Wednesday, October 10, 2007

சந்தோஷம்!துக்கம்!! ஒரே நாளில்!!!!

செப்டம்பர் 30' 2007 - என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது.இரு நிகழ்ச்சிகள்,ஒன்று மிக சந்தோஷமான நிகழ்வு, மற்றொன்று துயரமானது.இந்த இரு சம்பவங்களுமே எனக்களித்த அனுபவம் ஏராளம்.

துயரமான நிகழ்வு:

நீங்கள் இருபது வருடமாக வசித்து வரும் ஒரு இடத்தில் உள்ள காலி இடத்தில்,திடீரென ஒரு நாள் காலை, ஒரு குடிசை முளைக்கிறது.ஒரு கும்பல்
உள்ளே உட்கார்ந்து இருக்கிறது.நீங்கள் விசாரிக்கும் பொழுது, அந்த இடத்தை வாங்க ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளேன் என்கிறான் ஒருவன்.உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?. இதுதான் எனக்கு நிகழ்ந்தது. அக்டோபர் 1ம் தேதி காலை எங்கள் இடத்தை ஒருவன் ஆக்கிரமிப்பு செய்தான்.சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சமூக விதிகளை மீறாமல்,வருமான வரி ஒழுங்காக அரசுக்கு செலுத்தி வாழ்க்கையை நடத்தும் மத்திய தர வர்க்க சாதாரண குடிமகனான எனக்கு இச்சம்பவத்தின் வீச்சு புரிபட சில மணித்துளிகளானது.அடாவடி முறையில் இச்சம்பவத்தை எதிர்கொள்வதை விட, நிதானமான முறையில் எதிர்கொள்வது என முடிவெடுத்தேன்.பதற்றத்தை தவிர்த்து விட்டு காவல்நிலையத்தில் புகார் செய்தோம்.சில நல்ல உள்ளங்களின் உதவியுடன், நான்கு நாட்கள் அலைக்களிப்புக்கு மற்றும் சில பத்தாயிரங்கள் விரயத்திற்க்கு பிறகு, இடம் எங்கள் வசமானது.இச்சம்பவம் எனக்கு உணரவைத்த ஒரே விஷயம். " வல்லவன் வகுத்ததே வாய்க்கால்".நில ஆக்கிரமிப்பு செய்தவன் மீது பல வழக்குகள் ஏற்கனவே காவல் நிலையத்தில் உள்ளது. இருந்தும் எனக்கு உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை.காரணம்,அவன் அரசியல் ரீதியில் செல்வாக்கு உள்ளவன்

நாம் என்னதான் படித்திருந்தாலும்,நிர்வாக முறையில் சிறந்து விளங்கினாலும், இம்மாதிரி பிரச்சினைகளில், நீங்கள் காவல் நிலைய, அரசியல் குழுக்களின் நெளிவு சுளிவு விளையாட்டுளில் வளைந்து போய்த்தான் பிரச்னையை முடித்தாக வேண்டும்.நானும் என்னால் முடிந்த அழுத்தத்தை மேல் மட்ட அளவில் இருந்து கொடுத்த பிறகுதான் பிரச்சினையில் இருந்து வெளிவர முடிந்தது.இம்மாதிரி தருணங்கள்தான், நாம் நமக்குள்ளே வகுத்து கொண்டுள்ள நேர்மை,வாக்கு தவறாமை, நாணயம் போன்றவற்றை கேலிப்பொருளாக்குகின்றன. ஆனால் இன்னும் எனக்கு நம்பிக்கை குறையவில்லை.

மகிழ்ச்சியான நிகழ்வு:

நீங்கள் கல்லூரியை விட்டு வெளிவந்த பின், சுமார் பதினோரு வருடங்கள் கழித்து, உங்கள் வகுப்பு தோழர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சந்த்தித்தால் அதுவும், உங்கள் துறைத்தலைவர் மற்றும் ஆசிரியர்களும் உடன் இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அந்த நிகழ்வை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தவர் நீங்கள் என்னும் பொழுது, இதை விட சந்தோஷம் தரும் நிகழ்வு ஏதும் நிச்சயம் உங்களுக்கு அமையாது!! நான் இந்த மனநிலையில்தான் இருந்தேன், செப்டம்பர் 30ம் தேதி அன்று!.( மேலே குறிப்பிட்ட சம்பவத்திற்கு முதல் நாள்).

நானும் பெங்களூரிவில் உள்ள என் நண்பனும் இருமாதங்களாக அனைவரையும் தொடர்பு கொண்டு, ஒருங்கிணைத்து, செப்டம்பர் 30ம் தேதி, முன்னாள் மாணவர் சந்திப்பை நடத்தினோம். அறுபது மாணவர்கள் மற்றும் எங்களது மூன்று ஆசிரியர்களுடன் கழித்த அந்த நாள் மிக இனிமையான மறக்க முடியாத அனுபவம்.வகுப்பறையில் செய்த அதே அல்ப்பறையுடன், நிகழ்ச்சி நடந்தது. அனைவரையும் பேசவைத்தோம்.சிங்கப்பூர்,மலேசியாவில் இருந்தவர்களையும் விடாமல், தொலைபேசி ஸீபிக்கர் மூலம் உரையாட வைத்தோம்.

எண்ணற்ற ஆச்சர்யங்கள்!

1.அமைதியே உருவான நண்பன், இயற்கை உரத்தயாரிப்பின் மூலம், தி இந்து கட்டுரையில் இடம் பெற்றது.
2.வகுப்பின் முதல் மாணவன், குடும்ப சூழல் காரணமாக, அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியனானது.
3.மிக சராசரியென அறியப்பட்ட நண்பன், இருநூறு பேர் மற்றும் இருநூறு கோடி விற்றுமுதல் கொண்ட அலுவலககிளையின் மேலாளராக இருப்பது.
4.டெக்ஸ்டைல்ஸ் படித்து விட்டு, சிங்கப்பூரில் மென்பொருள் எழுதும் நண்பன்
5.டெக்ஸ்டைல்ஸ் படித்து விட்டு,மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணிபுரியும் நண்பன்
6.இன்னும் வேலைதேடிக்கொண்டிருக்கும் நண்பன்
7.எங்கள் வரவேற்பினால் கண்கலங்கிய எங்கள் துறைத்தலைவர்
8.எங்களை விட இளமையாக இருந்த எங்கள் ஆசிரியர்கள்
9.கீரியும்,பாம்புமாக இருந்த நண்பர்கள் கொஞ்சி குலாவியது

இன்னும் பல ஆச்சர்யங்கள்!!வீடு,அலுவல் எனஅனைத்தையும் மறந்து சந்தோஷமாக இருந்த நாளது..

இச்சந்திப்பிற்கு பிறகு தொடர்புகள் புதுப்பிக்கபடுகின்றன..மெயில்பாக்ஸ்கள் நிரம்பி வழிகின்றன..நிறைய குறுஞ்செய்திகள்,கைப்பேசியில்..இச்சந்திப்பை ஒருங்கிணைத்தவன் என்ற முறையில், அளப்பறியா மகிழ்ச்சி எனக்கு..


மீண்டும் 2010ல் சந்திப்பதாக முடிவு செய்துள்ளோம்.

2 comments:

cheena (சீனா) said...

நண்பரே !! சில ஆண்டுகள் கழிந்த பின் பழைய வகுப்புத் தோழர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்வது என்பது மிகவும் கடினமான செயல் தான் - அதன் வெற்றி - வெற்றியின் பின் உள்ள உழைப்பு - அதில் விளையும் மகிழ்ச்சி - நெகிழ்ச்சி - பின் தொடர்புகள் அனைத்தும் இறைவனின் கருணையால் -

Anonymous said...

Hi RK

after reading this, it is better to always buy any piece of land from the place where we live or hometown...

regards
UA

Post a Comment