Friday, January 03, 2014

சுந்தரம் தாத்தாவும், திலீப்குமாரின் “கடிதம்” சிறுகதையும்!

 
சுந்தரம் தாத்தா, ஆறடி இரண்டு அங்குலம் இருப்பார். அகன்ற தோள்கள், எம்.ஜி.ஆர். நிறம். கஞ்சியில் தோய்த்த கதர் வேட்டியும், ஜிப்பாவுமாக வலம் வருவார். நிறைய பழங்கதைகள் சொல்வார். சென்னை நெடுஞ்சாலையில், விழுப்புரம், உளுந்தூர்பேட்டைக்கு இடையில் மடப்பட்டு என்றொரு ஊர் இருக்கிறது. வலது புறம் திரும்பினால் திருவண்ணாமலை, இடம் திரும்பினால் கடலூர். அந்த நால்முனை சந்திப்புக்கு சுமார் ஒரு கி.மீ முன்னால் நெடுஞ்சாலையின் ஓரம் அய்யனார் கோவில் ஒன்றுண்டு. அய்யனார் குதிரையின் காலடியில், அரச மரத்தடியில் கட்டில் போட்டு உட்கார்ந்து, தாத்தா விவசாயத்தை மேற்பார்வை செய்வார்.எத்தனையோ நாள் அவருடன் அங்கே உட்கார்ந்து கம்மங்கூழும், கேழ்வரகு அடையும் சாப்பிட்டு இருக்கிறேன்.

எவ்வளவு நிலம் எனத் தெரியாது. எப்படியும் இரண்டு, மூன்று ஏக்கராவது இருக்கும்.மேலும், ஊருக்குள் வீட்டின் பின்புறக் கொல்லையிலும் நெல் விளையும் நிலம் இருந்தது. கிராமத்தில் தாத்தா வீடு சின்ன கம்பம் (சவுத் ஆர்க்காட்டில் பண்ணை வீட்டை கம்பம் என்பார்கள்). அந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள தன் சமுதாயத்தை சேர்ந்த ஓரளவு அனைத்து குடும்பங்களை பற்றியும் விவரம் தெரிந்து வைத்திருப்பார். அனைத்து நல்லது, கெட்டதுக்கும், எல்லா குடும்பத்தில் இருந்தும் தகவல் வந்து விடும். தவறாமல் சென்று வந்து விடுவார். இவ்வளவு செல்வாக்குடன் இருந்த, தாத்தாவின் நிலம் அனைத்தும், சிறிது சிறிதாய் விலை போனது. மூன்று ஆண்கள், ஐந்து பெண்களை வாரிசாக பெற்ற தாத்தா அவர்களின் வாழ்வு சிறக்க நிலங்களை கூறு போட ஆரம்பித்தார். விவசாயத்தை கட்டி ஆளும் அளவுக்கு யாருக்கும் திராணி இல்லை. நான் பத்தாம் வகுப்பில் இருக்கும் போது பாட்டி இறந்து விட, தனியனாய் இருக்க முடியாத சூழ்நிலையில் வீட்டையும், அதன் முற்றத்தையும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்று, ஊரை விட்டு வெளியேறி, மூத்த மகன் வீட்டில் தனியறையில் ஒதுங்கினார்.

கொஞ்ச காலம், எங்கள் வீட்டில் வந்து இருந்தார். எனக்கு அப்பொழுது திருமணமாகியிருக்க வில்லை. அடிக்கடி போய் அமர்ந்திருப்பேன். வாழ்ந்து ஓய்ந்த அல்லது ஓய்வெடுக்க வைக்கப் பட்ட அந்த மனிதர், அங்கலாய்ப்புகளை கேட்பதற்க்காவது ஒருவன் இருக்கிறானே என எண்பதாண்டு கதைகளை சொல்லிக் கொண்டே போவார். பெரும்பாலும் அவற்றின் சாரம் புறக்கணிப்பின் வலி அல்லது யாருக்கும், எதற்க்கும் தேவைப்படாத நிலையை நொந்த புலம்பல் தொனியிலேயே இருக்கும். அவரது அறையை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் என்னை சோகம் சூழ்ந்து கொள்ளும்.

“ஒன்பது ரூபாய் நோட்டு”  படித்திருந்த சமயம் அது. மாதவ படையாச்சியின் சித்திரம் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. தாத்தாவின் நிலம் இருந்த மடப்பட்டுவில் இருந்து சுமார் 20-30 கி,மீ தான் இருக்கும், ”ஒன்பது ரூபாய் நோட்டு” மாதவ படையாச்சியின் நிலப்பரப்பும். அக்கதையின் ஒவ்வொரு வரியையும் என்னால் உணர்ந்து உள்வாங்க முடிந்தது. மாதவ படையாச்சிக்கும், எனது சுந்தரம் தாத்தாவுக்கும் வாழ்க்கை பயணத்தில் பெரிதும் வித்தியாசமில்லை. என்ன, சுந்தரம் தாத்தா அந்தளவு பொருளாதார பிரச்னையில் சிக்க வில்லை. நாவல் படித்து முடித்த சில நாட்களுக்கு பின்னான ஒரு மாலைப் பொழுதில்,  எப்பொழுதும் போல் தாத்தா, தனது 14 வது வயதில் களத்தில் இறங்கி சேற்றில் கால் வைத்த கதையில் ஆரம்பித்து, பலதும் சொல்லிக் கொண்டே போய், 1970களில் ஊரில் ஏற்பட்ட ஒரு பிரச்னை, அது எப்படி பல குடும்பங்களை பாதித்தது, அந்நேரத்தில் அவர் எடுத்த சில முடிவுகள், அதை பலரையும் ஒத்துக் கொள்ள வைக்க பட்ட பாடு, அதன் பிறகு எல்லோருக்குமான சுப முடிவு என்று பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, நான் உடைந்து கதற ஆரம்பித்திருந்தேன். தாத்தா அவரது ஏற்றத்தையும், இறக்கத்தையும் மாறி மாறி சொல்லிக் கொண்டே போகையில், எங்கேயோ ஒரு புள்ளியில், மாதவ படையாச்சியையும், தாத்தாவையும் நான் இணைத்துக் கண்ட சித்திரம், வெடித்து அழுகையாக பீறிட்டது.

எப்பொழுது லுங்கி கட்ட ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்தே ஒரு வைராக்கியம் கண்ணில் கண்ணீர் வரக்கூடாதென்பது. விவரம் தெரியாத பருவத்தில் உண்டாகிய இந்த வைராக்கியம் இன்று வரை தொடர்கிறது. எனக்கு விவரம் தெரிந்து நான் வாய் விட்டு கதறி அழுதது இந்த ஒரு சமயத்தில்தான். கிட்டதட்ட அரைமணி நேரமானது அழுகை, தேம்பலாகி பின் சமநிலைக்கு வர. 98 வயதில் தாத்தா இறந்த போது ரொம்பவே நிம்மதியாக இருந்தது. மடப்பட்டில் இப்போது ஃப்ளை ஓவர் வந்து விட்டது. பாண்டி சென்று வரும் போதெல்லாம், என்னையறியாமல் கால்கள் ஆக்ஸிலேட்டரில் அதிக அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கும். கண்கள் எப்பக்கமும் திரும்பாமல் சாலையை வெறிக்கும். எதற்கு இந்த பின்னோக்கிய புராணம்?

திலீப்குமார் அவர்களின் சிறுகதை “கடிதம்”.

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறந்த நூறு சிறுகதைகள் தேர்வில் ஒன்று இக்கதை. புண்ணாகி சீழ் கட்டிய பாதங்களில், பாலீத்தின் பைகள் சுற்றி, நடக்கவே சிரமப்பட்டு நாட்களை நடத்தும் வயசாளி, அவருக்கு உதவக் கூடிய நிலையில் இருக்கும் சக உறவினரிடம், கசப்பு மிகுந்த வாழ்க்கைச் சூழலை, கடிதம் வாயிலாக பகிரும் கதை. முதல் முறை படித்து முடித்தவுடன், என்ன காரணத்தினால் இக்கதை சிறந்த 100 பட்டியலில் சேர்கிறது என்ற ஆச்சர்யம் வரலாம். வழக்கமாய் வயசாளிகளிடம் கேட்ட, பார்த்த, வாசித்த அங்கலாய்ப்புதானே என்று தோன்றலாம்.

கொஞ்சம் உற்று நோக்கினால், அந்த கையாலாகாத வயசாளியின், மாறி வரும் சூழல் மீதான எரிச்சல், அசூயை மற்றும் தன்னிரக்கம் போன்றவற்றை புரிந்து கொள்ள முடியும். முக்கியமாக, மாறிவரும் சூழல் அவரை பாடாய் படுத்துகிறது. சூழல் போயின் வாழ்வில்லை என்று நம்புகிறார். எவ்வளவு சத்தியமான வார்த்தை இது. தினம் ஓரிடம் பறந்து, சாப்பிட்டு, உறங்கி எழும் புதிய தலைமுறைக்கு இது எள்ளி நகையாடும் விஷயமாக இருக்கலாம். ஆனால், நம்மில் பலர் பல இடங்களில் உழன்றாலும், ஏங்குவதே இந்த பாழாய்ப் போன மனம் விரும்பும் சூழலில் கொஞ்சம் கடைசியில் இளைப்பாறத்தானே?.

மிட்டு மாமாவின் இன்னலை சோக ரசம் பிழியாமல், சற்றே அமிழ்ந்த அங்கத நடையில் அழகாக வெளிப்படுத்துகிறார் திலிப்குமார் அவர்கள். இதுவே, இதை ஒரு ஆகச் சிறந்த கதையாக்குகிறது.

போன தலைமுறை தாத்தன்களுக்காவது, இந்தளவு அங்கலாய்க்க ஒரு வாழ்க்கை கிட்டியிருக்கிறது. நாமெல்லாம் நம் பேரன்,பேத்திகளிடம் கசிந்துருக, ஒரு நல் வாழ்க்கை வாழ்கிறோமா என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

No comments:

Post a Comment