதறக் கதற முறுக்கி கல்லூரியில் கொண்டு வந்து நிறுத்திய போது, நாலைந்து நண்பர்களே இருந்தனர். ஜேம்ஸ் சொன்னான்.”மாப்ளே, எல்லோரும் இப்பதாண்டா 3.45 சதாஸ்ல ஏறிப் போனாங்க. சத்யா கூட உன்னை தேடிகிட்டு இருந்தாடா”.போர்டிகோவில் இருந்து அப்படியே திரும்பியவன், நேராக பேருந்து நிலையம் வந்து திருப்பூர் செல்லும் அனைத்து பேருந்துகளில் ஏறி இறங்கியும், உன்னை பார்க்க முடியவில்லை.என்னை நானே முழுமனதாக வெறுத்த தினம் அது.

இன்னுமொரு இரண்டு,மூன்று மாதங்கள் ஓடியது. தனிமை நடைபிணமாக்கியது. விடுமுறைகளற்ற வாழ்க்கை.விடுபட விரும்பா வாழ்க்கை. ஞாயிறு மாலை ஆறு மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி அப்படியே கண்வழி தோன்றும் சாலைகளில் சென்று கொண்டிருப்பேன். ஊரின் ஒதுக்குப் புறத்தில் ரயில்வே தண்டாவளங்களை ஒட்டிக் கிடந்த பாறைகளில் இரவு ஏழுமணிக்கும் வெயிலின் வெதுவெதுப்பு ஊறிக் கொண்டிருக்கும். அதில் படுத்து வெயிலை என்மீது வாங்கி சிகரெட் புகைப்பதென்பது அப்போதைய வாராந்திர வாடிக்கையாகி விட்டிருந்தது.

அப்படியான பொழுதொன்றில் சட்டென தோன்றவே, வண்டியில் வைத்திருந்த அலுவலக ஏடொன்றை எடுத்து, சரசரவென எழுத ஆரம்பித்தேன்.இப்பொழுது தெளிவாக நினைவில் இல்லை.ஆனால்,அக்கணத்து சஞ்சலத்தினை தெளிவாக எழுத்தில் இறக்கிய நினைவிருக்கிறது.

தனிமை,தனிமை,தனிமை எனக் கரைந்த அப்பொழுதுகளை எழுத்தில் இறக்கினேன்.இரண்டு நாட்களாக என்னுடனேயே வைத்திருந்த அக்கடிதத்தை கடைசியில் அஞ்சலும் செய்தேன். இரண்டு வாரங்கள் ஓடியும் பதில் இல்லை. பதிலின்மை பெரிய ஏமாற்றத்தை தரவில்லை.ஒரு வழிப்பாதை பயணமே போதுமென இருந்த நாட்களது. மூன்றாவது வாரம் மீண்டும் ஒரு கடிதம்.அதே இடம்.அதே ஏட்டில் இருந்து கிழித்த தாள்.என் முன் கரைந்து கொண்டிருந்த காகம், என்னைக் கடந்த புகைவண்டி, அதில் தெரிந்த சன்னலோர சினேகிதிகள் தந்த ஆசுவாசம் என அப்பொழுதைய என் சுற்றம் எல்லாவற்றையும் கடிதத்தில் நிறைத்தேன்.என்னையும், என் சுற்றத்தையும், அது எனக்குள் ஏற்படுத்தும் சஞ்சலங்களையும் கடிதம் வழி உன்னிடம் கடத்துகிறேன் என்பதே என்னை அப்பொழுது இலகுவாக்கியது.உற்சாகமாக வழிநடத்தியது. சுகமாக போய்க் கொண்டிருந்த ஒரு வழிப் பயணத்தை, ஒரு மதிய நேரத்தில் உன்னிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் வாயிலாக நிறுத்தினாய்.

-தொடரும்

கானல் நீர்! - 2

Monday, April 07, 2014

மகளுக்கு பெயர் வைத்த காதை!

பெண் குழந்த பெற்ற அப்பன்களுக்கு அதுவும் சிறுவயதில் இருந்தே பெண்வாசம் இன்றி நாட்களை கழிக்க சாபம் பெற்ற அப்பன்களுக்கு, பெண்குழந்தையை கையில் வாங்கிய நொடியில் இருந்து கால்கள் தரையில் நிற்காது. சடுதியில் மனத்திரையில் அவளுடன் சினேகமாக கழிக்கப் போகும் அந்திமக் காலம் வரையிலான பல காட்சிகள் ஊர்வலம் போக ஆரம்பிக்கும். நிதர்சனம் வேறென்று புரிவதெல்லாம் நாற்பது வயதில்தான். அப்படியாகப்பட்ட அப்பன்மார்கள், உலகையும்,தன்னையும் ரட்சித்து அரவணைக்க வந்த தேவதைக்கு பெயர் தேர்ந்தெடுக்கும் உவகை இருக்கிறதே.அடடா!

நாங்கள் முதல் குழந்தைக்கென பெயர் எதுவும் முடிவு செய்ய வில்லை.எந்த குழந்தையென்ற முன்முடிவு ஏதும் இல்லை. ”உன்னை மாதிரி தான்தோன்றிபயலுக்கெல்லாம் பொண்ணுதாண்டா பிறக்கும்” என்பது சகதர்மணியின் ஆசிர்வாதம்.அப்படியே ஆனது. மதியம் 2.30க்கு பாண்டிச்சேரி க்ளூனியில் பிறந்தாள். எப்பொழுதும்,எல்லாவற்றையும் மற்றுமொரு நிகழ்வு அல்லது இதிலென்ன இருக்கிறது என்ற பாவனையிலேயே கடக்கும் எனக்கும் அந்த சிசுவை புதிதாக கையில் ஏந்திய கண நேரம் ஏதோவொன்று நடந்தது :).

அறையில் சென்று மனைவி,குழந்தையை விட்டு விட்டு சென்றமர்ந்த இடம் அருகிலிருந்த பூங்கா.எவற்றிலும் நிலைகொள்ள முடியவில்லை.தகப்பனான பின்னர் உண்டான குழப்பமான மனநிலை.ஒரு மாதிரியான அவஸ்தை அது. அங்கிருந்து கிளம்பி, கடற்கரை சாலையிலிருந்த ஒரு பிரவுசிங் செண்டர் சென்றேன். நிறைய பெயர்கள் வடிகட்டி எடுத்து வந்தாலும், எதுவுமே என் மகளுக்கானது அல்ல என்று தோன்றியது. பிரிண்ட் எடுத்த தாள்களுடன் நடந்து சென்று, கடலை பார்த்து அமர்ந்து இருந்த போது சட்டென ’தயா’ என்ற பெயர் தோன்றியது. உடனே எழுந்து மனைவியிடம் சொல்லலாமென ஓடி வந்தால், ஐசியூவில் அரைமயக்கத்தில் கிடந்தாள்.

அவளுக்கு நினைவு வந்ததும் அருகிலிருந்தவனை பார்த்து சிரித்தவளிடம்,

 ”தயா”என்றேன்.

“ஆரம்பிச்சுட்டியா? மாடர்னா இல்லையே! ”.

”நல்லாருக்கு.இதுதான் பேர்”.

”வேற என்ன பேர் பார்த்து வைச்சுருக்க” என்றவளிடம், வேண்டுமென்றே அவளுக்கு பிடிக்காத பெயர் பட்டியல் ஒன்று வாசித்தேன்.

 ”என்னால இப்ப சண்டை போட முடியாது” என்றவள், காலையில் “அதையே வைச்சுக்கோ.நல்லாருக்கு”எனச் சொல்லி விட்டாள்.

அப்பா, ஆயுத பூஜை மற்றும் டெக்!

அப்பா மெக்கானிக்.நாளும் பொழுதும், இரவும் பகலும் பட்டறையிலேயேதான் கிடப்பார்.இரும்பு பிடிச்சவன் கையும், சிரங்கு பிடிச்சவன் கையும் சும்மாயிருக்காதுன்னு சொலவடை இருக்கில்லையா.அதுக்கு முழுசா பொருந்தக் கூடிய உதாரணம் அப்பாதான். இப்ப 70 வயசாகுது,இன்னமும் அப்படித்தான். நல்லா ஓடற மோட்டாரை தண்ணி வேகமா இழுக்க மாட்டேங்குதுன்னு சொல்லி அக்கு வேறா ஆணி வேறா கழட்டி அதை சுத்தமா ஓடாம பண்ணி, அப்புறம் மண்டைய உடைச்சு சரி பண்ணி, ரெண்டு மூணு நாள் கழிச்சு  ஓடவைப்பார்.

இன்னைக்கு காலையில் கூட வீட்டுக்கு வந்தவர் ”ஏன்ப்பா இந்த ஃபேன் ஸ்லோவோ ஓடுதுன்னு சொல்லி கழட்டி ஏதோ பண்ணிட்டு இருந்தார்.நான் ஆபிஸ்க்கு வந்துட்டேன்..எனக்கு தெரியும் சாயந்திரம் வீட்டுக்கு போனா, அந்த ஃபேன் குத்துயிர் கொலையுயிராய் மூலைல கிடக்கும்..ரெண்டு நாள் கழிச்சு கண்டென்ஸர் போய்டுச்சுப்பான்னு சொல்லி கொண்டு வந்து வேற மாத்தி போட்டுட்டு போவார். எனக்கு வாய்ச்சவங்க அவருக்கு சப்போர்ட்டுங்கிறதால,ஓரளவுக்கு மேல அவரை கண்டிக்க முடியாது. இப்படியாகப்பட்ட அப்பா அதிக பட்ச உற்சாகமா கொண்டாடறது ஆயுத பூஜை.

காலையிலேயே பட்டறைக்கு போய்டுவோம்.கொஞ்ச நேரத்துல தெருப்பசங்க எல்லாம் பட்டறைக்கு வந்துடுவாங்க.ஒரே கூத்தும் கும்மாளமுமா க்ளீனிங் நடக்கும்.வருசக் கணக்கா க்ளீன் பண்ணாம கிடக்கும் எண்ணற்ற ஸ்பேனர்ஸ்,சுத்தியல்கள், திருப்புளிகள்,ஜாக்கிகள்,பைப்புகள்ன்னு ஏகப்பட்ட சமாச்சாரங்கள்.எல்லாத்தையும் கொண்டு வந்து ஒரு இடத்துல குமிச்சு, தண்ணி விட்டு, சீயக்காய் போட்டு, தண்ணி விட்டு, சோப்பு போட்டு, மீண்டும் தண்ணி விட்டு அலசி, துணியில் நல்லா துடைச்சு சந்தனம், குங்குமம், விபூதி வைச்சு அலங்கரிப்போம்.அதுக்குள்ள அப்பா அவரோட சீடர்கள் ரெண்டு மூணு பேர் இருப்பாங்க.அவங்களை வைச்சு சுவர்,தரை எல்லாம் துடைச்சு, ஒட்டடை அடிச்சு, கழுவி வைப்பார்.

எல்லா சாமானையும் கொண்டு போய் அந்தந்த இடத்துல அழகா அடுக்கிட்டு அதற்கப்புறம் கலர் பேப்பர் அலங்காரம். அப்பாகிட்ட காசு வாங்கிட்டு பசங்களை கூட்டிட்டு கடைவீதி போய், டிசைன் டிசைனா சாதா கலர் பேப்பர்ஸ், ஜிகினா வகையறாக்கள் வாங்குவோம்.எப்படி தீபாவளி வெடி பர்சேஸ் பட்ஜெட்டுல 60% பிஜிலி கிராக்கர்ஸ்க்கு போகுமோ அதே மாதிரி 60% காசு முக்கோணமா கலர் பேப்பர்ஸ் வருமே அதுக்கு போயிடும்.கத்தை கத்தையா வாங்கி தோரணம் கட்டுவோம். எல்லா பேப்பர் மற்றும் சரடு வாங்கிட்டு போனா, அம்மா ரெடியா மைதா மாவு பசை காய்ச்சி வச்சிருப்பாங்க.எல்லா பயலும் செட்டு பிரிஞ்சு, கிடைக்கிற இடத்துல எல்லாம் சரடு கட்டி வரிசையா அதுல கலர் பேப்பர் ஒட்டி தோரணம் கட்ட ஆரம்பிச்சுடுவோம். அங்கங்க நடுவில் மானே, தேனே மாதிரி தொங்கல் பேப்பர் கோபுரங்கள், ஜிகினா சரங்கள் எல்லாம் கட்டப்படும். ஆளுயர சைஸ்க்கு ஸ்பீக்கர்ஸ் மற்றும் நிறைய குமிழ்களுடன் ஆம்ப்ளிஃபயர் வந்து இறங்கும்.லேட்டஸ்ட் பாட்டு போட்டு நிலம் அதிர கேட்டுகிட்டே பசங்க உற்சாகமா வேலை செய்வோம்.

ஒரு நாலஞ்சு மணி போல எல்லா அலங்காரமும் முடிச்சுட்டு, அவசர அவசரமா ஓடிப்போய் குளிச்சு ட்ரெஸ் மாத்திட்டு வரதுக்குள்ள பெரிய பெரிய பாத்திரங்களில் சுண்டல், பெரிய மூட்டையில் பொறின்னு ரெடியா இருக்கும். பசங்க சுத்தி உட்கார்ந்து பாலித்தீன் பைகளில் எல்லாத்தையும் போட்டு ரெடி பண்ணி ஓரங்கட்டுவோம்.அந்த ஏரியாவிலேயே அப்பா ரொம்ப வருசம் இருப்பவர் என்பதால் நிறைய பேர் பூஜைக்கு வருவார்கள்.எனவே, மலை போல் சுண்டல் மற்றும் பொறி பைகள் குவியும். ஆறு மணிபோல அப்பாவும் அவர் சீடர்களும் பயபக்தியா சூடம்,சாம்பிராணி சகிதம் சாமி கும்பிட்டு முடிக்க பொறி,சுண்டல் போணியாகும்.அதுக்கப்புறம் பெரியவங்க செட் ஒரு புறமும் வாண்டுகள் ஒரு பக்கமும் அரட்டை முடித்து எல்லோரும் கிளம்புவார்கள்.நிற்க.

இதற்கப்புறம்தான் பொடுசுங்க ஆவலுடன் எதிர்பார்க்கும் முக்கிய நிகழ்வு ஆரம்பமாகும்

நைட்டு எட்டு மணி வாக்கில் எல்லோரும் வீடு போய் சாப்பிட்டு வந்த பின் அந்த உற்சாக அனுபவம் ஆரம்பமாகும்.அதுதான் டெக்கில் படம் பார்ப்பது.

சாயந்திரம் கலர் பேப்பர் வாங்கப் போகும் போதே ராதா வீடியோ விஷனில் போய் டெக் வாடகைக்கு எடுத்து விடுவோம். அன்னிக்கு வந்து வாடகைக்கு எடுப்போம்ன்னு ரெண்டு மூணு நாளுக்கு முன்னமேயே போய் ரிசர்வ் வேற பண்ணி வைக்கணும். டெக் எடுக்கறது பெரிய விசயமில்லை.கேசட் செலக்ட் பண்ணறதுதான் அலாதியான அனுபவம்.நாலைஞ்சு ஃபைல்ல, பாலித்தீன் கவர்க்குள்ள இங்க் பேனால, குண்டு குண்டா அழகான கையெழுத்துல எழுதி பேப்பர் சொருகி இருக்கும். முதலில் வருவது எம்.ஜி.ஆர்.ஹிட்ஸ் அப்புறம் சிவாஜி வழியே, ரஜினி, கமல்ன்னு லிஸ்ட் தொடரும்..ரெண்டு மூணு நாள் தீவிர டிஸ்கசன் பண்ணி, படம் பேர் எல்லாம் சீட்டுல குறித்து வைத்து கொண்டு போனால் அதில் பாதி இருக்காது.ஆனாலும், பொறுமையாக தேடித் தேடி கேசட் பொறுக்குவோம். one of the toughest situation to make a decision till date அப்படின்னா அது இந்த கடையில வருசத்துக்கு ஒருக்கா போய் இந்த கேசட் செலக்ட் பண்ணறதுதான் :)

டெக்,கலர் டிவி வாடகை எவ்வளவு என மறந்து விட்டது.கேசட் பத்து ரூபாய் ஒரு நாளைக்கு.24 hrs செக் இன்.அடித்து பிடித்து அடுத்த நாள் அதே நேரத்துக்குள் கொண்டு வந்து கொடுத்து விட்டு, அடுத்த செட் எடுத்துப் போவோம். ஒவ்வொரு காலகட்டத்துலயும் வாழ்க்கை லட்சியமா ஏதாவது ஒண்ணு இருக்கும். காலேஜ் படிக்கிறப்ப ஸ்போர்ட்ஸ் ஷீக்கும், டிவிஎஸ் சுசுகி பைக்குக்கும் ஆசைப்பட்ட மாதிரி. இந்த டெக் வாடகைக்கு எடுக்கிற கட்டத்துல் இருந்த லட்சியம், சொந்தமா டெக்கும்,கலர்டிவியும் வீட்டுல இருக்கணும் அப்படிங்கறதுதான் :)

பாயும்புலி, போக்கிரி ராஜா, சட்டம் ஒரு விளையாட்டு (குள்ளநரி,புல்லுக்கட்டு, வெள்ளாடு எத்தனை பேருக்கு இந்த பாட்டு ஞாபகம் இருக்கு:)), உரிமை கீதம், சங்கர்குரு இப்படி இருக்கும் கேசட் லிஸ்ட். இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த என்றொரு படம் யாராவது பார்த்திருக்கீங்களா?.அந்த கேசட் எல்லாம் எடுத்து வந்து பார்ப்போம். அப்பா பட்டறைக்கு பக்கத்தில் ஒரு அண்ணண் வெல்டிங் பட்டறை வைத்திருப்பார்.அவர் தனியே பணம் கொடுத்து ஜெய்சங்கர் படம் எடுத்து வரச் சொல்வார். மினிமம் ஐந்து கேசட் எடுத்துக் கொள்வோம்.

ஒன்பது மணி வாக்கில், கலர் டிவி, டெக் அனைத்தும் பட்டறைக்கு வெளியே செட் செய்யப் படும். மினிமம் ஐம்பது பேராவது குழுமியிருப்பார்கள்.எவ்வளவுதான் விவரமாக டெக் வாடகைக்கு விடுபவரிடம் கேட்டிருந்தாலும், மிகச்சரியாக வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள் ஒயர்கள் மாற்றி சொருகப் படும்.ஊமைப் படம் மட்டும் ஓடும்.ஒயர்கள் மாற்றி சொருகினால் காட்சி மறைந்து சத்தம் மட்டும் கேட்கும்.சரி செய்யப் படும் நேரத்திற்குள்ளாக டைட்டில் முடிந்து, வசனம் ஆரம்பித்து விட்டால் கூட்டத்தில் சலசலப்பு அதிகமாகும். அட்வைஸ் அய்யாசாமிகளின் அட்ராசிட்டி அதிகமாகும்.படம் போய் கொண்டிருக்கிறதே என்ற பதட்டம் சூழலை உஷ்ணமாக்கும். கேசட் திருப்பி போட்டு பாருப்பா என்று சொன்ன பிரகஸ்பதி எல்லாம் உண்டு.

ஒரு வழியாக எல்லாம் சரியாகி ரீவைண்ட் செய்து படம் போடப்படும் போது, மொத்த கூட்டமும் ஆன்மாவை கண்டுணர்ந்த நிலையில் அமைதி காக்கும்.கேசட் தேய்ந்து போயிருந்தால், பத்து நிமிடம் ஓடிய பிறகு க்ரெயின்ஸ் வர ஆரம்பிக்கும் அல்லது டேப் சிக்கி கொள்ளும்.மெதுவாக கேசட்டை வெளியில் எடுத்து, சிக்கியுள்ள டேப்பை அலுங்காமல் குலுங்காமல் வெளியில் இழுத்து, சுண்டுவிரல் கொண்டு அந்த அடிபட்ட டேப்பின் பகுதியை கொஞ்சம் ஓட்டி விட்டு,  கேசட் மீண்டும் சொருகப் பட்டு  படம் ஆரம்பிக்கும். விடிவதற்குள் மூன்று படமாவது பார்த்து விடுவோம்..

அடுத்த நாள், டிவியும் டெக்கும் வீட்டுக்கு ஷிப்ட் ஆகிவிடும். நாள் முழுமைக்குமான சாப்பாடு முந்தின நாளே ரெடியாகி விடும் எல்லோர் வீட்டிலும்.ஒரு படம் முடிந்ததும் அதிக பட்சம் அரைமணி நேர கேப்.உஸ் இஸ் என எல்லோரும் திரும்ப ஆஜராகி விடுவார்கள் அடுத்த படத்துக்கு.இங்கே பெரும்பாலும் அம்மா மற்றும் அக்கம்பக்கத்து அத்தை,அக்காக்களின் செலக்சன்தான்.சரஸ்வதி சபதம் (what an epic!!), நவக்கிரக நாயகி, எதிர் நீச்சல், கலாட்டா கல்யாணம் என்று போகும் அந்த லிஸ்ட்.அதை கொஞ்ச கொஞ்சம் சாய்ஸில் ரெஸ்ட் விட்டு பார்ப்போம். அப்பத்தான் நைட் கிடைக்கிற கேப்பில் ஆர்மர் ஆஃப் காட், ப்ரொஜெக்டர் எல்லாம் பார்க்க முடியும்.

ரெண்டு மூணு நாள் கொண்டாட்டம் முடிந்து, மனசேயில்லாமல் டெக்,டிவியை கொண்டு போய் கொடுத்து விட்டு அடுத்த சீசன் விளையாட்டை ஆரம்பித்து விடுவோம்.அதிகம் சினிமாக்களுக்கு எல்லாம் அப்பா கூப்பிட்டு போக மாட்டார்.பக்கத்துல இருக்கிற டெண்ட் தியேட்டர் எல்லாம் ஒன்பது,பத்தாவது படிக்கிறப்ப எட்டி பார்த்ததுதான். அதனால், தீபாவளிக்கு சற்றும் குறையாத உற்சாக மனநிலை இந்த ஆயுதபூஜைல டெக் மற்றும் சினிமாக்கள் மூலமா கிடைக்கும்.

சுபம் :)

சக்கை!

90களின் இறுதியில், அலுவலகத்தில் ஃபேக்ஸ்க்கு என்று லேண்ட்லைன் நம்பர் ஒன்றிருந்தது. மும்பை தலைமை அலுவலத்திலிருந்து  ஏதேனும் அவசரச் செய்தி என்றால் அந்த ஃபேக்ஸ் மெலிதாக அலறும்..பொதுவாக எல்லோரும் ஆர்வமாய் அந்த ஃபேக்ஸ் வெளியே துப்பப் படும் வரை காத்திருக்க, எனக்கு மட்டும் அந்த ரிங் திகில் பந்தை வயிற்றில் உருளச் செய்யும்..ஏனெனில், பெரும்பான்மையான பெரிய ஆர்டர்கள் என் கையில் இருக்கும்.அவற்றில் ,எப்படிப் பார்த்தாலும் ஏதேனும் ஒரு இழவு விழுந்திருக்கும்..வரும் ஃபேக்ஸ் செய்தியானது,மிகச் சரியாக அந்த பிரச்னையில் இருக்கும் ஆர்டர்,இரு நாட்களில் ஷிப் ஆக வேண்டும் என்ற கட்டளையுடன் இருக்கும்..ஃபேக்ஸ் கையில் கிடைத்த நொடியில் ஓட ஆரம்பித்தால் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு டீ,சிகரெட் மட்டும் குடித்து ஷிப்மெண்ட் முடித்து வண்டி ஏற்றி அனுப்பிய நொடி சுரக்கும் ஒரு ஆசுவாசம் அந்த இரண்டு நரக நாட்களை மறக்கடிக்கும்..எத்தனையெத்தனை ஃபேக்ஸ்கள்... எத்தனையெத்தனை ஓட்டங்கள்.

அப்படியாகப்பட்ட ஃபேக்ஸ் அலறல் ஒன்று, அலுவல் முடித்து, வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த 1997 அல்லது 1998 நவம்பர் மாத இரவு ஒன்பதரை மணி வாக்கில் வந்து சேர்ந்தது.வழக்கம் போல ஒரு குறிப்பிட்ட பெரிய ஆர்டரை குறிப்பிட்டு, அடுத்த இரண்டு நாட்களில் அது சென்னை துறைமுகத்தில் சேர்க்கப் பட்டு ஷிப்மெண்ட் ஆகவேண்டும் , தவறும் பட்சத்தில் நிறுவனத்தின் கணக்கில் வானூர்தியில் சரக்கு எய்யப் பட வேண்டும் என்ற துக்கச் செய்தியை தாங்கி வந்த ஃபேக்ஸ் அது. ஏர் ஷிப்மெண்ட் என்பது எங்கள் அகராதியில் கெட்ட வார்த்தை.எவனொருவனின் ஷிப்மெண்ட் ஏர் ஷிப்மெண்ட் ஆகிறதோ, அவன் பெரும் குற்றம் செய்தவன் என்ற கண்ணோட்டத்திலேயே நோக்கப் படுவான். குற்றவுணர்ச்சியில் தள்ளி அடுத்த சில வாரங்களுக்கு தூங்க விடாத அவஸ்தை அது. ஏர் ஷிப்மெண்ட் செலவு  மிகுந்த நஷ்டத்தை உண்டாக்குவது.

ஃபேக்ஸ் வந்த அடுத்த நிமிடம், ”யார்டா ஆர்டர் சூபர்வைசர்?” என ’சார்’ கேட்க, செய்தியின் தாக்கத்தில் துவண்டு போய் கிடந்த நான், அறைக்குள் குறிப்பிட்ட ஆர்டரின் ஃபைல்களோடு சென்றமர்ந்து, கவலைக்கிடமாக கிடந்த ஆர்டர் குறித்த தகவல்களை, அமைதியாக சொல்ல ஆரம்பித்தேன். எதிரிலிருந்தவருக்கு,  வாழ்வின் பெரும் துயரம் அனைத்தும் ஒரு சேரச் சூழ்ந்து, என் கைகளில் இருந்த கோப்புகளின் தாள்களில் இருந்து, எனது சற்றே குறைந்து ஒலித்த குரல் வழியே அவரை அடைந்து கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றிக் கொண்டிருந்தது. நாசி துடிக்க, முகமெல்லாம் சிவப்பேற, நரம்பு புடைக்க, நல்லிரவு சொல்லி உத்தரவு வாங்கி கிளம்ப அறை வாசலில் காத்திருந்த சகாக்கள் அத்தனை பேர் மற்றும் நானும் எதிர்பார்த்தவாறே, காத்திரமான சொற்கள் பெரும் கூச்சலிடையே வந்து விழ ஆரம்பித்தது.முத்தாய்ப்பாக, “ரெண்டாவது நாள் நைட் ஷிப்மெண்ட் போகலைன்னா, அப்படியே எங்கேயாவது ஓடிப் போயிரு” என்று அதிர்ந்து விட்டு கிளம்பி விட்டார்.

அந்நேரத்துக்கு அனைவருக்கும் தகவல் சொல்லி, ஆட்களை ஏற்பாடு செய்து, ஓட்டத்தை ஆரம்பித்தேன். விடிய விடிய வேலை. அடுத்த நாள் பகல் முழுவதும், ஒவ்வொரு டெய்லரிங் மற்றும் இன்னபிற ஜாப் வொர்க் யூனிட்களுக்கும் இடையே பம்பரமாய் நகரின் மூலை முடுக்கெல்லாம் வண்டியில் சுற்றி வந்த படியே இருக்க, அனுமார் வால் போல வேலை முடியாமல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் என வேலை முடிய முடிய சரக்குகளை ஆள் வைத்து இடம் மாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக எங்களது தொழிற்சாலைக்குள் கொண்டு வந்த சேர்த்த படியே இருக்க, நேரம் கரைந்து கொண்டேயிருக்கிறது. இரவு ஒன்பது மணிக்குதான் உறைக்கிறது. தயாராகி கொண்டிருக்கும் ஆர்டருக்குண்டான பேக்கிங் லிஸ்ட், மாலை ஆறுமணிக்கே மும்பைக்கு அனுப்பப் பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மும்பை அலுவலகம் அடுத்த நாள் இறுதி ஆவணங்களை தயார் செய்து சென்னைக்கு அனுப்ப, அதற்கடுத்த நாள் சென்னை சென்று இறங்கும் சரக்குகள் கஸ்டம்ஸ் க்ளியர் செய்யப் படும். ஆர்டரின் மேற்பார்வையாளன் என்ற முறையில் என்னைத் தவிர வேறு யாரும் பேக்கிங் லிஸ்ட்க்கான தகவல்களைத் தர முடியாது.

விழுந்தடித்து ஒன்பது மணிக்கு அலுவலகம் சென்றால், ’சார்’ மட்டும் கடுகடுப்புடன் உட்கார்ந்திருக்கிறார்..  ”ரெண்டு மணி நேரமா எல்லா இடத்துலயும் ஃபோன் போட்டு கேட்டுகிட்டே இருக்கேன். எங்கடா போன?”. நான் மாலை முழுவதும், கைத்தறிகள் அமைந்த, தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத, ஊரின் வெளிப்புறம் சுற்றிக் கொண்டிருந்தேன். ஆறு மணிக்கு போக வேண்டிய ஸ்டெனோவை எட்டு மணி வரை இருக்கச் சொல்லியிருக்கிறார். என்னிடம் இருந்து எந்த தகவலும் வராது போகவே, ஸ்டெனோ வீட்டுக்கு போயாகி விட்டது. ”காலைல ஏழு மணிக்கே பாம்பே ஆபிஸ்ல வரேன்னு சொல்லிட்டாங்க.நைட் நீயே உட்கார்ந்து பேக்கிங் லிஸ்ட் ரெடி பண்ணி ஃபேக்ஸ் பண்ணிடு.பழைய ஃபேக்ஸ் நம்பர் ஒர்க் ஆகலை..இந்தா புது நம்பர்” என்று ஃபேக்ஸ் எண் குறித்த சிறு தாள் ஒன்றினை கையில் புதைத்து விட்டு சென்று விட்டார். மிச்ச சொச்ச ஃபாலோஅப்கள் கொஞ்சம் இருந்தது. வெளியே சென்று அதை முடித்து விட்டு வந்து டைப்ரைட்டரில் உட்காரும் போது மணி பதினொன்று.

அது வரை ஓர் எழுத்துக் கூட தட்டச்சு செய்ததில்லை. ’டப் டப்’  என்ற அந்த ஒலியே நாராசமாய் ஒலிக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது, ஸ்டெனோ ஏதாவது வேகமாக டைப் செய்தால், ”கொஞ்சம் மெதுவா அடிங்க..இல்லைன்னா பத்து நிமிசம் பொறுங்க..நான் வெளியே கிளம்பிடுவேன்..அப்புறம் அடிச்சுக்குங்க” என்று சொல்கிற ஆள் நான். விதியே என்று, ஒவ்வொரு எழுத்தையும் எண்ணையும் துழாவி துழாவி தட்டச்ச ஆரம்பித்தேன்.நான்கு பக்க பேக்கிங் லிஸ்ட்டை அடித்து முடித்த போது விடிகாலை ஐந்து மணி ஆகி விட்டிருந்தது. நான்கு பக்கத்தையும் எடுத்துச் சென்று, ஃபேக்ஸ் மெஷினுக்கு கொடுத்தால், அது எரர் மெசேஜை துப்பியது.

அதிகம்  ஃபேக்ஸ் மெஷின் உபயோகித்ததில்லை..அதிக பட்ச ஃபேக்ஸ் மெஷின் அறிவென்பது, பேப்பரை ட்ரேயில் வைத்து, நம்பர் டயல் செய்து, பச்சை பட்டனை அழுத்தினால்,ஃபேக்ஸ் போய் விடும். அவ்வளவுதான். அப்படி ஒரு சுளுவான விஷயமாகத்தான் அந்த நாள் வரை இருந்தது. மற்றபடி, ஸ்டெனோதான் எப்பொழுதும் ஃபேக்ஸ் அனுப்புவார்கள்.  ஆனால், அன்று மட்டும்  டெலிவரி உறுதிச் சீட்டுக்கு பதிலாக, எரர் மெசேஜ் மட்டுமே வந்து விழுந்து கொண்டிருந்தது.விதம் விதமாக, பக்கங்களை மாற்றி வைத்தும், கொஞ்சம் இடம் வலம் மாற்றி வைத்தும், எப்படி எப்படியோ அரைமணி நேரம் முயற்சித்தும் சுபமில்லை.

ஒரு நொடி கூட கண் மூடாத இரண்டு முழு இரவுகளை கடத்தி காந்திய கண்கள், நேற்றுக் காலை வீட்டிலிருந்து வந்தவன் அதே உடையோடு சுற்றிக் கொண்டிருந்ததில் வந்த பிசுபிசுப்பு, பகல் முழுவதும் அலைந்ததில் உண்டான அசதி, காலையிலிருந்து டீ,சிகரெட் மட்டுமே உட்கொண்டதால் வந்த பசி, எரிச்சல், எல்லாம் கலந்து தன்நிலை முற்றிலும் இழந்து கொண்டிருந்தேன். உடல், மனம் இரண்டுமே ஒத்துழைக்க வில்லை. எந்தவொரு கணத்தில் அது ஆரம்பித்தது எனத் தெரியவில்லை.வெளி வந்த பக்கங்களை வெறிகொண்டு மீண்டும் மீண்டும் ஃபேக்ஸ் மெஷினில் வைத்து நம்பரை அழுத்திக் கொண்டேயிருந்தேன். ஆளில்லாத மறுபக்கம்  யாரவது வந்து ஒரு வேளை பக்கங்களை இழுத்துக் கொள்ளக் கூடும் என்ற நினைப்பு அது.நினைவு தெரிந்து ஒரு மணி நேரம் இந்த விளையாட்டு நடந்தது. அதற்கப்புறம் எவ்வளவு நேரம்  எனத் தெரியவில்லை.அசதியில், அங்கிருந்த சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து, ஃபேக்ஸ் டேபிளில் தலை சாய்த்து கவிழ்ந்து கிடக்கிறேன்.

காலை ஏழரை மணிக்கெல்லாம் வந்து விட்ட ’சார்’ , தோளை பிடித்து உலுக்குகிறார்..”என்னடா பண்ணி வைச்சுருக்க?” என்று தரையை காண்பித்து கேட்கிறார்.எங்களை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஃபேக்ஸ் எரர் மெசேஜ் குப்பைகள் கொஞ்சம் கூட தரை தெரியாத அளவு நிறைந்து கிடக்கிறது.

“ ஃபேக்ஸ் போகலை” என்றவுடன், சட்டையை கோர்த்து இழுத்து, சப்பென அறைகிறார். வெடுக்கென தாள்களை பிடுங்கி, ஒவ்வொன்றாக ஃபேக்ஸ் செய்கிறார். அமைதியாக, வெகு நிதானமாக ஒவ்வொரு பக்கமாக உள்நுழைந்து வெளியேறுகிறது. அதையே வெறித்துக் கொண்டிருக்கிறேன்.ஆயிற்று. எல்லாத் தாள்களும் சென்றாகி விட்டது. டெலிவரி சீட்டும் பிரிண்ட் ஆகி வருகிறது.கையில் எடுத்து, முகத்தில் விட்டெறிகிறார்..நான் இன்னமும் மெஷினையே முறைத்துக் கொண்டிருக்கிறேன்.  பழைய ஃபேக்ஸ் எண்ணுக்கே அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறேன்..அவர் கொடுத்துச் சென்ற புதிய எண் புத்தியில் நிலைக்க வில்லை.

தோள் பிடித்து திருப்பி,  முகவாய் நிமிர்த்தி, கடுமையான தொனியில் கேட்கிறார். ”நேத்து முழுசும் சாப்ட்டியாடா?”.இட வலமாக தலையசைக்கிறேன். ”வீட்டுக்கு போனியாடா?”. அமைதியாக இருக்கிறேன்..கண்ணுக்குள் பார்த்துக் கொண்டேயிருக்கிறார். சில நொடிகளுக்கு பின், அமைதியாக தலை குனிகிறேன். சிகரெட் எடுத்து பற்ற வைத்து இழுத்துக் கொண்டே, அவரது இருக்கையில் அமர்கிறார்.எதிர் இருக்கையில் கை காண்பிக்கிறார். அமர்கிறேன்.மெதுவாக, ஆனால் உறுதியான குரலில் சொல்கிறார்.

”I'll give you two hours. Go home.Take bath.Dress up and eat.I need you to be here by 9 and you should tell me that we are shipping this today at any cost.".

எதுவும் பேசாமல், அமைதியாக வெளியேறுகிறேன். ஸ்கூட்டரில் உட்கார்ந்து கிளப்பி, எடுத்த எடுப்பில் இரண்டாவது கியர் பின் நான்காவது கியர் என வேகமாக மாற்றி, ஆக்ஸிலேட்டர் திராட்டிலை பலம் கொண்ட மட்டும் முறுக்கி ஆளரவமில்லாத ரோட்டில் ஓட்டிய போது, அந்த  நாளை எதிர்கொள்ள தயாராகி விட்டிருந்தேன்..