Friday, January 03, 2014

சிறுகதைகள்!

எவ்வளவு பேர் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார்கள் எனத் தெரியாது. சிறுகதையொன்றை அதன் உயிரோடு உள்வாங்குவது என்பது பெரிய கலை. வரிகளுக்கிடையே படித்தல், வெளிப்படையாக சொல்லப் படாத கதையின் வீரியமிக்க பகுதிகளை விவரணைகளின் வழியே உணர்தல், சூழல் மற்றும் சில உரையாடல்களின் வழி கதை நகர்த்தப் படும் பாங்கு எனப் பல விதங்களில் கதையானது உள்வாங்கப் பட்டால் மட்டுமே அது ஒரு முறையான வாசிப்பாக முடியும். இல்லையென்றால் பத்தோடு பதினொன்றாக உள்ளே தங்காது வெளியேறி விடும்.

படித்த உடனேயே என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டதோ அதே அதிர்வை உண்டாக்கிய கதைகள் என யோசிக்கும் போது சட்டென நினைவில் வருவது வாத்தியாரின் ”நகரம்” மற்றும் வண்ண நிலவன் அவர்களின் “மிருகம்”. இன்னும் நிறைய சிறுகதைகள் இருந்தாலும், உடனே நினைவுக்கு வருபவை இவை. மற்றபடி, பெரும்பாலான சிறுகதைகள் மீண்டும் மீண்டும் படித்த பிறகே உள்ளே இறங்கி ஆசுவாசப் படுத்தி இருக்கிறது..நிறைய சிறுகதைகள் இன்னமும் அரைகுறை புரிதலையே தருகின்றன. “சிறுமி கொண்டு வந்த மலர்”  போன்ற கதைகள் படித்த உடனே உள்வாங்க முடியவில்லை.இணையத்தில் துழாவிய பின்தான் அது ஒரு மாய யதார்த்த வகைக் கதை என்று உணர முடிந்தது. அது தெரிந்த பின், மீண்டும் வாசித்த போது அக்கதை தந்த அனுபவம் அலாதியானது. இது போல நிறைய கதைகள், இன்னும் ஆழத்தில் இறங்காமல் மூளையிலேயே தங்கி உள்ளது.

நாஞ்சில் நாடன் அவர்களின் பெரும்பான்மையான கதைகள் கதாபாத்திரங்களையோ, சம்பவங்களையோ, ஏதேனும் ஒரு தொழில் சூழலையோ விவரித்துக்கொண்டே செல்லும். வெறும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் என்று தாண்டிக் கொண்டே சென்றால் பெரும் இழப்புதான். தலைப்பு உடனே நினைவில் வரவில்லை. தம்பதியர் ஒரு குக்கிராமத்தின் பாலத்தில், அகாலத்தில் ஏகாந்தத்தை அனுபவிக்க உட்காரும் போது உண்டாகும் உள்ளூர்க் காரர்களுடனான சல சலப்பை, இதமான போதையில் நடந்து வரும் பாட்டையா அடக்கி விட்டு, அவர்களுடன் சேர்ந்து அமர்வதாக முடியும். பாட்டையாவை பற்றிய விவரிப்பில் விரியும் கதை அச்சம்பவத்தில் வந்து முடியும் போது அந்த ஏகாந்தத்தை உணர்ந்தால்தான் அது முறையான வாசிப்பாகிறது. இல்லா விட்டால், அது ஒரு குடிகாரக் கிழவனின் மற்றுமொரு இரவு என்ற வடிவில் தேங்கி விடும்.

சாருவின் “டீ” யும் அவ்வாறே. மேலாக பார்க்கும் போது மிகச் சாதரண சம்பவம். ஆனால், அந்த தேநீருக்காக அலைபாயும் அந்த மனதின் அலைவரிசையில் நாமும் சேர்ந்து அமர்ந்து விட்டால், அட்டகாசமான வாசிப்பனுபவம் அது. ”நாளை மற்றுமொரு நாளே” வில், கந்தன் கடைசியில் தெருவின் விளக்குகள் ஒன்றொன்றாக எரிய நடந்து செல்லும் அந்தக் காட்சியின் வலிமையும், தரிசனமும் கூட வேறு எங்கோ படித்த பிறகுதான் உறைத்தது.  நிற்க.

இன்னமும் நிறைய கதைகள் இது போல், ஊரே படித்துக் கொண்டாடிய பின்னும், என்னளவில் அனுபவிக்க முடியாமல் கிடக்கிறது. அனைவருக்கும் இப்படி ஒரு பட்டியல் கண்டிப்பாக இருக்கும். நான் என்னளவில் ஒரு பட்டியல் தயாரித்து இங்கே பகிர்ந்து, ஏன் அந்தக் கதை சிலாகிக்கப் படுகிறது என கேட்கப் போகிறேன். விருப்பமிருப்பவர்கள், அவரவர் புரிதலை சொல்ல விழைந்தால், அரை குறைகள் பிழைத்துக் கிடப்போம் :)

No comments:

Post a Comment