Saturday, October 13, 2007

ஹைய்யா!! ஜில்லுன்னு ஒரு பீலிங்

ஹைய்யா!! எனது இடுகைகள் தமிழ்மணத்தில் தெரிகின்றன..உஸ்ஸ்ஸ் அப்பா, இன்னைக்கு ராத்திரி விளக்கை போட்டுக்கிட்டு பொட்டியை பிராண்டி வீட்ல அர்ச்சனை வாங்க வேண்டியதில்லை..

இலவசகொத்தனார் சார், நீங்கதான் ரிப்பன் வெட்டி நம்ம கடைல முதல்போணி(முதல் மறுமொழி)..ரொம்ப நாளைக்கு பிளாக்குல நிக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க..

ஆனா சும்மா சொல்லக்கூடாது..ஒரு வாரமா கஷ்டப்பட்டு,பதிவை எழுதி,போஸ்ட் பண்ணி, அது தமிழ்மணம்,தேன்கூடு எங்கேயுமே காணக்கிடைக்காம,ஏங்கிப்போய், திடீர்னு அது தமிழ்மணத்துல கண்ல தட்டுப்பட்டு, உடனே அதுல இலவசகொத்தனாரோட மறுமொழியையும் பாத்த உடனே அடிவயித்துல சும்மா ஜில்லுன்னு ஒரு பீலிங் வருது பாருங்க..என்னோட வீட்டுகாரம்மாவை பெண் பார்த்துட்டு வந்த அடுத்த நாள் தொலைபேசில அவங்க குரலை கேட்ட உடனே ஒரு ஜில் வந்ததுங்க..அதே பீலிங்ப்பா இப்ப..

சோதனை மேல் சோதனை

நான் இடுகைகளை இருதினங்களாக தமிழ்மணத்தில் எதிர்பார்க்கிறேன்..ஆனால் காணவில்லை.
தேன்கூட்டிலும்,கண்ணுக்கெட்டியது வரை என் பதிவுகளை காணவில்லை..யாராவது உதவுங்களேன்..

தமிழ்மணத்தில் கூறியுள்ளபடி பதிவுப்பட்டையை இணைத்தும், என் பதிவுகளில் அது காணவில்லை

Thursday, October 11, 2007

பில்கேட்ஸ்க்கு ஆப்பு!!

அம்பானி பிரதர்ஸ் சரித்திரம் படைக்கிறார்கள்.பங்குச்சந்தை பாய்ச்சல் காரணமாக முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் நிறுவன பங்குகள் மேல்நோக்கி பறந்த வண்ணம் உள்ளன.செவ்வாய்க்கிழமை முடிந்த பங்குச்சந்தை நிலவரப்படி, அம்பானி சகோதரர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் மூன்று இலட்சத்து இருபத்து நான்கு கோடிகள் என கணக்கிடப்பட்டுள்ளது ( விரல் விட்டு கணக்கு பண்ணாதிங்க! ரிஸ்க்கு!!). இது உலக மகா பணக்காரர்கள் பில்கேட்ஸ் மற்றும் கார்லோஸ் ஸிலிம்மின் சொத்து மதிப்பை விட அதிகம்.மேலும் இது நம் நாட்டின் GDP ல் சுமார் எட்டு சதவீதமாகும்.

மேலும் முகேஷ் அம்பானி, இந்தியாவின் டாப் பணக்காரரான லஷ்மி மிட்டலை(வெளிநாட்டு வாழ் இந்தியர்)தொட்டு விடும் நிலையில் உள்ளார்(பங்குச்சந்தை கை கொடுப்போம் என நம்புவோமாக!).

முகேஷின் தற்போதைய சொத்து மதிப்பு - ஒரு இலட்சத்து எண்பத்து நான்கு கோடிகள்

அனிலின் தற்போதைய சொத்து மதிப்பு - ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடிகள்

வாழ்க நம் பங்குச்சந்தை!!

தகவல்: எக்கானமிக் டைம்ஸ்

Wednesday, October 10, 2007

சந்தோஷம்!துக்கம்!! ஒரே நாளில்!!!!

செப்டம்பர் 30' 2007 - என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது.இரு நிகழ்ச்சிகள்,ஒன்று மிக சந்தோஷமான நிகழ்வு, மற்றொன்று துயரமானது.இந்த இரு சம்பவங்களுமே எனக்களித்த அனுபவம் ஏராளம்.

துயரமான நிகழ்வு:

நீங்கள் இருபது வருடமாக வசித்து வரும் ஒரு இடத்தில் உள்ள காலி இடத்தில்,திடீரென ஒரு நாள் காலை, ஒரு குடிசை முளைக்கிறது.ஒரு கும்பல்
உள்ளே உட்கார்ந்து இருக்கிறது.நீங்கள் விசாரிக்கும் பொழுது, அந்த இடத்தை வாங்க ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளேன் என்கிறான் ஒருவன்.உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?. இதுதான் எனக்கு நிகழ்ந்தது. அக்டோபர் 1ம் தேதி காலை எங்கள் இடத்தை ஒருவன் ஆக்கிரமிப்பு செய்தான்.சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சமூக விதிகளை மீறாமல்,வருமான வரி ஒழுங்காக அரசுக்கு செலுத்தி வாழ்க்கையை நடத்தும் மத்திய தர வர்க்க சாதாரண குடிமகனான எனக்கு இச்சம்பவத்தின் வீச்சு புரிபட சில மணித்துளிகளானது.அடாவடி முறையில் இச்சம்பவத்தை எதிர்கொள்வதை விட, நிதானமான முறையில் எதிர்கொள்வது என முடிவெடுத்தேன்.பதற்றத்தை தவிர்த்து விட்டு காவல்நிலையத்தில் புகார் செய்தோம்.சில நல்ல உள்ளங்களின் உதவியுடன், நான்கு நாட்கள் அலைக்களிப்புக்கு மற்றும் சில பத்தாயிரங்கள் விரயத்திற்க்கு பிறகு, இடம் எங்கள் வசமானது.இச்சம்பவம் எனக்கு உணரவைத்த ஒரே விஷயம். " வல்லவன் வகுத்ததே வாய்க்கால்".நில ஆக்கிரமிப்பு செய்தவன் மீது பல வழக்குகள் ஏற்கனவே காவல் நிலையத்தில் உள்ளது. இருந்தும் எனக்கு உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை.காரணம்,அவன் அரசியல் ரீதியில் செல்வாக்கு உள்ளவன்

நாம் என்னதான் படித்திருந்தாலும்,நிர்வாக முறையில் சிறந்து விளங்கினாலும், இம்மாதிரி பிரச்சினைகளில், நீங்கள் காவல் நிலைய, அரசியல் குழுக்களின் நெளிவு சுளிவு விளையாட்டுளில் வளைந்து போய்த்தான் பிரச்னையை முடித்தாக வேண்டும்.நானும் என்னால் முடிந்த அழுத்தத்தை மேல் மட்ட அளவில் இருந்து கொடுத்த பிறகுதான் பிரச்சினையில் இருந்து வெளிவர முடிந்தது.இம்மாதிரி தருணங்கள்தான், நாம் நமக்குள்ளே வகுத்து கொண்டுள்ள நேர்மை,வாக்கு தவறாமை, நாணயம் போன்றவற்றை கேலிப்பொருளாக்குகின்றன. ஆனால் இன்னும் எனக்கு நம்பிக்கை குறையவில்லை.

மகிழ்ச்சியான நிகழ்வு:

நீங்கள் கல்லூரியை விட்டு வெளிவந்த பின், சுமார் பதினோரு வருடங்கள் கழித்து, உங்கள் வகுப்பு தோழர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சந்த்தித்தால் அதுவும், உங்கள் துறைத்தலைவர் மற்றும் ஆசிரியர்களும் உடன் இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அந்த நிகழ்வை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தவர் நீங்கள் என்னும் பொழுது, இதை விட சந்தோஷம் தரும் நிகழ்வு ஏதும் நிச்சயம் உங்களுக்கு அமையாது!! நான் இந்த மனநிலையில்தான் இருந்தேன், செப்டம்பர் 30ம் தேதி அன்று!.( மேலே குறிப்பிட்ட சம்பவத்திற்கு முதல் நாள்).

நானும் பெங்களூரிவில் உள்ள என் நண்பனும் இருமாதங்களாக அனைவரையும் தொடர்பு கொண்டு, ஒருங்கிணைத்து, செப்டம்பர் 30ம் தேதி, முன்னாள் மாணவர் சந்திப்பை நடத்தினோம். அறுபது மாணவர்கள் மற்றும் எங்களது மூன்று ஆசிரியர்களுடன் கழித்த அந்த நாள் மிக இனிமையான மறக்க முடியாத அனுபவம்.வகுப்பறையில் செய்த அதே அல்ப்பறையுடன், நிகழ்ச்சி நடந்தது. அனைவரையும் பேசவைத்தோம்.சிங்கப்பூர்,மலேசியாவில் இருந்தவர்களையும் விடாமல், தொலைபேசி ஸீபிக்கர் மூலம் உரையாட வைத்தோம்.

எண்ணற்ற ஆச்சர்யங்கள்!

1.அமைதியே உருவான நண்பன், இயற்கை உரத்தயாரிப்பின் மூலம், தி இந்து கட்டுரையில் இடம் பெற்றது.
2.வகுப்பின் முதல் மாணவன், குடும்ப சூழல் காரணமாக, அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியனானது.
3.மிக சராசரியென அறியப்பட்ட நண்பன், இருநூறு பேர் மற்றும் இருநூறு கோடி விற்றுமுதல் கொண்ட அலுவலககிளையின் மேலாளராக இருப்பது.
4.டெக்ஸ்டைல்ஸ் படித்து விட்டு, சிங்கப்பூரில் மென்பொருள் எழுதும் நண்பன்
5.டெக்ஸ்டைல்ஸ் படித்து விட்டு,மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணிபுரியும் நண்பன்
6.இன்னும் வேலைதேடிக்கொண்டிருக்கும் நண்பன்
7.எங்கள் வரவேற்பினால் கண்கலங்கிய எங்கள் துறைத்தலைவர்
8.எங்களை விட இளமையாக இருந்த எங்கள் ஆசிரியர்கள்
9.கீரியும்,பாம்புமாக இருந்த நண்பர்கள் கொஞ்சி குலாவியது

இன்னும் பல ஆச்சர்யங்கள்!!வீடு,அலுவல் எனஅனைத்தையும் மறந்து சந்தோஷமாக இருந்த நாளது..

இச்சந்திப்பிற்கு பிறகு தொடர்புகள் புதுப்பிக்கபடுகின்றன..மெயில்பாக்ஸ்கள் நிரம்பி வழிகின்றன..நிறைய குறுஞ்செய்திகள்,கைப்பேசியில்..இச்சந்திப்பை ஒருங்கிணைத்தவன் என்ற முறையில், அளப்பறியா மகிழ்ச்சி எனக்கு..


மீண்டும் 2010ல் சந்திப்பதாக முடிவு செய்துள்ளோம்.

Saturday, September 01, 2007

பிரிந்தோம்! சந்திப்போம்!!

ஆகஸ்ட் 25ம் தேதி, இரவு 9.00 மணிக்கு, பெங்களூருவிலிருந்து கோதண்டு அலைபேசியில் கூப்பிட்டான்..

" பங்காளி, விஷயம் தெரியுமா?''

" என்னடா?"

" எனக்கு ஒரு sms வந்தது! திருப்பூர்லருந்து வெங்கடேஷ் அனுப்பியிருந்தான்! நம்ம ஆண்டனி is no more!! "

" டேய்! என்னடா சொல்ற!!!! நம்ம ஆண்டனியா!! அந்த ஒரு பயதானே சுத்தமா touchயே இல்லாம இருந்ததான்.."

"ஆமா!!

"பாத்தியா! மூணு வருசம் ஒண்ணா இருந்திருக்கோம்..எவன் இருக்கான்,எவன் செத்தான் எதுவும் தெரியலை..கிட்டதட்ட பதினோரு வருஷம் ஆச்சு நாம காலேஜ் விட்டு வெளியே வந்து..கண்டிப்பா ஒரு get together ஏற்பாடு பண்ணணும்..ரொம்ப நாளா யோசனை இருக்கு"

"ஆமாண்டா, கண்டிப்பா ஏற்பாடு பண்றோம்"

-- எனக்கும் என் நண்பன் கோதண்டுக்கும் இடையேயான மேற்கண்ட உரையாடல்தான் எங்கள் கல்லூரி தோழர்களின் முதல் சந்திப்புக்கான ( சுமார் பதினோரு வருடங்கள் கழித்து) துவக்க புள்ளி.

இதன் பிறகு மிகுந்த வேலைப்பளுவிற்கு இடையிலும் ஒவ்வொருவராக தொடர்பு கொள்ள ஆரம்பித்தோம்.

ஒரு வழியாக 80/89 பேரை தொடர்பு கொண்டு, முகவரி பெற்று அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பியாயிற்று...

செப்டம்பர் 30ம் தேதி அனைவரும் சந்திக்கிறோம்..

I believe this is one of my achievements in my life...


பின்குறிப்பு:

எந்த ஆண்டனி இறந்து விட்டதாக கருதினோமோ, அவன் இப்பொழுது சிங்கப்பூரில் மென்பொருள் எழுதி கொண்டுள்ளான்.உண்மையில் இறந்தது, சிவில் துறையை சேர்ந்த ஆண்டணி..தெளிவில்லாத ஒரு அலைபேசி குறுஞ்செய்தியே இந்த குழப்பம் ஏற்படக் காரணம்.